காஞ்சியின் வீதிகளில் இன்றைய மாலை நடைப்பயணம். கச்சபேஸ்வரர் கோவில் தாண்டி உதாசீன் பாவா மடம் நடுவில் ஒருவர் சட் டென தன் காலணிகளைக் கழற்றி விட்டு கும்பிடுகிறார்.. எனக்கு அதிர்ச்சி.. காஞ்சியில் ஒரு வயதானவர் என்னைக் கும்பிடும் அளவிற்கு என் புகழ் வளர்ந்துவிட்டதா.. கை தானாகவே சிகப்பு டி ஷர்ட் காலர் வரை சென்று விட்டது.. கொஞ்சம் சுற்றிப் பார்க்கிறேன்..
அருகில் இருந்த ஆவின் டீ மாஸ்டர் ஒரு ஸ்ல்யூட் வைக்கிறார்.. எதிரில் பைக்கில் வந்து கொண்டிருந்த நடுவயது தம்பதியர் பைக்கை நிறுத்திவிட்டுக் கும்பிடுகிறார்கள்.. வலப்பக்க பீங்கான் பொம்மைக் கடைக் கார முதிய பெண்மணி சட்டென எழுந்து அவர் பங்கிற்கு எனக்கு ஒரு கைக்கூப்பல்..
கொஞ்சம் தள்ளி மாலை நேர தள்ளுவண்டி நொறுக்குத் தீனிக் கடை. அதில் பேல்பூரி சாப்பிட்டுக்கொண்டிருந்த ஒருவர்.. எச்சில் கையால் தலையில் அடித்துக் கொள்வதையும் பார்க்கிறேன்.. ஒரு நொடி.. வானில் ட்ரோனிலிருந்து யாரோ என்னைப் படம்பிடிப்பது போல் உணர்வு..
சாமி.. கொஞ்சம் இப்புடி வாங்க.. உங்கள போல சாமியார்ங்க நிர்வாகம் பண்ணனும்ங்க.. ஆனா ஒரு கயவாளிப் பய மடத்தோட எடத்த தானே எளுதிக்கிட்டு வூடும் கட்டிக்கிட்டிருக்காங்க..
இப்போது புரிந்துவிட்டது.. அவர் ஏதோ ஒரு பிரச்சனையை சொல்ல உதாசீன் பாவாஜி மடம் வந்திருக்கிறார்.. எனது சிகப்பு கலர் வேட்டி சிகப்பு கலர் டி சர்ட் வெளுத்த நீண்ட தாடி நெற்றி விபூதிப் பட்டையைப் பார்த்துவிட்டு எதோ ஒரு மடாதிபதி என்று நினைத்திருக்கிறார்..
இப்போது அவர் சொல்வதை முழுதும் கேட்க வேண்டியதாகிப் போனது.. காஞ்சியருகில் உள்ள புதுப்பாக்கம் எனும் ஊரில் ஒரு மடம் இன்னமும் இருக்கிறதாம்.. அங்கு குருபூஜையன்று அன்னதானம் நிகழுமாம்.. அந்த மடத்திற்கு சில ஏக்கராக்கள் நிலம் இருக்கிறதாம்.. மடத்திற்குச் சொந்தமான காலிமனை 22/180 எவரோ ஆக்கிரமித்து இப்போது வீடு கட்டி குடியிருக்கிறார்.. அதை மீட்டு மீண்டும் அந்த மடத்திற்கு உயிரூட்ட வேண்டுமாம்..
பொறுமையாகக் கேட்டுவிட்டு.. ஐயா உங்கள் பெயர் என்ன என்று கேட்டேன்.. திடீரென ஏனோ அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள் கதை நினைவில் வந்தது.. சுற்றி எரிந்துகொண்டிருக்கும் நியான் விளக்கில் எங்களின் நிழல்கள் கரையாமல் நான்கு பக்கமும் இங்குமங்கும் அசைந்து கொண்டிருந்தன..
பெயர் மோகனவேல் என்றார்..
அவருடன் செல்பி எடுத்தேன்..
சூடான தேனீருக்குப் பின்னும் அவரின் முகத்தில் தெளிவு இல்லை..
அந்த முதியவர் தன் பாரம் முழுவதையும் இந்த எளியவனின் தோற்ற மாயையில் இறக்கி வைத்துவிட்டார்...
அவருக்குத் தேவை பதில்.. தீர்வு அல்ல..
ஐயா.. நீங்கள் சொன்ன ஒவ்வொரு சொல்லும் இதோ காமாட்சியின் காதுகளில் விழுந்திருக்கும்.. கச்சி ஏகம்பனின் காதுகளிலும் கூட.. கச்சி வரதனும் கண்டிப்பாக கேட்டிருப்பான்..
இந்தப் பூதலத்தில் தீது உற்ற செல்வம் என்.. தேடிப் புதைத்த திரவியம் என்..
காதற்ற ஊசியும் வாராது காண் உன் கடைவழிக்கே என பட்டினத்தார் சொல்லியிருக்கிறார்.. கவலைப் படாமல் பத்திரமாக வீட்டிற்குச் செல்லுங்கள்..
சாமி நீங்க எந்த மடம்... என பெரியவர் கேட்டார்...
நான் இலக்கியத் துறவிங்க.. கவிதை மடம்..
விருட்டென்று கிளம்பி நடக்கத் தொடங்கினார் பெரியவர்..
இப்போது அவர் நடை தெளிவாக இருந்ததைப் பார்த்தேன்.. ஆவின் டீ மாஸ்டர் தன் ஸல்யூட்டைத் திருப்பிக் கொடு என்று கேட்பது போல் இருந்தது.. பைக்கில் சட் டென ஏறி அமர்ந்த கணவனின் தலையில் மனைவி ஒரு குட்டு வைப்பது தெரிந்தது.. பீங்கான் பொம்மை விற்கும் முதிய பெண்மணி அப்படியே தன் இருக்கையில் அமர்ந்து கால்மேல் கால் போட்டுக் கொண்டார்..
அதிசார குருபெயர்ச்சியில் தமிழிலக்கியத்திற்கும் தமிழக நூலகங்களுக்கும் இலக்கியத் துறவிகளுக்கும் நேரம் சரியில்லை என யதார்த்த ஜோதிடர் ஷெல்வி எதையோ சாப்பிட்டுக் கொண்டே சொன்னது நினைவிற்கு வந்தது..
ராகவபிரியன் தேஜஸ்வி..

Comments
Post a Comment