Saturday, April 27, 2019

ஒரு பனவனின் ஆன்மீக நினைவுகள்....
ஒரு பயணம் ஆன்மீக உணர்வுகளையும் அனுபவங்களையும் தரவேண்டுமென்றிருக்கும் போது தனிப்பட்ட இலக்குகளும் அதற்கான முனைப்புகளும் கூட ஆன்மீக நிலையை நோக்கியே நம்மை நகர்த்துமென்பது கடந்த இரண்டு நாட்களில் எனக்கேற்பட்ட என் சக்தி மீறிய நிகழ்வுகள்...ஒரு குடும்ப நிகழ்விற்கான முறையான அழைப்பின்றி..அது காஞ்சி நகரில் நடக்கப்போகிறதென்பதால் நான் போக வேண்டுமென முன்பே முடிவு செய்தது அரங்கனின் சித்தம்..என் மனைவியைக் கட்டாயப்படுத்தி உடன் வரச் செய்தேன்..நிகழ்விற்கு செல்ல வேண்டுமா...எதிர்பாராத மரியாதைக் குறைவேற்பட்டால் என்ன செய்வது போன்ற சிந்தனைகளால் என் மனைவி கடைசி வரை உடன் படவில்லை..இன்னும் வேறு விதமான சூழ் நிலைச் சிக்கல்கள் வேறு...ஆனால் கடந்த ஒரு வார காலமாகவே ஆச்சாரியன் நிகம்மாந்த மஹாதேசிகனின் பிறந்த இடமான தூப்புல் மண்ணில் பாதம் பதித்து வா என்ற அரங்கனின் கட்டளை மனதில் தொடர் வண்டியாய் தடதடத்துக்கொண்டிருந்தது..
எனது பழைய போர்ட் ஐகானை கொளுத்தும் வெயிலில் கிளப்பிக்கொண்டு புறப்பட்டு விட்டேன்...இரவு ஒன்பது மணிக்கு காஞ்சி மாநகர் அடைந்துவிட்டோம்..நிகழ்வேற்பாட்டாளர்கள் எதிர்பாராத அருமையான வரவேற்பளிக்க மனதின் மூடப்பட்டிருந்த ஒரு ஜன்னலைத் திறந்துவிட வேனிற் காலத்தின் இரவுக் கடற்கரை காற்று காஞ்சி வரை வந்து வீசி....சூழலை தூறலால் நனைக்கத் தொடங்கியது...பத்து மணிக்கு மேல் என் மனைவி ஒரு பட்டியலைக் கொடுத்து அடுத்த நாள் நிகழ்விற்கு வாங்கவேண்டியவைகளை அடுக்கினாள்..
கடைவீதியே நிசப்பதமாய் அடங்கியிருந்த காஞ்சியில் என் மனதில் ஆயனச்சிற்பியும் சிவகாமியும் எதிரே பேசியபடி வருவதாய்த் தோன்ற உடன் வந்த மனைவி "என்னங்க எதுவுமே வாங்கமுடியாது போல...நாளைக்கு அவமானம்தான் மிச்சமிருக்கும்னு நினைக்கிறேன்..அதுக்குத்தான் நான் வரல்லைன்னு சொன்னேன் என்று கூவிக்கொண்டிருக்க ..."எதிரே மேள தாளங்களுடன் கச்சி ஏகம்பன் ரிஷபாரூடனராய் எதிர்வர கொஞ்சம் நம்பிக்கை ஏற்பட்டது...அங்கிருந்த ஒரு சிலரிடம் வாங்க வேண்டியவைகள் கிடைக்குமிடத்தை அறிந்து கொண்டு மெல்ல நடக்கத்தொடங்கினோம்..
நாதேஷூ பிரம்மா..நகரேஷூ காஞ்சி..நதியேஷூ கங்கா..என்ற மஹாகவி காளிதாஸின் உடைந்த வார்த்தைகள் என் மனதில் ஒட்டிக்கொண்டு தொங்கிக் கொண்டே உடன் வந்தன..காஞ்சி மடம் அருகில் வந்ததும் பரமாச்சாரியாரை என் தந்தையுடன் ஒருதடவை தரிசித்த நினைவு வந்து போனது..அந்த அகால நேரத்தில் மூடிக்கிடந்த காஞ்சியில் வாங்கவேண்டியதனைத்தையும் வாங்க முடிந்ததும் நடையில் மீண்டும் மிருதங்கம் வந்தமர்ந்ததை உணரமுடிந்தது...
விடிவதென்பது ..அதுவும் ..காஞ்சி மாநகரில் விடிவது அந்த நாளின் ஆன்மீக அனுபவங்களுக்கான கட்டியம் கூறுவதாய் அமைவது நெகிழ்வாய் இருந்தது..சுமார் ஒரு கீமீ நடந்து தேனீர் அருந்தி இருப்பிடம் வர மெல்ல வானம் தன் நிறத்திற்கு வெண்சிவப்பை தேர்வு செய்து கொண்டிருந்தது...பிடிக்காத தூக்கியெறிந்த கருஞ்சிவப்பு நிறம் திட்டுத் திட்டாய் ஆங்காங்கே வானில் சுருண்டு கிடந்தன...
நிகழ்விடம் காஞ்சி காமாட்சியம்மன் சந்நிதி...கண்ணதாசனுக்கு குமுதம் முதலடி கொடுக்கிறது..மீதி அடிகளை அவர் தரவேண்டும்..அந்தப் பாடல்களுக்காக குமுதம் அப்போதே ஆயிரமாயிரம் இதழ்கள் இலக்குகளை எட்டியது நினைவில் வந்து போனது..அதிலொரு முதலடி கண்ணதாசனுக்குக் கொடுத்தது....
கங்கையுன் சடையிலே மங்கையுன் உடலிலே
காமனை ஏனெரித்தாய்..
காஞ்சி காமாட்சி நல் அறமெலாம் செய்ய நீ
கையிலேன் ஓடெடுத்தாய்...
என்று ஆழ் மனதில் புதைந்து கிடந்த வரிகள்
என் மனமெங்கும் அடைத்துக் கொள்ள கண்ணீர் துளிகள் பார்வையை மறைக்க காமாட்சி குழந்தையாய் பக்தைக்குக் காட்சி தந்த கதை மனதில் அச்சேறத் தொடங்கியது....
விசாரிக்கத் தொடங்கினேன்..தூப்புல் எங்கிருக்கிறது ...எப்படிச் செல்வது என்றெல்லாம்..ஆனால் அனைவருமே அப்படியொரு இடமே இல்லையென்று சாதித்து விட்டார்கள்..நான் தோற்கத் தயாராக இல்லை..நிகழ்வு முடிய மணி பதினொன்றாகிவிட்டது..மெல்ல மனைவியைக் கட்டாயப்படுத்தி உடனழைத்துக்கொண்டு வெளியில் வந்தேன்..கொளுத்தும் வெயிலில்...எனது கைபேசியில் எதையும் சரியாகப் பார்க்க முடியவில்லை...எதிரே நின்றிருந்த ஆட்டோ ஓட்டுனர்களை விசாரித்தால் தூப்புல் என்ற ஒரு இடமே இல்லையென்று சத்தியம் செய்யத் தொடங்கினார்கள்...என் கண்ணின் ஓரம் இயலாமை ஒரு துளியாய் துளிர் விட...சரி வரதராஜப் பெருமாளையாவது தரிசித்து வரலாம் என மனைவி சொல்ல...ஆச்சாரியன் நிகம்மாந்த மஹா தேசிகனை மனதில் தியானித்தேன்..
பயட திமிரம்மி புவணே..பத்த படிட்டாவிய பரமணாண பஈவா..
நிஜ்ஜந்தி அச்சுயதுஏணீயம் பயம் ஸைஸயம் பஹம்
கய கஜ்ஜா..
ப்ரகட திமிரே புவநே பாத்ர ப்ரதிஷ்ட்டாபித பரம் ஜ் ஞாந ப்ரதீபா:
நீயநதோஸ்யுத த்வயா
நிஜம் பதம் ஸ்தா ஸ்வயம் பரபம் க்ருத கார்யா...
[ நிகம்மாந்த மஹா தேசிகன்]
என்ற ஸ்லோகத்தை ஏற்கனவே ஒரு காகிதத்தில் எழுதிவைத்திருந்ததை என் கைபையிலிருந்து எடுத்துப் படித்தேன்..மனம் லேசானது போலிருந்தது...இந்த ஸ்லோகம் ப்ராகிருத மொழியில் எழுதப்பட்டது....
இதன் பொருள் நானறிந்த வரையில் திருவயிந்திரபுர நாயகனே..அஞ்ஞானத்தால் இருள் நிறைந்த வர்களுக்கு ஞான விளக்கின் ஒளி கண்ணில் தெரிவதில்லை...அந்தப் பொழுது அவர்களின் இறுதிக்காலமெனலாம்..ஆனால் ஞானம் பெற்றவர்கள் தங்களின் இறுதிக் காலத்தை இருளில் கூட உணர்ந்து விடுவார்கள்...அது போன்ற உத்தம ஞானவான்கள் தங்களின் சிஷ்யர்களுக்கு ஞானம் போதித்து வைகுண்டதிற்கான அழைப்பிற்காக காத்திருக்கும் பொழுதுகளில் நீ காட்சி தந்து அவர்களை...ரட்சிக்கிறாய்...அவர்களுடனேயே இருக்கிறாய்...
என்ன அதிசயம் ..ஒரு வயதான பெரியவர் தன் வயதான மனைவியுடன் திடீரென எங்களருகில் வந்தார்..அவர் நெற்றியில் திருமண்...பஞ்சகச்ச வேஷ்டி..அவரின் மனைவி ஐயங்கார் மடிசார் புடவை.உடுத்தியிருக்க..வந்தவர்..ஆட்டோ ஓட்டுனரிடம்..ஏம்பா..தூப்புல் தெரியாதென் கிறாய்..என்று கேட்டு விட்டு..என் பக்கம் திரும்பி...வாங்கோ அங்க ஒரு ஆட்டோகாரர் கிட்ட நான் சொல்றேன்..உங்களை கூட்டிண்டு போவார் ...என்றதும்...என் மனைவி தயங்கினாள்.....நான்..வா..பெரியவர் சொல்றாரோனோ...அந்த வரதராஜ பெருமாள் மாதிரியே வேற இருக்கார்....என்று நான் சொல்லிக் கொண்டிருக்கையில் கொஞ்சம் எட்டிச் சென்று விட்ட அந்தப் பெரியவர்...திரும்பி...நான் பெருமாள் இல்ல...சாதரண மனுஷந்தான்...நீங்க நாளஞ்சு ஆட்டோ காராகிட்ட தூப்புல் போகனும்னு கேட்டுண்டிருந்த கவனிச்சேன்..அவாளுக்கு அப்பிடிச் சொன்னா புரியாது...வாங்கோ நான் அவரண்ட சொல்றென்...என்று அந்த ஆட்டோ காரரிடம் ஏதோ சொல்ல அவர் ஏறுங்க சாமி...என்றவுடன் மனமெல்லாம் ஆனந்த ராகம் வெடித்துப் புறப்பட..அந்த பெரிய திவ்ய தம்பதிகளை மறந்தே போனோம்..
தூப்புல்லில் என் ஆச்சாரியனிடம் அவரின் சில ஸ்லோகங்களைச் சொல்லி மன அமைதியடைந்தேன்..திருத் தண்காவில் பட்டர் பிரசாதங்கள் கொடுத்து எங்களைப் பற்றி விசாரிக்க..ஆச்சாரியனின் பெருமைகளை நான் விளக்க அவர்..தூப்புல்லில் ஆச்சாரியன் நிகழ்த்திய அற்புதங்களைச் சொல்லிக்கொண்டே வந்தார்...நான் எந்த ஆட்டோ ஓட்டுனருக்கும் இந்த இடம் தெரியவில்லை...கடைசியில் ஒரு வைணவ முதியவர்தான் இந்த ஆட்டோக் காரர் மூலம் என்னை இங்கு கொண்டு வந்து சேர்த்தார். ..என்றவுடன் பட்டர் என் கைகளைப் பிடித்துக்கொண்டு ஆச்சாரியனின் தரிசனம் உங்களுக்குக் கிடைத்துவிட்டது என்று அவர் பரவசப்படத் தொடங்கினார்...ஆஹா..ஆச்சாரியன் எதிரே இருந்தும் படிக்காமல் போனேனே.......என்ன பாவம் செய்து விட்டேன்...
ராகவபிரியன்...
[அடுத்து அத்தி வரதனை தரிசித்த விவரனை விரைவில் வரும்...]

1 comment:

  1. அய்யா வணக்கம் கங்கையுன் சடையிலே மங்கையுன் உடலிலே காமனை ஏனெரித்தாய்..பாடல் வரிகளை தந்து உதவ வேண்டும்

    ReplyDelete

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...