தொன்ம தேய்மான கலாச்சார தேனீரகங்கள்....9
மகிழுந்துவின் மீள்ம உருண்டைகளை இயக்கும் காளைகளின் வாயிலிருந்து அசதியின் அதீத உழைப்புச் சுரண்டலின் இயந்திர வடிவெனினும் தசை நார்கள் வலுவிழக்கும் ஆபத்தின் மற்றும் இன்னபிற முடியாதெனும் வெளிப்பாட்டின் நுரைகள் காற்றில் பிசிறு பிசிறாக பறக்கத் தொடங்கின.. வாழ்வின் நிலங்களில் விளைச்சல் அற்றவை விபரீதமானவை விதிகளால் உருக்குலைந்தவையென எத்தனையோ சதுர கிமீட்டர்களைக் கடந்த பின்னும் தொய்வற்று பயணித்தல் என்பது விதிக்கப்பட்டிருப்பின் மட்டுமே சாத்தியமாகும்.. இயந்திரக் காளைகளுக்கும் இளைப்பாறுதல் தேவை.. வாழ்வின் நிலங்களில் ஒரு வேட்டியை விரித்து சற்று ஓய்வெடுக்கும் அளவிற்கான நிலங்கள் சாலையெங்கும் மல்லாக்காக கிடப்பதைக் கண்டதும் திசைதிருப்பும் சக்கரவடிவ மாணி ஆங்காங்கே காளைகளை அவிழ்த்துவிடும் உள்ளங்கை அரிப்பால் நிறுத்தச் சொல்லி இடப்பெயர்தல்களுக்கான அறிகுறிகளை உசுப்புகையில் மீள்ம உருண்டைகள் தன் சுழலின் விட்டத்தைச் சுருக்கியும் நீட்டியும் தடுமாறத் தொடங்குகிறது..
மீள்ம உருண்டைகள் மட்டும் அல்ல.. மனமும் வேப்பூரின் நாற்கரச் சாலையில் மிதக்கையில் ஏனோ ஸ்ரீமதி எனும் அப்பாவிக் குழந்தையின் அகால மரணத்தின் அதிர்வுகளை மீள் நிகழ்த்திவிட்டு வாழ்வின் நுழையவியலா சில நிலங்களில் அடிக்கடி குழந்தைப் பெண்மையைச் சுரண்டி மரணத்தைத் திணிக்கும் அதிகார அல்காரிதங்களின் முடிவற்ற நீட்சியை உணர்த்தியதில் காளைகள் சட்டென நுகத்தடிவிட்டு நகர்வதைக் காண இயலும்.. எதிலிருந்து எதுவரையிலான பயணம் என்பதையும் துவக்கப் புள்ளியின் தசமத்திலிருந்து நிறைவிடத்தின் புள்ளியைத் தொடும் பாதையின் தூரத்தை மகிழுந்துக்குள் இருக்கும் வேகம் காட்டும் கருவியில் பதியவைத்தல் எளிது தான். ஆயினும் சட்டென வாழ்வின் பாதையில் வியர்வைச் சுரண்டலையும் வருமானச் சுரண்டலையும் மகிழ்வுச் சுரண்டலையும் கண்டு திகைத்தாலும் தேக்கமற்று பயணித்தல் சாத்தியம்.. ஆணால் குழந்தைப் பெண்மையைச் சுரண்டித் தின்றுவிட்டு மரணத்தை மிச்சம் வைத்துச் சென்ற நிகழ்விடத்தைக் கடப்பதென்பது திகைப்பின் எல்லைகளையும் தாண்டி திரும்ப வருதலை சாலைகளைப் பிரிக்க எழுப்பப் பட்ட சீனப் பெருஞ்சுவரென எழும்பித் தடுக்கிறது..
காளைகள் உமிழும் நுரையின் அடர்வுகள் நுகத்தடியிலிருந்து அவைகளைப் பிரித்து ஓய்விற்கு அனுப்பியே ஆகவேண்டிய கட்டாயத்தை உணர்த்த வண்டி பெரம்பலூர் அஸ்வின் உணவக வளாகத்திற்குள் நுழைந்து விட்டது அணிச்சையின் தவிர்க்கவியலா தேனீரக ஈர்ப்பின் பயன். சுகாதாரமான கழிவறைகள் வயதானோருக்கான திறந்தவெளி தானியங்கி உயர்த்து யந்திரன் கைவினைப் பொருட்களின் கண்காட்சிகள் மீள்ம உருண்டைகளைத் தானாகவே அஸ்வின் உணவக வளாகத்திற்குள் இழுக்கும் சக்தி வாய்ந்தவை.. மீள்மக் காளைகளை அவிழ்த்துவிட்டு வைக்கோல் பிரிகளைப்பரப்பிவிட்டு சிலபடிகள் உயர்ந்தால் உணவக வாசலை அடையவியலும் எனும் நிகழ் வாழ்வியல் நிலத்தின் தெய்வீகத் தன்மை குவியும் இடத்தில் சிறியதாக புத்தர் சிலையொன்றை வைத்திருப்பது இந்த ஆன்மீக மண்ணின் தொன்ம இந்து தெய்வீகத் தண்மையை சந்தனக் கட்டையை அரைத்து அரைத்து தேய்ப்பது போல் தேய்த்துவிடலாமெனும் அல்ப மகிழ்வின் அரசியல் சாணக்கியத் தனமென்பது புரிபடுகிறது.. தேய்கப்பட்ட சந்தனம் மணம் பரப்பும்.. தேய்த்தாலும் தெய்வீகம் பரப்புவது இந்த ஆன்மீக மண்.. இந்த மண்ணின் தொன்ம தெய்விக தேய்மானங்களை முயற்சிக்கும் தேனீரகத்தின் பரிமாண வளர்ச்சிக்கான வியாபார உத்தியை நினைத்து சிறுபுன்னகையுடன் தவமிருக்கும் புத்தர் சிலையை எத்தனையோ பயணிகளின் கண்கள் அலட்சியப்படுத்திவிட்டு உணவு மேஜையின் அமரும் நாற்காலிகளுக்கான தேடல்களில் திருப்புதல் தேய்க்கவியலா ஆன்மீகத் தண்மையின் குறியீடாகிப் போனது..
இவ்வகையான உயர் நிலைத் தேனீரகங்களில் ஒரு தேனீர் மட்டுமே அருந்தி வெளிவருவதென்பது நிகழ் வாழ்வியல நிலத்தின் அவமானத் திட்டுக்களில் கால் வைப்பது போலாகிவிடுவதைத் தவிர்க்கவியலாது.. கூடுதலாக சிறு பொரித்த மாவு உருண்டைகளோ இல்லை இனிப்பு வில்லைகளோ சேர்த்துக் கொண்டே ஆகவேண்டுமென ஆழ்மனம் கட்டளையிடுவது சுற்றிலும் சுழன்று நிகழ் சமூக உணவருந்தும் இல்லை இல்லை தேனீருக்காகத் தேங்கி அதுவரையில் நேரம் கடத்தவும் அதையும் மீறி தங்களது பொருளாதார அட்டைகளின் கனத்தைப் பறைசாற்றவுமான காட்சிகளின் தாக்கத்தால் நிகழும்.. வயிறு தனது கொள்ளளவிற்கு மேல் கொட்டப்பட்டவைகளை நிராகரிக்கும் எவ்வித தாட்சன்யமும் இன்றி என்பதைச் சொல்லில் புரிந்து கொள்வதைவிட அனுபவம் உணர்த்துகையில் அகடின் அற்புத செயல் திறமை அதன் அங்கீகாரத்தைக் கேட்காமலேயே எடுத்துக்கொள்ளும்..
ஒற்றையடிப் பாதையாய் இருந்த இ ந் நிலத்தின் பயணங்களில் ஆங்காங்கே இருந்த தேனீர்க் கொட்டகைகள் வண்டிப்பாதைகளாய் வளர்ச்சி கண்ட போதில் தேனீர்க் குடிசைகளாய் உருமாற்றம் கண்டன.. வண்டிப் பாதைகள் தார் சாலைகளாய் தரமுயற்வு அடைந்த காலத்தின் சுழற்சியில் தெனீர்க் கடைகளாய் இருந்தவை தங்க நாற்கரச் சாலைகளைக் கண்ட நிகழ் காலத்தின் அசுர வளர்ச்சியில் தேனீரகங்களாய் சகல வசதிகளோடும் உருமாற்றம் கொண்டதால் அசைக்கவியலா நமது கலாச்சாரத்தை சற்று அசைத்துப் பார்க்கும் அருவ முயற்சிகளைக் கையாள்வதைப் புரிந்து கொள்ள முடிகிறது..
ஆயத்த குழம்பு வகைகள் சாதமுடன் கலந்தால் சுவை கூட்டும் பொடி வகைகள் அடுக்கப்பட்டிருந்த அடுக்குகளில் ஒரு பிராமணப் பெண்மணி பூண்டுக் குழம்பை தேடி எடுத்தார்.. தொன்ம தேய்மான கலாச்சார தேனீரகங்களின் கைகளில் நமது தெய்வீகப் பண்பாட்டின் மேலான மரண அடியைக் கொடுக்கத் உயர்த்திப் பிடித்திருந்த சுத்தியலைக் காணமுடிந்தது.. மெல்ல மீள்மக் காளைகளை நுகத்தடியில் பூட்டுகிறேன்.. அதன் வாயிலிருந்து நில்லாமல் கொட்டும் நுரையைத் துடைக்க கிழிந்த துணிகள் வீசப்பட்டிருக்கும் காவிரிக் கரையின் இறுதி நிலத்தில் தானே கண்டெடுத்தாக வேண்டும்.. மீள்ம உருண்டைகளை இயக்குகையில் யாரோ பின்னிருந்து விசில் அடித்து பாதை காட்டுகிறார்கள்.. வாசலில் சீருடையணிந்த வயதானவர் வெளிச் செல்லும் வாகனங்களை நிறுத்துகிறார்.. அவரின் கைகளில் பத்து உரூபாய் நாணயமொன்றைத் திணிக்கையில் தொன்ம தேய்மான தேனீகரக கலாச்சாரத்தின் கலிசியாஸ்கோப் சுழலத் தொடங்குகிறது...
ராகவபிரியன் தேஜஸ்வி..

Comments
Post a Comment