பள்ளிச் சதங்கைகள்..
சிறு கதை…
எவராலும் அணுக முடியாத மலையுச்சியின் ஆபத்தான மறைவிடத்திற்கு சதாம் ஹுசைனும் யாமினியும் வந்தார்கள்…
“இப்ப என்னதான் ஒன்னோட கண்டிஷன்…சொல்லு…”எனக் காட்டமாகவே கேட்டான் சதாம்..
மலையேறியதில் மூச்சு வாங்கினாலும் அவனின் பேச்சில் வீச்சமெதுவுமில்லை…
“அதான் நாம சந்திச்ச மொத நாள்ளேர்ந்து இதோ இப்ப வரைக்கும் சொல்லிண்டிருக்கேனே…பள்ளி வாசல்ல என்னோட பரத நாட்டியத்தை அரங்கேற்றனும்…அரங்கேற்றம் முடிஞ்ச அடுத்த நொடி நீ என்னோட கழுத்துல தாலி கட்டிடலாம்…” யாமினி சதாமை விட வேகமாகவே மலையேறியிருந்தாலும் அவளுக்கு மூச்சு வாங்கவில்லை…ஆனால் பேச்சின் வீச்சு கொஞ்சமும் குறையவில்லை…
“தாலி கட்டற வழக்கமெல்லாம் எங்க மதத்துல கெடையாது…யாமி…புரிஞ்சுக்கோ…வேணும்னா மொதல்ல ஒங்க கோவிலுக்குப் போவோம்…அங்க ஒனக்கு தாலி கட்டறேன்…எங்க மத வழக்கப்படி கருகமணி மாலையில பிறை வச்ச டாலர் தான் தங்க கம்பியில கட்டி போட்ருப்பாங்க…எல்லா கல்யாணமான லேடீஸும் போட்ருப்பாங்களா தெரியாது…அது ஒரு பிரச்சனையில்ல யாமினி…பள்ளி வாசல்ல மட்டுமில்ல…ஒரு முஸ்லீம் தெருவுல கூட மேடை போட்டு பரத நாட்டியம் அரங்கேற்றம் பண்ண முடியாது…புரிஞ்சுக்கோ…
சொல்லிக்கொண்டே சதாம் பிய்த்தெறிந்த செடியொன்றின் இலைகள் காற்றால் தூக்கப்பட்டு மலையுச்சிவரை வேகமாக உயர்ந்து பின் ஆடி அசைந்தபடி மெல்ல பள்ளத்தாக்கு நோக்கி இறங்கிக் கொண்டிருந்தன…ஒவ்வொரு இலையும் யாமினியின் நிறைவேற்றவியலாத நிபந்தனையை சுமக்கவியலாமல் பள்ளத்தாக்கில் கொட்டிவிட்டு மறைந்து கொண்டிருப்பதையும் பார்த்துக் கொண்டேயிருந்தான்…
“நாம இந்தியாவுல அதுவும் தமிழ் நாட்டுலதானே இருக்கோம்…பாக்கிஸ்தான் பள்ளி வாசல்லயா பரத நாட்டியம் ஆடப்போறேன்…நீ என்ன பேசறேன்னே புரியலடா சதாம்…ஒன்னு செய்வோம்… ஒரு அஞ்சு நிமிஷம் டைம் குடு…பரத நாட்டிய அடவும் முத்திரையும் இங்க ஒன் முன்னாடி கடைசீயா பண்ணிட்டு இங்கேருந்து குதிச்சுடறேன்…அதுக்கப்பறம் நீ லவ் ஜிஹாத்ன்னு சொல்றாங்களே…அதுமாதிரி வேற ஒரு அய்யர் பொண்ணையோ இல்ல பாவப்பட்ட எந்த ஜென்மத்தையாவது கல்யாணம் பண்ணிண்டு முஸ்லீமாவே இரு….என்னை இப்புடி ஏமாத்துவேன்னு தெரிஞ்சிருந்தா…ஒன்ன லவ் பண்ணியிருக்கவே மாட்டேனே…என ஓங்கிக் குரலெடுத்து அழுதபடியே தனது கைப்பையில் எடுத்து வந்திருந்த சலங்கைகளை கால்களில் கட்டத் தொடங்கினாள்…யாமினி…
கலாச்சாரங்களின் எல்லைகள் சிக்கலானவை…ஒரு கலாச்சார எல்லையின் முடிவில் இன்னொன்று தொடங்குவதில்லை… மாறாக இருவேறு கலாச்சாரங்களின் எல்லைகள் தண்டவாளங்களைப் போல சீரான இணைந்த இடைவெளியில் நீண்டு நில்லாமல் போய்க்கொண்டே இருக்கின்றன…ஒரு ஆச்சாரம் மிகுந்த பாராம்பரிய மிக்க ப்ராமண பரத நாட்டிய கலைக்குடும்பத்துப் பெண்ணின் ஒவ்வொரு அணுவிலும் பரத நாட்டியம் ஆடப்பட்டுக்கொண்டே இருக்கிறதென்பதை எப்படி சதாமிற்கு புரியவைப்பதென யாமினிக்கு புரியவில்லை…
ஏற்கனவே தங்கள் குடும்பத்திலும் ஜமாத்திலும் யாமினியைத் திருமணம் செய்து கொள்ள சம்மதம் வாங்கியிருந்தான் சதாம் ஹுசைன்…அவள் பரத நாட்டிய அரங்கேற்றம் பள்ளி வாசலில் செய்த பின் தான் திருமணம் எனும் நிபந்தனையை மட்டும் நாசுக்காக மறைத்துவிட்டிருந்தான்…
ஒரு நாள் அவனது ஆப்த நண்பன் ஒருவன்…”அப்படிப்பட்ட பொண்ணு வேண்டாம்டா…பெரிய சிக்கலாயிடும்…வேற பொண்ண கல்யாணம் பண்ணிக்க…நான் வேணா வாப்பாவண்ட பேசட்டுமா…” எனச் சொன்ன நிமிடங்களில் யாமினியின் காட்டாற்று வெள்ளமென சீறிப் பாயும் அழகு அவனை எந்தச் சிந்தனைப்பாறையையும் பற்றிக்கொள்ள முடியாமல் அதிவேகத்தில் இழுத்துக் கொண்டு போவதை உணர்ந்திருக்கிறான்…
ஒரு நாள்…சதாமிற்கு துணிச்சல் வந்துவிட்டது….யாமினியின் அழகு அவனுக்கு மட்டுமே சொந்தமாக வேண்டுமென்றால் பள்ளிவாசலில் அவள் பரத நாட்டியம் ஆட அனுமதி பெற்றே ஆக வேண்டுமென தீர்மானித்தான்…மெவ்லாவைச் சந்தித்தான்…அவனின் நிலைமையை எடுத்துச் சொன்னான்…அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த மெவ்லா…
“ தம்பி சதாம்…ஸூரா அன் 162 ல நபிகள் நாயகம் சொல்றாரு…எவன் நமது இறைவனைச் சந்திக்க நல்லமல்கள் செய்யறானோ அவன் வேறு எவரையும் இணையாக்காது இருக்கட்டும்னு … புரியுதா…பெரிய கலவரமாயிடும்ப்பா…ஏற்கனவே என்ஐஏ வேற நம்ம ஆளுங்கள வேவு பாத்துக்கிட்டிருக்கறாங்க…நாம இப்ப நிம்மதியா இந்தியாவுல வாழறோம்னு சொல்ல முடியாது….பயந்துதான் வாழ்ந்துக்கிட்டிருக்கறோம்….நம்ம ஆளுங்களுலயே சில சாத்தான்கள்…இருக்காங்க…பாருங்க…அவங்களால தான் நாம பாபர் மசூதிய இழந்துட்டோம்…” சொல்லிக்கொண்டே சுற்று முற்றும் பார்க்கத் தொடங்கினார்…மெவ்லா…
சதாம் ஹூசைனுக்கு மெவ்லா சொல்லுவதெல்லாம் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை…நிஜம்மாகவே நமது மசூதியை யாராவது இடிக்க வந்தால் அல்பீல் பறவைகள் வந்து காப்பாற்றும்னும் தான் நபி சொல்லியிருக்காரு….வரல்லையே…என நினைத்தவன் அதை மெவ்லாவிடம் சொல்லவில்லை…
“ என்ன பிரச்சனை வரப்போவுது மெவ்லா… ஏன் என்னென்னமோ சொல்லி என்னைய பயப்படுத்தறிக…ஒரு அஞ்சு நிமிஷம் பரத நாட்டியம் ஆடினா என்ன…குர்ஆன் ல ஆடக்கூடாதுன்னு சொல்லலேன்னு நெனைக்கேன்…” என இழுத்தபடி பேச… திடீரென எங்கிருந்தோ சிலர் சதாமை சுற்றிக் கொண்டு முறைக்கத் தொடங்கினார்கள்…
விருட்டென வெளியில் வந்து இருசக்கர வாகனத்தைக் கிளப்பி சிறிது தூரம் செல்வதற்குள்…அவன் வழி மறிக்கப்பட்டான்…” ஏண்டா…மார்கத்துரோகி என யாரோ கத்துவது தான் காதில் விழுந்தது…கண்விழித்துப் பார்த்தபோது ஆஸ்பத்திரியில் இருந்தான்…அவன் அருகில் அவனின் அம்மா ஹிஜாப்புக்குள் முகம் மறைத்து அழுது கொண்டிருந்தாள்…
“பள்ளிவாசலில் கலீகி நடனம் கூட அனுமதிக்கமாட்டார்கள் யாமினி…என ஒரு முறை அவளிடம் சொன்ன வார்த்தைகள் நினைவிற்கு வந்தன…அம்மாவின் கையைப் பற்றிக் கொண்டான்…
எல்லா மார்கங்களிலும் அம்மாவின் கையைப் பற்றிக் கொண்டால் கிடைக்கும் நம்பிக்கையை இறை நம்பிக்கைகூட தருவதில்லை என நினைத்தான்…
உடலெல்லாம் வலி அதிகரித்துக் கொண்டே இருந்தது…யாமினியை இவர்கள் ஒன்றும் செய்துவிடாதிருக்கவேண்டுமே என நினைத்தவன் அவளை எச்சரிக்கை செய்ய வேண்டுமெனவும் முடிவு செய்து கொண்டான்….இப்போது அம்மாவின் விரல்கள் இவனின் தலையைக் கோதிக்கொண்டிருந்தன…
மெல்ல எழுந்து அமர்ந்தவன்…”ஏம்மா பள்ளி வாசல்ல மியூசிக் இல்ல டான்ஸ் ப்ரொக்ராமெல்லாம் வைக்கறதில்ல…என அப்பாவியாய்க் கேட்டான்…”
அம்மாவின் விசும்பல்கள் நிற்கவே இல்லை....”மார்கத்துல ஹராம் செய்யப்பட்ட எதையும் செய்ய வேண்டாண்டா…வாப்பா ஒப்புத்துக்க மாட்டார்டா…”என உடைந்த வார்த்தைகளில் சொல்லிவிட்டு திரும்பிக்கொண்டாள்…
“ஷேக் சின்னமெளலானா ஜாஹீர் ஹுசைன் போன்றவர்கள் பள்ளி வாசல்களில் வாசிச்சதே இல்லையா…” என சன்னமான குரலில் கேட்டான்…
அம்மா எழுந்து ஜன்னலோரம் சென்று நின்றுவிட்டாள்…
உடல் நிலை தேறி யாமினியை மீண்டும் சந்தித்த நாள் அன்றுதான் நடந்தவைகளைச் சொல்லி அவளை ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமெனச் சொல்லியவன்…சில நாட்களுக்குப் பின் இதோ இப்போது தான் இந்த ரகசிய மலையுச்சி வாடிக்கை சந்திப்பிடத்திற்கு வந்திருக்கிறான்…
தனது இரண்டு கால்களிலும் சதங்கைகளை கட்டி முடித்துவிட்டு தனது கைபேசியில் நட்டுவாங்க இசையை உசுப்பினாள்…யாமினி
தா தை என அபினயம் பிடிக்கத் தொடங்கியதும் சதாமிற்கு பைத்தியம் பிடிக்கத் தொடங்கியது…கண்டிப்பாக குதித்துவிடப்போகிறாள் என நினைத்தவன் சட்டென தரையில் படுத்து அவளின் கால்களை இறுகப் பற்றிக் கொண்டான்…
ஆனால்… சதங்கைகளின் உயிர்சப்தத்தை சதாம் ஹுசைனால் நிறுத்தவே இயலவில்லை…
ராகவபிரியன்
No comments:
Post a Comment