Monday, April 29, 2019

ஒரு பனவனின் ஆன்மீக நினைவுகள்...தொடர்ச்சி...
ஆச்சாரியன் தரிசனம் அனைவருக்கும் எளிதில் கிட்டிவிடாது என்று தழுதழுத்த குரலில் சொன்ன பட்டர்... ஆச்சாரியன் சிறுவனாய் இருக்கும் போது ஒரு காலட்சேபத்திற்கு கதை கேட்க அவரின் பெற்றோர்களால் அழைத்துச் செல்லப்படுகிறார்..அப்போது அவருக்கு நான்கு வயதுதான் இருக்கும்..அந்தக் குழந்தையின் முகத்தில் இருந்த பிரம்மதேஜஸ் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது..கலாட்சேபம் செய்பவர் பகவத் கீதையை சொல்லிக்கொண்டிருந்தார்..அதில் அர்ஜுனன் ஏன் போர் செய்ய வேண்டும் என்ற பரமாத்மாவின் நியாயங்களைத் தவறாக சொல்லிக்கொண்டிருப்பதைக் கண்ட குழந்தை ஆச்சார்யன்...அரங்கனின் அவதாரம் அல்லவா...மெல்ல மேடையில் ஏறி...
அகீர்தம் சாபி பூதாநி கதயிஷ்யந்தி தேவ்யயாம்
ஸம்பாவிதஸ்ய சாகீர்திர்மரணாத திரிச்யதே...
என்ற மேற்கண்ட ஸ்லோகத்தைச் சொல்ல அங்கிருந்தவர்கள் வெலவெலத்துப்போகிறார்கள்..
ஒருவனை நீண்ட காலம் இகழ்ச்சியாக நடத்துபவர்கள்...யுத்தத்தைச் சந்தித்தே ஆகவேண்டும்...இகழ்ச்சி என்பது மரணத்திற்குச் சமமாகும்..என்றெல்லாம் பகவத் கீதையின் இந்தச் ஸ்லோகத்திற்கு மழலை மாறாத பாஷ்யத்தை எடுத்துச் சொல்கிறார் குழந்தை ஆச்சார்யன்...
அந்த இடம் தாம் தூப்புல் அருகில் உள்ள விளக்கொளி எம்பெருமான் கோவில்...அது முகலாயர்களின் படையெடுப்பால் தமிழகமே தத்தளித்துக்கொண்டிருந்த நேரம்..இந்து மதத்திற்கும் பக்தர்களுக்கும் கோவில்களுக்கும் பாதுகாப்பற்ற கொடிய பொழுதின் உக்கிர நாட்களில் தன் கோவில்களையும் பக்தர்களையும் பாதுகாக்க அரங்கனே ஆச்சார்யனாய் அவதாரம் எடுத்திருப்பதாக அனைவரும் உணரத்தொடங்கினார்கள்...
ஆச்சார்யனுக்கு உபநயனம் செய்விக்க வேண்டும்..அரங்க நாயகியே ஆச்சாரியனின் அன்னையாய் அதற்கான ஏற்பாடுகளை செய்வித்தாக இன்றளவும் நம்பப்படுகிறது...தினமும் மூன்று வேளைகளும் ஆச்சார்யன் அக்னி ஹோத்திரம் செய்ய ஆரம்பித்தார்...
ஆஹவனீயம் தக்ஷினம் மற்றும் காம்ஹபத்யம் என்ற மூன்று அக்னிகளும் அதன் பிரத்யக்ஷ தேவதைகளும் அந்தக் குழந்தைக்கு அத்தனை சாஸ்திரங்களையும் வேதங்களையும் போதித்தாகச் சொல்கிறார்கள்..
ஆச்சார்யனின் சம்ஸ்கிருத ஸ்லோகங்களையும் தமிழ்கவிதைகளையும் படிக்கும் போது அதிலிருக்கும் அக்னி ஜ்வாலைகளை நாம் பார்க்க முடிவதே அதன் நிஜத்தை நமக்கு இன்றும் கூட உணர்த்திக்கொண்டிருக்கிறது...
வெளியில் வந்து மீண்டும் ஆச்சார்யன் மணிமண்டபத்திற்குச் சென்றோம்...உள் பிரஹாரத்தில் ஆச்சாரியனின் வாழ்க்கை வரலாறு ஓவியங்களாய் சித்தரிக்கப்பட்டிருக்கிறது...அவைகளைப் புதுப்பித்தால் அரங்கனுக்கான கைங்கர்யம் செய்த பலன் கிடைக்கும்...
மணி பண்ணிரண்டைத் தொட வெயிலின் கிரணங்கள் உக்கிரம் காட்ட என் கைபேசியில் ஒரு அங்கத அனுமானத்தில் சில படங்களைப் பிடித்துக் கொண்டேன்..இன்னும் அரை மணி நேரம் தான்..அத்தகிரி வரதனையும் தரிசித்து விடவேண்டுமென்ற அவசரத்தில் புறப்பட்டு வந்துவிட்டோம்..ஆச்சாரியன் எங்களை ஆசீர்வதித்திருப்பார்...
அத்தி வரதன் கோவிலுக்குள் நுழையும் போதே ஆந்திராவிலிருந்து ஒரு கூட்டம் வேகவேகமாய் எங்கள் முன்னே கொதிக்கும் பாறாங்கல் தரையில் ஓடி உள் நுழைய நாங்களும் ஓட்டமும் நடையுமாய்...அவர்களைப் பின் தொடர்ந்தோம்..பெருந்தேவியின் சன்னிதிக்குள் அத்தனைக் கூட்டமும் சென்றுவிட நான் மனைவியிடம் வரதனை முதலில் பார்த்துவிடுவோம்..அதற்குள் கூட்டம் தாயாரை தரிசித்து வந்துவிடும்..பிறகு தாயாரை தரிசிப்போம் என்று மனைவியிடம் சொல்லிவிட்டு...அரங்கனை தரிசிக்கும் முன் அரங்க நாயகியை தரிசிக்க வேண்டுமென்ற அரங்கனின் கட்டளையை எங்கள் ஆவல் மேலீட்டின் காரணமாய் மறந்ததை பெருந்தேவித் தாயார் கவனித்துக் கொண்டிருந்தார் போலும்..
நான் எப்போதும் திருவரங்கம் செல்லும் போதெல்லாம்...
அரங்க நாயகித் தாயே...
அரங்கனின் அடிமைப்பிள்ளை
உன் முன்னே நிற்கின்றேன்..
அரங்கனின் தரிசனத்திற்காக
உன் அனுமதியைக் கோருகிறேன்..
உன் தரிசனமும் அரங்கனின் தரிசனமும் தந்து
அறியாப் பிழையும் பெரும் பழியும் போக்கி
என் உள்ளத் தாமரையை ஏற்றருள வேண்டும்..
என்று பிரார்த்திப்பேன்...இன்றோ நேரே அத்தி வரதன் முன் நிற்கிறேன்..
.நின்னருளாங்கதியின்றி மற்றொன்றில்லேன் என்ற திருமங்கையாழ்வாரின் பாசுரத்தை உரத்துச் சொன்னேன்...அத்தகிரி அருளாலன் உவந்து ஏற்றுக் கொண்டதை உணர்ந்து தங்கப் பல்லிகளைத் தொட்டு ஓட்டமும் நடையுமாய் தாயார் பெருந்தேவியின் முன் நின்றேன்..பின்னால் மனைவி...அம்மா என்னை மன்னித்துவிடு என்று சொல்லி தீர்த்தம் சடாரி பெற்று வெளியில் வரும் போது என் இடுப்பில் சுற்றியிருந்த அங்க வஸ்திரம் அவிழ்ந்து வி
ழுந்துவிட்டதைக் கண்ட என் மனைவி...என்னங்க...என்று அழைக்க திரும்பினால் பெருந்தேவித் தாயார்..அரங்க நாயகியாய்..புன் முறுவலுடன்..நிற்கிறார்..நான் அதிர்ந்து பார்க்க..நொடியில் தாயர் மீண்டும் விக்ரஹமாகத் தெரிய... என் மனைவி ஒன்னுமில்லீங்க..அங்க வஸ்திரத்தை கீழே விட்டுட்டீங்க என்று அதை என்னிடம் கொடுத்தாள்...
அம்மா..அடியவனின் பிழையைப் பொறுத்துவிடம்மா...என்று தியானித்தபடியே...திரும்பிக்கொண்டிருந்தேன்...
[என் ஆசான் கே ஜி ஜவஹர் அவர்களுக்காக...தூப்புல் என்பதை தற்போது திருத்தண்ஹா என்று சொன்னால் ஆட்டோ காரர்கள் புரிந்து கொள்கிறார்கள்...தேசிகப் பெருமாள் கோவில் என்றாலும் விளக்கொளி எம்பெருமான் கோவில் என்றாலும் ஒரு சிலர் புரிந்து கொள்கிறார்கள்...அந்த இடம் காஞ்சிமா நகருக்குள்ளேயே தான் இருக்கிறது....]
நன்றிகளுடன்...அன்பன்..ராகவபிரியன்

Saturday, April 27, 2019

ஒரு பனவனின் ஆன்மீக நினைவுகள்....
ஒரு பயணம் ஆன்மீக உணர்வுகளையும் அனுபவங்களையும் தரவேண்டுமென்றிருக்கும் போது தனிப்பட்ட இலக்குகளும் அதற்கான முனைப்புகளும் கூட ஆன்மீக நிலையை நோக்கியே நம்மை நகர்த்துமென்பது கடந்த இரண்டு நாட்களில் எனக்கேற்பட்ட என் சக்தி மீறிய நிகழ்வுகள்...ஒரு குடும்ப நிகழ்விற்கான முறையான அழைப்பின்றி..அது காஞ்சி நகரில் நடக்கப்போகிறதென்பதால் நான் போக வேண்டுமென முன்பே முடிவு செய்தது அரங்கனின் சித்தம்..என் மனைவியைக் கட்டாயப்படுத்தி உடன் வரச் செய்தேன்..நிகழ்விற்கு செல்ல வேண்டுமா...எதிர்பாராத மரியாதைக் குறைவேற்பட்டால் என்ன செய்வது போன்ற சிந்தனைகளால் என் மனைவி கடைசி வரை உடன் படவில்லை..இன்னும் வேறு விதமான சூழ் நிலைச் சிக்கல்கள் வேறு...ஆனால் கடந்த ஒரு வார காலமாகவே ஆச்சாரியன் நிகம்மாந்த மஹாதேசிகனின் பிறந்த இடமான தூப்புல் மண்ணில் பாதம் பதித்து வா என்ற அரங்கனின் கட்டளை மனதில் தொடர் வண்டியாய் தடதடத்துக்கொண்டிருந்தது..
எனது பழைய போர்ட் ஐகானை கொளுத்தும் வெயிலில் கிளப்பிக்கொண்டு புறப்பட்டு விட்டேன்...இரவு ஒன்பது மணிக்கு காஞ்சி மாநகர் அடைந்துவிட்டோம்..நிகழ்வேற்பாட்டாளர்கள் எதிர்பாராத அருமையான வரவேற்பளிக்க மனதின் மூடப்பட்டிருந்த ஒரு ஜன்னலைத் திறந்துவிட வேனிற் காலத்தின் இரவுக் கடற்கரை காற்று காஞ்சி வரை வந்து வீசி....சூழலை தூறலால் நனைக்கத் தொடங்கியது...பத்து மணிக்கு மேல் என் மனைவி ஒரு பட்டியலைக் கொடுத்து அடுத்த நாள் நிகழ்விற்கு வாங்கவேண்டியவைகளை அடுக்கினாள்..
கடைவீதியே நிசப்பதமாய் அடங்கியிருந்த காஞ்சியில் என் மனதில் ஆயனச்சிற்பியும் சிவகாமியும் எதிரே பேசியபடி வருவதாய்த் தோன்ற உடன் வந்த மனைவி "என்னங்க எதுவுமே வாங்கமுடியாது போல...நாளைக்கு அவமானம்தான் மிச்சமிருக்கும்னு நினைக்கிறேன்..அதுக்குத்தான் நான் வரல்லைன்னு சொன்னேன் என்று கூவிக்கொண்டிருக்க ..."எதிரே மேள தாளங்களுடன் கச்சி ஏகம்பன் ரிஷபாரூடனராய் எதிர்வர கொஞ்சம் நம்பிக்கை ஏற்பட்டது...அங்கிருந்த ஒரு சிலரிடம் வாங்க வேண்டியவைகள் கிடைக்குமிடத்தை அறிந்து கொண்டு மெல்ல நடக்கத்தொடங்கினோம்..
நாதேஷூ பிரம்மா..நகரேஷூ காஞ்சி..நதியேஷூ கங்கா..என்ற மஹாகவி காளிதாஸின் உடைந்த வார்த்தைகள் என் மனதில் ஒட்டிக்கொண்டு தொங்கிக் கொண்டே உடன் வந்தன..காஞ்சி மடம் அருகில் வந்ததும் பரமாச்சாரியாரை என் தந்தையுடன் ஒருதடவை தரிசித்த நினைவு வந்து போனது..அந்த அகால நேரத்தில் மூடிக்கிடந்த காஞ்சியில் வாங்கவேண்டியதனைத்தையும் வாங்க முடிந்ததும் நடையில் மீண்டும் மிருதங்கம் வந்தமர்ந்ததை உணரமுடிந்தது...
விடிவதென்பது ..அதுவும் ..காஞ்சி மாநகரில் விடிவது அந்த நாளின் ஆன்மீக அனுபவங்களுக்கான கட்டியம் கூறுவதாய் அமைவது நெகிழ்வாய் இருந்தது..சுமார் ஒரு கீமீ நடந்து தேனீர் அருந்தி இருப்பிடம் வர மெல்ல வானம் தன் நிறத்திற்கு வெண்சிவப்பை தேர்வு செய்து கொண்டிருந்தது...பிடிக்காத தூக்கியெறிந்த கருஞ்சிவப்பு நிறம் திட்டுத் திட்டாய் ஆங்காங்கே வானில் சுருண்டு கிடந்தன...
நிகழ்விடம் காஞ்சி காமாட்சியம்மன் சந்நிதி...கண்ணதாசனுக்கு குமுதம் முதலடி கொடுக்கிறது..மீதி அடிகளை அவர் தரவேண்டும்..அந்தப் பாடல்களுக்காக குமுதம் அப்போதே ஆயிரமாயிரம் இதழ்கள் இலக்குகளை எட்டியது நினைவில் வந்து போனது..அதிலொரு முதலடி கண்ணதாசனுக்குக் கொடுத்தது....
கங்கையுன் சடையிலே மங்கையுன் உடலிலே
காமனை ஏனெரித்தாய்..
காஞ்சி காமாட்சி நல் அறமெலாம் செய்ய நீ
கையிலேன் ஓடெடுத்தாய்...
என்று ஆழ் மனதில் புதைந்து கிடந்த வரிகள்
என் மனமெங்கும் அடைத்துக் கொள்ள கண்ணீர் துளிகள் பார்வையை மறைக்க காமாட்சி குழந்தையாய் பக்தைக்குக் காட்சி தந்த கதை மனதில் அச்சேறத் தொடங்கியது....
விசாரிக்கத் தொடங்கினேன்..தூப்புல் எங்கிருக்கிறது ...எப்படிச் செல்வது என்றெல்லாம்..ஆனால் அனைவருமே அப்படியொரு இடமே இல்லையென்று சாதித்து விட்டார்கள்..நான் தோற்கத் தயாராக இல்லை..நிகழ்வு முடிய மணி பதினொன்றாகிவிட்டது..மெல்ல மனைவியைக் கட்டாயப்படுத்தி உடனழைத்துக்கொண்டு வெளியில் வந்தேன்..கொளுத்தும் வெயிலில்...எனது கைபேசியில் எதையும் சரியாகப் பார்க்க முடியவில்லை...எதிரே நின்றிருந்த ஆட்டோ ஓட்டுனர்களை விசாரித்தால் தூப்புல் என்ற ஒரு இடமே இல்லையென்று சத்தியம் செய்யத் தொடங்கினார்கள்...என் கண்ணின் ஓரம் இயலாமை ஒரு துளியாய் துளிர் விட...சரி வரதராஜப் பெருமாளையாவது தரிசித்து வரலாம் என மனைவி சொல்ல...ஆச்சாரியன் நிகம்மாந்த மஹா தேசிகனை மனதில் தியானித்தேன்..
பயட திமிரம்மி புவணே..பத்த படிட்டாவிய பரமணாண பஈவா..
நிஜ்ஜந்தி அச்சுயதுஏணீயம் பயம் ஸைஸயம் பஹம்
கய கஜ்ஜா..
ப்ரகட திமிரே புவநே பாத்ர ப்ரதிஷ்ட்டாபித பரம் ஜ் ஞாந ப்ரதீபா:
நீயநதோஸ்யுத த்வயா
நிஜம் பதம் ஸ்தா ஸ்வயம் பரபம் க்ருத கார்யா...
[ நிகம்மாந்த மஹா தேசிகன்]
என்ற ஸ்லோகத்தை ஏற்கனவே ஒரு காகிதத்தில் எழுதிவைத்திருந்ததை என் கைபையிலிருந்து எடுத்துப் படித்தேன்..மனம் லேசானது போலிருந்தது...இந்த ஸ்லோகம் ப்ராகிருத மொழியில் எழுதப்பட்டது....
இதன் பொருள் நானறிந்த வரையில் திருவயிந்திரபுர நாயகனே..அஞ்ஞானத்தால் இருள் நிறைந்த வர்களுக்கு ஞான விளக்கின் ஒளி கண்ணில் தெரிவதில்லை...அந்தப் பொழுது அவர்களின் இறுதிக்காலமெனலாம்..ஆனால் ஞானம் பெற்றவர்கள் தங்களின் இறுதிக் காலத்தை இருளில் கூட உணர்ந்து விடுவார்கள்...அது போன்ற உத்தம ஞானவான்கள் தங்களின் சிஷ்யர்களுக்கு ஞானம் போதித்து வைகுண்டதிற்கான அழைப்பிற்காக காத்திருக்கும் பொழுதுகளில் நீ காட்சி தந்து அவர்களை...ரட்சிக்கிறாய்...அவர்களுடனேயே இருக்கிறாய்...
என்ன அதிசயம் ..ஒரு வயதான பெரியவர் தன் வயதான மனைவியுடன் திடீரென எங்களருகில் வந்தார்..அவர் நெற்றியில் திருமண்...பஞ்சகச்ச வேஷ்டி..அவரின் மனைவி ஐயங்கார் மடிசார் புடவை.உடுத்தியிருக்க..வந்தவர்..ஆட்டோ ஓட்டுனரிடம்..ஏம்பா..தூப்புல் தெரியாதென் கிறாய்..என்று கேட்டு விட்டு..என் பக்கம் திரும்பி...வாங்கோ அங்க ஒரு ஆட்டோகாரர் கிட்ட நான் சொல்றேன்..உங்களை கூட்டிண்டு போவார் ...என்றதும்...என் மனைவி தயங்கினாள்.....நான்..வா..பெரியவர் சொல்றாரோனோ...அந்த வரதராஜ பெருமாள் மாதிரியே வேற இருக்கார்....என்று நான் சொல்லிக் கொண்டிருக்கையில் கொஞ்சம் எட்டிச் சென்று விட்ட அந்தப் பெரியவர்...திரும்பி...நான் பெருமாள் இல்ல...சாதரண மனுஷந்தான்...நீங்க நாளஞ்சு ஆட்டோ காராகிட்ட தூப்புல் போகனும்னு கேட்டுண்டிருந்த கவனிச்சேன்..அவாளுக்கு அப்பிடிச் சொன்னா புரியாது...வாங்கோ நான் அவரண்ட சொல்றென்...என்று அந்த ஆட்டோ காரரிடம் ஏதோ சொல்ல அவர் ஏறுங்க சாமி...என்றவுடன் மனமெல்லாம் ஆனந்த ராகம் வெடித்துப் புறப்பட..அந்த பெரிய திவ்ய தம்பதிகளை மறந்தே போனோம்..
தூப்புல்லில் என் ஆச்சாரியனிடம் அவரின் சில ஸ்லோகங்களைச் சொல்லி மன அமைதியடைந்தேன்..திருத் தண்காவில் பட்டர் பிரசாதங்கள் கொடுத்து எங்களைப் பற்றி விசாரிக்க..ஆச்சாரியனின் பெருமைகளை நான் விளக்க அவர்..தூப்புல்லில் ஆச்சாரியன் நிகழ்த்திய அற்புதங்களைச் சொல்லிக்கொண்டே வந்தார்...நான் எந்த ஆட்டோ ஓட்டுனருக்கும் இந்த இடம் தெரியவில்லை...கடைசியில் ஒரு வைணவ முதியவர்தான் இந்த ஆட்டோக் காரர் மூலம் என்னை இங்கு கொண்டு வந்து சேர்த்தார். ..என்றவுடன் பட்டர் என் கைகளைப் பிடித்துக்கொண்டு ஆச்சாரியனின் தரிசனம் உங்களுக்குக் கிடைத்துவிட்டது என்று அவர் பரவசப்படத் தொடங்கினார்...ஆஹா..ஆச்சாரியன் எதிரே இருந்தும் படிக்காமல் போனேனே.......என்ன பாவம் செய்து விட்டேன்...
ராகவபிரியன்...
[அடுத்து அத்தி வரதனை தரிசித்த விவரனை விரைவில் வரும்...]

Wednesday, April 24, 2019

பொ ஆ மு 4000 வருடங்களுக்கு முன்னால்...தொங்கும் தோட்டம் தோன்றியிராத பாபிலோனின் இஸ்ஸுவஸ் நதியின் மேற்பரப்பெங்கும் எண்ணெய் மிதந்தபடியிருக்க மக்கள் அதிசயமாய் கூடி நின்று வேடிக்கைப் பார்க்கிறார்கள்..ஒருவர் சிக்கி முக்கிக் கல்கொண்டு ஒரு பொறி உருவாக்க இஸ்ஸிவஸெங்கும் தீப்பிடித்து நதி நகர அரண்டு ஓடிப்போய் அரசனிடம் சொல்கிறார்கள்..அந்த எண்ணெய் மிதக்கும் நீரை மண் பாண்டங்களில் சுமந்து சேமிக்கிறார்கள்..அதற்கு இரண்டாயிரமாண்டுகளுக்குப் பின் சீனாவில் ஒரு நதியில் எண்ணெய் மிதக்கத் தொடங்க அதன் எரிபொருள் தண்மை ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு அதன் உருவாக்க இடங்களை தேடிச் செல்லும் பயணம் தொடங்குகிறது..இலத்தின் மொழியில் பெட்ரா என்றால் பாறையென்று பொருளாம்..இயற்கை வளங்களைக் கண்டறிந்தாலும் அதைச் சூறையாடத் துணியவில்லை நம் முன்னோர்கள்...
இன்று பெட்ரோல் என்பது சாமான்ய மனிதனின் அத்யாவசிய தேவையாகி உலக அரசியலையே தீப்பிடித்து எரிய வைத்துக் கொண்டிருக்கிறது..நமது தேவைக்கான பத்து சதவீத எரிபொருள் இரானிடமிருந்து இறக்குமதி செய்யப்படுவதாக இந்து நாளிதழின் இன்றைய தலையங்கம் சொல்கிறது..அது மட்டுமல்ல இரானிடமிருந்து இனியும் இந்தியா எரிபொருளை இறக்குமதி செய்துகொண்டிருந்தால் பொருளாதார தடைகளைச் சந்திக்க வேண்டுமென்றும் மிரட்டுகிறதாம்...அதையும் விட இந்துவின் ஒரு செய்தியில் இந்தியப் பிரதமர் இரான் அரசிற்கு நம் எரிபொருள் இறக்குமதியை அதிகப்படுத்துவதாக உத்ரவாதம் வேறு அளித்திருக்கிறாராம்...
இலங்கையில் குண்டு வைப்பதற்கு முன்னால் அந்த ஒன்பது மனித வெடிகுண்டுகளும் உறுதி மொழிஏற்கிறார்கள்..உறுதிமொழி செய்வித்து வைப்பவனின் சிங்கள உச்சரிப்பின் வசீகரம் வியக்க வைத்தது..சிந்தனைக் கலவைகளின் பொருளாதார உலகளாவிய முடிச்சுகளின் பெளதிகம் புரியமால் பராக்கு பார்த்தபடி எனது இரு சக்கர வாகனத்தைக் கிளப்பினேன்...
ஒன்றும் புரியாமல்... வணிகவியலில் முதுகலைப் பட்டம் வேறு...எனது இரு சக்கர வாகனத்தின் பெட்ரோல் கொக்கியை திறக்காமலே பத்து கி.மீ.வரை சென்று விட்டேன்..ஒரு எரிபொருள் தீ கக்கும் பின் நவீன கவிதைக்கான வார்த்தைகளை யோசித்தபடியே..திடீரென வண்டி சண்டி செய்ய கொதிக்கும் வெயிலில் தள்ளவேண்டிய சூழல் வந்துவிட்டதே என்று நொந்தபடியே பெட்ரோல் செல்லும் பூட்டுக் கொக்கியை மேலோ கீழோ திருப்ப மறந்ததை யுணர்ந்தேன்..வண்டியின் பெட்ரோல் தொட்டியைத் திறந்தால் சூரியன் தலைக்கு மேலே நிழல் விழாத இந்த நாளின் நேர் கிரணங்களை உள் அனுப்பி போதுமான எரிபொருள் திரவம் தளும்பியதைக் கண்டு நிம்மதியுடன் மீண்டும் இயக்கும் போதில் பத்து சதவீத நவீனம் உள்ளடக்கிய ஒரு கவிதை..கண்டிப்பாக பின் நவீனம் தான்..நீங்கள் ஒப்புக் கொள்ளாவிட்டால் அமெரிக்க ஏகாதிபத்தியம் பொருளாதார தடைகளை இந்தியா மீது திணிக்கும்...அப்படி திணித்தால் இந்தக் கவிதை பொறுப்பல்ல...
பாறைகளில் துளையிடும்
துளைப்பான் சத்தத்தால்
அந்தச் சிங்கத்தை
கிணறு நோக்கி
அழைத்து வந்த முயல்
தன் திட்டத்தை
ஒரு நாள் தள்ளி வைத்தது...
அறுவடைக் கால காற்றில்
ஊளைச் சத்தமிடும்
நெல் மணிகளின் உரசல்கள்
பீறிட்டடிக்கும்
எண்ணெய்க் காற்றில்
ஊமையாய் மெளனிக்க..
தன் எதிரி
ஒளிந்திருக்கும்
கிணறு முழுவதும்
எரிபொருள்
மிதப்பதைக் கண்டு
கர்ஜிப்பதை மறந்து
நமுட்டுச் சிரிப்பு
சிரிக்கிறது
அமெரிக்கச் சிங்கம்...
அது
ஓய்வெடுக்கும்
அந்த இடைவெளியில் தான்
எம் இராமனாதபுர தமிழ்ப்பெண்
தலைசிவப்பட்ட
நெகிழி வாளியில்
அந்தக் கிணற்றில்
குடி நீருக்கான
கயிறு வீச்சின் வித்தையைக்
காட்டத் தொடங்குகிறாள்...
கடல்
ஆழத்திலிருந்து
உக்கிரமாய்
வெளியேறும்
எரிவாயுவின் தலையில்
தீ வைத்தவன்...
தன் வாகனத்திற்கான
எரிபொருள்
விலையைப் படித்துவிட்டு
தீ குளிக்க
முயலும் புனிதப்போதில்தான்
சிங்கத்தை
அந்தச் சின்ன முயல்
தேடித் திரிகிறது...
காடுகளிலும்...
கடல்களிலும் கூட...
ராகவபிரியன்..

Monday, April 22, 2019

ராகவபிரியன் தேஜஸ்வி எழுத்தாளர்: ஒரு அப்பளத்தைப் பொரித்தெடுக்கஅதன் வட்டத்தைச் சுற்...

ராகவபிரியன் தேஜஸ்வி எழுத்தாளர்: ஒரு அப்பளத்தைப் பொரித்தெடுக்க
அதன் வட்டத்தைச் சுற்...
: ஒரு அப்பளத்தைப் பொரித்தெடுக்க அதன் வட்டத்தைச் சுற்றி விரல் ரேகைகளால் தடவிக் கொடுத்தேன்.. அப்பள தயாரிப்பிடங்களில் குவிக்கப்பட்டிருக்கும்...
ஒரு அப்பளத்தைப் பொரித்தெடுக்க
அதன் வட்டத்தைச் சுற்றி
விரல் ரேகைகளால்
தடவிக் கொடுத்தேன்..
அப்பள தயாரிப்பிடங்களில்
குவிக்கப்பட்டிருக்கும்
அப்பள உருண்டைகளில்
தடவப்படும் மாவின் வெண்மையாய்
மனம் மிதக்கத் தொடங்கியது..
ஒட்டாமல் விழுந்த
மாவுத் துகள்
நான் சுவாசிக்கத் தவறிய
காற்றில் கலந்திருக்க வேண்டும்..
ஆதி அப்பளமொன்றை
பொரித்துச் சுவைத்த
எம் மானுட மூத்தவன் மேலான
என் ஜீவித பொறாமையாய்
தூவப்பட்டிருந்த மிளகுத் துகள்கள்
விரல் நுனியில் நெருடலிட்டன..
போதி சத்துவன்
அப்பளம் தவிர்த்திருப்பானா
என்ற கேள்வியின்
சிந்தனை நொடிகளில்தான்
வாணலியில் எண்ணெய்க் குமிழ்கள்
மேலேறி விளையாடத் தொடங்கின..
ஆசையின் அளவுக்கான
முனை கிள்ளிய
சின்னஞ்சிறிய அப்பளத் துகளை
எண்ணெயிலிட..
என் கடந்த காலங்களும்
நிராசைகளும் வெளுத்துத்
துடித்து..
பொரித்துப் பெருத்து..
என் வாழ்வின் ஓரமாய்
வாணலியின்
சுவர் ஒட்டி
மரணித்து ஓய்ந்திருக்க...
இடுக்கிப் பிடியில் சிக்கி
கொதி எண்ணெயில்
நுழையப் போகும்
அப்பளத்தைத் தான்
யசோதரை
தன் மணவாழ்வின்
பிரதி நிதியாய் கிடத்தியிருக்க வேண்டும்...
கொதி எண்ணெய்க்குள்
நுழையும் முன்பான
அப்பளத்திலிருந்து
துருத்திக்கொண்டிருந்த
மிளகு விழுந்த துளையில் தான்
ஒட்டகங்களாய்
என் ஆற்றாமை
தலை நீட்டிக் கொண்டிருந்தது..
மிளகுத் துகளில்லாத
அப்பளங்கள்
போர்க்களங்களில்
தோற்றவர்களின் பந்திகளில்
பரிமாறப்படுவதில்லை..
மாவு தடவிய
காய்ந்த அப்பளமொன்றைத் தான்
இரவின் நிலாவென
போதிச் சத்துவன்
தன் தலையில்
பின் பக்கம் சுமந்திருக்கிறான்...
பொரித்த அப்பளத்திலிருந்து
புறப்படும் இவ்வாசம்
பின் நவீனத்துவ பசி தூண்டி
போதி சத்துவனின்
தவம் கலைக்கப்படுவதை
சகிக்கமுடியாமல்
உடைந்து நொறுங்கி
தூளாகித் தவிப்பதை
யாரறிவார்...?
ராகவபிரியன்
[படித்து முடித்தவுடன் சிரிக்கக் கூடாது..அருமை..க்ளாஸிக் போன்ற பின்னூட்டங்கள் தவிர்க்கவும்..சத்தான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன...இரவுச் சாப்பாட்டிற்கு அப்பளம் பொரித்தே ஆகவேண்டுமென நண்பர்கள் வீட்டில் அடம் பிடிக்கவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்...வணக்கங்களுடன்..அன்பன்..ராகவபிரியன்]

Sunday, April 21, 2019

கடவுள் மறுப்பாளர்களின் ஒற்றைக் கண்
விழித்திரை கிழிந்திருக்கிறது..
சிற்பக் கூடத்தின் உடைந்த சிற்ப அழகுகளில்
கால் பதித்து நடந்துவிட்டு
பாத பூசை தட்டில் வைத்துக்கொண்டு
மற்றவர்கள் புனித நீர் ஊற்றி
கழுவவேண்டுமென நினைக்கிறார்கள்..
அவர்களின் கண்களுக்கு கிட்டப்பார்வை மட்டுமே உண்டு..
பார்க்க முடியாத தூரம் வரை எக்கி விசிறும்
நீர்த் துளிகள் அவர்களின் இடது உள்ளங்கையிலிருந்து
வீசப்பட்டதல்ல..
பிராணிகளின் முதுகுதடவிய கைகளில் சிக்கிய
பூனை முடிகள் பற்றிய பாசவார்த்தைகளை
சேனை தைக்கும் ஊசியில் கோர்த்துத்
தைக்கும் போது..
விரலைக் குத்திக் கொண்டு..
வார்த்தைக்காண எழுத்துக்களை
மேலே தூக்கிப் போட்டு பிடித்து விளையாடுவார்கள்..
அங்கே துளிர்க்கும் சின்ன குருதிக்குமிழ்
உறிஞ்சுவதற்கு முன் காய்ந்து போய்விடுவதால்..
அதைச் சுரண்டிக்கொண்டிருக்கும் சப்தம்
உரத்துக் கேட்பதாய் உதார் விடுவார்கள்...
அவர்களின் உந்தூர்தியின் நிலை நிறுத்தாங்கி
இழுப்பான் தளரிச் சப்தமிட்டுக்கொண்டே
வீதியெங்கும் சுழன்று வர...
ஓட்டுபவன் தவிர சாலைச் செல்லிகளுக்கு
செவி மூடிக் கிடப்பதை...
ஒற்றைக் கண் மாயாவிகளால் ஒருபோதும் உணர முடியாது...
ராகவபிரியன்

Saturday, April 20, 2019

The happenings after
human satisfactions
simply destroying the
so called affections
when after realizing that
Vivekananda
is a sanyasa
the American women folk
stopped the hate talk..
about Indian sanyasis..
an audio tape could trigger unrest
among the peaceful ephemerals
atmospheres..
then what is worth in writing epistles..?
If unsane persons could trigger violence..
where is our culture,education ,tolerance ..?
and above all what is the meaning for
moral turbulence.. ?
The dignity of human race lies
in dining with every one..
not with mortals...
that too on a hot summer road..
but with immortals..
The peace is not in throwing stones
on police force...
but on throwing petals on enliveness..
the need for settling the understanding
of the ignorant
is the need of the hour...
and the real peace is
hidden inside
in attachment to sane actions...

Monday, April 15, 2019

அன்பு நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...
வைகாணச முறையில் பெருமாள் கோவிலில் பூஜைகள் செய்யும் தற்கால பட்டாச்சாரியர்கள்..அரங்கனின் நியமணத்தை அரங்கன் வகுத்துக்கொடுத்த நியதிகளைச் சரிவர புரிந்து கொள்ளவில்லையோ என்ற சந்தேகம் வருகிறது..
பிறப்பால் வைகாணசராய் இருப்பின் அவர்களுக்கு கருவிலேயே பஞ்ச சமஸ்காரங்கள் செய்விக்கப்பட்டு விட்டதாக யார் கூறிச் சென்றார்கள் என்றும்...அந்தக் கூற்றின் தரிசனம் இன்னும் சரியாகப் பார்க்கபடவில்லையென்றும் அதற்கான ஆதாரங்கள் சரிவர கொடுக்கப்படவில்லையென்றும் தெரிய வருகையில் அதிர்வலைகள் உருவாகுகின்றன..... பிருகு அத்ரி காஷ்யபர் முதலிய முனிவர்கள் வகுத்த வைகாணசம் வேதங்களை முறையாகப் பயிலாமல் சரியான பயிற்சி இல்லாமல் கோவிலில் மூலவரைத் தொட்டு பூஜைகள் செய்யும் தகுதியை ஒரு போதும் வெறும் பிறப்பால் மட்டும் ஒருவருக்குத் தரவில்லையென்பது ஆழ்ந்து வேதங்களைக் கற்றவர்களுக்கு விளங்கும்..
அப்படி வெறும் பிறப்பால் அந்தத் தகுதி கிடைத்தாலும் கூட அதை தவறாகப் பயன் படுத்தினால் தகுதியிழப்பைச் சந்திக்க வேண்டிவரும்...அதைத் தான் நமது சாஸ்திரங்கள் சொல்லிக்கொண்டுள்ளன...ஒரு வைகாணசர் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு மூலவருக்கோ மற்ற விக்ரஹங்களுக்கோ அபிஷேகம் செய்யக்கூடாதென்று வைகாணசத்தில் பிருகு முனிவர் ஓரு ஸ்லோகத்தில் சொல்லியுள்ளார்..{.இணையத்தில் தேடியும் கிடைக்க வில்லை...பிறகு பதிவிடுகிறேன்...}அப்படிச் செய்வது அரங்கனை மட்டுமல்ல அரங்கன் பக்தர்களையும் அவமானப்படுத்துவதாகும் என பல பெரியோர்கள் பல இடங்களில் சுட்டிக் காட்டியுள்ளனர்...
ஒருவர் கோவில் பூஜைகளை சரிவர நியமமாகச் செய்யாத போது எப்படி அவர் வைகாணச குலத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காக கோவில் பூஜை செய்யும் தகுதியுடையவராகிறார் என்பது இன்னமும் புரியாத புதிராகவே இருக்கிறது...ஆன்மீக பெரியோர்கள் இதற்கான சரியான விளக்கத்தைத் தருவார்கள் என நம்புகிறேன்...
இதே போன்ற தகுதி சம்பந்தமான ஒரு நிகழ்வு சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் அவதரித்த நம் ஆச்சார்யன் நிகம்மாந்த மஹாதேசிகருக்கு நிகழ்கிறது..கருடன் நேரில் உபதேசித்த மந்திரத்தைச் ஜபித்துக்கொண்டு திருவஹீந்திரபுர மலைமேல் அமர்ந்திருக்கிறார் ஆச்சாரியர்...திடீரென எழுந்து கீழிறங்கி ஒரு குடையைப் பிடித்துக் கொண்டு மீண்டும் மலையேறி வருகிறார்...அவரின் சீடர் ஒருவர்..ஆச்சாரியரிடம் ஏன் குடையுடன் வருகிறீர்கள் என்று கேட்க இதோ மழை வரப்போகிறதென்று கூறுகிறார் ஆச்சாரியர்..அங்கிருந்த பட்டர்கள் நகைத்து அவரைக் கிண்டலடிக்கிறார்கள்..யாரும் எதிர்பாராமல் மழை அந்தக் கடும் கோடை மாதத்தில் கொட்டித் தீர்க்கத் தொடங்குகிறது...
திருவஹீந்திரபுர அழகிய மணவாளனின் திருமேனி முற்றும் நனைந்துவிட வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு திருமேனியை துடைக்கத் துணிந்த ஒரு பட்டரை ஆச்சாரியார் தடுத்து..நியமமாக வந்து இதைச் செய்யும் என்று சொன்னபோது..அருகிருந்த எல்லா பட்டர்களும் மீண்டும் ஆச்சாரியாரை அவமதிக்கிறார்கள்...நம்பிக்கையற்றவர்கள் எதையும் செய்யத் துணிவார்கள்...நேரம் செல்லச் செல்ல... மழை நின்ற பாடில்லை..ஊரே கடலுக்குள் சென்று விடுவது போன்ற நிலை...ஆச்சாரியார் மலைமேல் ஹயக்கீரிவரின் முன் தியானத்தில் இருக்கிறார்..ஊரே அவர் முன் கூடி விடுகிறது...
அவரிடமிருந்து ஒரு ஸ்லோகம் வெளிப்படுகிறது...ஹயக்கிரீவரிடமிருந்து வெளிப்பட்ட கனைப்பொலியொன்றும் எல்லோர் காதிலும் விழுகிறது...அந்த ஸ்லோகம்...
ஸமாஹரஸ் ஸாம் நாம் ப்ரதிபதம் ருசாம் தாம யஜூஷாம்
லய:ப்ரத்யூஹா நாம் லஹரிவிததிர் போதஜலதே:
கதா தர்ப்ப க்ஷூப்யத் கதக் குல கோலாஹல பவம்
ஹரத்வந்தர் தவ்வந்தம் ஹயவதந ஹேஷஹலஹல:
[ஸ்ரீ நிகம்மாந்த மஹா தேசிகன்}
இதன் பொருள் என் சிற்றறிவிற்கு எட்டிய வரையில்.....
ஒரு சில ஆணவம் கொண்ட தகுதியற்றவர்களால் பெருமாள் கோவில் பூஜைகள் நடைபெற்றால்..பூஜைகள் நியமமாக நடை பெறும் காலங்களில் கேட்கும் ஹயக்கீரீவரின் கனைப்பொலியை கேட்க முடியாது...நியமங்களைக் கடைபிடிக்காமல் பூஜைகள் செய்வோர் ஸாம வேதத்தின் பொருளுணராதவர்கள்..ஹயக்கிரீவரின் கனைப்பொலியில் நான்கு வேதங்களும் அதன் சாரங்களும் அடங்கியிருக்கின்றன..பூஜைகளிலும் பக்தர்களின் வேண்டுகோள்களிலும் அரங்கனுக்கான நியமங்களில் நம்பிக்கையற்றோர் பூஜிக்கையில் கனைப்பொலியையும் அதனால் விளையும் நன்மைகளையும் அறிந்திருக்க வாய்ப்பில்லை..அத்தகையோர் பூஜைகள் செய்யும் போது அவிர்பாகம் அரங்கனுக்கும் வேதங்களுக்கும் போய்ச் சேர்வதில்லை...
எனவே பூஜைகளை நியமமுடன் கடைபிடித்தால் அனைத்தும் நன்றாக நடந்தேறும் என்று சொல்லியபடியே ஆச்சார்யன் குடையை மடக்க மழை நின்று போகிறது...
அதுவரை எள்ளி நகையாடிய பட்டாச்சார்யர்கள் ஆச்சார்யன் கால்களில் விழுந்து மன்னிப்புக்கேட்க..ஆச்சார்யன்..கோவில் பூஜைகளை நியமமாகச் செய்தாலே அரங்கன் அனைத்துத் தகுதிகளையும் மன்னிப்பையும் அருள்வான் என்று சொல்லி மேலும் முப்பத்து மூன்று ஸ்லோகங்களை இயற்றுகிறார்..மழையில் நனைந்த பிடறியை உதறிக்கொண்டு ஒரு குதிரை... வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு ஆச்சாரியனிடம் தர்க்கம் செய்த பட்டரை கடற்கரை வரை துரத்தியதை இன்றும் கூட வாய்வழிச் செய்தியாய் நாம் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்....
அரங்கன் திருவடிகளே சரணம்...
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்...
திவஹீந்தரபுர திவ்ய தம்பதிகள் திருவடிகளே சரணம்..
வேணும் தாஸன்..அன்பன்...ராகவபிரியன்

Thursday, April 11, 2019

கடந்த இரண்டு நாட்களாக தமிழிலக்கியம் அதன் புரவலர்களாலேயே புரட்டிப்போடப்படுவதைக் கண்டு மனம் வெதும்புகிறது...நாஜி முகாம்களிலிருந்து தப்பி வெளியேறிய யூத எழுத்தாளர்களின் புலம்பல்களை விட நாராசமாய் ஒலிக்கிறது சில சாதிமுகாம்களில் அடைபட்டு இலக்கியம் செய்து பின் வெளியேறி தற்கொலை செய்து கொண்டுவிட்டு.....தூய தமிழ் இலக்கியத்தில் ஈடுபடுவது போல் பிதற்றுவது இன்னும் சகிக்கமுடியவில்லை..அதனால் தான் இப்பதிவு..இது யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்குவதற்காகப் பதியப்படவில்லை..
ப்யூடலிஸம்..ஸ்ட்ரக்சரலிஸம்..பின் நவீனத்துவம்...பெரியாரிஸம் ..இடது..வலது..மிக்சரிஸம்..ரியலிஸம்..பாசிஸம்..இந்து முஸ்லீம் கிறிஸ்தவ ஜைனிஸம்..சமத்துவ சமணரிசம்..பேரழிவு புனைவிஸம்..என்றெல்லாம் முற்றுப்புள்ளியில்லாமல் சில அர்த்தமற்ற வாக்கியங்களைப் படைவித்துவிட்டு அதற்கு தரமற்ற விமர்சனங்களை தன் அடிப்பொடிகளை விட்டு எழுத வைத்து...வசவிலக்கியத்தில் வானைத் தொடம் தன்னிருத்தலிஸம் கண்டு கொதித்திப்போகாத தமிழ் வாசகர்களே இப்போது முக நூலில் இருக்கமுடியாது...
வாசகர்களை வாசிப்பினின்று நகர்த்தி மின்னணு விளையாட்டுக்களிலாழ்த்திவிட்டு..ஒரு மெளனத்தின் அலறலுடன் கடந்து போய்...தூரத்தில் கால்மேல் கால் போட்டமர்ந்து... பின்பு தமிழிலக்கியம் இன்னும் நவீனத்தைக் கடக்கவில்லை என்று கதைத்துக்கொண்டிருக்கிறார்கள்..
சாதிகளைப் பற்றிய அலப்பறைகள் ஆய்வுகள் இன்ன பிறவும் எத்தனையோ நூற்றாண்டுகளாக இருந்து கொண்டுதான் இருக்கிறது...எதோ பிராமணர்கள் தான் சாதியைப் புகுத்தியவர்கள் என்பது போல் மாயை உருவாக்கி பிராமணீயம் என்பதை பிராமணர்களின் உருவமாக்கி அவர்களின் அன்றாட வாழ்வை ஆபத்துக்கள் நிறைந்ததாக்கியது தான் கடந்த ஐம்பதாண்டுகால திராவிட இலக்கியம் செய்த மிகப்பெரிய சாதனை..இடதுவிஸம் தமிழ் திராவிடத்திடம் ஒரு சீட்டிற்கும் இரு சீட்டிற்கும் அல்லாடும் அரசியலை அதியற்புத இலக்கியமாக பதியவைத்து தங்களுக்குத் தாங்களே கொடுத்துக்கொள்ளும் விருது நிகழ்வுகள் வரலாற்றின் நாளைய மிச்சங்களோ எச்சங்களோ எச்சைகளோ பிச்சைகளோ அறியமாட்டோம்..
பிராமணர்கள் அல்லாத ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள்தான் தங்களின் அரசியல் ராஜதந்திரத்தால் பட்டியலினத்தவரையும் பிராமணர்களையும் சேர்த்தே வதைத்து வந்திருக்கிறார்கள்...ஒரு பட்டியலின யுவன் ஒரு பிராமண யுவதியை வலுக்கட்டாயமாக மணந்து கொண்டால் அந்த பட்டியலின யுவன் பாரதியின் முன் உதாரணத்தைக் கொண்டு பிராமணனாகிவிடுகிறான்..அந்த அப்பாவிப் பெண் பின்னால் தொடர்ந்து வந்து வாழைக்காய் வெட்டும் அரிவாளால் வெட்டி வீழ்த்தவும் அவனுக்கு திராவிட் இலக்கியங்கள் அதிகாரம் அளிக்கும்...அந்த பாவப்பட்ட யுவதியின் பிராமண தந்தையும் அவர்கள் குடும்பமும் தற்கொலை செய்து கொண்டு காணாமல் அடிக்கப்பட்டுவிடுவார்கள்...அதே நேரம் ஒரு ஆதிக்க சாதியின் பெண்ணை ஒரு பட்டியலின யுவன் தொட்டுக்கூட பார்க்க முடியாது மனதளவில் கூட..வெட்டிக் கூறு போட்டுவிடுவார்கள்...இது போன்ற அதி தீவிர திராவிட கலாச்சாரத்தை வலிந்து புகுத்திய இலக்கிய கர்த்தாக்களின் அரசியல் ராஜபாட்டையில் எவரும் இடது புறமாகவோ வலது புறமாகவோ நடக்கக்கூட முடியாது.. நின்று வேடிக்கைப் பார்த்தால் கூட நாக்கூசும் ஈன வார்த்தைகளை பிரயோகித்து ஓட ஓட விரட்டி அதுதான் இலக்கியம் என்று கூட்டம் போட்டு சீரான இடைவெளிகளில் இடைவெளியின்றி கர்ஜிப்பார்கள்...
திருவள்ளுவர்..பிராமணர் இல்லை என்று ஆய்வு முடிவுகள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் சாதித்ததால் தான்.. திருக்குறளை இலக்கியம் என்று ஆண்டைகள் ஒத்துக்கொள்கிறார்கள்..அவர் மட்டும் அய்யராய் இருந்திருந்தால் கம்பரின் ஏரெழுபது சிலையெழுபது போன்ற சில ஆதிக்க சாதிகளை உயர்த்தியெழுதிய நூல்களைப் போல ..[திருவள்ளுவரும் வள்ளுவர் சாதி என்ற கூற்றும் இருக்கிறது..]வள் வள் உவர் எழுபது என்று எழுதிய இலக்கியங்கள் கிடைக்கக்கூடலாம்...
பெரியாருக்கு முன்பே திருவள்ளுவர் பெரியாரைப் பாராட்டி ஒரு திருக்குறள் எழுதியிருக்கிறார் என்று கல்லூரியில் ஒரு பேராசிரியர் எண்பதுகளில் மாணவர்களின் கூட்டத்தில் ஒரு அன்றைய ஆகப்பெரிய பிரபல கவிஞரை வைத்துக்கொண்டு சொன்னபோது கவிஞர் மட்டுமல்ல அந்த அரங்கமே கைத்தட்டல் ஒலியில் அதிர்ந்த போது திருவள்ளுவரின் அங்கே இருந்த படத்தை மாலையொன்று மறைத்திருந்தது ஆறுதலைத் தந்தது..அந்தக் குறள்...
பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால்
பேரா இடும்பைத் தரும்..
பிற்காலத்தில் பெரியார் கையில் மூத்திரப் பை மட்டும் இல்லை பேணாவும் இருந்தது என்று இதற்கு பொருள் சொல்வோரும் முளைத்து வரலாம்..அவர்கள் ஆகச்சிறந்த இலக்கியக் கர்த்தாக்களாய் கொண்டாடவும் படலாம்...
ஹோலோகஸ்ட இலக்கியம் அதாவது பேரழிவு இலக்கியம் என்ற ஒன்று நவீனத்தில் இருப்பதாக அறியப்படுகிறது...அதற்கு உதாரணமாக ஹிட்லரின் விஷவாயு முகாம்களில் இருந்த பெண்கள்..கோடிக் கணக்கில்.... அணிந்திருந்த அங்கிகள் ஒரு நாள் திடீரென உருவப்படுமாம்...துவைப்பதற்காகவாம்...அவைகள் துவைத்துத் தரப்படும் வரை..அவர்கள் நிர்வாணமாய் இருக்க வேண்டும்..இல்லையேல் விஷவாயு கிடங்கிற்குள் நுழைந்து விடலாம்..எது வசதி.. என்பது போன்ற ஒரு வரலாற்றுக் கொடுமையை பிரைமோ லெவி தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார்..அவர் ஒரு இத்தாலிக் காரர் என்பது கூடுதல் தகவல்...நாம் உம்பர்ட்டோ ஈகோவையும் இடால் கால்வினோவையும் அவர்களின் எழுத்துக்களின் தனித்தன்மையைப் புரிந்து கொள்ளாமல் பாராட்டிக்கொண்டிருப்போம்...
அது போன்ற தற்போதைய இடது சாரி கடவுள் மறுப்புச்சிந்தனைத் திணிப்பும் அதற்கு உடன் படாதோர் முக நூல் வெளியில் அவர்களின் எழுத்தாடை உருவப்பட்டும்..சமயத்தில் உடைக்கப்பட்டும் சித்தரிக்கப்படும் இலக்கிய நிதர்சனம் என்னை தற்கால சூழலில் வெகுவாகப் பாதிக்கிறது..மீண்டும் எழுத வந்தது தவறோ என்ற நினைவு என்னை வாட்டிவருகிறது...நண்பர்களே ..ஒரே ஒரு கவிதையால் உங்களுக்கு விளக்க முயல்கிறேன்..
என் எழுத்துக்கள்
பயணிக்கும்
ராணுவ வண்டியின்
அருகில்
ஒரு வெறுப்பெழுத்து
ஊர்தி நெருங்கி
இடது புறமாய்
வெடிகுண்டுகளை வெடித்து
என்னைச்
சிதறடித்துவிட்டது..
அதன்
வெறுப்புக்கான
புரிதலற்ற
பயிற்சி வெளி
பாலக்கோட்டின்
இடது புறம்
கடவுள் படங்கள் இல்லாத
மாளிகையொன்றில்
உள்ளதையறிவேன்..
என்
கவிதையபிநந்தன்
நடத்திய
துல்லிய தாக்குதலில்
காணாமல் போனவர்களின்
எழுத்துப் பிணங்களை
இப்போது
தங்க நாற்கர சாலையின்
நடுவில்
நெகிழிப்பைக்குள்
அடைத்துக்கொண்டிருப்பதை
அவர்களே
படம் பிடித்து
அப்படியொன்றும்
இல்லை என்று
சாதிப்பதுதான்
இலக்கியமென்கிறார்கள்..
அந்தக் கடவுள்
படங்களுக்கு
ஒன்றுமே ஆகவில்லையென்பது
நம்பமுடியாத
நிஜம் தானே...
ஆமாவா இல்லையா..
ஆமென்..
ராகவபிரியன்

Monday, April 8, 2019

ஆட்சியாளர்களையும் ஆட்சியையும் கண்மூடித்தனமாக எதிர்த்து தரமற்ற முறையில் எழுதினால் நோபல் பரிசு கிடைத்துவிடும் என்ற தவறான புரிதல் தமிழ் இலக்கிய உலகில் கடந்த ஒரு நூற்றாண்டுகாலமாக தவழ்ந்து கொண்டிருப்பதைக் காணும் நம்ப மறுக்கும் நிஜப்பொழுதுகளில் ஒரு நம்பிக்கையின்மை எழுத்து மண்ணில் முதல் துளிராய் நம் மண்ணில் முட்டி முகம் காட்டுகிறது..பெரும்பாலன இலக்கியத்திற்காக தரப்பட்டநோபல் பரிசுகள் அரசியல் ரீதியான பார்வையுடனோ அரசியல் கருத்துக்களுக்கான கவனம் பெற்ற ஆக்கத்தினாலோ படைக்கப்பட்ட இலக்கியப் படைப்புகளுக்கே கொடுக்கப்பட்டிருப்பதை கவனம் கொண்டால் தமிழ் எழுத்தாளர்களில் நோபலை நோக்கி நகர்பவர்கள் இந்தக் கருத்தைப் பற்றிக்கொண்டு கண்மூடித்தனமாக ஆளும் கட்சியை எதிர்த்து எழுதிக்கொண்டிருக்கிறார்களோ என்று கவ்லையுற வேண்டியதாகிறது...இதான சிந்தனையோட்டதில் நேற்று காலை தி இந்துவின் ஆங்கில பதிப்பின் இலக்கிய மீள்பார்வை பகுதி என் எதிரே மிதந்து கொண்டிருந்தது..அதில் ஒரு கட்டுரை ஒரான் பாமுக் பற்றியும் அவரின் ஒரு சில படைப்புகளைப் பற்றியும் இருந்ததைக் கண்டு அவரின் ஆட்சியாளர்களுக்கெதிரான போராட்டமும் படைப்பு வெளியில் அவர் சந்தித்த துயரங்களும் அவர் வலிந்து சிறை வைக்கப்பட்ட கொடுமையும்..அதையும் மீறி நாடுகடத்தப்பட்டும் பட்ட அவமானங்கள் என் மனதில் வந்து போயின..
தன் ஐம்பத்து நான்காம் வயதில் 2006ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்..ஒரு தனித்தீவில் துருக்கியில் தன் மனதிற்கினிய நகரமான இஸ்தான் புல்லின் அருகிலிருக்கும் ஒரு தீவில் நமது இந்திய பத்திரிகையாளர் ஒருவரிடம் மனம் திறந்து பேசுகிறார்...அந்தத் தீவிற்கு பத்திரிகையாளர் எவ்வளவு இடையூறுகளைத் தாண்டிச் சென்றார் என்பதை உற்று நோக்கினாலே துருக்கியின் இன்றைய நிலையை அறியலாம்..
நேர்காணல் என்றால் இப்போது நமது எழுத்தாளர்கள் தங்களின் விளம்பரத்திற்காக காசு கொடுத்துக்கூட தாங்கள் நடத்தும் பத்திரிகைகளில் வெளியிட்டுக்கொள்கிறார்கள்..அவைகளைப் படிக்கும் போது அதிலுள்ள பகடியைப் படித்துவிட்டு வாய்விட்டுச் சிரிக்காத வாசகர்களே இருக்க முடியாது..அது தன்பகடி வகையைச் சார்ந்தது...ஆனால் ஒரான் பாமுக்கின் நேர்காணல் வெளி வந்தவுடன் அவர் மீது தேசத்துரோக குற்றம் சாட்டப்படுகிறது..அவர் அதில் தன்னைப் பற்றிய கேள்விகளுக்குப் பதில் தரத் தயங்குவதிலிருந்தே அவரின் உயரின் நமக்குப் புரியலாம்...
துருக்கியின் இஸ்லாமிய சர்வாதிகாரத்தை எதிர்த்து அவர் தன் எழுத்துக்களை வடிவமைத்தார்..குறிப்பாக அமெரிக்கர்கள் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் அங்கே குடியேறி ஒருவிதமான ஓட்டோமன் என்ற மொழியை தாய்மொழியாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்..துருக்கியின் தற்போதைய கொடுமையான நிஜநிலையெதுவெனின் கட்டாய மதமாற்றம் தான் அது..இஸ்லாத்திற்கு மாறாதவர்கள் பேசக்கூட தகுதியற்றவர்களாய் அறிவித்திருந்த அன்றைய அரசை எதிர்த்து ஒட்டோமன் மொழியின் வரலாற்றை பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தை தனக்கே உரிய பாணியில் பாமுக் எழுத ஆட்சியாளர்களின் வெறுப்புக்கும் தாக்குதல்களுகும் ஆளானார்...
நோபல் பரிசு பெற்ற பின்னும் கூட தனது தனித்தீவில் கடல் குளியல் இருவேளையும் கடல் பாசியாலான உணவையும் மட்டுமே உண்ணும் பாமுக் கடந்த 2013 தேர்தலில் வாக்களிக்க வில்லையென்று சொல்கிறார்...ஒரு சர்வாதிகாரத்திற்கு வாக்களிக்க மனம்வரவில்லை என்று சொல்லும் அதே வேளையில் இஸ்லாமிய சர்வாதிகாரம் தான் ஆகக் கொடியது என்றும் சொல்கிறார்... அவர் அங்கிருக்கும் ஒருசில மதச்சார்பற்ற சிறுபான்மை மக்களின் ஆதரவில் கடுமையான போராட்டங்களுக்கு நடுவே தன் வாழ்வை நகர்த்திக்கொண்டிருக்கிறார்...
இந்தியாவின் அரசியல் நிலைமை.. நமது பண்பாடு கலாச்சாரத்திற்கு... மதமாற்ற தாக்குதல்களைச் சமாளித்து இன்னமும் உயிரூட்டி வருகிறது..இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு ஒரு சில மத தீவிரவாதிகளால் குறிப்பாக இஸ்லாம் மற்றும் கிருத்துவ தீவிரவாதிகளால்தான் அச்சுறுதல்கள் இருக்கின்றனவே..தவிர ...பெருன்பான்மையான இந்து மக்களின் சகிப்புத்தன்மை உலகளாவிய பாராட்டுகளைப் பெற்றிருக்கிறது..அதையும் ஓரான் பாமுக் பாராட்டியிருக்கிறார்..நாமும் கண்மூடித்தனமாக வலது எழுத்தையும் ஜனநாயக தேர்தெடுக்கப்பட்ட அரசையும் எதிர்க்காமல் ஆக்கபூர்வமான சாமான்ய இந்தியர்களின் குறிப்பாக தமிழ் மக்களின் வலிகளை அவர்கள் சந்திக்கும் வாழ்வாதார பிரச்சனைகளை நலிந்து கொண்டிருக்கும் விவசாயத்தை...விவசாயத்தொழில் சமுதாய அந்தஸ்த்தைப் பெற்றுத் தராதென்ற பிம்ப முக மூடியை பிய்தெறியும் தரமான இலக்கியம் தந்தால் நிச்சம் நோபல் நம்மைத் தேடிவரும் என்ற எனது கருத்திற்கு வலு சேர்க்கிறது அவரின் கவிதையொன்று...அதை என்னளவில் தமிழில் தருகிறேன்..இது மொழியாக்கமோ மொழிமாற்றமோ இல்லை...
கடலின் நடுவில்
மாளிகை தருகிறீர்கள்..
நீங்கள் வலிந்து
செலுத்திய நச்சுக் காற்று
நுரையீரலிலும்
கடற்காற்று
மாளிகையெங்கும்
நிறைந்திருக்கிறது..
என் எண்ண மாளிகையின்
வண்ணங்கள்
கடலலைகளால்
அரிக்கப்பட்டுவிடும் என
கனவு காண்கிறீர்கள்...
என் மகளுக்கு
நான் "கனவு "
என்றுதான் பெயரிட்டிருக்கிறேன்..
சர்வாதிகாரக் கடலின் நடுவில்
எம் மக்களுக்கான மாளிகை
அலைகளால் மட்டுமல்ல
ஆட்சியாளர்களாலும்
ஆடிக்கொண்டிருக்கின்றன..
அவர்களின் வாழ்வை
இஸ்லாமிய சர்வாதிகார கறையான்
அலைகளாய்
சதா அரித்துத் தின்னும் சப்தம்
என் எழுத்தில் கேட்கும்..
உலகில்
எல்லா மதத்தினரையும்
இஸ்லாமியர்களாக
மாற்றிவிட முடியாதென்பதை
ஆட்சியாளர்களுக்கு
நான்
எப்படிச் சொல்வது...?
ராகவபிரியன்
கோவில்களில் அதுவும் பெருமாள் கோவில்களில் பூஜைகள் செய்வோர் தங்களது தனிப்பட்ட நியமங்களையும் கோவில் பூஜைகளில் செய்ய வேண்டிய ஆகமவிதிப்படியான பூஜைகளையும் செய்யத் தவறினாலோ அல்லது அலட்சியம் செய்தாலோ கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பது புராணங்களிலும் நமது முன்னோர்கள் பதிவு செய்து சென்ற ஆன்மீக வரலாற்று நூல்களிலும் காணக்கிடைக்கின்றன...
பொது ஆண்டிற்கு முன் அதாவது பொ ஆ மு சுமார் 6000 வருடங்கள் முன்பே கோவில் பூஜைக்கான ஆகம விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன..சமீபத்திய அதாவது போஆமு சுமார் 500 வருடங்களுக்கு முன்னான ஆகம விதிகளடங்கிய சம்ஸ்கிருத ஓலைச்சுவடிகள் இன்னமும் தஞ்சையின் சரஸ்வதி மஹால் நூலகத்தில் உள்ளன..
பொழுதுபோக்காகவோ பரம்பரை உரிமையாகவோ ஆகமவிதிகளை சரியாகக் கற்காமல் முறையான பயிற்சியை அதற்கான வேதபாடசாலைகளில் எடுத்துக்கொள்ளாமல் அரங்க விக்ரஹத்தைத் தொட்டு பூஜைகளை செய்தால் அரங்கனின் கோபம் சில நூற்றாண்டுகள் தொடரும் என வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது..பொ.ஆ.பி சுமார் ஆயிரம் வருடங்கள் நமது கோவில்களில் பூஜைகள் சரிவர செய்யாததால் வேற்று மத தாக்குதல்களையும் கோவில்கள் சூரையாடப்பட்டதையும் வரலாறுகள் பதிவுசெய்திருக்கின்றன...
நீ யார் எங்களைக் கேள்வி கேட்பது என்ற மனோபாவம் இப்போது நிறைய அர்ச்சகர்களிடமும் பட்டாச்சார்யர்களிடமும் இருப்பதைக் கண்டு என்னுள் சில அதிர்வுகள் நில அதிர்வுகளாய் நிரந்தர பாதிப்பை உருவாக்குகின்றன..2000 மாவது ஆண்டு ஒரு சைவ மடத்துறவி திருப்பதி ஏழு மலையான் விக்ரஹத்தை தொட்டு பூஜைகள் செய்ததையும் அதன் பின் அவர் சந்தித்த அவமானங்களையும் நாடறியும்..
அரங்கன் நிஜம் என்பதை அரங்கனுக்கான முறையான பூஜைகள் செய்வோர் உணர்வு பூர்வமாய் அனுபவித்திருப்பர்..ராமன் லக்ஷ்மணனுடனும் சீதையுடனும் காட்டிற்கு வந்து சேர்ந்த முதல் நாள் இரவு..காட்டின் கொடுமையான சூழலில் அதன் கொடுமைகளை விவரிக்க முடியா துன்பங்களை...அரச போகங்களை அனுபவித்துப்பழகிய லக்ஷ்மணன்...அனுபவிக்க தன் முடிவில் திடமாய் உறுதியாய் இருக்கிறானா என சோதிக்கிறார் பரம்பொருள்..
ஒரு ஸ்லோகத்தில் வால்மீகி தசரதரை காமத்தால் குருடனாகி தர்மத்திலிருந்து தவறிவிட்டார் என்றே கூறுகிறார்..மேலும் லக்ஷ்மணனைச் சோதிக்க ராமன் கூறும் ஸ்லோகங்களில் ஸ்ரீரங்க விமானத்திற்கான அரண்மனை பூஜைகளில் தொய்வு நேர்ந்ததையும் அதன் விளைவால் தான் அதர்மம் அரசனுருவிலேயே வந்து அரண்மனையையும் நாட்டையும் தாங்கவொன்னாத் துயரில் ஆழ்த்தியதையும் குறிப்பிடுகிறார்...அதனால் லஷ்மணா நீ உடனே திரும்பி அயோத்திக்குப் போய்விடு என்ற போது லக்ஷ்மணன் தான் இல்லாவிட்டால் பரம்பொருளால் தூங்க முடியாதென உறுதியாகச் சொல்லி ஸ்ரீராமனை சம்மதிக்க வைத்து பதினாங்காண்டுகள் உறங்காமல் சேவை செய்ததாக சொல்லப்பட்டிருக்கிறது....
அந்த ஸ்லோகம்...
ததஸ்து தஸ்மித் விஜநே வநேததா
மஹாபவலள ராகவ வம்ஸ வர்ததெள
ததெள பயம் ஸ்ம்ப்ரம மப்யுபேயது:
யதைவ ஸிம்ஹெள கிரிஸானு கோசரெள...
தரசதர் காமத்தால் ஆட்பட்டு அரங்கனுக்கான பூஜைகளில் அலட்சியம் செய்ததால் அயோத்தியிலிருந்த ஸ்ரீரங்க விமானமே விபீஷணனால் தூக்கி வரப்பட்டு இங்கே நம் வாழ்வின் வசந்தங்களுக்காக அரங்கனால் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது..நாம் எவ்வளவு பாக்கிய சாலிகள்..திருவரங்கத்தில் மொகலாய படையெடுப்பால் எவ்வளவு உயிர்சேதம் பொருட்சேதம் பக்தி சேதம் முதலியவைகள் நடந்தன..[.கோவிலில் போட்டியும் பொறாமையும் திருவிழாக்களிலும் ஆராட்டுகளிலும் அலட்சியம் போன்ற தகாத செயல்களால் ...]ஆச்சாரியன் நிகம்மாந்த மஹாதேசிகரும் வரலாறும் நமக்குக் கற்றுக் கொடுத்த பாடம் அரங்க பூஜைகளில் அலட்சியம் செய்தால் அதற்கான பாதிப்புகளை அனைவரும் அனுபவிக்க நேரிடும் என்பதுதான்...
இதற்கும் மேல் விதியென்று ஒன்றிருக்கிறது...அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.. ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்..அரங்கா..எங்களின் தவறுகளைப் பொறுத்தருள வேண்டும்...உன் பூஜைகள் நியமமாக நடந்திட நீயே அருள் புரிய வேண்டும்...
வேணும் தாஸன்..ராகவபிரியன்

Wednesday, April 3, 2019



படைப்பு என்பது இந்த உலகத்தின் ஆன்மாவுடன் அதன் வலிகளுடன் தன்னை இணைத்து நயமுடன் ஒரு ஓட்டுக்குள்ளிருந்தோ கர்பத்திலிருந்தோ வெளிவருவது எனச் சொல்லும் போதே எனக்குள்ளான ஒரு கேள்வி..அப்படைப்பு அதன் பிறப்பின் ஆத்ய நொடிகளில் அலறவேண்டியதாகிவிடுகிறதே ..ஏன் என்பதுதான் அது..படைப்பின் உயிர்த்திருக்கும் காலங்கள் வாசகர்களின் வாசிப்பு உயிர்காற்று தொடர்ந்து அதன் நாசிவழியே உட்புகுந்து வெளிவரவேண்டும்..எப்போது ஒரு வாசகன் கூட அந்தப் படைப்பிற்கு வாசிப்புக்காற்றைத் தரவில்லையோ அப்போது அது மரணித்துப் போய்விடுகிறது..ஆத்ய முதலான அந்தி நொடிகள் வரை அதை கூறு கூறாய் கிழித்தெறிய தன் ஆனந்த உயிர்த்திருத்தலை அது பெற்றுவிடுகிறது...கிழிபடும் காலங்களில் அந்தப் படைப்பானது உலகையே உலுக்கி அனைவரின் கவனத்தை கவர்ந்து...ஒரு சில விருதுகளையும் பெற்று விடுமாயின் அது தன் பிறவிப்பயனை அடைந்துவிட்டதென்றே அறியத்தரலாம்..இன்னும் ஒரு அடி மேல் மிதந்து நோபல் பெற்றுவிட்டால் அது சாகா வரம் பெற்று வாசக உயிர்க்காற்றின் நீண்ட நீட்சிக்கான உத்தரவாதம் பெற்று விட்டதாகவே கருதலாம்..அப்படிப்பட்ட படைப்புகளைத் தந்த முதல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற பிரஞ்சுக் கவி சல்லி புருதோம் அப்போதைய ஆகப்புகழ்பெற்ற லியோ டால்ஸ்டாயை[லியோ டால்ஸ்டாய் ஆறு ஆண்டுகளாக பரிந்துரைக்கப்பட்டும் நோபல் பரிசை வெல்ல முடியவில்லை] புறந்தள்ளி இப்பரிசைப் பெற்றார் எனில் அவரின் கவியாளுமையை முகமூடி அணிவிக்கப்படாத படைப்புத்திறனை நம்மால் பார்க்க முடியும்...அவரின் ஒரு கவிதையை என்னளவில் தமிழில் தருகிறேன்..இது மொழியாக்கமோ மொழிமாற்றமோ இல்லை...
ஒரு நீர்தேக்கத்தின்
அலைகளில் 
கால்பதித்திருக்கிறீர்களா..
ஒன்றன் பின் ஒன்றாய்
அலைக் கரங்களால்
உங்கள் கால்பிடித்துக் 
கெஞ்சும்....
என்னை முற்றாகக் 
குடித்துவிடாதீர்களென்று..
புயல் தூக்கி வீசிய
பூவொன்று
உங்கள் முற்றத்தில் விழுந்தால்
அதை தயவு செய்து
மிதித்தோ அப்புறப்படுத்தியோ 
விடாதீர்கள்..
அன்று வரமுடியாத
தன் தேனீயை
அது தேடிக்கொண்டிருக்கலாம்..
பயணக் கப்பல்
புறப்படுவதற்கு முன்
கரையில்
கைதொட்டிலில் 
குழந்தையை
தாலாட்டிக்கொண்டிருக்கும்
தாய்மாரின் 
கண்ணீர் துளிகள்
கடலில் விழும் 
அதிர்வலைகளால்தான்
அந்தக் கப்பல்
அப்படி ஆடுகிறதென்று
அறிவீர்களா..
சரி 
உங்களுக்கு
நான் சொல்வது
கொஞ்சமாவது
புரிகிறதா..?
ராகவபிரியன்

Monday, April 1, 2019

நமது பாரத கலாச்சாரமென்பது பழமைவாய்ந்தது மட்டுமல்ல..பல தாக்குதல்களைத் தாங்கி உயிர்த்து புடம்போட்ட தங்கமென மின்னும் தனித்தன்மை வாய்ந்தது.. அப்படியான பாரத தேசத்தின் வாழ்வு முறைகள் வாழ்வின் நியதிகள் வாழ்வின் அத்தியாவசிய ஒழுக்கங்கள் போன்றவை புராணக் கதைகள் மூலம் சொல்லப்பட்டு...அதை கடைப்பிடிப்போர் பெற்ற நன்மைகளின் உண்மைத்தன்மை பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டு பின்பே நம்பிக்கையாய் உருமாறி இப்போதும் பெரும்பான்மையாய் கடைபிடிக்கப்படுவதைப் பார்க்கிறோம்..அப்படியான ஒரு வாழ்வின் முறைதான் ஏகாதசி விரதம்..முரண் எனும் அரக்கன் தேவர்களைச் சிறைபிடித்து சொல்லொனா துன்பங்கள் தருகிறான்..தேவர்கள் அரங்கனை வழிபட அரங்கன் முரணுடன் போர் புரிகிறார்..ஒரு நாள் இரண்டு நாட்கள் அல்ல...சுமார் ஆயிரம் வருடங்கள்..களைத்துப்போன அரங்கன் குகையொன்றில் ஓய்வெடுக்கிறார்..அவரைத் தேடி வந்த முரண் அரங்கனின் பள்ளி கொண்ட கோலத்தில் அவரை எளிதாக வென்றுவிடலாமென்று உள் நுழைய எத்தனிக்கையில் அரங்கனின் சக்தி அழகான பெண்ணுருவில் முரணை அழிக்கிறாள்..அந்தப்பெண்ணின் பெயர்தான் ஏகாதசி...சுமார் ஆயிரமாண்டுகள் அரங்கன் உணவேதும் உட்கொள்ளவில்லை..முரணை அழித்தவுடன் அரங்கனுக்கான படையல் மலைமலையாகக் குவிக்கப்படுகிறது...இன்னமும் திருவரங்கம் பெரியகோவிலில் சீரான இடைவெளிகளில் பெரிய அளவில் படையல்கள் படைக்கப்படுகின்றன...அதற்கு பெரிய அவசரம் என்று பெயர்...
பெரிய கோவில் பெரிய மதில் பெரிய அரங்கன் பெரிய[படையல்] அவசரம்..ஆற்றல் மிகு தத்துவத்தின் அரியதொரு திருவரங்கம்...என்ற பாடலொன்று திருவரங்கன் தந்த திருவிருத்தங்களில் காணப்படுகிறது..
ஓரு நீண்ட பட்டினியால் தன்னை வருத்திக்கொண்ட அரங்கன் தேவர்களைக் காக்கிறார்..இது புராணம்..இதன் வாழ்விற்கான தத்துவம் தன்னலமற்ற செவ்விய செயல்களால் பிறர் நலம் விழைவோர் அரங்கனுக்கு ஒப்பாவார்..அதாவது கடவுளுக்குச் சமம்..
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்...
என்று பேசிச் சென்றுள்ளார் தெய்வப்புலவர்...
பிறர் நன்மைக்கான பட்டினியிருப்போர்..அதாவது ஏகாதசி விரதமிருப்போர்..துவாதசியில் பாரணை செய்விக்கப்படவேண்டும்..இதில் எந்தவித சமரசமும் அரங்கனால் ஒப்புக்கொள்ளப்படமாட்டாதது...சில பெருமாள் கோவில்களில் இதைக் கண்கூடாகக் காணலாம்..பாரணை செய்விக்கும் முன் துளசி தீர்த்தம் ஒரு மிடறாவது உள்செல்லவேண்டும்..அந்த மிடறின் சப்தம்தான் முரணை அழித்த அரங்க சக்தியின் நித்ய வாசத்தை நமக்கு எடுத்துச் சொல்கிறது..துவாதசி பாரணையை செவ்வனே செய்விக்காத கர்த்தாக்கள் தங்கள் கர்ம வினையால் தாக்கப்பட்டு அரங்கனின் கோபத்திற்கு ஆளாக நேரலாம்..
இப்படியான ஒரு விவாதம் தசரதருக்கும் கோசலைக்கும் நடந்து கொண்டிருந்த போது சின்னஞ்சிறிய ராமனாகிய அரங்கன் அவர்களிடையே வருகிறான்...
கோசலை குழந்தையை வாரி எடுத்து..உச்சி முகர்ந்து..ராமா..உன் அன்பெனும் மாயையில் நாங்கள் கட்டுண்டு விட்டோம்..இருந்தாலும் என் உள்ளுணர்வு நீ அந்தப் பரந்தாமன் தான் என்று சொல்லிய வண்ணம் உள்ளது...அது நிஜமா குழந்தாய்...என்று கேட்க..
அரங்கன் தன் விஸ்வரூபத்தை கெளசல்யாவிற்கு காட்டியதாக அத்யாத்ம ராமாயணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது...அந்த விஸ்வரூபத்தைக் கண்டு பயந்த கெளசல்யாவை சமாதனப்படுத்திய அரங்கன்.. அம்மா நீயும் அப்பாவும் கண்ட இந்த விஸ்வரூபம் பல பிறவிகளாய் நீங்கள் ஏகாதசி விரதமிருந்து துவாதசி பாரணைகளை நியமமாகச் செய்ததின் பலன் தான்..என்று சொல்லி மீண்டும் சின்ன ராமனாய்..அருகிருந்த அம்ஸமஞ்சக் கட்டிலில் ஏறியமர்ந்து மெல்ல வலக்கையை தலைக்கு வைத்துக்கொண்டு கால் நீட்டி உறங்கத் தொடங்க ஸ்ரீரங்க விமான அரங்கனின் உருவைக் கண்டு கண்ணீர் மல்க..தசரதச் சக்ரவர்த்தியின் பூஜை மந்திரங்களோடு கூடிய பூஜையறையின் மணிச் சப்தம் இன்றும் அரங்க பக்தர்களில் காதுகளில் ஒலித்துக்கொண்டிருப்பது நமது கலாச்சார நிஜம்...
நன்றிகளுடன்...ராகவபிரியன்

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...