ஒரு பனவனின் பால்ய நினைவுகள்...1
ஒரு ஆணின் வாழ்வென்பது நினைவு தெரியும் பாலபருவத்திலேயே தொடங்கிவிடுவது பெரும் துயரம்..மேலும் வறுமையின் பிடியில் சிக்கி வெளிவரமுடியாத விரல்களை விடுவித்துக்கொள்ள முயன்று கொண்டிருக்கும் கொடுமையான கால கட்டத்தில் பிறந்த ஒரு ஆண் குழந்தை ஐந்து வயதிற்குள்ளாகவும் கூட சம்பாதித்துக் கொண்டுவரவேண்டிய நிலையில் தள்ளப்பட்ட அறுபதுகளின் மத்தியில் தனக்குப் பின் எட்டுக் குழந்தைகள் பிறக்கப்போவதையறியாமல் தனது பதின்மூன்றாவது வயதில் திருவரங்கம் ஐந்தாவது பிரகாரத்திலிருக்கும் பூந்தோட்டத்தில் அந்தச் சிறுவன் ஒரு நாளைக்கு 0.50 பை விற்கு எடுபிடியாக வேலைக்குச் சேர்த்துக்கொள்ளப்படுகிறான்..
விடுமுறை நாட்களில் அவனின் காலம் அரங்கனின் பிரசாதங்களிலும் தோட்டத்திலும் அதன் வழியாக தாய் தந்தையுடன் கைபிடித்துக்கொண்டு கையில் தின்பண்டங்களும் விளையாட்டுப்பொம்மைகளும் பிடிவாதங்களுமாய் வரும் பக்தர்களின் பணக்காரக்குழந்தைகளின் துள்ளல் நடையை கவனிப்பதிலும் கழியும்...பிள்ளை சோர்ந்து உறங்கும் பொழுதுகள் அந்தப் பிள்ளைக்கு வாய்க்கவில்லை..அவன் கொண்டு தரும் ஐம்பது பைசாவிலும் பிரசாத மிச்சத்திலும் பசியாறும் அவனின் பெற்றோர்களைக் கண்டு அவமானமாயிருக்கும் அக்குழந்தைக்கு..அவனின் பிரசாதக் கையில் மீந்திருக்கும் நெய்யின் வாடையை முகர்ந்து பார்க்கும் எட்டாவதாயும் ஐந்தாவதாவது பெண்குழந்தையாயும் பிறந்த ஒரு வயது தங்கையின் மேல் ஒரு தகப்பனின் பாசத்தையும் உடன் பிறந்தவர்கள் உதாசீனப்படுத்தினாலும் அவர்க்ளுக்கான கடமைகள் மீந்திருப்பதாயும் ...அதைச் செய்ய முடியாத குற்ற உணர்வை இன்னமும் கொண்டிருக்கும் அந்தச் சின்ன அண்ணனுக்கு இன்று இருபத்தியெட்டாவது திருமண நாள்...எந்தக் குடும்பத்தில் தன் தகப்பனின் இயலாமையை எதிர்த்து போராட்டத்தைத் துவங்கி ஒரு பத்தாண்டுகளில் மூன்று வேளைச் சாப்பாட்டிற்கும் பெரும்பாலான உடன்பிறப்புகள் பட்டதாரியும் முதுகலைப் பட்டதாரியும் ஆவதற்காக உழைப்பை மட்டுமே சுவாசித்த அவனுக்கு அந்தக் குடும்பத்தில் மேலும் இன்னொரு சுமையாய் ஒரு தாய்தந்தையற்ற ஏழைப்பெண்ணைத் திருமணம் செய்து வைத்து பழிதீர்த்துக்கொள்கிறான் தகப்பன்..
திருமணம் வரமாக அமைந்தாலும் சாபமாக இருந்தாலும் அந்த நாள் திருமண நாள்தான்...அந்த நாளின் சப்தங்கள் தம்பதிகளின் காதுகளில் நிரந்தரமாய்த் தங்கிவிடும்..
உழைத்து நெய்வாடையில் காய்த்த கைகளைப் பற்றியவளை சுமையெனக் கருதாமல் வாழ்வின் அத்தனைப்போராட்டங்களையும் அதன் சுழல்களையும் எதிர்த்து மீண்டும் போராட்ட களத்தில் படைவீடெடுத்துத் தங்கி இன்னமும் வாழ்வின் விழுப்புண்களை சுமந்துகொண்டு தன் இருபத்தெட்டாவது திருமண நாளுக்கான மனைவிக்கான புத்தம் புது புடவை வாங்கித்தரமுடியாமல் காலையிலிருந்து நல்ல தமிழில் அர்ச்சித்துக்கொண்டிருக்கும் மனைவியின் மேலான பிரிக்கமுடியா பந்தத்தின் உட்கூறுகளை எழுத்தில் கொணரமுடியுமாவெனும் சிந்தனைச் சுவறொன்றை தன் இரு காதுகளிலும்தொங்க விட்டுக்கொண்டு கணிப்பொறியில் தட்டச்சிக்கொண்டிருக்கும் சப்தத்தில் தன் திருமண நாளில் வாசிக்கப்பட்ட ரூபக தாளத்தின் மேளச் சத்ததில் எழுந்த எதிர்காலத்தின் எச்சத்தை அந்த வெற்றிடத்தை புரிந்துகொள்ளமுடியாத அன்றைய சபிக்கப்பட்ட 27.01.1991 நாளையும் அந்த மங்களச் சப்தங்களையும்மீண்டும் கோவிலுக்குக்கொண்டு சென்று அரங்கனிடம் அதை வரமாக மாற்றித்தர வேண்டிய கோரிக்கையை வைக்கவேண்டிய ஒரு பெரும் பணியை திட்டமிட்டுக்கொண்டிருக்கும் வேளையில்....முகமெல்லாம் கோபமாக ஒரு நகையையும் நட்டையும் கண்ணால் காணமுடியாத பிரபஞ்ச இருட்டை கரு[டு[ங்கோபத்தை எப்படி கோவிலுக்கு உடன் கூட்டிச் சென்று... நாளின் பொழுதுகளை ஒளிரவைப்பதென தடுமாறிக்கொண்டிருக்கும் இவ்வேளையில்... இந்த எட்டு மணியளவில்தான் ஒரு கரிய திரவத்தை டபரா டம்ளரில் நங்கென வைக்கிறாள் அவனின் தர்ம பத்தினி...அந்த தளும்பும் கரிய திரவத்தின்பெயர் காப்பியாம்...ஒவ்வொரு திருமணமும் புது நாளொன்றும் காப்பியில் தொடங்குவது கொடிதிலும் கொடிது....ஒரு நல்ல கோப்பை காப்பி அருந்தியபின்னாவது....அவனின் திருமண நாளை வாழ்த்துவீர்களா நண்பர்களே....?
ராகவபிரியன்
ராகவபிரியன்
[கீழே இருக்கும் படத்தை எடுத்து எங்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் அமிழ்த்தியவர் எனது மூத்த மகள் திருமதி ராகவிலெக்ஷ்மிகாந்தன்]

கொடிது கொடிது வறுமை கொடிது, அதனினும் கொடிது இளமையில் வறுமை" என்பது அவ்வையார் வாக்கு.
ReplyDeleteசார் மிக்க நன்றிகள்...நலம் தானே...தொடர்ந்து உங்கள் ஆதரவை வேண்டும்..அன்பன்..ராகவபிரியன்
ReplyDelete