Sunday, November 16, 2025

 



இலக்கிய வலதுசாரிகள்..5
உடல் நிலை நலிவடைந்திந்திருந்த கடந்த பத்து நாட்களாக எழுத்தும் எண்ணங்களும் ஒரு மூலையில் குத்துக்காலிட்டு தலைகவிழ்ந்து அமர்ந்துகொண்டு படுத்தின. பண்டைய தமிழிலக்கியங்களை ஆங்கிலப்படுத்த ஏற்றிருந்த மீந்த புனித கடமை அவ்வப்போது நெற்றியைத் தொட்டுப் பார்த்து இன்னமும் சுரம் விடவில்லை எனச் சொல்லிவிட்டு அருகில் அமர்ந்து கொண்டு உறங்கவியலாமல் செய்தது.
நினைவற்று படுக்கையில் கிடக்கிறேன். எழுத்தின் பழைய நினைவுகள் இமைகளை திறந்தும் மூடவும் செய்து சில காட்சிகளை விரித்துக் காட்டிவிட்டு மீண்டும் சுருட்டி வைத்து விளையாட்டுக் காட்டுகையில் திரும்பிப் படுப்பது இயலாமல் போனது.
ஒருகளித்த நிலையென்பது பேரவதையல்லவா...
சட் டென மனைவி பகவத் கீதை புத்தகத்தை எடுத்து வந்து தலைக்கடியில் வைக்கிறாள். அதீத சுரம் தலையை தொங்கச் செய்கையில் கீதையின் அடர்ந்த புத்தக அணை கழுத்தின் நெகிழ்வுத் தன்மையைத் தக்கவைத்து மீண்டும் தலையை நிமிரச் செய்யுமென நம்புபவள் அவள்.
அந்த பாதி நினைவின் பொழுதில் கீதையை தமிழில் மொழிபெயர்த்த மாபெரும் பன்மொழி வித்தகர் ஸ்வாமினாத ஆத்ரேய சாஸ்திரிகள் மனதின் வெளியொன்றில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்.
அவரின் கையில் பக்த ராமதாஸரைப் பற்றிய புத்தகத்தின் பிரதிகள். அவைகளை ஒருமுறை கண்களில் ஒற்றிக் கொள்வதும் மீண்டும் அள்ளி எடுத்து அணைத்துக் கொள்வதுமாக இருக்கிறார்.
திருவாரூரில் ஒருமுறை தொடர்வண்டி நிலையத்தில் என் தகப்பனார் தேஜஸ்வியுடன் ஒரு சாஸ்திரிகள் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். அருகில் சென்றேன். இவன் யார் எனக் கேட்கிறார் ஆத்ரேய சாஸ்திரிகள். என் மகன்தான். ஆனால் முரடனாக இருக்கிறான் என்ன செய்வதென தந்தை கேட்கிறார். பின்னாளில் அவர்தான் மாபெரும் பன்மொழி வித்தகர் ஸ்வாமினாத ஆத்ரேய சாஸ்திரிகள் என அறிய நேர்ந்தது.
கீதையைப் படிக்கச் சொல்லு தேஜஸ்வி. என்ற அவரின் வார்த்தைகளைக் காதில் வாங்கினாலும் தந்தையின் மேலான அடாத கோபத்தில் அவ்விடம் விட்டு அகன்றுவிடுகிறேன். ஆனாலும் அவரின் இந்தக் குரல் மட்டும் இன்னும் காதுகளில் இருந்து அகலவில்லை.
பின் நாளில் என் தந்தை அவரின் கீதை மொழிபெயர்ப்பைப் பற்றி நிறைய என்னிடம் சொல்லியிருக்கிறார்.
ஸ்வாமினாத ஆத்ரேயன் கு.ப.ராஜகோபாலன் தி.ஜானகி ராமன் மற்றும் கரிச்சான் குஞ்சு போன்றவர்களுடன் இலக்கியப் பணியாற்றியிருக்கிறார் என்பதையும் தந்தை சொல்லக் கேட்டிருக்கிறேன். மணிக்கொடியிலும் ஒரு சில கதைகள் ஆத்ரேயன் எழுதியிருப்பதாக தேஜஸ்வி சொல்லியிருக்கிறார்.
இலக்கியம் மொழியாற்றல் இவைகளையும் மீறி பெரியவர் ஸ்வாமினாத ஆத்ரேயர் கர்னாடக இசையில் வல்லவர். ஒரு முறை மதுரை மணி அய்யர் நிதிசால சுகமா எனும் பாடலை பாடமறுத்த போது திரு ஆத்ரேயன் அவர்கள் அந்தப் பாடலின் நிஜ உருவாக்கத்தை அற்புதமாக விவரித்ததாக தி ஹிண்டுவில் படித்திருக்கிறேன்.
திரு ஆத்ரேய சாஸ்திரிகள் அப்பாவிற்குக் கொடுத்த புத்தகத்தை எவருக்கும் கடன் கொடுக்கக்கூடாதெனும் கட்டளையை தன் கையால் எழுதி வைத்திருக்கிறார் தேஜஸ்வி. அதன் ஒளி நகலையும் இங்கே இணைத்திருக்கிறேன்.
மாபெரும் வலதுசாரி இலக்கிய மேதை திரு ஸ்வாமினாத ஆத்ரேயன் மொழிபெயர்த்த கீதையை இவ்வளவு கனத்துடன் தலைக்கடியில் வைத்த பின்னும் தலை சாய்ந்துவிடுமா என்ன? சொல்லுங்கள்.
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...