Thursday, March 19, 2026

 





உன் குளியலறை
நறுமண சவுக்காரக் கட்டியில்
ஒட்டியிருக்கும்
பாம்பு தவ நிலை ஒற்றை முடி
உன்னிலிருந்து உதிர்ந்ததாகவும்
இருக்கலாம்..
உன் கழிவறை சுத்தம் செய்ய
சுவரில் சாய்த்து வைத்திருக்கும்
விளக்கு மாற்று ஈர்க்குச்சிகள்
உன் தென்னை மர உச்சத்திலிருந்து
உருவப்பட்டவைகள் தான்..
கழுவிச் சுத்தம் செய்ய
குடம் குடமாய் நீர் வெளியேற்று
தொட்டிக்குள்
சதா மிதந்து கொண்டிருந்த
உன் வாழ்வுக்கப்பலின்
திசைமாணி
இதோ தரை தட்டி நிற்கிறது..
இனி உன் செரித்த காலங்களை
அதன் நாற்றங்களை
வெளித்தள்ள
வெளியேற்றுத் தொட்டியின்
விசைப் பொத்தானை
ஆயிரம் முறை அழுத்தினாலும்
வெளியேற்று நீர் வாரா
உன் தொட்டியில்
அவை சுற்றிக் கொண்டேதான் இருக்கும்
நேற்று பெய்த மழையில்
வாழ்வின் வெட்ட வெளியில் காயப்போட்ட
நீ எடுக்க மறந்த
உன் வீட்டு சாம்பார் தூளுக்கான
மிளகாய் வத்தல் நனைந்து
உன் கழிவறையெங்கும் மிதக்கிறது பார்..
பறிக்கப்பட்ட
திராட்சை பந்தல்களின் மேல்
போர் தொடுப்பதால்
சுற்றிச் சுற்றி வந்து
மொய்க்கும் ஈக்களை
முற்றாக அழிக்கவியலாது..
இனி
உன்னால் கழிவறையிலிருந்தும்
குளிக்காமல் வெளியேற வியலாது..
புரிந்து கொள்....
நிர்ணய நாள் வரை வாழ்ந்து முடிக்காமல்
காடுபுகவும் இயலாது..
மரணத்திற்கு முன்னான
பாடைக் காவடிகள்
வெறும் ஒத்திகை தான்..
அவைகள் ஒருக்காலும்
பிணத்தளவு கனப்பதில்லை..
ஆதலால்
விசையளவே வெளியூறுமாம்
வெளியேற்று நீர்..
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  கால யதார்த்தம்...தத்துவ சிறுகதை ----------------------------------------------- பஞ்சப்பராரியாய் கோவில் வளாகங்களில் சுற்றித்திரிந்தவரை இன்ற...