யக் ஞோபவீதம் பரமம் பவித்ரம்…
சிறுகதை
இரு சக்கரவாகனத்தை நிறுத்த இடமில்லை…காவிரியின் துறைக்கான நுழைவு மண்டபமெங்கும் குப்பைக் கூளங்களின் குவிப்பும் அது தந்த ஒருவித துர் நாற்றமும் நுழைவையும் நுகர்வையும் தடுக்கும்…உடலெல்லாம் வியர்வையுடன் விபூதிப் பட்டைகள் உடம்புடன் பலர் ஆங்காங்கே அமர்ந்திருக்கிறார்கள்..அவர்கள் முன்னால் சிறு சிறு கூட்டம் அமைதியாய் நேர்த்தியாய் சந்திரனைச் சுற்றிய நட்சத்திரங்களைப் போல வெற்றுடம்புடன் ஒளிர்வுகளை உதிர்க்கும்… ஒரு நொடி கண்கள் இமையை மூடித் திறக்கும்…
இங்க வாங்கோ என ஒரு வாத்யார் வாஞ்சையுடன் அழைக்கிறார்…அவர் முன் இருப்பவர்கள் சட்டையைச் சுழற்றி அருகில் வைத்திருக்கிறார்கள்…கூடையோ மஞ்சள் பையோ தேங்காய் வாழைப்பழம் வெற்றிலைப் பாக்குடன் மடங்கி காலோரம் பதுங்கிக் கிடக்கும்…எதிரே தாம்பாளம் பித்தளை எவர்சில்வர் ஏன் பாக்குமட்டைத் தாம்பாளம் கூட ஆனால் கோள்களைப் போன்ற வட்ட வடிவில் தான் கிடத்தப்பட்டிருக்கும்…அதன் மேல் பஞ்சபாத்திர உத்தரணி பித்தளை வெண்கலம் நன்றாக பளிச் சென்றும் பாசிபிடித்தும் விதவிதமான வண்ணங்களில் இளித்து நிற்கும்…ஒரு சிலர் முன்னால் வெள்ளி பஞ்சபாத்திர உத்தரணி பளிச் சென ஒளிர…அவர்கள் தான் வாத்யாரின் முன் வரிசையில் காதில் எந்நேரமும் கைபேசியை அணிந்தபடி மந்திர உச்சாடணம் செய்து கொண்டிருப்பார்கள்…
இதையெல்லாம் கவனித்தபின் வண்டியை நிறுத்தி வைக்காமல் வேறு துறைக்குச் செல்லலாமா எனும் யோசனை வரும்…யோசனைகள் எண்ணங்கள் மேக வடிவமுடன் சட் சட் சட் என கொதிக்கும் இதய வெளியில் தூறிவிட்டு ஓய்ந்து விடும்….பின் உஷ்ணம் உடலெங்கும் பரவி வண்டியை கிளப்பச் சொல்லும்…
சிறுவயதில் கிராம காவிரிக் கரைக்கு அப்பாவுடன் போனது வண்டியின் உறுமலாய் கூடவே வரும்…பூணூல் திருமணத்தன்று அணிவிக்கப்பட்ட தங்கப் பூணூல் வெள்ளிப் பூணூல் விற்கப்பட்ட வறுமையின் நாட்கள் ஒலிப்பானிலிருந்து எதிர்பாராமல் சப்தமெழுப்பும்…சாலையின் கூட்டமும் நினைவின் தடுப்புகளும் ஒலிப்பானுக்கு தாமதமாகத்தான் வழிவிடுவது பிரமிப்பாய் இருக்கும்…பூணூல் போட்ட அடுத்த ஆவணி அவிட்டத்தில் சமிதாதானம் பிரம்மச்சாரிகள் மாத்திரம் செய்யவேண்டுமென்பது சொல்லப்பட்ட நினைவின் வண்டியொன்றை ஒரு சிறுவன் அதிவேகத்தில் இடது புறம் ஓட்டி தடுமாறச் செய்வான்…பிரம்மச்சாரி என்ற சொல்லாடல் முழுதுமாக விளங்காத எரி நட்சத்திரம் ஒன்று ஒளி உமிழ்ந்துவிட்டு மறைந்த பொழுது நினைவில் வரும்… அடுத்த துறையும் வந்துவிடும்…
அது கன்னட நிலத்தின் துங்கபத்ரா நதியின் துறை…நடு நடுவே பாறைகள் துருத்திக்கொண்டிருக்க….சில்லென்ற காற்று கைகுலுக்கி வரவேற்கும்…யாருமற்ற அந்நதியின் சாட்சியுடன் ஒரு சில தமிழ்பேசுவோர் ஒருவருக்கொருவர் பூணூல் அணிவித்த காட்சியுடன் நதி அவ்வளவு வேகத்தில் சென்று கொண்டிருக்கும்…இப்போது நதிக்கரைகளில் பூணூல் போட்டுக்கொள்ள வரும் ஆவணி அவிட்டக் கூட்டம் பூணூல் போலவே சுருங்கி சுருண்டு மறைந்து போவது வேதனை தரும்..
என்ன பஞ்சபாத்திரம் தாம்பாளமெல்லாம் இல்லையா பரவாயில்லை எனச் சொல்லி அமரச் சொல்லும் காட்சிகள் நவீன கலாச்சார தடுமாற்றத்தை கால்களில் தருவிக்கும்…மாத்யானிஹம் முடித்து குளித்து பட்டு வஸ்திர பஞ்சகச்சம் கட்டி “யக் ஞோபவீதம் பரமம் பவித்ரம்…” என்ற மந்திரத்துடன் பூணூல் அணிவித்துக் கொண்டு கர்வத்தை மான்தோல் பிசிறென முடிந்த நாட்கள் காவிரிப் படிகளில் கரையென ஒட்டிக் கொண்டிருக்கும்…இப்போது பூணூல் அணிந்து கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்து கேலியாய் சிரித்து வைக்கும் காட்சியின் நெகிழிப் போத்தல் ஒன்றை மேல்படியிலிருந்து யாரோ காலால் தட்டிவிட உருண்டு உருண்டு தண்ணீரைத் தொடும்…அதன் மேல் ஒட்டியபடி பிரிக்காத பவித்திர விசர்ஜனங்கள் உச்சிவெயிலாய் காயத்தொடங்கும்…
ஒருவழியாய் பூணூல் அணிந்து கொண்டு வாசலில் வண்டியை நிறுத்த வேண்டும்…அபூர்வமாய் சுடிதாரிலிருந்து மடிசார் கட்டியபடி மனைவி வாசலுக்கு வந்து ஆரத்தி எடுத்து கோலத்தில் கொட்டும் போது கோடி தவில்கள் நாயணத்துடன் கலந்த அற்புத மங்கள இசை கேட்கும்…
அந்த இசையுடன் எப்படியாவது தங்கப் பூணூல் அடுத்த ஆவணி அவிட்டத்திற்குள் வாங்கி அணிந்து கொண்டுவிடவேண்டுமெனும் உறுதி மந்திரமாய் மனதிற்குள் எழுந்து பின் படுத்துக் கொள்ளும்…வாத்யார்…நாளைக்கு மறக்காம காயத்ரி நூத்தியெட்டாவது எல்லாரும் பண்ணனும் என்று சொல்லியதை காதில் வாங்கிய வண்டி இறுமாப்புடன் கிளம்பும்…
வீட்டின் வாசலில் கோலம் இருக்கும்…ஆரத்தித் தட்டும் சிவப்பு நீர் தளும்பளுடன் ஒளியுமிழிந்தபடி ததும்பிக்கொண்டிருக்கும்…வண்டி நின்ற ஓசையுடன் மனைவி வெளியில் வருவாள்…அவளின் அழுக்குச் சுடிதார் வண்டியை நிறுத்தவிடாமல் செய்யும்...
வண்டியுடன் சேர்த்தே ஆரத்தியும் ஆவணியும் மடிசார் எதிர்பார்ப்பும் அவனைச் சுற்றி சுற்றி வரத் தொடங்கும்…
உபவீதம் பின்னதந்தும் எனச் சொல்லி பழைய பூணூலுடன் நினைவுகளை காவிரிக் கரையில் விட்டுவிட வேண்டும்...அதற்குள் அடுத்த ஆவணி அவிட்டமும் வந்துவிடும்...
No comments:
Post a Comment