இது முருகன் பெயரால் நிகழ்ந்த தனிப்பட்ட அநீதியும் அதற்கான வேலவனின் சூரசம்ஹாரமும். அதைத் தான் இப்போது பதிவு செய்யப் போகிறேன். வினை விதைத்தவன் வினையறுத்தே ஆகவேண்டும்..
அன்று எனது அலுவலகத்தில் பணியில் இருக்கிறேன். அது பாதுகாப்புப் பணியும் வணிகப் பணியும் உச்சமாக இருந்த நாள். எனது மேலதிகாரி திட்டமிட்டே ஆய்விற்கு வருகிறார்.. முகம் பார்க்க மார்பில் தாக்கினால் வீரம்.. மறைந்திருந்து குரல்வலையைக் கடிப்பது மிருகம். ஆம் ஒரு மிருக குணம் கொண்ட அதிகாரத்தின் தாக்குதல் நாள் அன்று..
அதாவது ஆம்புஷ் செக்.. கொரில்லா முறையான ஆய்வு. காரணம் எனது இணை அலுவலர்களுக்கு அந்த அலுவலகத்தின் தலைமைப் பொறுப்பை இவ்வெளியவன் ஏற்றது பிடிக்கவில்லை.. அவர்கள் வயது மற்றும் பணிமூப்பில் மூத்தவர்கள் எனினும் அந்த அலுவலகத்தில் இந்த எளியவனின் தலைமையின் கீழ் பணிபுரிய நேர்ந்தது துயரமென அடிக்கடி இவனின் காதுபடவே பேசுவார்கள்.. அவர்களால் மனதளவில் இவ்வெளியவனின் நியாயமான பதவி உயர்வை செரித்துக்கொள்ளவோ சகித்துக்கொள்ளவோ இயலவில்லை.. இவனை விட அவர்கள் அலுவலக ரீதியில் வலுவானவர்கள் என்பதை நிரூபிக்க நினைத்தார்கள்..அதன் விளைவு தான் இந்தக் கொரில்லா ஆய்வு..
மேலதிகாரி உள் நுழைந்தவுடன்.. இவ்வெளியவனிடம் தேவையே இல்லாமல் எனக்கு திருச்செந்தூர் முருகன் அருள் இருக்கிறது என்றார்.. இவ்வெளியவனின் பணிக்குப்பைகளை கோழியென காலால் தள்ளி புழுவைக் கொத்தித் தின்பது போன்று ஆய்வு செய்தார்.. ஆயினும் அவரின் அலகுகளில் ஒரு குற்றப்புழு கூட சிக்கவில்லை. துழாவித் துழாவிய ஆய்வும் துருவித் துருவிய இவ்வெளியவனின் மேல் வீசப்பட்ட கேள்விக் கணைகளும்.. திருச்செந்தூர் கடற்கரையில் சூரபத்மனின் அசுரத் தாக்குதலென அவரையே தாக்கத் தொடங்கின..இவன் அசுர வேலைகளுக்கிடையிலும் அக் கொரில்லா ஆய்வுத் தாக்குதல்களை எதிர் கொண்டு மீண்டது அரங்கனின் அருள் மட்டுமல்ல அந்த மால்மருகனின் வேல் வீச்சுமாகத் தான் இருந்தாக வேண்டும்..
அடுத்த நாள் ஒரு குற்றவாளி போல் மண்டல மேலாளரின் முன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.. பிரிக்கப்படாத தஞ்சை மாவட்டத்தின் கடைசீ எல்லை ஊரின் அலுவலகத்திலிருந்து இரவே புறப்பட்டாகிவிட்டது.. வீட்டிற்குத் திரும்பி குழந்தைகளைக்கூட பார்க்க நேரம் தரப்படவில்லை..
விடிந்தும் இருள் விலகாத மறு நாள் காலையில் திருச்சியில் வழிவிடு வேல் முருகன் முன் நிற்கிறேன்..இவ்வெளியவனுக்கு முன் அந்த மேலதிகாரியும் நின்று கொண்டிருக்கிறார்.. குருக்கள் திரு நீறு உள்ளங்கையில் வைக்கிறார்.. உடன் ஒரு பூவிதழும் அதில் புதைந்திருக்கிறது.
காலையிலிருந்து கால் கடுக்க மண்டல மேலதிகாரியின் அறைமுன் நிற்க வைக்கப்படுகிறேன்.. இரவெல்லாம் லத்தியடி வாங்கிய கைதியைப் பார்ப்பது போல் சக ஊழியர்கள் பார்த்தபடி சென்று கொண்டிருக்கிறார்கள்..
அதிகாரியின் அறைக்குள் அழைக்கப்படுகிறேன்..
மேலதிகாரி..
தங்களின் சீரிய பணியையும் துணிச்சலையும் ஒரு சிறிய அலுவலகத்தில் நிர்வாகம் விரயம் செய்ய விரும்பவில்லை.. நீங்கள் இந்த மண்டல அலுவலகத்திற்கு பணிசெய்ய வருகிறீர்களா..?
என வினவினார்.. அவர் அமர்ந்திருந்த இருக்கையின் மேலே மாட்டப்பட்டிருந்த முருகன் மற்றும் வெங்கடாஜலபதி படங்களைப் பார்த்தேன்.. நம்மாழ்வாரின் வரிகளான.... தீர்ப்பாரை யாம் இனி எங்ஙணம்... மனதிற்குள் மெல்ல ஒளிரத் தொடங்கியது..
பிரிதொரு கந்த ஷஷ்டி நாளில் கொரில்லா ஆய்வு செய்த அந்த மேலதிகாரி இந்த எளியவன் பயிற்சி அளிக்க பயிற்சி பெறும் அலுவலராய் வகுப்பில் அமர்ந்திருக்கிறார்.. அசகாய சூரனாய் அன்று முருகன் பெயரால் இவ்வெளியவனை சம்ஹாரம் செய்ய நினைத்தவர் அவ்வப்போது தீனிக்குக் தலைகுனியும் சேவலாய் பயிற்சி காலம் வரை வகுப்பில் தலை குனிவதும் பிறகு தலை தூக்கி இங்குமங்கும் பார்ப்பதுமாய் அமர்ந்திருக்க நேர்ந்தது..
அசகாச சூரர்கள் மால்மருகனை மறைந்திருந்து தாக்கினால் சேவலாய் மாறித்தானே ஆகவேண்டும்.. அது இந்த மண்ணின் நியதி. இது ஆணவ அழிப்பின் உட்பொருள்.. ஆணவ மனிதத் தலை கொய்யப்பட்டு ஆங்கொரு சேவற் முருகனால் பொருத்தப்படுமென்பதன் அனுபவ நிஜம். போகட்டும்..
அவர் மேலதிகாரியாய் ஆய்விற்கு வருகையில் ஒருமுறை இவ்வெளியவன் குட்மார்னிங்...சொல்லத் தெரியாத பண்பாடற்றவனென அவரின் ரகசிய குறிப்பில் மண்டல மேலதிகாரிக்கு குறிப்பிடிருந்தாரென மண்டல அதிகாரி இவ்வெளியவனிடம் தெரிவித்திருந்தார்..
ஆனால் அவரை விட பலமடங்கு வயதிலும் பணிமூப்பிலும் சிறியவனான இந்த எளிய பயிற்றுனர் வகுப்பில் நுழைகையில் ஓய்வு பெற சில நாட்களே இருந்த அந்த மேலதிகாரி அணிச்சையாய் அவசியமே இன்றி எழுந்து நிற்பார். பிடிக்கப்படுவதற்கு முன்னான ஒரு சேவலின் தவிப்பு அவரின் உடல்மொழி காட்டிக்கொண்டே இருக்கும்.. முருகன் அரங்கனின் மருமகன் என்பதை உலகுக்கு திருவரங்கன் காட்டிய நாள்தான் அன்றைய கந்தஷஷ்டி..
திருவரங்கன் திருவடிகளே சரணம்..
திருமுருகன் திருவடிகளே சரணம்
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்.
ராகவபிரியன் தேஜஸ்வி..

Comments
Post a Comment