தொன்ம தேய்மான கலாச்சார தேனீரகங்கள்.. 5

கால நிலப்பரப்பின் பாதை மாற்றங்கள் மானுட பயண மாற்றங்களின் உருவாக்கத்திற்கான ஆதி விதைப்பின் தவிர்க்கவியலா தொன்ம அவசியமென்றே கருதுதல் சரியானதாக இருக்கும். அசோகர் பாதைகளில் மரங்களை மட்டும் நட்டதாக வரலாறு ஏதோ ஒரு தோல் சுருளிலோ இல்லை பனை ஓலையிலோ எழுதியிருக்கலாம். அப்பண்டைய மரம் நட்ட வரலாற்றுப் பதிவுகளை அழித்து அழித்து மீண்டும் எழுதிய காலத்தின் விவரணைகள் கண்முன்னே பயணத்தில் பின்னோடும் மரங்களாய் நிழலை மட்டும் பாதையில் நிறுத்திவிட்டு அவை வெகு வேகமாய் காலத்தை மிஞ்சி ஓடிக்கொண்டிருக்கின்றன..
வந்தவாசியிலிருந்து திண்டிவனம் வரையிலான நவீன போக்குவரத்திற்கான இன்றைய பாதையில் அக்காலத்தின் ஒற்றையடிப் பாதையின் அசோகர் நட்ட அத்தனை மரங்களும் பாதையகலப்படுத்துதல் பார்முலாவின் கொடும் வெட்டுக் கரங்களையும் மீறி வெட்டுப் படாமல் அக்காலத்திய கலாச்சார நிழலை இன்னமும் பாதையெங்கும் தூவிக்கொண்டே இருக்கின்றன..
பண்டைய தொன்ம ஒற்றையடிப் பாதையில், நடைபயணம் மட்டுமே ஒரே தேர்வாக இருந்த தவிர்க்கவியலா பயணஇருள் காலத்தில்' பாதசாரிப் பயணிகளின் ஓய்விடமாக மன்னர் அரசுகள் உருவாக்கிய பாழடைந்த ஒற்றை மண்டபம் ஒன்று காணக்கிடைத்தது.. அம்மண்டப முகப்பில் சணல் சுருட்டிகளைத் தாங்கும் மூங்கில் தூண்களின் நடுவே பவ்யமாய் பதுங்கிக் கிடக்கும் சாலையோர தொன்ம தேய்மான தேனீரகம் ஒன்றில் மகிழுந்தின் மீள்ம உருண்டைகள் பொரி உருண்டைகள் அடுக்கிய கண்ணாடிப் போத்தல்கள் உருவாக்கிய பார்வை அருவ வேகத் தடையால் தேக்கப்பட்டு நின்றன..
தேனீர் குவளைகளின் காலம் இன்னமும் வரலாறால் நிச்சயிக்கப்படவில்லை.. வரலாற்றை தேனீருக்கு முன் அல்லது தேனீருப்பின் என சமகால வரலாற்று ஆசிரியர்கள் ஒரு கோப்பை தேனீரருந்தியபடியே பதிவு செய்யப்போகும் தூரம் இம் மகிழுந்துவால் கடந்துவிடக்கூடிய தூரமாகத்தான் இருக்கப் போகிறதென உள்மனம் உரத்துச் சொல்லியது..
மகிழுந்துவை விட்டு தரையில் கால் பதிக்கையில் கி.மு. 2737 ல் சீன அரசன் ஷென் நங் கொதிக்கும் தேனீரில் தற்செயலாக ஒரு இலையைப் போட்ட அந்த ஆதி நிகழ்வுத் தேனீர் பிறப்பின் காலம் கண்முன்னே விரிந்து நிற்கிறது.. அடர்வனமெனக் கண்ணில் மானுடத் துளியோ மனித இலையொன்றோ தென்படா அவ்விடத்தில் ஓர் தொன்ம கலாச்சார தேய்மான தேனீரகம் காணக்கிடைப்பதென்பது பயண வரமன்றி வேறென்ன..? அத்தொன்ம கலாச்சார தேனீரகத்தின் கொதி உலையில் பிடி வைத்த ஒரு வடிகட்டி புதைக்கப்பட்டிருக்க ஆவிபறப்பது கொதி நிலையின் உச்சத்தைக் காட்டியது.. ஷென் நங் அரசர் சூடான தேனீர் அருந்தினாரா இல்லை சூடற்று கொதியாறியடங்கிச் சவமாகிப் போன தேனீரா என்பது வரலாற்றில் துல்லியமாக காணக் கிடைக்காததால்.. கொதினீரின் கொதி நிலை அறிய அத்தேனீர் தயாரிப்போனிடம் மூன்று கேள்விகளை முன் வைக்க வேண்டியதானது..
பயணம் தேனீரக வாசல்களில் தேக்கப்படுகையில் பரப்பி வைக்கப்படும் கலாச்சார விரிப்புகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் கேள்வியொன்று அத்தேனீர் தயாரிபாளரின் முன் இவ்வாறாக சமர்ப்பனமானது..
இத்தொன்ம தேனீரகத்தில் ..வெள்ளைத் தேனீர் தயாரிப்பீர்களா.. இவ்விடம் பச்சைத் தேனீர் அதாவது கிரீன் டீ கிடைக்குமா.. எனும் கேள்வியில் வெகுண்ட அத்தேனீர் தயாரிப்பாள முதிய மண்ணின் மைந்தர் இங்கிருந்து தாங்கள் இப்போதே விலகிச் செல்லாவிட்டால் தேனீருக்கான கொதினீரின் கொதினிலையை தங்கள் முகம் அளவீடு செய்யக்கூடுமென மென்மையான சொற்களால் எச்சரிக்கையையும் அதன் தீவிரத் தன்மையையும் உடன் புரிந்து கொள்ளும் தரத்தில் புதைந்த சூடு நிறை வடிகட்டியை எடுத்துக்கொண்டே எடுத்துரைத்தார்..
கலாச்சார தேனீரகங்களின் தொன்மங்கள் சிதைந்து கிடக்கும் நவீன பாதைகளில் தேனீருடன் எச்சரிக்கையும் கிடைப்பதென்பது கலாச்சார சிதைவின் ஆதி முடிச்செனும் சிந்தையெண்ணம் புறப்பட்டு எச்சரிக்கை செய்ய இரண்டாவது கேள்வியை ஆகப் பணிவான வார்த்தைகளில் முன் வைக்க நேர்தல் கட்டாயமாகிப் போனது.. இத் தொன்ம தேனீரகத்தில் தயாரிக்கப்படும் தேனீர் வகைகளான மஞ்சள் தேனீர்..கருப்புத் தேனீர்..தேடுகையில் கிடைக்குமெனத் தெரியும்..தங்களால் ஊலாங்குத் தேனீர் உருவாக்கித் தருதல் சாத்தியப்படுமா எனும் கேள்வியை பூச்சுகளின்றி அறிமுகம் செய்ய.. என்ன... என்ன..ரிப்பீட்...ஊலாங்குத் தேனீரா...போ...ங்கொ.. எனும் பதில் ஓங்கி முகத்தில் தெறிக்க அவ்வெளிய முதிய மண்ணின் மைந்த தேனீர் தயாரிப்பாளரிடம் ஓர் கதையை செப்புதல் சூழலிய நிர்பந்தம் தானே..? கதைகேட்கும் பொழுதுகளில் முதிய மனம் குழந்தைமையையும் குழந்தை மனம் வெளிப்படுதலையும் செய்தல் மானுடவியலின் மகத்தான பக்கமொன்றில் பொறிக்கப்பட்டிருக்கலாம்..
சார்த்தர் உணவகம் ஒன்றிற்குச் செல்கிறார்.. அங்கு தன் நண்பன் பியர்[PIERRE] இல்லை.. அங்கிருக்கும் மேஜைகள் நாற்காலிகள் உணவுகள் ஏன் உணவு பரிமாறுபவர் உட்பட அனைவருமே பியர் இல்லை என்பதை உணர்துவதான இன்மை உணர்வு சார்ந்த பொய்மன நிலையை தேனீரை விட மேலதிக கொதி நிலையில் எழுத்தில் கொட்டியிருப்பார்.. இக்கதையைச் சொன்ன அடுத்த கணம்.. இது தேனீரகம்..இவிவிடம் பியர்கள் விற்பனைக்கு அனுமதியில்லை எனும் சின்னஞ்சிறிய அறிவின் கொழுந்து முளைவிடா இம்மானுட முகத்தை ஏளன உற்று நோக்குதல் செய்கிறார்..
அக்கணம் அத்தொன்ம தேனீரக தேனீர் தயாரிப்பாள மண்ணின் மைந்தர் அம்முதியவர் சற்று சாய்ந்து நடந்து வந்து மீள்ம உருண்டைகளை தன் கைகளால் தட்டிப் பார்க்கிறார்..உள்ளிருக்கும் காற்றின் அடர்வை வெளிச்செவியில் மோதும் ஓசையளவால் நிர்மாணித்தல் சாத்தியம் தானே என வினவுகிறார்.. வேறு வழியின்றி ஒப்புதலை தலையசைத்தல் செய்துவிடுகிறது.. தேனீர் அருந்துவதற்கு முன்னும் உடல் நம் கட்டுப்பாட்டிலிருந்து விலகிவிடுகிறது..தேனீர் அருந்திய பின் உடல் நம் கட்டுப்பாடுகளை மீறிவிடுகிறது.. மானுட உடற்கூற்றுவியலின் போதைமையை அவருக்கு விளக்கும் தற்சூழல் இன்மையால் வாளாவிருக்க நேர்ந்தது..இவ்விந்தையை எளிதாகச் சுட்டிய தேனீர் தயாரிப்பாளரை வணங்கி..
இத்தொன்ம தேய்மான கலாச்சார தேனீரகத்தில் மண்குவளையிலா இல்லை பீங்கான் கப் அண்ட் சாஸர் கலாச்சார பரிமாறலிலா இல்லை பித்தளை டபரா டம்ப்ளர் மற்றும் ஈய சிறு பாத்திர வடிவங்களிலா அதுவும் இல்லையெனில் கண்ணாடிக் குவளைகளிலா இல்லையெனின் சமகால சுற்றுச்சூழல் மாசு தவிர்க்கும் உள்ளங்கை பட உள்வளையும் காகித குவளை ஒன்றிலா எதில் தேனீர் தரப்போகிறீர்கள் எனும் நீண்ட வினா ஒன்றை எழுப்பினால்.. ஆகச் சுருக்கமான பதிலொன்றைத் தந்தார் தொன்ம தேய்மான கலாச்சார தேனீரக தேனீர் தயாரிப்பாள மண்ணின் மைந்தரான முதியவர்..
போகிறாயா இல்லை முகத்தில் வெண்ணீர் ஊற்றவா..?
அவ்வளவு தான் காலம் சொல்லும் கலாச்சார சொல்லளவீடு..
கலிகாலத்தில் கலாச்சார தேய்மானத்தின் அளவீடு அங்குலங்களைத் தாண்டி மீட்டர்களில் சென்று கொண்டிருப்பதை உணர்ந்ததால் உடனே மீள்ம உருண்டைகளை ஒய்விலிருந்து முகத்தில் வெண்ணீர் தெளித்து எழுப்பி உருட்டி புறப்பட வேண்டிய அவசரகால அழைப்பை மகிழுந்துவின் மிதிப்பலகை அழுத்துதல் மூலம் தெரிவிக்க ஒரே பாய்ச்சலில் சீறிப்பாய்ந்த உந்து இதோ இப்போது திண்டிவனம் வந்து நிற்கிறது..
ராகவபிரியன்..

Comments

Popular posts from this blog