திருவரங்க மோகனமித திவ்ய மயக்குகள்…3
அனுதினமும் தொடக்கம் கண்டாக வேண்டும்…தொடங்க வேண்டுமெனில் அரங்கனைப் பார்த்தாக வேண்டும்…அரங்கனைப் பார்க்க கோவில் செல்வது தானே வழக்கம்…கோவிலின் முன்பே கண்விழிக்கும் வரம் அரங்கன் தந்திருந்தால் மட்டற்ற மகிழ்வுடன் எந்நாளையும் எக்காரியத்தையும் தொடங்கலாம்….
இதோ நாள் தொடங்கி நீண்ட நேரமாகிவிட்டது….இன்னமும் கோவில் கதவுகள் திறக்கப்படவில்லை…பக்தன் நிற்கிறான்…நடக்கிறான்…அமர்கிறான்…ஆழ்மனதில் அழுகிறான்…அவனின் இயக்கம் தேங்கி நிற்க…நாள் நகர்ந்துகொண்டே இருக்கிறது…
ஒரு முறை அரங்கனிடம் கேட்கிறான்…பக்தர்கள் உன்னைப் பார்க்க எவ்வளவு துன்பங்களை கடக்கிறார்கள்…இவ்வெளிய பக்தனும் கூட உன்னைக் காணவியலாமல் ஏமாந்து திரும்பிய சுற்றுக்கள் நிஜம் தானே..
அரங்கன் சொல்கிறான்…பக்தர்களை நான் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்…என் அர்ச்சையின் முன் ஒரு நொடி பக்தன் முகம் தென்பட்டால் என் அர்ச்சை குளிரும்…அதனால் தான் தரிசனம் தேடி பக்தர்கள் கூட்டம் என்னை குளிர்விக்க கோவில்களில் குவிகிறார்கள்…உனக்கோ என் அர்ச்சை முன்பு விழிக்கும் வரம் தந்திருக்கிறேன்…எதிரே நில்…என் அர்ச்சையின் உக்கிரம் தணிய நின்று கொண்டே இரு…என் கோவில் கதவுகள் திறப்பதும் மூடுவதும் என் பார்வையின் தெய்வீக கதிர்கோடுகளை தடைசெய்வதில்லை…அதைப் பற்றிய கவலை உனக்கெதற்கு…
இவ்வெளிய பக்தன் அனுதினமும் இயன்றவரை அர்ச்சையின் முன் நிற்கிறான்…சில உதயங்களில் விஸ்வரூப அர்ச்சையின் குளிர் தரிசனம் கிடைக்கிறது…சில நேரங்களில் நாளுடன் சேர்ந்து அவனும் ஏமாற்றத்துடன் நகர்ந்தகல நேர்கிறது…
அஸ்வினா புருதஞ்சா நரா ஸவீரயா தியா
திஸ்ஸ்ந்யா வநதாம் கிராஹ்
ருக் வேதத்தின் வார்த்தைகள் சிந்திக்கத் தூண்டுபவை…மானுட மீட்பை தூண்டுபவை…சயவன முனிவரின் பார்வையின் விஸ்தீரணத்தை உள்ளடக்கியவை…கண்ணுக்குத் தெரியாத ஆழ்மன காயங்களில் களிம்பு பூசுபவை…
அரங்கனின் அர்ச்சையின் முன்னே நிற்பதால் காயம் குளிரும்…எதையும் ஆற்றுப்படுத்துதல் சாத்தியப்படும்…அர்ச்சையும் அருட்பார்வை ஒளியை தடையின்றி பாய்ச்சிக்கொண்டே இருக்கும்…
சட் டென கோவில் வீதியில் மனித மரணமொன்று நிகழ்ந்துவிடுகிறது…கோவில் கதவடைத்தல் கட்டாயமென நம்பப்படும் காலச் சூழல்…பக்தன் அரங்கன் முன் நிற்கிறான்…கண்டிப்பாக இன்று அர்ச்சை வடிவ காட்சி கிடைக்காதென்பதை அறிந்தே இருக்கிறான்…சடலம் கிடக்கையில் அரங்கனின் பார்வைப் படலம் சிதைந்து போகுமென்பது சொல்லப்பட்டதா இல்லை உணரப்பட்டதாவென அறியாத பேதை பக்தன் அவன்…
பட்டர் வருகிறார்…விடுவிடுவென கதவுகளின் தாழ்கள் அகற்றப்படுகின்றன…விளக்கேற்றுகிறார்…திரையகல…பக்தனை அர்ச்சையின் அருட்பார்வை கதிர் ஒன்று நேர்க்கோட்டில் சந்திக்கிறது…பக்தனும் அர்ச்சையும் குளிர மெல்லிய தென்றல் நாட்டியம் நிகழ்த்துகிறது…பட்டரிடம் சடலம் கிடப்பது சொல்லப்படுகிறது….
பட்டர் கோபமுறுகிறார்…உடனே நடை சாத்தப்படுகிறது…எவரும் செய்தி தரவில்லையெனும் கோபம்…அறியாமையின் முள் ஒன்று குத்தியதால் கொப்பளித்த குருதியின் உக்கிரம்…வார்த்தைகளில் வெளிவருகிறது…
பெருமாளோட தேவையில்லாமல் வெளையாடறாங்க… எனச் சொல்லியபடியே…வெளியேறுகிறார்…பக்தன் திருவரங்க திவ்ய மோனமித மயக்கின் அதிசய காட்சியை நம்பவியலாமல் திகைத்துப் போகிறான்…
ஓயாது கொட்டும் பெருமழை…நதியின் மறுபக்கம் விட்டலனின் கோவில்…ஆர்ப்பரித்து ஆங்காரமாய் ஓடிக் கொண்டிருக்கிறது அகண்ட பெருநதி..கடத்தற்கரிய அந்த நதியின் மேல் அன்றே ஆமை வடிவ பாலம் காட்டி சாந்தோபா பக்தனையும் விட்டல பக்த கூட்டத்தையும் தரிசனத்திற்கு அழைத்து காட்சி தந்த பாண்டு ரங்கன் புன்னகைக்கிறான்…
ஞானசம்பந்தக் குழந்தையின் பாடலுக்கு வேதாரண்யக் கோவில் கதவுகள் திறந்ததை வானில் காட்டித் தருகிறான்… திகைப்படங்கா பக்தன் வானையே பார்த்துக் கொண்டிருக்க…அரங்கன் ஆதிசேடன் மேல் சயனித்த காட்சி மேகமொன்றை கட்டமைக்கிறான்…பக்தன் ஓடோடிச் சென்று கைபேசியை எடுத்துவர… அதற்குள் பாதி தரிசனத்தை கலைத்துவிடுகிறான்…பாத தரிசனம் தந்தவன் பாதியாவது படம்பிடிக்க விட்டு வைத்த திவ்ய மயக்குகள் மோகனச் சுவை மிகுந்த காட்சியடுக்குகள்…தெய்வீக நிஜத்தின் இருத்தலிய நிஜங்கள்…
பெண்ணுலாம் சடையனும் பிரம்மனும் உன்னைக் காண்பான்…
எண்ணிலா ஊழி ஊழி தவம் செய்தோர் வெள்கி நிற்ப
விண்ணுளார் வியப்ப வந்து….
அரிதினும் அரிய காட்சி தருபவனை
கதவடைத்தலால்…அதற்கான அதிகார கிடைத்தலால்…மறைத்துவிட நினைப்பவர்கள் தலைதாழ்ந்தே தீரவேண்டுமென்பதை உணர்த்துகிறான்…
மாணிக்கக் கிண்கிணி ஆர்ப்ப மருங்கின் மேல்
ஆணிப் பொன்னால் செய்த ஆய்பொன் உடை மணி
பேணிப் பவளவாய் முத்து இலங்க பண்டு
காணி கொண்ட கைகளால் சப்பாணி
கருங்குழல் குட்டனே சப்பாணி…
[பெரியாழ்வார்]
மதிப்பிடவியலா சொக்கத்தங்கத்தால் செய்த கோவையையும் சதங்கையையும் ஒலிக்கச் செய்து மானுட அறியாமையை எண்ணி நகைத்தபடி நிற்கும் மாபலியின் தலையில் கால்வைத்த அரங்கனின் கைத்தட்டல் எனும் சப்பாணிச் சப்தம் கேட்டு மெய் மறந்து போகிறார் பெரியாழ்வார்…பக்தனோ அரங்கனின் மோகனமித திவ்ய மயக்கத்தில் கட்டுண்டு கிடக்கிறான்…சப்பாணிச் சப்தத்தின் நீட்சியின் சங்க நாதம் இதோ இப்போதும் கேட்டுக் கொண்டே இருப்பதை நீங்களும் செவிமடுத்தல் இயலும்…
திருவரங்கன் திருவடிகளே சரணம்…
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்…
ராகவபிரியன்
No comments:
Post a Comment