Monday, April 15, 2019

அன்பு நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...
வைகாணச முறையில் பெருமாள் கோவிலில் பூஜைகள் செய்யும் தற்கால பட்டாச்சாரியர்கள்..அரங்கனின் நியமணத்தை அரங்கன் வகுத்துக்கொடுத்த நியதிகளைச் சரிவர புரிந்து கொள்ளவில்லையோ என்ற சந்தேகம் வருகிறது..
பிறப்பால் வைகாணசராய் இருப்பின் அவர்களுக்கு கருவிலேயே பஞ்ச சமஸ்காரங்கள் செய்விக்கப்பட்டு விட்டதாக யார் கூறிச் சென்றார்கள் என்றும்...அந்தக் கூற்றின் தரிசனம் இன்னும் சரியாகப் பார்க்கபடவில்லையென்றும் அதற்கான ஆதாரங்கள் சரிவர கொடுக்கப்படவில்லையென்றும் தெரிய வருகையில் அதிர்வலைகள் உருவாகுகின்றன..... பிருகு அத்ரி காஷ்யபர் முதலிய முனிவர்கள் வகுத்த வைகாணசம் வேதங்களை முறையாகப் பயிலாமல் சரியான பயிற்சி இல்லாமல் கோவிலில் மூலவரைத் தொட்டு பூஜைகள் செய்யும் தகுதியை ஒரு போதும் வெறும் பிறப்பால் மட்டும் ஒருவருக்குத் தரவில்லையென்பது ஆழ்ந்து வேதங்களைக் கற்றவர்களுக்கு விளங்கும்..
அப்படி வெறும் பிறப்பால் அந்தத் தகுதி கிடைத்தாலும் கூட அதை தவறாகப் பயன் படுத்தினால் தகுதியிழப்பைச் சந்திக்க வேண்டிவரும்...அதைத் தான் நமது சாஸ்திரங்கள் சொல்லிக்கொண்டுள்ளன...ஒரு வைகாணசர் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு மூலவருக்கோ மற்ற விக்ரஹங்களுக்கோ அபிஷேகம் செய்யக்கூடாதென்று வைகாணசத்தில் பிருகு முனிவர் ஓரு ஸ்லோகத்தில் சொல்லியுள்ளார்..{.இணையத்தில் தேடியும் கிடைக்க வில்லை...பிறகு பதிவிடுகிறேன்...}அப்படிச் செய்வது அரங்கனை மட்டுமல்ல அரங்கன் பக்தர்களையும் அவமானப்படுத்துவதாகும் என பல பெரியோர்கள் பல இடங்களில் சுட்டிக் காட்டியுள்ளனர்...
ஒருவர் கோவில் பூஜைகளை சரிவர நியமமாகச் செய்யாத போது எப்படி அவர் வைகாணச குலத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காக கோவில் பூஜை செய்யும் தகுதியுடையவராகிறார் என்பது இன்னமும் புரியாத புதிராகவே இருக்கிறது...ஆன்மீக பெரியோர்கள் இதற்கான சரியான விளக்கத்தைத் தருவார்கள் என நம்புகிறேன்...
இதே போன்ற தகுதி சம்பந்தமான ஒரு நிகழ்வு சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் அவதரித்த நம் ஆச்சார்யன் நிகம்மாந்த மஹாதேசிகருக்கு நிகழ்கிறது..கருடன் நேரில் உபதேசித்த மந்திரத்தைச் ஜபித்துக்கொண்டு திருவஹீந்திரபுர மலைமேல் அமர்ந்திருக்கிறார் ஆச்சாரியர்...திடீரென எழுந்து கீழிறங்கி ஒரு குடையைப் பிடித்துக் கொண்டு மீண்டும் மலையேறி வருகிறார்...அவரின் சீடர் ஒருவர்..ஆச்சாரியரிடம் ஏன் குடையுடன் வருகிறீர்கள் என்று கேட்க இதோ மழை வரப்போகிறதென்று கூறுகிறார் ஆச்சாரியர்..அங்கிருந்த பட்டர்கள் நகைத்து அவரைக் கிண்டலடிக்கிறார்கள்..யாரும் எதிர்பாராமல் மழை அந்தக் கடும் கோடை மாதத்தில் கொட்டித் தீர்க்கத் தொடங்குகிறது...
திருவஹீந்திரபுர அழகிய மணவாளனின் திருமேனி முற்றும் நனைந்துவிட வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு திருமேனியை துடைக்கத் துணிந்த ஒரு பட்டரை ஆச்சாரியார் தடுத்து..நியமமாக வந்து இதைச் செய்யும் என்று சொன்னபோது..அருகிருந்த எல்லா பட்டர்களும் மீண்டும் ஆச்சாரியாரை அவமதிக்கிறார்கள்...நம்பிக்கையற்றவர்கள் எதையும் செய்யத் துணிவார்கள்...நேரம் செல்லச் செல்ல... மழை நின்ற பாடில்லை..ஊரே கடலுக்குள் சென்று விடுவது போன்ற நிலை...ஆச்சாரியார் மலைமேல் ஹயக்கீரிவரின் முன் தியானத்தில் இருக்கிறார்..ஊரே அவர் முன் கூடி விடுகிறது...
அவரிடமிருந்து ஒரு ஸ்லோகம் வெளிப்படுகிறது...ஹயக்கிரீவரிடமிருந்து வெளிப்பட்ட கனைப்பொலியொன்றும் எல்லோர் காதிலும் விழுகிறது...அந்த ஸ்லோகம்...
ஸமாஹரஸ் ஸாம் நாம் ப்ரதிபதம் ருசாம் தாம யஜூஷாம்
லய:ப்ரத்யூஹா நாம் லஹரிவிததிர் போதஜலதே:
கதா தர்ப்ப க்ஷூப்யத் கதக் குல கோலாஹல பவம்
ஹரத்வந்தர் தவ்வந்தம் ஹயவதந ஹேஷஹலஹல:
[ஸ்ரீ நிகம்மாந்த மஹா தேசிகன்}
இதன் பொருள் என் சிற்றறிவிற்கு எட்டிய வரையில்.....
ஒரு சில ஆணவம் கொண்ட தகுதியற்றவர்களால் பெருமாள் கோவில் பூஜைகள் நடைபெற்றால்..பூஜைகள் நியமமாக நடை பெறும் காலங்களில் கேட்கும் ஹயக்கீரீவரின் கனைப்பொலியை கேட்க முடியாது...நியமங்களைக் கடைபிடிக்காமல் பூஜைகள் செய்வோர் ஸாம வேதத்தின் பொருளுணராதவர்கள்..ஹயக்கிரீவரின் கனைப்பொலியில் நான்கு வேதங்களும் அதன் சாரங்களும் அடங்கியிருக்கின்றன..பூஜைகளிலும் பக்தர்களின் வேண்டுகோள்களிலும் அரங்கனுக்கான நியமங்களில் நம்பிக்கையற்றோர் பூஜிக்கையில் கனைப்பொலியையும் அதனால் விளையும் நன்மைகளையும் அறிந்திருக்க வாய்ப்பில்லை..அத்தகையோர் பூஜைகள் செய்யும் போது அவிர்பாகம் அரங்கனுக்கும் வேதங்களுக்கும் போய்ச் சேர்வதில்லை...
எனவே பூஜைகளை நியமமுடன் கடைபிடித்தால் அனைத்தும் நன்றாக நடந்தேறும் என்று சொல்லியபடியே ஆச்சார்யன் குடையை மடக்க மழை நின்று போகிறது...
அதுவரை எள்ளி நகையாடிய பட்டாச்சார்யர்கள் ஆச்சார்யன் கால்களில் விழுந்து மன்னிப்புக்கேட்க..ஆச்சார்யன்..கோவில் பூஜைகளை நியமமாகச் செய்தாலே அரங்கன் அனைத்துத் தகுதிகளையும் மன்னிப்பையும் அருள்வான் என்று சொல்லி மேலும் முப்பத்து மூன்று ஸ்லோகங்களை இயற்றுகிறார்..மழையில் நனைந்த பிடறியை உதறிக்கொண்டு ஒரு குதிரை... வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு ஆச்சாரியனிடம் தர்க்கம் செய்த பட்டரை கடற்கரை வரை துரத்தியதை இன்றும் கூட வாய்வழிச் செய்தியாய் நாம் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்....
அரங்கன் திருவடிகளே சரணம்...
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்...
திவஹீந்தரபுர திவ்ய தம்பதிகள் திருவடிகளே சரணம்..
வேணும் தாஸன்..அன்பன்...ராகவபிரியன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...