தொன்ம தேய்மான கலாச்சார தேனீரகங்கள்... 4

மீள்ம உருளைகளின் வேகம் திசைமாற்றி வளைவிக் கடிவாளத்தையும் மீறி எகிறத் தொடங்கின. வந்தவாசி ஊரின் புறவழிச்சாலையைத் தொட்டவுடன் ஏனோ ஊர்புற முடையல் தளர்ந்த கூரைக்குடிசைகளும் அதனுள்ளே நிரந்தரமாய் பிரித்து நீக்கவியலா சிடுக்குகளாய் தொங்கிக்கொண்டிருக்கும் வறுமையும் வேகத் தடுப்பான் மிதிப்பலகையின் மீதான பாத அழுத்துதலை மிதியல் நிலைக்கு உயர்த்த வண்டியை நிறுத்த வேண்டியதானது. பயண நிறுத்துதலை அல்லது பயணத் தேக்கத்தை சார்த்தர்..தனிமனித வாழ்வு வண்டியோட்டியின் சுதந்திர தேர்வின் அடிப்படையில் நிகழ்தல் வேண்டும் என்கிறார்.. ஆனால் இந்திய குறிப்பாக தமிழக சாலைகளின் மீதான வேகத்தடைகள் தனிமனித வண்டியோட்டியின் கவன ஓட்டுதல் மீதான தாக்குதல்களாகவே பார்க்கப்படுகின்றன. மகிழுந்துவின் வேகத்தடைக்கான வேகத்தடுப்பான் பலகை மிதியலுக்கும் தேனீருக்கான சுதந்திர தேர்வு அடிப்படையிலான பலகை மிதியலுக்கும் இடையிலான வண்டி ஓட்டிக்கான மறைவிளக்கங்கள் வேதகாலங்களில் இருந்து புரிபடாமலேயே பொறிக்கப்பட்டுள்ளன. ஏழுகுதிரை வண்டி சம்வத்ஸரின் வண்டியோட்டியான ஆதவன் தேனீருக்காக மாலையில் கடலின் பின்புறம் தன் குதிரைகளை அவிழ்த்துவிட்டு குமிழித்தேனீர் அருந்துவது தேர்வு நிலை அடிப்படைத் தொன்மத் தேனீருக்கான தேக்கமெனில் அதன் மறைவிளக்கம் புரியும். ஆயினும் வந்தவாசி புறவழிச்சாலையோரம் கிடந்த தொன்மம் தேயாததொரு தேனீரகம் முன் உந்துவண்டி ஒரு உதறலுடன் நின்றது..
ஆதவனின் சம்வத்ஸர் இழுக்கும் ஏழுகுதிரைகள் தான் வானவில்லின் ஏழு நிற நகலிகளென உபனிஷத் கூறுகிறது. ஒருமுறை கல்லூரியருகேயான தேனீரகத்தின் தேனீருக்கான உள் நுழைவொன்றில் ஏழு சகமாணவர்களின் ஏழு நிலைகளைக் காண நேர்கிறது.. தந்தையின் மரணத்தை அறிவிக்கும் மொட்டைத்தலையுடனான நண்பனுக்கான பொதினா இலை மிதக்கவிட்ட தேனீர்.. கல்லூரி மைதான அடர்வனமொன்றில் சாதிமறுப்பு காந்தர்வ மணம் புரிந்து தலைமறைவாக அத்தொன்ம தேனீரகத்தில் அடைக்கலம் புகுந்தவனுக்கான பாலற்ற வரதேனீர்.. இன்னொரு நில்லா நகைப்பை அணிந்திருக்கும் தாய்தகப்பனில்லாதவனுக்கான சீனிதூக்கல் தேனீர் என இன்னும் இன்னும் ஏழல்ல..எழுபது வகை வானவில் தேனீர் தரும் தொன்ம தேனீரக ககனவில்களை தோலில் அடுக்கிக்கொண்டு கனத்த உள் நுழைதல் நிகழ்ந்தது.
வழமையான தேனீர் அருந்துதலின் இயந்திரத்தனத்தை போர்த்தி மகிழுந்துவின் பின்பக்க புறப்பேழையில் விட்டுவிட்டு நவ நாகரீக மெல்லருந்துதலின் மத்தியில்..வயதான ஒருவர் தேனீர் யாசகம் கேட்கிறார். விதுரரின் மனைவி வாழைப்பழத்தை வீசிவிட்டு தோலை கிருஷ்ணரிடம் அதீத பக்தியின் விளைவாய்த் தருவதைப் போல தேனீர் முற்றையும் அருந்தியபின் வெற்று கண்ணாடிப் போத்தலை கொடையின் நிமித்தம் தருதல் என்பது பண்பாட்டுச் சிதைவாகி மாறாப் பழியாகி பின் தொடரக்கூடும். தேனீர் மிடறுகள் ஏதாவதொரு ஜோடி யாசக கண்கள் பசிகாட்டி முன் நிற்கையில் தொண்டைக் குழியைத் தொடுவதேயில்லை. எனவே..தேனீரின் கடைசி மிடறின் கீழ் கரையாத சர்க்கரை மிச்சக் சிற்சல்லிகளும் கொஞ்சம் கொஞ்சமாய் கரையத்தொடங்கிய வேளையில் இன்னொரு தேனீருக்கான கட்டளையை தேனீரக உரிமையாளரிடம் கடத்த வேண்டியதானது.
புறவெளிச் சூழல்களின் நிர்பந்தங்கள் யாசக கலாச்சார பிறப்பின் காரணியான வறுமையை சாடிய அதே வேளையில் அகவெளிக் கொடைக்கான கலாச்சார கெட்டித் தன்மையின் விளைவு இன்னொரு தேனீரை யாசகக் கைகளில் திணித்தது.
மெல்ல மீள்ம உருளைகளின் உருட்டல்கள் வேகமெடுத்தன. இனியான தொன்ம தேய்மான கலாச்சார தேனீரக அதிர்வுகளையும் ஆங்கே அருந்தப்பட்ட பிரத்தேயகமான அழகியல் புகுத்தப்பட்ட குமிழித் தேனீரின் வண்ணமயமான வானவில் காட்டும் குழிழ்களில் மிதக்கும் மேலைக் கலாச்சார வாழ்வு முறையின் தாக்குதல்களின் தலும்பல்களையும் சற்றே உடைந்த விளிம்பு கண்ணாடி கலணின் விளிம்பு தவிர்த்து ஊதி உறிஞ்சும் தேனீர் வகைகளையும் அடுத்த இந்த வண்டியோட்டியின் சுதந்திர தேர்வுநிலை தேனீரகமொன்றில் விரிவாகக் காணலாம்..
ராகவபிரியன்

Comments

Popular posts from this blog