பார்வை எனும் சிட்டொன்றை
கூண்டிலிருந்து விடுவிக்கிறேன்...
சுற்றியிருக்கும் எல்லாவற்றின் மேலும்
அமர்ந்து மூக்கு சொறிந்துவிட்டு
பறந்துவிடுகிறதது...
இரு மாணவர்கள் அடித்துக் கொள்கிறார்கள்...
அச் சண்டையில் அமர்ந்து சிறகடிக்கிறது...
ஒருவன் கொல்லப்படுகிறான்...
அப்பிஞ்சு சவத்தின் மீதும் கூசாமல் அலகு தேய்கிறது...
கஞ்சாப் புகையினூடே பறக்கையில்
அதன் சிறகுகள் போதை மீறுகின்றன...
சற்றே காற்றில் தடுமாற்ற நடனமிட்டு
டாஸ்மாக் கடையின் பெயர்பலகையில்
எச்சமிடுகிறது...
ஏழைக் கும்பலொன்று தீச்சட்டியும்
காவடியுமாய் ஊர்ந்து செல்ல
தேக்கப்பட்ட வாகன ஓட்டியின் தலையருகில்
தாழப்பறக்கிறது...
பணக்காரர்கள் அலகுகுத்திக்கொள்வதில்லையெனும்
நிஜத்தின் வான் நோக்கி
தன் பறத்தலை செருகியபடி யோசிக்கிறது...
கும்பாபிஷேகங்களில் கருடனைத் தேடுபவர்களை
சிட்டுக்கள் பொருட்படுத்துவதில்லை...
திருவிழாவில் தொலைந்த குழந்தையைத் தேடும்
தாயென அங்குமிங்கும் அலையும் சிட்டு
கைபேசி கோபுரக் கதிர்களால்
பறத்தல் தொலைத்து
மரணித்துக் கிடக்கிறது....
உறைந்த கைபேசி பெட்டிகளுக்குள்தான்....
சின்னச் சின்ன சிட்டுப் பார்வைகள்
புதைவதற்கோ புதைப்பதற்கோ அல்ல...
ராகவபிரியன்
No comments:
Post a Comment