Sunday, April 21, 2019

கடவுள் மறுப்பாளர்களின் ஒற்றைக் கண்
விழித்திரை கிழிந்திருக்கிறது..
சிற்பக் கூடத்தின் உடைந்த சிற்ப அழகுகளில்
கால் பதித்து நடந்துவிட்டு
பாத பூசை தட்டில் வைத்துக்கொண்டு
மற்றவர்கள் புனித நீர் ஊற்றி
கழுவவேண்டுமென நினைக்கிறார்கள்..
அவர்களின் கண்களுக்கு கிட்டப்பார்வை மட்டுமே உண்டு..
பார்க்க முடியாத தூரம் வரை எக்கி விசிறும்
நீர்த் துளிகள் அவர்களின் இடது உள்ளங்கையிலிருந்து
வீசப்பட்டதல்ல..
பிராணிகளின் முதுகுதடவிய கைகளில் சிக்கிய
பூனை முடிகள் பற்றிய பாசவார்த்தைகளை
சேனை தைக்கும் ஊசியில் கோர்த்துத்
தைக்கும் போது..
விரலைக் குத்திக் கொண்டு..
வார்த்தைக்காண எழுத்துக்களை
மேலே தூக்கிப் போட்டு பிடித்து விளையாடுவார்கள்..
அங்கே துளிர்க்கும் சின்ன குருதிக்குமிழ்
உறிஞ்சுவதற்கு முன் காய்ந்து போய்விடுவதால்..
அதைச் சுரண்டிக்கொண்டிருக்கும் சப்தம்
உரத்துக் கேட்பதாய் உதார் விடுவார்கள்...
அவர்களின் உந்தூர்தியின் நிலை நிறுத்தாங்கி
இழுப்பான் தளரிச் சப்தமிட்டுக்கொண்டே
வீதியெங்கும் சுழன்று வர...
ஓட்டுபவன் தவிர சாலைச் செல்லிகளுக்கு
செவி மூடிக் கிடப்பதை...
ஒற்றைக் கண் மாயாவிகளால் ஒருபோதும் உணர முடியாது...
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...