Monday, April 22, 2019

ஒரு அப்பளத்தைப் பொரித்தெடுக்க
அதன் வட்டத்தைச் சுற்றி
விரல் ரேகைகளால்
தடவிக் கொடுத்தேன்..
அப்பள தயாரிப்பிடங்களில்
குவிக்கப்பட்டிருக்கும்
அப்பள உருண்டைகளில்
தடவப்படும் மாவின் வெண்மையாய்
மனம் மிதக்கத் தொடங்கியது..
ஒட்டாமல் விழுந்த
மாவுத் துகள்
நான் சுவாசிக்கத் தவறிய
காற்றில் கலந்திருக்க வேண்டும்..
ஆதி அப்பளமொன்றை
பொரித்துச் சுவைத்த
எம் மானுட மூத்தவன் மேலான
என் ஜீவித பொறாமையாய்
தூவப்பட்டிருந்த மிளகுத் துகள்கள்
விரல் நுனியில் நெருடலிட்டன..
போதி சத்துவன்
அப்பளம் தவிர்த்திருப்பானா
என்ற கேள்வியின்
சிந்தனை நொடிகளில்தான்
வாணலியில் எண்ணெய்க் குமிழ்கள்
மேலேறி விளையாடத் தொடங்கின..
ஆசையின் அளவுக்கான
முனை கிள்ளிய
சின்னஞ்சிறிய அப்பளத் துகளை
எண்ணெயிலிட..
என் கடந்த காலங்களும்
நிராசைகளும் வெளுத்துத்
துடித்து..
பொரித்துப் பெருத்து..
என் வாழ்வின் ஓரமாய்
வாணலியின்
சுவர் ஒட்டி
மரணித்து ஓய்ந்திருக்க...
இடுக்கிப் பிடியில் சிக்கி
கொதி எண்ணெயில்
நுழையப் போகும்
அப்பளத்தைத் தான்
யசோதரை
தன் மணவாழ்வின்
பிரதி நிதியாய் கிடத்தியிருக்க வேண்டும்...
கொதி எண்ணெய்க்குள்
நுழையும் முன்பான
அப்பளத்திலிருந்து
துருத்திக்கொண்டிருந்த
மிளகு விழுந்த துளையில் தான்
ஒட்டகங்களாய்
என் ஆற்றாமை
தலை நீட்டிக் கொண்டிருந்தது..
மிளகுத் துகளில்லாத
அப்பளங்கள்
போர்க்களங்களில்
தோற்றவர்களின் பந்திகளில்
பரிமாறப்படுவதில்லை..
மாவு தடவிய
காய்ந்த அப்பளமொன்றைத் தான்
இரவின் நிலாவென
போதிச் சத்துவன்
தன் தலையில்
பின் பக்கம் சுமந்திருக்கிறான்...
பொரித்த அப்பளத்திலிருந்து
புறப்படும் இவ்வாசம்
பின் நவீனத்துவ பசி தூண்டி
போதி சத்துவனின்
தவம் கலைக்கப்படுவதை
சகிக்கமுடியாமல்
உடைந்து நொறுங்கி
தூளாகித் தவிப்பதை
யாரறிவார்...?
ராகவபிரியன்
[படித்து முடித்தவுடன் சிரிக்கக் கூடாது..அருமை..க்ளாஸிக் போன்ற பின்னூட்டங்கள் தவிர்க்கவும்..சத்தான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன...இரவுச் சாப்பாட்டிற்கு அப்பளம் பொரித்தே ஆகவேண்டுமென நண்பர்கள் வீட்டில் அடம் பிடிக்கவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்...வணக்கங்களுடன்..அன்பன்..ராகவபிரியன்]

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...