விழா காணுதல் என்பது ஒருவித கலை. கண்களால் காணவேண்டியவையும் மனதால் காணவேண்டியவையும் திருவிழாக்களில் கொட்டிக் கிடக்கும். குழந்தைகள் முதல் வாழ்வின் இறுதி நாளில் உள்ளோர் வரை திருவிழாவிற்கு சென்று வருவது நமது மரபு. திருவிழாவில் எந்த வயதில் எதைக் காண்கிறோம் அல்லது எதைப் பார்க்க கண்களை பழக்க வேண்டும் என்பது ஆன்மீகப் பள்ளியின் பாடத் திட்டத்தில் உள்ளது. அந்தப் பாடத் திட்டங்களை அற்புதமாக போதிக்கும் ஆன்மீகப் பல்கலைக் கழகங்கள் தான் நமது திருவிழாக்கள்.
அப்படியான விழாபல்கலைக்கழகங்கள் ஏறக்குறைய தினம்தோறும் காஞ்சியில் தன் வகுப்பறைகளை விரித்து பாடங்களை ஜீவனுடன் போதிப்பது சிறப்பு. அவ்வகுப்பறையில் காணும் கலையை நேர்த்தி மிகு கூர்மையாக்கிக் கொள்ள போதிக்கும் பாடம் ஒன்றைப் பற்றித் தான் இங்கே பதிவு செய்தாக வேண்டும்.
ஓவ்வொரு கார்த்திகை ஞாயிறு இரவிலும் கச்சியின் சபேசனுக்கு தெப்போற்சவம். காஞ்சியின் பேரூர்ந்து நிலையம் தொடங்கி அடர்ந்த போக்குவரத்து நெரிசல் மிகு வீதியெங்கும் சாலையோரக் கடைகள் பாதி வீதியில் பாடங்களை போதித்துக் கொண்டிருந்தன. உள்ளூர் வாசிகள் தங்கள் குழந்தைகளுடன் ஒவ்வொரு கடையிலும் கூட்டமாகக் கூடி மரபுசார் வாழ்வியல் பாடங்களை வைத்த கண் வாங்காமல் பார்த்து இதயத்தில் தேக்கிக் கொண்டிருந்தார்கள்.
ஆன்மீக பாடங்களைக் கேட்க கோவிலின் உள்ளான வகுப்பறைக்குள் புகுதல் வேண்டும். ஆங்கே ஆன்மீக கலைத் திறனை கூர்மையாக்கிக் கொள்ள அகக் கண்களை பார்வைக் கைகளால் பற்றி கோவில் வகுப்பறை இருக்கையில் அழுத்தித் முன்னும் பின்னும் தேயக்க வேண்டும். சூடு பிடித்து புகையெழும்ப உராயச் செய்து தீட்டித் தீட்டி கூர்மையாக்கிக் கொள்ள வேண்டும். ஆனால் கோவில் உள்ளே நுழைய இன்னும் ஆறுமாதங்கள் உள்ளதால் சாலையோரக் கடை வகுப்புகளில் சற்று அமர்ந்த இவனின் அகபுற கண்கள் மறந்து போன பாடங்களின் மீள் வாசிப்பைத் தொடங்கின.
நெகிழி வளையல்கள் பொம்மைகள் துணி போர்த்திய மிருக பிரதிமைகள் வீட்டு உபயோக சிறு பொருட்கள் அரிய கைவினைப் பொருட்கள் என விதவிதமான பாடத் திட்டங்களின் அவசியம் ஒவ்வொரு கடையிலும் கூறுகட்டி கும்மாளமிட்டுக் கொண்டிருந்தன. எல்லாவற்றின் மீதும் மோதித் திரும்பும் பார்வைக் கத்தி கைகளில் பிடிகொடுக்காமல் நழுவியதில் ஆன்ம மனதை கூர்மையாக்கும் கத்தியை எப்படிப் பிடிப்பதெனும் பாடம் மட்டும் புரியவேயில்லை..
சட் டென ஒரு கடையின் முன் மேலதிக கூட்டம். வகுப்பறை வாசலில் கூட்டம் கூடி நின்றால் வகுப்பறையில் ஆசிரியல் இல்லையென்றே அர்த்தம். சற்று எட்டிப் பார்க்க வேண்டிய கட்டாயம் கண்களை விரட்டியது. அங்கே மிளகாய் பஜ்ஜி சுடச் சுடச் எண்ணெய் சட்டி மீண்டெழுந்த சூடு ஆறாமல் வாழ்வியலின் விழாக் காணும் பாடத் திட்டத்தை கச்சிதமாக போதித்துக்கொண்டிருந்தது. மெல்ல அகபுறக் கண்களை இழுத்துப் பூட்டி த்யானம் தரும் சாத்வீக சுகம் தேடியபடி அந்தக வகுப்பறையை கடக்க நேர்ந்தது.. காலத்தைக் கடப்பதற்கும் விழாக் கடைகளை கடப்பதற்கும் நிறைய துணிச்சல் தேவைப் படுகிறதல்லவா? அதைத் தரும் ஒரு கீதையின் போதனையை மெல்ல முணுமுணுக்க நேர்ந்தது.
பாஹ்யஸ்பர்சேஷ்வஸக்தாத்மா விந்தத்யாத்மநி யத்ஸுகம்
ஸ ப்ரஹ்மயோக யுக்தாத்மா ஸுகமக்ஷய மஸ்நுதே!!
சப்தம், இன்னொரு உடல் ஸ்பரிசம், கண் அழகென காட்டும் உருவம், பார்வை தரும் சுகம்... போன்றவை தரும் நுகர்வு பண்டங்களை பாஹ்யஸ்பர்ஸம் என்று அரங்கன் சொல்கிறான். கச்சியின் சபேசனும் கார்மேக அரங்கனும் வேறு வேறு பாடங்களையா ஆன்மிக வகுப்பறையில் போதிக்கப் போகிறார்கள்? இதுபோன்ற நுகர்வு பண்டங்கள் தரும் சுகம் தரும் பார்வையை பூட்டிக்கொள்ளத் தெரிந்தவன் வாழ்வின் வகுப்பறையில் அதீத சப்தங்களின் நடுவில் கூட த்யானம் தரும் சாத்வீக சுகம் பெறுதல் சாத்தியம். இதைத் தான் நாம் வகுப்பறைத் தூக்கம் என்று சொல்கிறோம்.
அரங்கனின் வார்த்தைகள் ஆன்ம மனதின் கரும்பலகையில் எழுதப்பட்டிருப்பதை மீள் வாசிக்க நேர்ந்தது. இப்போது மிளகாய் பஜ்ஜி மிதக்கும் இரும்புச் சட்டியோ இன்னபிற பாஹ்யஸ்பர்ஸ பொருட்களோ கண்களுக்குத் தெரியவில்லை. திருவிழா பல்கலை வகுப்பறையில் போதிக்கும் அரங்கனின் சொற்கள் தாலாட்ட நல்ல உறக்கம் தேக்கி கோவில் வாசலையும் கடைக்கூட்டத்தையும் கடந்து வந்துவிடும் த்யானம் கைவரப் பெற்றது கொஞ்சம் நம்புதலுக்கு அப்பால இடைவெளியொன்றில் புகுந்து கொண்டது.
இப்படித்தான் இன்னும் ஆறுமாதங்கள் கச்சியின் பல்கலைக்கழக வளாகங்களில் வகுப்பிற்குச் சென்றாலோ இல்லை செல்லாமல் திறந்த வெளியொன்றிலோ த்யானம் பழகியாக வேண்டும். இல்லையேல் பயிற்சியற்ற மானுட தூக்கத்தையாவது பயின்றாக வேண்டும். பயிற்சியின் முடிவிலோ அல்லது வாழ்வியலின் இறுதி அத்தியாயத்திலோ தியானத்தில் முனைவர் பட்டம் கண்டிப்பாக அரங்கன் தருவான். அதற்குள்ளான கிடைத்த மனதிற்கு நெருங்கிய இடைவெளியொன்றில் ஒரு தட்டில் இரண்டு மிளகாய் பஜ்ஜிகள் மிதந்து வர கடப்பதென்பது கடினமாகி நிற்பதை அந்த ஆடல் வல்லானும் அரங்கனும் போதிக்கத் தொடங்கினார்கள்..
ராகவபிரியன்.
No comments:
Post a Comment