Friday, November 21, 2025

 





காஞ்சியின் சுற்றுப்புறவியல் கவலை தருகிறது. நிறைய ஏரிகள் தூர்க்கப்பட்டு குடியிருப்பு மனைகளாக உருமாற்றப்படுகின்றன. ரியல் எஸ்டேட் அதாவது மெய்ப்பேட்டையியல் அதன் ஆக்டோபஸ் கைகளை காஞ்சியைச் சுற்றி நீட்டிக்கொண்டே இருக்கின்றன. காஞ்சியின் புராதன சின்னங்கள் அதன் கவனிப்பை தொலைத்துவிட்டு சீரிளமைத் திறமிழந்து நிற்பது அவமானமாய் இருக்கிறது.
மணிமேகலை காஞ்சியில் வசித்த பிள்ளையார் பாளையம் எனப்படும் பகுதியில்
பிக்குணிக்கோலத்துப் பெருந்தெரு அடைதலும்,
ஒலித்து ஒருங்கு ஈண்டிய ஊர்க்குறு மாக்களும்”
எனும் சீத்தளைச் சாத்தனாரின் வரிகளைப்போல பிக்குணிக் கோலத்துடன் கையில் பிட்சை பாத்திரம் ஏந்தி நிறைய ஏழைகளும் பார்வையற்றோரும் வயதானவர்களும் இன்னபிற வீட்டுணவு இல்லாதோரும் குழுமுகிறார்கள்.. அங்கே மணிமேகலையின் அமுதசுரபியென தினமும் காலையிலும் மாலையிலும் தெருவோர சிற்றுண்டி வண்டிகள் தரும் சுவைமிகு உணவுண்டு பின் பசியாறி மீந்த உணவை கெட்டிப்பட்டு ஓடவியலாமல் நிற்கும் சாக்கடையில் எறிந்துவிடுகிறார்கள்.. சாக்கடையின் முகப்பில் தப்பித்துக் கிடக்கும் உணவுகளைத் தின்ன மாடுகளும் ஒரு சில குதிரைகளும் தெரு நாய்களும் சின்னதாய் உணவுத் திருவிழாவை தினமும் கொண்டாடுவதை சீத்தலைச் சாத்தனார் இப்படிச் சொல்லிச் சென்றிருக்க வேண்டும்..
“கார்வறம் கூரினும் நீர்வறம் கூராது,
பார் அக வீதியில் பண்டையோர் இழைத்த
கோமுகி என்னும் கொழுநீர் இலஞ்சியொடு
மாமணி பல்லவம் வந்தது ஈங்கெனப்
பொய்கையும் பொழிலும் புனைமின் என்று அறைந்த
தெய்வதம் போயபின் செய்தியாம் அமைத்தது
இவ்விடம் என்றே அவ்விடம் காட்ட”
இந்தப் பாடலின் உண்மைத் தன்மையின் நீட்சி இன்றும் கூட காஞ்சியின் நெரிசல் நேர காலையிலும் மாலையிலும் காணக்கிடைப்பது தான் கலாச்சார எச்சங்களின் மீட்சி.
போகட்டும்..
வளம் கொழிக்கும் மெய்ப்பேட்டையியலின் நுண்ணிய செயல்பாடுகளால் வீட்டு மனை வாங்கும் முன் மணிமேகலை பிக்குணிக் கோலத்துடன் சுற்றி வந்த ஏரிகளையும் வேகவதியின் மீதியாற்றுத் தடங்களையும் கண்டுபிடிப்பதென்பது சாதாரணர்களுக்கு சவால் நிறைந்தது.
இருந்தாலும் நகரேஷூ காஞ்சியில் கைவீசி காலாற நடப்பதற்குத்தான் இடமும் இல்லை இயலவுமில்லை ...அவ்வளவு நெரிசல்..
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...