ஒரு முறை அலுவலகம் கிளம்ப கோபாலய்யருக்கு லேட்டாகிவிட்டது.. சட்டையைத் திருப்பிப் போட்டுக்கொண்டு போய் விட்டார். சினிமாவில் மனைவி கணவனுக்கு பவ்யமாக சிரித்த முகத்துடன் பட்டன் போட்டுவிடுவாள். பிறகு கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்து கையசைத்து வழியனுப்புவாள்..ம் அதெல்லாம் சினிமாவில்..நிஜமான அக்ரஹார வாசலில் வழியனுப்புகையில் நடக்குமா என்ன? கோபாலய்யருக்கு இவையெல்லாம் கனவாகவே இருக்கும் கோபம் வேறு.. ஏதோ ஒரு நிறைய நேரம் கிடைத்த நாளொன்றில் யாழினியிடம் சைகையில் முத்தம் ஒன்று கேட்டார். அவள் கரண்டியை வீசியெறிந்ததில் மீந்திருந்த சூடான வத்தக் குழம்பின் சிறு துளி கண்ணில் விழுந்தது. கரண்டி முகத்தைத் தாக்கியது.. அன்று கண்ணில் எரியத் தொடங்கிய வத்தக் குழம்பெரிச்சல் இன்னும் வற்றவே இல்லை.
இப்படியான காலையைக் கடந்து அலுவலகத்திற்குள் அவசரமாக நுழைந்தால் எதிரே மேலதிகாரி இந்த கொதிக்கும் கோடையில் டை கட்டவில்லையா என கேட்கிறார்..கோபாலய்யரின் பூணுல் வேறு வியர்வையில் நனைந்து அரிப்பை உடலெங்கும் அதிகப்படுத்திக்கொண்டிருந்தது..
அக்கொடும் அப்போதில் மேலதிகாரி பின்னால் பார்க்கும்படி சைகை செய்தார். திரும்பிப் பார்த்தால் யாழினி தன் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு இவரை நோக்கி கோபமாய் ஓடிவருகிறார்...
கோபம்+கோபம்= அடங்கா சினம் தானே..
ஏன்னா டை கட்டாம வந்துட்டேளே.. இந்தாங்கோ... புடிங்கோ.. எனச் சொல்லியபடி கசங்கிய டை ஒன்றை அவரிடம் தருகிறாள்..
ஒங்களுக்கு இன்னிக்கி எதுவுமே ஓடலையே.. பாருங்கோ ஒங்க ஆபீசர் என்னை மொறைச்சுப் பார்க்கறார்...நீங்க பேசாம இருக்கேளே... எரிதணலில் சாம்பிராணி போடுவதென்பதன் நுட்பம் பெண்மையின் வரமல்லவா..
இப்போது கோபாலய்யரின் கோப எரிச்சல் தன் எல்லைகளைக் கடந்து வாயின் விளிம்பில் வார்த்தைகளாய் உருவெடுத்து குதிக்கத் தயாரானது..
இங்கே மேலும் ஒன்றைச் சொல்லியாக வேண்டும்..
அதீத கோபம் மெளனத்தின் தொடக்கம் என யாழினி எப்போதோ சொன்னது கோபாலய்யரின் வார்த்தை உருவங்களின் முதுகில் ஓங்கி ஒரு அடி வைத்தது. அவைகள் அப்படியே இதழின் மீது அமர்ந்து கொண்டுவிட அவர்மெளனமாக அலுவலக உள்ளே சென்று அமர்ந்து கொண்டார்..
அன்று எல்லா விடயங்களும் கரப்பான் பூச்சியை திருப்பிப் போட்டது போல் அவருக்கு நடக்கத் தொடங்கின..
அதிகாரியின் மேசையில் பைலை தலைகீழாக வைத்து வாங்கிக் கட்டிக் கொண்டார். இப்படி எல்லாமே அன்று தலைகீழாக திருப்பி அவரை தாக்கியது..
ஒரு வழியாய் திருப்பிப் போட்ட சட்டையுடனே வீட்டிற்கு வந்து சாய்வு நாற்காலியில் ஒரு சாதனைக்குப் பின்னான அலுப்புடன் சாய்வது போல் சாய்ந்தார்..
ஏன்னா இப்படியேவா டூட்டி பார்த்தேள்..யாரும் சிரிக்கலையா என்று கேட்டபடியே அவரின் கைபேசிக்கு இலக்கிய பத்திரிக்கையிலிருந்து வந்த செய்தியை வாட்ஸப்பில் அனுப்பினாள்..
கைபேசியின் தவக்களை ஒலி வேறு அவரின் தீராத சினத்தை தூண்டிவிட வாட்ஸப்பைத் திறந்தார்..
யாழினி சிரித்துக்கொண்டே ஏன்னா நீங்க பிரபல எழுத்தாளர்னு நான் அக்ரஹாரம் பூரா பீத்திண்டிருக்கேன்.. ஆனா எதோ ஞானபீடமாமே அத வைரமுத்துன்னு ஒருத்தர் வாங்கிட்டாராமே.. ஒங்களுக்கு சட்டைய எப்படி போட்டுக்கறதுன்னே தெரியல.. கடைக்குப் போய் காய்கறி கூட வாங்க துப்பில்ல.. நீங்க எங்க ஞான பீடத்த வாங்க போறேள்...
என்று புளுபுளுவென பிடித்துக்கொண்டாள்..
கோபாலய்யரின் கோபம் உச்சிக்குப் போய் விட ஒய்வெடுத்துக்கொண்டிருந்த உக்கிர வார்த்தை உருவங்கள் வீடெங்கும் குதிக்கத் தொடங்கின..
ஒங்கப்பன் தான் பெரிய இவம்பயே.. அவன் வாங்கிக்கொடுத்த வேலை அவன் வாங்கிக்கொடுத்த ஸ்கூட்டர் அவன் வாங்கிக் கொடுத்த பேண்ட் சட்டை ன்னு என்னை அவமானப்படுத்துவயே.. ஒங்கப்பனுக்கு எனக்கு ஒரு ஞானபீடம் வாங்கிக்குடுக்கத் துப்பிருக்கா...எனக் கேட்டுக்கொண்டே...பதுங்கிப் பதுங்கி பாத்ரூமிற்குள் நுழைந்து தாழ்ப்பாள் போட்டுக்கொண்டார்..
கதவின் மீது வீசியெறியக்கூடிய பொருட்களின் சப்தம் அன்று இரவு முழுவதும் கேட்டுக்கொண்டே இருந்தது..
ராகவபிரியன்
No comments:
Post a Comment