திருவரங்க மோகனமித திவ்ய மயக்குகள்…4
அரங்கனின் மொழி அர்த்தங்கள் நிறைந்தவை…ஒரு சொல் ஆழ்கடலின் ஆழம் தொடும் அடர்வு கொண்டது…அரங்கனுடன் உரையாடுதல் என்பது அரங்கனின் சொற்களை உள்வாங்குதல் மட்டுமே…அவனின் மொழியில் பதிலுரைத்தல் என்பது மானுட சக்திக்கும் அப்பாற்பட்டது…அரங்கனுடன் முனிபுங்கவர்கள் தவசீலர்கள் பக்திமான்கள் உரையாடியிருப்பதை மானுடம் உணர்ந்தே இருக்கிறது….
இவ்வெளிய பக்தன் கடந்த சில இரவுகளில் அரங்கனின் தெய்வீகச் சொற்களை செவிமடுக்க நேர்கிறது…ஒவ்வொரு சொல்லும் கடல்பரப்பில் விழுந்து அர்த்தம் நோக்கி நீந்தத் தொடங்கும்…அச்சொற்கள் செவி வழி மனத்தரை அடையுமுன்பே அர்த்தக் கடலின் வேக ஓட்டம் சொற்சில்லை எங்கோ இழுத்துச் சென்று கரைத்துவிடும்…எஞ்சிய ஒன்றோ இல்லை இரண்டோ சொற்களுக்கும் அர்த்தம் தேடித்தான் இவ்வெளியவன் அரங்கன் முன் நின்று கொண்டிருக்கிறான்…
எதிரே திருவரங்க மோகனமித திவ்ய ரூபம் காட்டிடும் துத்தை மரத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறான்…பார்வையும் நாளும் சாயத் தொடங்க ஆதவக் கிரணவழி துத்தை மரமிடை நரசிம்ம முகம் காட்டுகிறான் அரங்கன்…உடல்மொழி நடைமொழி பாவனைமொழி முகமாற்றுமொழி என எத்தனையோ எழுத்துருக்களற்ற மொழிகளை வாசித்தறிதல் சுலபம்…ஆனால் அரங்க தெய்வம் துத்தை மர வழி காட்டிய முகமொழி புரிபடவே இல்லை…
மதுரகவி தன் ஆச்சாரியரிடம் கேட்கிறார்…எத்தைத் தின்று எங்கே கிடக்குமென…ஆச்சாரியர் அத்தைத் தின்று அங்கே கிடக்குமெனும் மறுமொழியின் அர்த்தக் கடலை ஆய்ந்தறிந்தவர் இன்றுவரை எவருமில்லையல்லவா…பிறகெப்படி துத்தைமர முகமொழியைப் புரிந்து கொள்வது…பக்தன் இரவெல்லாம் அரங்கனிடம் மொழிக்கான தெய்வீகஅகராதிப் பொருளை பவ்யமாய் யாசித்தபடி இருக்கிறான்…அரங்கன் அடுத்த நாள் குணசீலம் வரக் கட்டளையிடுகிறான்…
குணசீலத்தில் பெருமாளுக்கான தாமரை மலர் ஒன்றைச் செலுத்த பட்டர் அதை பெருமாளின் திருவடியில் சமர்ப்பிக்கிறார்…இவ்வெளியவனின் கேள்வியும் அரங்க மொழியின் புரியாமையும் தாமரையில் வைத்து குணசீலரில் திருவடியில் கிடத்தப்படுகின்றன…ஆராதனம் நிறைவுபெறுகிறது…கோவிலைச் சுற்றி வருகிறான்…நரசிம்மரையும் அவர் தாங்கி நிற்கும் விமானத்தையும் படம் பிடித்துக் கொள்கிறான்…கடல் காணுமளவு ஆழம் வரை தெளிந்திருக்கிறது…அர்த்தத்தின் அடித்தளம் கண்ணில் படவேவில்லை….கொடிமரம் முன்பு விழுந்து வணங்குகிறான்…
பாதங்கள் ஆச்சாரியர் விகனஸரின் சந்நிதி நோக்கி கிடத்தப்பட திடுக்குறுகிறான்…பின்பு சமாளித்து திசைமாற்றி நமஸ்கரித்து எழுந்து ஆச்சாரியர் விகனஸர் முன்பு மன்னிப்புக் கோரியபடி வணங்குகிறான்…விகனஸரின் உருவத்தை உற்று நோக்குகிறான்…ஆச்சாரியர் நிகம்மாந்த மஹாதேசிகர் உள்ளே சேவை சாதிக்கிறார்…திருவரங்க மோகனமித திவ்ய மயக்கின் மேகங்கள் ஒன்றுகூடி ஒளிரத்தொடங்குகின்றன…
அவர்முன் அத்தகிரி எழுகிறது…அத்தகிரி ஆலயம் தான் பெருமாள் கோவிலென அழைக்கப்பட்ட ஆதி ஆலயம் என்பது சட் டென பொட்டில் தட்டுகிறது…அரங்கனின் சொல்சில்லொன்று எதிர்த்து நீந்தி கண்முன்னே மிதந்து வருகிறது….
ஆசாதி பேஷு கிரிசேஷு சதுர்முகேஷ்வபி
அவ்யாஹதா விதி நிஷேத மயி தவாஜ்ஞா
ஹஸ்தீச நித்ய மநுபாலந லங்கநாப்யாம்
பும்ஸாம் சுபாசுப மயாநி பலாநி ஸூதே…
[ஸ்ரீ வரத ராஜ பஞ்சாசத்]
அத்தகிரி வரதனே இந்திரன் எமன் எனச் சொல்லப்படும் திக்பாலகர்கள் எட்டுபேர்…சிவம் பதினொன்று…இன்னும் நிறைய நான்முகத் தேவர்கள்… என ஒவ்வொரு உலகத்திலும் உள்ளனர்…அண்டசராசரங்களில் அரங்கனின் மொழிக் குறிப்பறிந்து சேவை சாதிக்கின்றனர்…அரங்கனின் சொல் அண்டசராசர இயக்கத்தின் சாசனம்…அரங்க கட்டளையை மீறினால் தண்டனை நிச்சயம்…அரங்கனின் மொழியை சொல்லின் பொருளாழத்தை மானுடர்களால் அறிந்து கொள்ளுதல் என்பது மேலதிக கடினமானது மட்டுமல்ல…இயலவே இயலாததெனின் அதுதான் நிஜம்…
சில சாஸ்திர விதிமுறைகளைக் கொண்டே அரங்க மொழியை ஓரளவு அறிதல் சாத்தியம்..அரங்கனின் சொல்லை மீறி நடக்கையில் விளைவுகள் கடுமை காட்டத் தவறியதில்லை…தெய்வ தண்டனையிலிருந்து தப்பித்தல் என்பது பிறகெப்போதும் முடியாதது…அரங்கனின் கோவில் காரியங்களில் சமரசம் செய்தால் அரங்கனின் கட்டளையை மீறியதாகவே கொள்ளப்படும்….கண்டிப்பாக தெய்வ ஆகம சாஸ்த்திர விதிமீறல்களுக்கான தண்டனையை அனுபவித்தே ஆகவேண்டும்… வாழ் நாளிலேயே விதிமீறிய மானுடங்கள் நரகத்தை அனுபவிப்பதை மனிதக் கண்கள் நித்ய காட்சியாய் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றன…
சூரியோதயத்திற்கு முன் கோவில் நடை திறக்கப்பட்டாக வேண்டும்…ஒருக்கால பூஜையோ ஆறுகால பூஜையோ அரங்கனின் அர்ச்சையைக் குளிர்விக்கும் பக்தர்களுக்கான தரிசன நேரம் நண்பகல் வரை இருத்தல் அவசியம்…மீண்டும் மாலை அஸ்தமனத்திற்கு முன் நடை திறக்கப்பட்டு அர்த்த ஜாமம் வரை தரிசன உபயம் தரப்படவேண்டும்…இது உலகெங்கிலுமுள்ள பெருமாள் கோவிலென அழைக்கப்படும் கோவில்களில் பின்பற்றப்பட வேண்டுமென்பது அரங்கனின் ஆகம மொழிச் சொல்…இவ்வெளியவனுக்கு அதன் சாத்தியக் கூறுகள் புரிபடவில்லை…கோவிலின் நித்ய ஆராதனங்களுக்கான திரவிய பொருள் வரவுகளுக்கான ஆதாரங்கள் அரங்கன் ஏற்கனவே தந்திருக்கிறான்…
இவ்வெளியவனை அரங்கன் கடலின் பரப்பில் அழுத்துவது புரிகிறது…உயிர்க்காற்றின்றி கடலின் தரைதொட்டு எழுந்த அயர்வு இவ்வெளியவனை அழுத்தத் தொடங்குகிறது…அரங்கனின் சொல்லின் அடர்வும் ஆழமும் புரியாவிடினும்…எதுவோ ஒன்று விளங்கியது போன்ற தெளிவு பிறக்கிறது…திருவரங்க மோகனமித திவ்ய மயக்கின் சலன கடல் நீரில் நீந்திக்கொண்டிருக்கும் உடலும் இதயமும் கனக்கத் தொடங்கியதை உணர்ந்து கொள்கிறான்…
அடைந்திட்டு அமரர்கள் ஆழ்கடல் தன்னை
மிடைந்திட்டு மந்தரம் மத்தாக நாட்டி
வடம் சுற்றி வாசுகி வன்கயிறாக
கடைந்திட்ட கைகளால் சப்பாணி
கார்முகில் வண்ணனே சப்பாணி
துர்வாசமுனிவரின் சாபம் தேவர்களின் செல்வ இழப்பிற்கான காரணம்…அனைத்து மரணம் வென்ற தேவர்களும் அரங்கனிடம் மண்டியிடுகின்றனர்…அரங்கன் மந்தார மலையை வாசுகி கயிறால் கட்டி கடைகிறான்…கடல் கடைந்தால் செல்வங்கள் கண்டிப்பாக சேர்ந்தே தீரும்…
பாற்கடல் கடைந்த சின்னஞ்சிறு கைகளால் சப்பாணி கொட்டு…அரங்கா… ரசிக்கிறேன்…என்று சொன்ன பெரியாழ்வாரின் பாடல் வரிகளை முணுமுணுத்தபடி முக்கொம்பு பாலத்தில் வந்து கொண்டிருக்கிறான்….அரங்கனின் சப்பாணி கொட்டும் கைத்தட்டல் ஓசை காவிரியலைகளின் கடைசல் சப்தங்களென ஒலித்துக் கொண்டே இருக்கிறது….அரங்கனின் கோவில் சப்தம் சில காதுகளில் குடைச்சல் தரவும் நேரலாம்…என்ன செய்வது… திருவரங்க மோகனமித திவ்ய மயக்குகளின் அடர்விற்குள் புகுந்து வெளிவருதல் மானுட சக்திக்கான சவால் தானே…சொல்லுங்கள்…
திருவரங்கன் திருவடிகளே சரணம்…
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்…
ராகவபிரியன்


No comments:
Post a Comment