ராகவபிரியனின் ரசவாதக் கவிதைகள்...பாகம்..6/9
ஆதியில் அடர் ஆரண்யப் பரண் வசிப்பிடங்களில் மகிழ்வும் சுரைக்குடுக்கை மதுவும்
சகோதரப் பாசமும் உயிர்ப்புடன் இருந்தன..
அப்போதெல்லாம் வேட்டைக்குச் செல்லும்
தகப்பன் தன் பிள்ளைகளுக்கு
அம்புகளில் விஷம் தடவக் கற்பித்ததில்லை..
அதிகாரம் பதித்த முத்திரை மோதிரம்
மூத்தவனுக்கு மட்டுமென விதிசெய்யப்பட்ட காலங்களில்தான் அரசுரிமைக்கான
அடுத்த சகோதர உட்புகல் தடுக்கும் கோட்டைகளும் முதலை மிதக்கும்அகழிகளும் உருவாக்கப்பட்டன...
வரலாறு சொல்லும் நிஜம் என்னவெனில்
கொற்றவக் குடும்ப மோதல்களூடே
அரியணைக்கானவன் மட்டும் தப்பிச் செல்லும்
சுரங்கவழியை மூத்தவன் மட்டுமே
முற்றும் அறியத் தந்திருக்கிறான் தகப்பன்..
கரையான் அரித்துதிர்ந்த கீற்று வேய்ந்த குடியையில்
அண்ணன் உறங்கும் இடத்தின் மேல்
ஒற்றைப் பனைமட்டை பிய்த்துவந்து பதிக்கும்
தகப்பன்களால் தான்
தொன்று தொட்டு வளர்ந்த முடியாட்சி முறையும்
முடிவிற்கு வந்தது.
தற்கால குடும்ப வசிப்பிடங்களில்
ஓய்விடம் ஒட்டப்பட்ட ஒற்றையறையிருப்பின்
அது அண்ணனுக்கு மட்டுமென தாரைவார்க்கையில்
அடுத்தடுத்த பூமியதிர்வுகள் உருக்கொள்ளும்..
அப்படி இடிந்த வீட்டின் இடிபாடுகளில்
இடுப்புவரை புதைந்த அரசகுமாரனை
வெளியில் உடனிழுத்துவிடாதீர்கள்...
அவனின் இருகைகளின் ஆட்காட்டி விரல்களையும்
பிடித்தபடி இரண்டு யுவராணி வாரிசுகள்
உள்ளே உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கலாம்..
ராகவபிரியன்
Comments
Post a Comment