நானொரு புல்தான்...
என்னை மிதிக்கும்
கால்களின் வெப்பத்தில்
சுகம் காணும் சின்னவன்..
காடுகளின் முட்டாள் தனத்தையும்
அதிலுள்ள கடுமைகளையும்
உள் வாங்கி உணர்பவன்..
தாவர உண்ணிகள்
தொடர்ந்து மிதிக்கையில்
என்னுள் பச்சையங்கள் கந்தகமாகின்றன.
மாமிச உண்ணிகள்
கனமாய் மிதிக்கையில்
அவை தீப்பற்றிக் கொள்கின்றன..
எந்தச் சமாதான மழையாலும்
காய்ந்த காட்டுப் புல் தீயைத்
தணிக்கவியலாதென்பதை நீங்கள் அறிவீர்கள்..
எனக்கான பூமித் தரையை
நான் விரைந்து ஆக்கிரமித்துவிடுவதால்
மனிதர்கள் என்னை
மிதித்துக் கொண்டேயிருக்கிறார்கள்..
மிதிப்பது மனித குணமென்றும்
வழி விடுவதே புல்லின் கடமையென்றும்
கவியெழுதி விடுகிறார்கள்..
காலா உன்னைச் சிறு புல்லென மதிக்கிறேன்
என பாரதியே எனக்கு
மரியாதை செய்ததால்
நான் கவிஞர்களை மன்னித்துவிடுகிறேன்..
விளையாட்டுத் திடலில்
விளையாட்டு வீரர்களின் மிதியலிலும்
பூங்காக்களில் குழந்தைக் கால்களின் மிதியலிலும்
நான் புத்தாடை உடுத்திக் கொள்கிறேன்..
என் மீதான பனித் துளியை
எழுதாத கவிஞர்கள்
எந்த மொழியிலும் இல்லை...
நான் விலகி நின்று
வழி விட்டதைத் தான்
நீங்கள் இப்போது பாதை என்கிறீர்கள்..
என்னை யானைகள் மிதித்தாலும்
பூனைகள் மிதித்தாலும்
மரணமற்ற பசுமை தேக்கி
மீண்டும் துளிர்த்து விடுவேன் என்பதை
பணிவுடன் சொல்லிக் கொள்கிறேன்..
ராகவபிரியன்
No comments:
Post a Comment