அது 1975 ல் இருந்து 1977 வரையிலான இந்திய கண்டத்தின் அவசர நிலை காலம். ஒரு சாமான்ய ஏழை ஒரு வேளை உணவிற்காக தமிழகத்தை விட்டு கர்நாடகாவில் பதினாறு வயதிலேயே கூலியாய் உழைக்க நேர்ந்த காலம்.
இரும்புத் தாது சுரங்கங்களில் இரும்பு போல்டர் கற்களை சிறு சிறு ஜல்லிக் கற்கலாக உடைக்க வேண்டும். காலை ஏழு மணிக்கு லாரியில் அழைத்துச் செல்வார்கள். அடர்ந்த காடு சூழ்ந்த வேகக்காற்று வீசிக்கொண்டிருக்கும் பள்ளத் தாக்குகள். வெடி வைத்து தகர்க்கப்பட்ட இரும்புத் தாது போல்டர்கள். இரவு எப்போது மீண்டும் ஹோஸ்பேட்டில் கொண்டு விடுவார்கள் என்பது எவருக்கும் அறியாத ஒன்று. சுத்தியல் பிடித்து தோலுரிந்த கைகளால் காய்ந்த சோள ரொட்டியைப் பிய்த்து வெறும் மிளகாய் மட்டும் உப்பு சேர்த்து அரைத்த கூழில் தோய்த்து உண்ணுதல் என்பது அந்த சாமான்யனுக்கு அப்போது விதிக்கப்பட்டிருந்தது.
ஓய்வு கிடைத்த ஒன்றிரண்டு இரவுகளில் ஒரு சில நேரம் அவனுடனான சக தொழிலாளத் தோழர்கள் ஷோலே பார்க்க சாமான்யனை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அப்போது தான் தர்மேந்திரா ஹேமமாலினி அமிதாப் பச்சன் கப்பர் சிங் போன்றோரைப் பற்றி பேசும் கலையைக் கற்றான். அந்த இனிய பேச்சின் கற்பனைப் போதுகளில் சாமான்யனுக்கு கல் உடைக்கும் வலி தெரியாதது அவனுக்கே வியப்பாக இருக்கும்.
அதுவும் ஹேமமாலினியை தர்மேந்திரா திருமணம் செய்து கொண்டுவிட்டார் என்றறிந்த போதுதான் ஒரே அடியில் ஒரு இரும்பு போல்டரை சல்லி சல்லியாக உடைத்திருக்கிறான். அந்த சாமான்யன். அதிலிருந்து அவனின் கைமட்டுமல்ல இதயமும் வலியை உணரத் தொடங்கியது.
அப்படித்தான் மீண்டும் தமிழக்த்தின் டூரிங் கொட்டகையில் நண்பர்களுடன் டிக்கெட் எடுக்காமல் பதினாறு வயதினிலே பார்த்திருக்கிறான் சாமான்யன். பிறகு ஸ்ரீதேவியின் கனவுகள் பட்டினி இரவுகளில் ஒரு சாமான்யனை பூச்சரங்கள் தொங்கும் சப்ரமஞ்சக் கட்டிலில் பசியறியாமல் உறங்கச் செய்திருப்பது வரலாறன்றி வேறென்ன?
பிறகொரு நாளில் ஸ்ரீதேவியை ஒரு இந்தி சினிமாக் காரன் திருமணம் செய்து கொண்டது தெரிந்து ஒரு பெளர்ணமி இரவு முழுவதும் சாமான்யன் பட்டினியாய் விழித்திருந்திருக்கிறான். பட்டினிப் போர் அதன் அறச் சீற்றத்தின் உதாசீனத்தை உணர்ந்த வரலாற்று எச்சங்கள் அவை.
அதே போல் மஞ்சுளா விஜய குமாரின் மூன்றாவது மனைவியானதைத் தொடர்ந்து சினிமா ஹீரோயின்களின் மேலான அன்பை உதறியெறியும் த்யானத்தை பயிலச் செய்யும் சமூக அராஜம் வரலாற்றில் பொறிக்கப்பட்டுத்தானே ஆகவேணும்.
இந்த மண்ணில் ஒரு சாமான்யன் தன் கனவு தேவதையை திருமணம் செய்து கொள்ளவியலா சமூக அவலத்தை சகிக்கவியலா அராஜகத்தை இன்னமும் எத்தனை ஆண்டுகள் தான் நாம் அனுமதிக்கப்போகிறோம் சொல்லுங்கள்.
இதையெல்லாம் வரலாற்றில் பதிவு செய்துதானே ஆகவேண்டும்..
ராகவபிரியன்
No comments:
Post a Comment