மனம் உதிர்ந்த பூவென வாடிக் கிடக்கிறது.. அதன் மீது புத்துணர்வு நீர்ச் சொட்டுக்களை வீசியும் பலனில்லை.. அதைச் சுற்றி சாக்கட்டியால் படம் வரைந்தும் அது மனம் போல் இல்லை.. சிறிது கிரிக்கெட் பார்த்தால் பூவிதழ்கள் வண்ணமிழப்பை தடுக்கலாம் அல்லவா.. தொலைக்காட்சிப் பெடியைத் திறந்தேன். விக்கெட் கீப்பிங்கில் ராகுல் இல்லை. மனப்பூவை கீப்பிங் கிளவுஸ் கைகளால் யாரோ கசக்கி எறிவது போல் இருந்தது..

நியூசிலாந்து முன்னூறுக்கும் மேற்பட்ட ஓட்டங்களைச் சேர்த்துக் கொண்டிருந்தது.. சேனல் மாற்றி புதிய தலைமுறை செய்திகளுக்குள் பூவை மீண்டும் மலரச் செய்யும் முயற்சி. அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருந்த செய்தி கிரைண்டருக்குள் மனப்பூ சுத்தமாக நசுங்கி சுக்கல் சுக்கலாகிப் போனது..
மீண்டும் சேனல் மாற்றி இந்திய மட்டையாட்டத்தைப் பார்த்து பூவிற்கு புத்துயிர் அளிக்க முயன்றேன்.. ம் கூம் முதல் ஓவரிலேயே ஹென்றி தன் அட்டகாசமான பந்துவீச்சால் ரோகித் கோலி அய்யரை ஆட்டமிழக்கச் செய்ய யாரோ உதிர்ந்த பூவின் மேல் இரக்கமே இல்லாமல் தனது பூட்ஸ் காலால் மிதித்துவிட்டுப் போனதை உணரமுடிந்தது..
என்ன செய்ய இன்று எதுவும் எழுதவியலாதெனும் மனப்பூவை நுகரும் நாசியுள்ளின் முடிக்காடு அடர்ந்து கிடப்பதைக் காணச் சகிக்கவில்லை.. மீண்டும் கணிணியைத் திறந்து ஏஐ யிடம் நிறைய லைக் தரும் கட்டுரை கேட்க அதுவும் உடனே கொடுத்தது.. அப்போதாவது மனப்பூ மீண்டும் மொட்டுவிட்டதா எனில் அதுதான் இல்லை..
வேறுவழி அரங்கனை மனச் செந்தாழம் பூ நாகத்தின் மேல் துயில அழைத்தேன்.. அவர் சொல்கிறார்...
யதி ஹ்யஹம் ந வர்தேயம் ஜாது கர்மண்யதந்த் ரித:
மம வர்த்மா நுவர்தந்தே மநுஷ்யா: பார்த ஸர்வஸ:
மனமெங்கும் புதுத் தாழம்பூ வாசமுடன் அரங்கனின் வார்த்தைகள் அதன் அர்த்தங்களை இவ்வாறாகச் சொல்லின..
நான் மிகவும் கவனமுடன் எல்லா கர்மங்களையும் செய்கிறேன்.. நான் கவனமாக அதில் ஈடுபடாவிட்டால் மிகப் பெரிய கேடு விளையும்.. ஏனென்றால் அகில உலகிற்குமான படைப்பாளி நான் ஒருவனே.. நான் மர்யதா புருஷோத்தமன்..
அட அகல் விளக்குப் பதிப்பகம் இந்தப் பெயரில் ஒரு புத்தகம் ஏஐ மூலம் உருவாக்கி விற்றிருக்கலாமே எனும் எண்ணம் வந்தது..
இந்த நொடியில் தாழம் பூ நாகம் தலை தூக்கி விஷம் கக்கியது.. ஒரு நொடி அரங்கன் மீது மனம் செலுத்தவியலாத இந்நாளில் நீ எதுவும் எழுதிக் கிழிக்க வேண்டாம்.. மிதிபட்ட அந்தப் பூவை முதலில் அகற்றி டஸ்ட் பின் வாளியின் பெடல் மிதி. அது என் வாயென திறக்கும். அப்போதில் உன் காய்ந்து கசங்கியுதிர்ந்த மனப்பூச்சருகை வீசிவிட்டு மர்யதா புருஷோத்தமனின் திருவடிகளைப் பற்றிக் கொள் என்றது..
இன்றிரவு அல்லது நாளையாவது மீண்டும் எழுத்துப் பணியைத் தொடரவியலுமா அறியேன்...அரங்கன் திருவருள் கிட்ட வேண்டுமே..
திருவரங்கன் திருவடிகளே சரணம்..
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்..
ராகவபிரியன் தேஜஸ்வி..

Comments

Popular posts from this blog