Wednesday, April 24, 2019

பொ ஆ மு 4000 வருடங்களுக்கு முன்னால்...தொங்கும் தோட்டம் தோன்றியிராத பாபிலோனின் இஸ்ஸுவஸ் நதியின் மேற்பரப்பெங்கும் எண்ணெய் மிதந்தபடியிருக்க மக்கள் அதிசயமாய் கூடி நின்று வேடிக்கைப் பார்க்கிறார்கள்..ஒருவர் சிக்கி முக்கிக் கல்கொண்டு ஒரு பொறி உருவாக்க இஸ்ஸிவஸெங்கும் தீப்பிடித்து நதி நகர அரண்டு ஓடிப்போய் அரசனிடம் சொல்கிறார்கள்..அந்த எண்ணெய் மிதக்கும் நீரை மண் பாண்டங்களில் சுமந்து சேமிக்கிறார்கள்..அதற்கு இரண்டாயிரமாண்டுகளுக்குப் பின் சீனாவில் ஒரு நதியில் எண்ணெய் மிதக்கத் தொடங்க அதன் எரிபொருள் தண்மை ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு அதன் உருவாக்க இடங்களை தேடிச் செல்லும் பயணம் தொடங்குகிறது..இலத்தின் மொழியில் பெட்ரா என்றால் பாறையென்று பொருளாம்..இயற்கை வளங்களைக் கண்டறிந்தாலும் அதைச் சூறையாடத் துணியவில்லை நம் முன்னோர்கள்...
இன்று பெட்ரோல் என்பது சாமான்ய மனிதனின் அத்யாவசிய தேவையாகி உலக அரசியலையே தீப்பிடித்து எரிய வைத்துக் கொண்டிருக்கிறது..நமது தேவைக்கான பத்து சதவீத எரிபொருள் இரானிடமிருந்து இறக்குமதி செய்யப்படுவதாக இந்து நாளிதழின் இன்றைய தலையங்கம் சொல்கிறது..அது மட்டுமல்ல இரானிடமிருந்து இனியும் இந்தியா எரிபொருளை இறக்குமதி செய்துகொண்டிருந்தால் பொருளாதார தடைகளைச் சந்திக்க வேண்டுமென்றும் மிரட்டுகிறதாம்...அதையும் விட இந்துவின் ஒரு செய்தியில் இந்தியப் பிரதமர் இரான் அரசிற்கு நம் எரிபொருள் இறக்குமதியை அதிகப்படுத்துவதாக உத்ரவாதம் வேறு அளித்திருக்கிறாராம்...
இலங்கையில் குண்டு வைப்பதற்கு முன்னால் அந்த ஒன்பது மனித வெடிகுண்டுகளும் உறுதி மொழிஏற்கிறார்கள்..உறுதிமொழி செய்வித்து வைப்பவனின் சிங்கள உச்சரிப்பின் வசீகரம் வியக்க வைத்தது..சிந்தனைக் கலவைகளின் பொருளாதார உலகளாவிய முடிச்சுகளின் பெளதிகம் புரியமால் பராக்கு பார்த்தபடி எனது இரு சக்கர வாகனத்தைக் கிளப்பினேன்...
ஒன்றும் புரியாமல்... வணிகவியலில் முதுகலைப் பட்டம் வேறு...எனது இரு சக்கர வாகனத்தின் பெட்ரோல் கொக்கியை திறக்காமலே பத்து கி.மீ.வரை சென்று விட்டேன்..ஒரு எரிபொருள் தீ கக்கும் பின் நவீன கவிதைக்கான வார்த்தைகளை யோசித்தபடியே..திடீரென வண்டி சண்டி செய்ய கொதிக்கும் வெயிலில் தள்ளவேண்டிய சூழல் வந்துவிட்டதே என்று நொந்தபடியே பெட்ரோல் செல்லும் பூட்டுக் கொக்கியை மேலோ கீழோ திருப்ப மறந்ததை யுணர்ந்தேன்..வண்டியின் பெட்ரோல் தொட்டியைத் திறந்தால் சூரியன் தலைக்கு மேலே நிழல் விழாத இந்த நாளின் நேர் கிரணங்களை உள் அனுப்பி போதுமான எரிபொருள் திரவம் தளும்பியதைக் கண்டு நிம்மதியுடன் மீண்டும் இயக்கும் போதில் பத்து சதவீத நவீனம் உள்ளடக்கிய ஒரு கவிதை..கண்டிப்பாக பின் நவீனம் தான்..நீங்கள் ஒப்புக் கொள்ளாவிட்டால் அமெரிக்க ஏகாதிபத்தியம் பொருளாதார தடைகளை இந்தியா மீது திணிக்கும்...அப்படி திணித்தால் இந்தக் கவிதை பொறுப்பல்ல...
பாறைகளில் துளையிடும்
துளைப்பான் சத்தத்தால்
அந்தச் சிங்கத்தை
கிணறு நோக்கி
அழைத்து வந்த முயல்
தன் திட்டத்தை
ஒரு நாள் தள்ளி வைத்தது...
அறுவடைக் கால காற்றில்
ஊளைச் சத்தமிடும்
நெல் மணிகளின் உரசல்கள்
பீறிட்டடிக்கும்
எண்ணெய்க் காற்றில்
ஊமையாய் மெளனிக்க..
தன் எதிரி
ஒளிந்திருக்கும்
கிணறு முழுவதும்
எரிபொருள்
மிதப்பதைக் கண்டு
கர்ஜிப்பதை மறந்து
நமுட்டுச் சிரிப்பு
சிரிக்கிறது
அமெரிக்கச் சிங்கம்...
அது
ஓய்வெடுக்கும்
அந்த இடைவெளியில் தான்
எம் இராமனாதபுர தமிழ்ப்பெண்
தலைசிவப்பட்ட
நெகிழி வாளியில்
அந்தக் கிணற்றில்
குடி நீருக்கான
கயிறு வீச்சின் வித்தையைக்
காட்டத் தொடங்குகிறாள்...
கடல்
ஆழத்திலிருந்து
உக்கிரமாய்
வெளியேறும்
எரிவாயுவின் தலையில்
தீ வைத்தவன்...
தன் வாகனத்திற்கான
எரிபொருள்
விலையைப் படித்துவிட்டு
தீ குளிக்க
முயலும் புனிதப்போதில்தான்
சிங்கத்தை
அந்தச் சின்ன முயல்
தேடித் திரிகிறது...
காடுகளிலும்...
கடல்களிலும் கூட...
ராகவபிரியன்..

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...