ராகவபிரியனின் ரசவாதக் கவிதைகள் பாகம் 6/8
மூத்தவனுக்கான குடும்ப விதிகள்
பஞ்சபாத்திர உத்தரணியாய்
புளி தேய்த்து கழுவப்படாமல்
காலம் காலமாய் இருந்து வருகிறது..
ஒரு சொட்டுதான் கொள்ளளவு எனினும்
அது புனிதத்தின் கதவில் குடைந்த
வினாயகனின் நீர் உருவமென
உள்ளங்கையில் உட்கார்ந்து கொள்கிறது..
போகட்டும்
அடுத்ததாக இரண்டு கைவிரல் முட்டிகளை மடக்கி
தலையில் குட்டிக் கொள்ளுங்கள்..
இரண்டு மூத்த ஆண்பிள்ளைகளெனில்
இளையவனுக்கான உத்தரணிக் குழி
வெற்றிடத்தையும்
மூத்தவனுக்கான பஞ்சபாத்திரக் கடல்
தன் நீர் முழுவதையும்
துளியும் தயக்கமின்றி
அண்ணனுக்கு
துளித்துளியாய் வாரிவழங்கியதை
எவரும் கவனிக்கவேயில்லை..
நீங்கள் அப்போது சொல்லப்படும்
மந்திரத்தின்அர்த்த மாயைகளைப் பற்றித்தான்
கவலையுற்றீர்கள்..
மூதாதையரின்
வீட்டுப் பரணிலிருந்து
இரண்டு மூத்த பஞ்சபாத்திரங்களை
அன்றாட ஒளபாசானத்திற்காக
விதியின் வேலைக்காரியிடம்
விளக்கக் கொடுத்தது பாவம்..
அப்போதின் சூட்சுமங்களை
குடும்ப விதியின்
ஓரவஞ்சனைத் தளர்வுகளெனில்
நீங்கள் ஒப்புக்கொள்ளப் போவதில்லை..
தொன்று தொட்டு
பஞ்சபாத்திரம் தேய்ப்பதற்கான புளி
வாழ்வின் தேசிய நெடுஞ்சாலைகளெங்கும்
உதிர்ந்து கிடக்கின்றன..
உத்தரணியைத் தேய்க்க உயிரையா இழக்க முடியும்..
அப்பனின்
உள்ளெங்கும் சொத்தை நிரம்பிய
புளிப் பத்தையால்
இளையவனின் வென்கல உத்தரணியை
பளிச்சென மின்ன வைக்க
எந்த வேலையாளாலும் முடியவில்லை..
அன்றாட ஒளபாசன அக்னியை
மூத்தவன் மட்டுமே வளர்க்கவேண்டுமென
சாத்திரங்கள் சொல்லியிருந்தால்
கொஞ்சம் தகவல் தாருங்கள்..
அடுத்த தலைமுறைக்கு
எடுத்துச் செல்ல அது உதவும்..
முழுமன நீர் வார்த்துத் தரவியலா
தானமும்
ஏமாற்றிப் பெறப்பட்ட வீட்டுரிமையும்
நவக்கிரஹ சுதர்ஸன
ஹோமங்களால் புனிதமாவதில்லை..
அண்ணின் புதுமனைப் புகுவிழவில்
இளைய மூத்தவனின்
வருகை நோக்கிய
உடன்பிறப்புகளின் கண்கள்
அழுக்கு உத்தரணியின் மேல்தான்
உட்கார்ந்திருக்கின்றன...
நீங்கள் ஹோமங்களைத் தொடங்குங்கள்..
மதியாதார் புதுமனையின்
தலைவாசற்கோலம்
இளையவனின் கால்மிதி
கிடைக்காமல்
கலைந்துவிடவா போகிறது..
ராகவபிரியன்
Comments
Post a Comment