Saturday, August 10, 2024

 உச்சத் திணை...

சிறுகதை...
கோபுரத்தில் உள்ள கலசங்களின் மூடியைத் திறக்கவேண்டும்...வெறும் கைகளால் தான்...திறந்து உள்ளிருக்கும் தினை அரிசிகளை ஒரு கைப்பிடி எடுத்து சேமித்து வைக்க வேண்டும்...
இப்படியான எண்ணம் ராம்பாபுவிற்கு ஏன் வந்ததென்று தெரியவில்லை...
எண்ணங்கள் தோன்றுவதன் மூலப்புள்ளியை கண்டடைதல் எப்படி என்பதுதான் அவனின் ஆகப்பெரிய ஆராய்ச்சியாகவும் இருந்தது...
போகட்டும்... முதலில் தனது இருசக்கர வாகனத்தில் கிராமங்கள் நிறைந்திருக்கும் சாலையொன்றைத் தேர்ந்தெடுத்து போய்க்கொண்டிருந்தான்...
ஒன்றிரண்டு நாட்களுக்கு முன் கும்பாபிஷேகம் நடைபெற்றிருந்த புதுப்பிக்கப்பட்ட கோபுரம் அவனின் வண்டியை நிறுத்தியது...
மேலே ஏற வழி இருக்கிறதா எனத் தேடத்தொடங்கினான்...
உலகில் பிறந்து முதல் அடி எடுத்து வைக்கும் நாள் முதல் எப்படியாவது எதன் மேலாவது ஏறிவிடத்தான் எல்லோரும் வழி தேடிக்கொண்டிருக்கிறார்கள் என நினைத்துக் கொண்டான்...உச்சியை அடைந்து விட வேண்டும்...அவ்வளவு தான்...
கோபுரத்தின் உச்சிவரைக்குமான சாரம் இன்னமும் பிரிக்கப்படவில்லை...பழங்காலத்து கோவில் என்பதால் கண்டிப்பாக படிக்கட்டுகளும் இருக்கவேண்டும்...இருந்தது...
சாரம் வழியாக ஏறினால் யாரவது பார்த்து அதிகாரம் செய்வார்கள்...படிக்கட்டுகள் வழியாக ஏறினால் யாருக்கும் தெரியாதென நினைத்தான்...கோபுர படிக்கட்டுகள் வெளித்தெரியாமல் அமைக்கப்பட்ட தத்துவத்தின் பொருள் என்ன எனவும் யோசித்தான்...
சட் டென ஒருவர்..."ஸார்...பத்து ரூபாய்...எனச் சொல்லி ஒரு ரசீதைக் கொடுத்தார்...இரு சக்கரவாகனக் கட்டணமாம்..."
வரும்போது கூட குடுங்க...எனச் சொல்லியவாறே கோபுரத்தின் திண்ணையில் ஏறி அமர்ந்து கொண்டார்...
அந்தத் திண்ணையின் ஓரமாய் தான் படிக்கட்டுவாயில் இருப்பதைக் கண்டு பிடித்தான்...வெவ்வாள் வாசமுடன் பெயிண்ட் வாசமும் கலந்திருந்தது...ப்ளாஸ்டிக் பை இருக்கிறதா என ஒரு தடவை கால்சராயின் பையைத் தடவிப் பார்த்து உறுதி செய்து கொண்டான்...
உடையின் பைகளில் இருக்கும் சிலவற்றை அவ்வப்போது தொட்டுப் பார்த்துக் கொள்வதால் ஒருவித நம்பிக்கை பலம் கிடைப்பதை கவனித்திருக்கிறான்...
மெல்ல திண்ணையில் ஏறி படிக்கட்டு வாசலைப் பார்த்தான்...
இவனையே பார்த்துக் கொண்டிருந்த இருசக்கரவாகன நிறுத்த குத்தகைக்காரர் ..." சார்...மேல போகக்கூடாது...சீக்கரம் கோவில் உள்ள போய் தரிசனம் பண்ணிட்டு வாங்க...நடை சாத்தப் போறாங்க..." என்றார்...
சட் டென குத்தகைக்காரர் எதிர்பாராத நேரத்தில் படிகளின் மேல் தாவி ஏறத் தொடங்கினான் ராம்பாபு...
அது ஐந்து நிலை ராஜ கோபுரம்...ஏழு கலசங்கள் உள்ளன...
பின்னாலேயே குத்தகைகாரர் கத்திக்கொண்டு இவனைத் துரத்துவது தெரிகிறது...
மேலே ஏறும் போது யாராவது துரத்தி வருவதே இன்றைய வாழ்வின் ஆகப்பெரிய அவலம் என நினைத்தான்...
இப்போது வெவ்வாள்கள் நிறைய இங்குமங்கும் சிறகடிக்க...இவன் உச்சிக்கு செல்வது அவ்வளவு சுலபமல்ல என்பதைப் புரிந்து கொண்டான்...
குத்தகைக்காரன் போட்ட சப்தத்தில் இன்னும் நிறைய ஆட்கள் இவனைத் துரத்தத் தொடங்கியிருந்தார்கள்...சாரம் வழியாகவும் சிலர் ஏறிக்கொண்டிருந்தார்கள்...
அதற்குள் போலீஸுக்கும் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் பறந்துவிட்டிருந்தது...இரண்டாம் நிலையில் வசித்த சில புறாக்களும் சட்டென பறந்து மூன்றாம் நிலை பொம்மையில் அமர்ந்து பக்கும் பக்கும் என சப்தமிடத்தொடங்கியது இவனுக்கு நன்றாகக் கேட்டது...
இவன் மூன்றாம் நிலையை அடைந்துவிட்டான்...இப்போது ஊரே கூடி கோபுரம் ஏறத் தொடங்கியிருந்ததை உணர்ந்தவன்...அப்படியே ஒரு படியின் ஓரத்தில் அமர்ந்து கொண்டான்...
இவன் தற்கொலை செய்து கொள்ளத்தான் வந்திருக்கிறான் என சிலர் பேசிக்கொண்டார்கள்...இவனைக் கிறுக்கன் என்றும் தண்ணியடிக்க இடம் கிடைக்காமல் கோபுரம் ஏறியிருக்கிறான் எனவும் பேசிக்கொண்டார்கள்...
இவன் ஒரு மிகப்பெரிய சித்தன் என்றும் எல்லா கோபுரங்களின் படிகளிலும் விறுவிறுவென ஏறி இறங்குவான்...அதன் தத்துவம் யாருக்கும் புரியாதெனவும் சில பெரியவர்கள் பேசத் தொடங்கினார்கள்...
அதற்குள் அவனின் வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து அவனின் ஜாதகத்தை போலீஸ் துறை ஆராயத் தொடங்கியிருந்தது...
ஸ்டாம்ப் சேமிக்கலாம்...வங்கியில் பணம் சேமிக்கலாம்...அலமாரியில் அலங்காரப் பொருட்களை சேமித்து வைத்துக் கொள்ளலாம்...இதயத்தில் பழைய நினைவுகளைக்கூட சேமித்து வைக்க உரிமையிருக்கிறது...
கோவில் கோபுரத்திலிருந்து ஒரு கைப்பிடி தினையரிசி சேமிக்க உரிமையில்லையா எனவும் எண்ணத் தொடங்கினான்...
அப்படியே சோர்வுடன் அமர்ந்துவிட்டான்...
சோர்வும் சோம்பலும் கைகளை மேலே தூக்கி நெட்டி முறிக்கச்சொல்லும் கட்டளையை மூளைக்கு எப்படி அனுப்புகிறதென சிந்தித்தான்...வேகமாக துரத்துபவர்கள் சிந்தனையின் வேகத்தை முந்தக்கூடியவர்கள் தான்...அடுத்து என்ன செய்வதென அறியாமல் வலது கையை படியில் ஊன்றி எழுந்தான் ராம்பாபு...
ஒரு சிறிய இடைவெளி ஒரு ஒல்லியான ஆள் பக்கவாட்டில் உள் நுழைவதற்கான அமைப்புடன் தோன்றியது...ஏற்கனவே இருந்திருக்கிறதா ...இல்லை கோபுரங்களை பாதுகாக்கும் பூதத்தின் செயலா எனும் பயம் வந்தது...தப்பித்தாக வேண்டுமென்பது மட்டுமல்ல தினையரிசியை எப்படியாவது எடுத்தாக வேண்டும்...சேமிப்பைத் தொடங்கியாக வேண்டும்...
அதற்குள் உடலை குறுக்கி நுழைந்தான்...ஜில் எனும் காற்று எங்கிருந்தோ உடலைத் தொடுவதை உணர்ந்தான்...அட ரகசிய படிக்கட்டுகள்...சட் டென கீழே இறங்கத் தொடங்கினான்...இரண்டாம் நிலை வாசல் தெரிந்தது...கீழே நடப்பவைகளையும் பார்க்க முடிந்தது...
ஒரு தீயணைப்பு வாகனமும் சில வீரர்களும் கூடி எதுவோ பேசிக்கொண்டிருந்தார்கள்...சிலர் வலை போன்ற ஒரு விரிப்பை கோபுரத்தின் அடிவாரத்தில் விரித்துக் கட்டிக்கொண்டிருந்தார்கள்...போலீஸ் வேடிக்கைப் பார்க்க வந்த கூட்டத்தை சிறிது தூரத்தில் நிற்க வைத்து அரண் அமைத்துக் கொண்டிருந்தது...
அதற்குள் டிவி கேமராக்கள் பேட்டி எடுப்பவர்கள் என அந்த இடத்தை திருவிழா போல மாற்றிக்கொண்டிருந்தார்கள்...அவனின் இருசக்கர வாகனத்திற்கு இரண்டு போலீஸ் காவல் இருந்தது...
இவனின் இரண்டாம் நிலையைத் தொட்டுச் செல்லும் சாரத்தில் சீரூடையின் கையில் இரண்டு கோடுகள் உள்ள போலீஸ் நின்றிருந்தது...
ஐந்து நிலைக்கும் ஐந்து நிலைக் காவலர்கள் இருப்பார்கள் போல என நினைத்தான்...
ராம்பாபுவின் வீட்டைக் கண்டுபிடித்த தனிப்படை போலீஸ் அதன் வறுமைச் சூழலைக் கண்டு எதையோ கண்டுபிடித்ததைப் போன்ற முகபாவத்துடன் அங்கிருந்த பொருட்களை இங்குமங்கும் விசிக்கொண்டிருந்தது...
ராம்பாபு தனியாக வசிப்பதைக் கண்டுபிடிக்க அரை நாள் செலவு பிடித்தது...அங்கிருக்கும் ஒரே ஒரு பூட்டப்பட்ட பெட்டியைத் திறந்தால்.அதற்குள் பழைய பாசிமணிகள் உடைந்த வளையல்கள் இன்னபிற பெண்களின் அணிகலன் கள் இருந்தன...
ஒன்றுமில்லாதவர்களால் தான் இந்த உலகத்தையே ஓட வைக்கமுடிகிற்தென்பதுதான் இன்னமும் புரிந்துகொள்ளவியலா புதிர்...
தனிப்படையின் துப்பறியும் பிரிவுக்குத் துப்பு கிடையாதென உயரதிகாரி வாக்கி டாக்கியில் கத்திக்கொண்டிருந்தார்...
முதல் நாள் இரவு ராம்பாபு டிபன் சாப்பிட்ட கடையைக் கண்டுபிடித்து விட்டார்கள்...அவன் இரண்டு பரோட்டாக்களை வாங்கி ஒன்றரை சாப்பிட்டுவிட்டு அரை பரோட்டாவை தொட்டியில் போட்டுவிட்டது கூட கண்டுபிடிக்கப்பட்டது...அது மட்டுமல்ல அந்த பாதி பரோட்டாவைக் கண்டுபிடித்து அதில் உப்பில்லை என்ற பரிசோதனை அறிக்கையையும் போர்க்கால அடிப்படையில் வாங்கியிருந்தது தனிப்படை...
ஆனால் ராம்பாபுவைத் துரத்தி வந்தவர்களாலும் சாரம் வழி உச்சி வரை ஏறியவர்களாலும் அவனைக் காணாமல் திகைக்கத்தான் முடிந்தது...
கண்முன்னே இருப்பதனைத்தும் மறையக்கூடியது தான்..ஆனால் திடீர் மறைவைத்தான் நம்ப மறுக்கிறது மனிதம்...
அவன் காணோம் என்றவுடன் அவனைச் சித்தன் என்ற பெரியவர்கள் வெற்றிக் களிப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு ஹைபை செய்து கொண்டிருந்தார்கள்...
பைத்தியக்காரன் எனச் சொன்னவர்கள் இப்போது அவன் தீவிரவாதி தான் கண்டிப்பாக மனித வெடிகுண்டாகத்தான் இருக்கும் எனக் கொளுத்திப் போட்டுவிட்டார்கள்...
இப்போது கூட்டம் கோபுரத்தின் முன்னே அலைபாயத் தொடங்கியது...
தொலைத் தொடர்புத்துறையின் குற்றக் கண்டுபிடித்தல் நுண்பிரிவுத் துறை அவன் இருசக்கர வாகன நம்பர் ஜாதகப்படி அவனிடம் கைப்பேசி இல்லை என உறுதி செய்தது...
மானில மத்திய அரசுகள் அவசர மந்திரிசபைக் கூட்டம் ஒன்றை நடத்தத் தொடங்கின...
உலகம் விறுவிறுப்பாக இயங்கத் தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில் சேமிப்பை எப்படி நிஜம்மாக்குவதென சிந்தித்திப்படியே தூங்கத் தொடங்கினான் ராம்பாபு...
சுற்றி ஆக்ரோஷப் போர் நிகழ்கையில் உறங்கமுடியுமென்றால் பயம் அற்ற உள்ளத்தால் மட்டுமே சாத்தியம்...
அந்த ரகசிய சுரங்க வழி கோவிலின் எதிரே உள்ள குளக்கரையின் பிள்ளையார் கோவிலின் அரச மரப் பொத்தில் தொடங்கியிருந்தது...அங்கிருந்துதான் அற்புதமான இதமான காற்று அந்த இருட்டறையில் ராம்பாபுவுக்குக் கிடைத்துக்கொண்டிருந்தது...
அடைக்கப்பட்ட பொழுதுகளில் தான் சுற்றி ஆரவாரங்கள் தொடங்குகின்றன என ஆழ்மனதில் குறித்துக் கொண்டான்...உச்சிக்குச் செல்ல நேர் வழியும் மறைமுக வழியும் செயற்கை வழியும் இருக்கையில் சேமிப்பது சுலபம் எனவும் சிந்திக்க அசுரபலம் மனதிற்குள் உருவாவதை உணரமுடிந்தது அவனால்...
ரகசியமாகவும் உச்சிக்குச் செல்ல வழியிருக்கிறதெனும் உண்மையும் புலப்பட்டது...
இந்த ஆரவாரங்கள் ஆட்கூட்டம் அனைத்தும் கண்டிப்பாக அடங்கிவிடும் பிறகு மேலேறி கலசத்தைத் திறந்து பிடி தினையரிசி எடுத்து ப்ளாஸ்டிக் பையில் போட்டு கால்சராயில் வைத்து எடுத்து வெளியேறிவிடலாம் என முடிவு செய்தான்...
மாலையில் கீழே இவனின் இருசக்கர வாகனத்தைப் படம் பிடித்துக் கொண்டிருந்தார்கள்...பாவம் குத்தகைக்காரருக்கு பத்து ரூபாய் கொடுக்க வேண்டுமே என நினைக்கையில் குற்ற உணர்வு வந்திருந்தது...ஒவ்வொருபடியாக இறங்கி குளக்கரை வரையில் வந்து பார்த்துவிட்டு மீண்டும் இரண்டாம் நிலையில் அவனுடைய எவராலும் கண்டுபிடிக்கவியலா அற்புத இடத்தை அடைந்து உறங்கத் தொடங்கினான்...
தொல்லியல் துறையின் அறிக்கையை இப்போது அரசாங்கம் வாங்கியிருந்தது...அந்த அறிக்கையின் படி இந்தக் கோபுரம் 1200 ஆண்டுகள் பழமையானதென்றும்...கோபுர உச்சியிலிருந்து சுரங்க வழி இருப்பதாகவும் சொல்லப்பட்டிருந்தது...
இரவுக்குள் அவன் கண்டுபிடிக்கப்படாவிட்டால் கோபுரத்தை மட்டுமல்ல நம் ஆட்சியையும் இழக்கவேண்டிவரும் என மூத்த அமைச்சர் அதிகாரிகளை கடிந்து கொண்டிருந்தார்...
இப்போது கோபுரம் முழுவதும் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டிற்குள் வந்திருந்தது...
பாதி இரவுக்கு மேல் ராம்பாபு மெல்ல கண்விழித்தான்...கோபுரத்தைச் சுற்றி ராட்சத ஒளி வெள்ளம் பாய்ந்து கொண்டிருந்தது...கீழிறங்கி அரச மரப் பொந்தின் வழியே வெளியே வந்து அருகிருந்த குழாயில் தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் பொந்தின் வழியே இரண்டாம் நிலையின் அவனிடம் சேர...சோர்வு அறவே நீங்கி புது உற்சாகம் அவனைத் தொற்றிக் கொண்டது...
ஏன் சேமிக்க வேண்டுமென அவன் பலமுறை யோசித்திருக்கிறான்...
சேமிக்கப்பட்ட யானையைக் கட்டிப் போட்டாலும் அது ஆடிக்கொண்டே இருக்குமென நினைத்தான்...சேமிப்பு நிலையாக கட்டப்பட்டிருந்தால் மதம் பிடிக்கும் வாய்ப்புகள் அதிகவும் என்ற நிஜமும் புரிந்தது அவனுக்கு....
அவனின் வங்கிக் கணக்கில் குறைந்த பட்சத் தொகை மட்டுமே இருக்கும்...ஒரு முறை வங்கிக்குச் சென்று குறைந்த பட்ச தொகையைக் கேட்க ....மினிமம் பேலன்ஸ் இல்லாததால் அந்தத் தொகையும் பூஜ்ஜியம் என வங்கி ஊழியர் சொன்னவுடன் தான்... எப்படியும் தினையரிசியைச் சேமிப்பதென முடிவு செய்த கோபத்தின் உச்ச தருணத்தை மீண்டும் மனதில் கொண்டு வந்தான்...
காலையில் ராணுவ வண்டிகளில் வீரர்கள் விதவிதமான ஆயுதங்களுடன் வந்திறங்குவதைப் பார்த்தான்...சில மோப்ப நாய்களும் அழைத்து வரப்பட்டிருந்தன...
இவனுக்குப் பசிக்கத் தொடங்கியது...
அரச மர வழி வெளியேறி அவனின் வாடிக்கை டிபன் கடை வரை நடந்தே சென்று கொண்டிருந்தான்...
இப்போதுதான் ராம்பாபுவின் வங்கிக் கணக்கை கண்டுபிடித்திருந்தார்கள்...அதில் மினிமம் பேலன்ஸே இல்லை என்ற செய்தியும் கடந்த சில வருடங்களாக பண பரிவர்த்தனைகள் இல்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட எல்லா டிவி சேனல்களிலும் ராம்பாபுவைப் பற்றிய விவாதம்...
மனிதனால் சட்டென மறைந்துவிட இயலுமா எனும் தலைப்பில் ஒரு ஆன்மீக பேச்சாளர் வேதங்களிலும் உபனிஷதங்களிலும் மேற் கோள் காட்டி சேனல் ஒன்றில் உறையாடிக்கொண்டிருந்தார்..
டிபன் கடைக்காரர் இவனைப் பார்த்ததும்..." டேய் உள்ள வாடா...ஒன்னையத் தாண்டா இந்த ஒலகமே தேடுது...என்னடா பண்ணின" எனக் கேட்க...
"கையில காசு இல்ல...எங்கிட்ட மினிமம் பேலன்ஸும் இல்ல...பத்து ரூவாதான் இருக்கு...அதையும் வண்டி பார்க்கிங்க் காரருக்கு குடுக்கனும்...ரெண்டு இட்லி கொடுங்க..." எனக் கேட்டு வாங்கி அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு கிளம்பினான்...
நல்லவர்களை நாடு தேடும் போது அவர்களுக்கு உதவு பவர்கள் பதட்டமாகிவிடுவது வாடிக்கை தானே...பதட்டமுடன் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே இருந்தவரின் கடைமுன் ஒரு போலீஸ் வாகனம் வந்து நின்றது...
ராம்பாபு இப்போது நடந்து அடுத்த கோவில்கோபுரத்தைத் தேடிப் போய்க்கொண்டிருந்தான்...அவனின் கால்சராயில் உள்ள ப்ளாஸ்டிக் பை இன்னமும் நிரப்படவில்லை...
ராகவபிரியன்
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
புள்ளிவிவரங்களையும் விளம்பரங்களையும் காட்டு
எல்லா உணர்ச்சிகளும்:
Sundaram Reddy, Anbuvalli Thangavelan மற்றும் 1 நபர்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...