Sunday, June 18, 2023

 பின் நவீன பிற்போக்கு சிறப்புச் சிறுகதைகள்…

4…பரிணாமம்
ராம்பாபு மனைவியுடன் புத்தம் புதிய கேஸ் ஸ்டவ் வாங்கத்தான் மங்கள் அண்ட் மங்கள் வந்திருக்கிறான்…எம் அண்ட் எம் திருச்சியில் மிகப்பெரிய ஷோரூம்…அதில் கிடைக்காத பொருள்களே இல்லை…அறுபதைக் கடந்து முப்பத்தைந்தாண்டு மணவாழ்வை கண்ட ராம்பாபுவிற்கு புதிய கேஸ் அடுப்பு வாங்க மனமில்லை…பழைய முப்பத்து நான்கு ஆண்டுகளாய் உபயோகத்தில் இருக்கும் அடுப்பை மாற்றிக் கொள்ளவும் மனமில்லை…மனைவியின் பிடிவாதத்தால் தான் இதோ வந்திருக்கிறான்…பழைய அடுப்பு புழுதி படிந்து பரணில் கிடத்தப்படுவதை அவனால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை…
விதவிதமான இரண்டு பர்ணர் மூன்று நான்கு பர்ணர்கள் என வித்தியாசமான டிசைன்களில் அடுப்புகளை விற்பனைப் பெண் அழகான தமிழாங்கிலத்தில் விவரிக்க விவரிக்க மனைவியின் கண்கள் அவ்வளவு பெரிதாக ஆர்வம் காட்டின…இது போன்ற ஆர்வத்தை அவன் மனைவியின் கண்களில் பார்த்ததே இல்லை…
ஏன் ராம்பாபுவின் அம்மா முதன் முதலில் சுடுமண் அடுப்பொன்றை கிராமத்துச் சந்தையில் ஐம்பதாண்டுகளுக்கு முன் வாங்கும் போது கூட இவ்வளவு ஆர்வத்தைக் காட்டவில்லை…
ராம்பாபுவும் அண்ணனும் ரயில்வே லயண் கரையோர காட்டுக் கருவேல முட்செடிகளை வெட்டி இழுத்து வந்து கொல்லையில் பச்சை நிறம் மஞ்சளாகும் வரை காயப்போட்டுவிடுவார்கள்…தினமும் காலையில் காய்ந்து கிடக்கும் கருவேல முட் குச்சிகளை சாணளவிற்கு வெட்டி சிப்பம் சிப்பமாய் அடுக்குவான் ராம்பாபு…பிறகு அண்ணன் கூப்பிடும் போது அவனுடைய அதிகாரத்திற்கு கட்டுப் பட்டு உடனே முள் வெட்ட புறப்பட்டாக வேண்டும்…இவர்கள் வருவதற்குள் அம்மா மூன்று செங்கல் முக்கோணமாய் வைத்த அடுப்பில் அரிசி குருணை கலந்த கஞ்சியொன்றை காய்ச்சுவார்கள்…முள் குச்சி சிப்பம் பத்து பதினைந்து செல்வாகிவிடும்…அம்மாவின் கையிலெல்லாம் முள்கிழித்த கோடுகளின் ரத்தம் சிவப்பாய் காய்ந்து பொருக்குத் தட்டியிருக்கும்… வீடு முழுவதும் புகை நீண்ட நேரம் தங்கிக் கிடக்கும்…கஞ்சியை வாயருகே கொண்டு செல்லும் போது புகை வாடையடிக்கும்…
பிறகொரு நாள் அம்மா சந்தைக்குக் கிளம்பினாள்…அண்ணனும் கிளம்பியிருக்க டேய் ராம்பாபுவையும் கூட்டிண்டு போலாம்டா…எனச் சொன்ன அம்மாவின் வார்த்தைகள் அவனுக்கு குதூகலத்தைத் தந்தது…ஆனால் அண்ணனுக்குப் பிடிக்கவில்லை…சந்தையில் மண் அடுப்புடன் இணைந்த கொதி உளை அடுப்பொன்றை அம்மா வாங்கினாள்…கஞ்சியுடன் ஒரே சமயத்தில் ரசமும் வைத்துவிடலாம் என்றாள்…முள்குச்சி சிப்பம் ரசத்திற்காக தனியாக எரிக்கத் தேவையில்லை என்றாள்…அப்போது அம்மாவின் கண்களில் கொஞ்சமாய் ஆர்வம் காய்ந்த சிறு குச்சியின் முனையில் எரியும் நெருப்புப் பிழம்பு கதகளி ஆடியதை ராம்பாபுவால் பார்க்க முடிந்தது…
அண்ணன் வேலைக்குப் போகத் தொடங்கினான்…முள் குச்சிகளை வெட்டி வர இப்போதெல்லாம் ராம்பாபு போவதில்லை…ரயில்வே லயண் கரையோரம் மாலையில் நடக்கும் போது சிலர் முள் வெட்டி இழுத்துப் போன தடயங்கள் இருக்கும்…அங்கே சிதறிக் கிடக்கும் ஒன்றிரண்டு முட்களை எடுத்து தூர எறிந்திருக்கிறான்…பழைய நினைவுகளை வீசினால் அவை மெதுவாகத்தான் எட்டிப் போய் விழுகின்றன என நினைத்துக் கொள்வான்...
வீட்டில் ஸ்டவ் புதிதாக வந்திருந்தது…குமுட்டியும் ஒன்று அம்மா வாங்கியிருந்தாள்…தம்பி தங்கைகள் மாறி மாறி குமுட்டிக்கு விசிறுவார்கள்…பால் காய்ச்சும் பாத்திரத்தின் உள்ளில் வறுமை கொதிக்கும்…அடியில் எரியும் தக தக நெருப்பு அம்மாவின் கண்களாய் தெரியும் ராம்பாபுவிற்கு…டப் பென சின்ன வெடிச்சப்தமும் சில பறக்கும் நெருப்புத் துகள்களும் கொஞ்சமாய் அவனை பரவசப் படுத்தும்…அவசர காலங்களில் ஸ்டவ்விற்கு அவ்வப்போது திரி மாற்றி மண்ணெண்னெய் ஊற்றி பற்றவைத்து சாதம் வடிப்பாள் அம்மா...சாப்பிடும் போது மண்ணெண்னெய் வாடை வருவதால் நிறைய சாப்பாடு எவ்வளோ நாட்கள் மீந்திருந்திருந்திருக்கிறது…
விறகடுப்பிற்கான வரட்டியும் சவுக்குக் குச்சிகளும் ராம்பாபு தான் வாங்கி வரவேண்டும்…மண்ணெண்னெய் அப்போதெல்லாம் ரேஷனில் ஐந்து லிட்டர் தான் தருவார்கள்…
மண்ணெண்னெய் கரி விறகு எல்லாம் தீர்ந்து போயிருந்த காலையில் எல்லாம் அண்ணன் கத்திக் கொண்டே இருப்பான்…ராம்பாபுவை திட்டித் தீர்ப்பான்…
தொரை டெய்லி ஊர் சுத்துவாரு…வந்து வகை வகையா கொட்டிப்பாரு…ஆனா வெறகு வாங்கிட்டு வந்தா கெளரவ கொறைச்சல்….எனச் சொல்லியபடியே இரண்டு ரூபாய்களை அம்மாவிடம் கொடுப்பான்…கையாலாகாத அப்பன் வீட்டின் ஏதோ ஒரு மூலையில் தூங்கிக் கொண்டே இருப்பான்…
ராம்பாபு கொஞ்சம் போய்ட்டு வாடா…ஒரு கிலோ சவுக்கு ஒன்னார் ரூபாதாண்டா… என்று அம்மா கெஞ்சுவார்கள்…
ராம்பாபுவிற்கு இரண்டு சவுக்குக் குச்சிகளை மடங்கிய இரண்டு கைகளிலும் தூக்கி வீதி வழியே வருவது அவமானமாயிருக்கும்…திடீரென ஒரு நாள் பிள்ளையின் அவமானத்தைத் துடைக்க முடிவெடுத்தாள் அம்மா…
அண்ணனிடம் சொல்லி மரத்தூள் அடுப்பொன்றை வாங்கி வரச் செய்தாள்…அடுத்த சில வருடங்கள் மரத்தூள் வாங்க முப்பது நாற்பது கிலோமீட்டர்கள் சைக்கிள் மிதிப்பான் ராம்பாபு…
ஏழைத் தமிழ்க் குடும்பத்தின் சமையலுக்கான அடுப்பின் புரட்சி தொடங்கியிருந்த காலம் அது….கேஸ் இணைப்புகள் பெரும்பாலான வீடுகளுக்கு கொடுக்கத் தொடங்கியிருந்த காலம்…அண்ணனிடம் கெஞ்சி ஒருவழியாய் ரேஷன் கார்டு தட்டச்சுக் காப்பியொன்றை எடுத்துக் கொண்டு ராம்பாபுவையும் அழைத்துக் கொண்டு கேஸ் ஏஜென்ஸிக்கு வந்தாள் அம்மா…
தட்டச்சுக் காப்பியின் கீழே கெஸடட் ஆபீஸர் கையெழுத்து வேண்டும் எனச் சொல்லி இரண்டு நாட்கள் அலையவிட்டு ஒருவழியாய் ஒரு கனெக்ஷன் கொடுத்தார்கள்…கேஸ் அடுப்பும் கம்பெனிதான் கொடுக்குமாம்…இரண்டு பர்ணர்கள் வைத்த அடுப்பு….
பத்து உறுப்பினர்கள் கொண்ட குடும்பத்திற்கு பத்து நாட்கள் கூட சிலிண்டர் வராது…அடுத்த சிலிண்டருக்காக கம்பெனியில் பதிவு செய்ய வேண்டும்…அது வரும் வரை மீண்டும் வீடெல்லாம் புகை சூழ்ந்து இருண்டு கிடக்கும்…
ராம்பாபுவிற்கும் வேலை கிடைக்க இரண்டாவது சிலிண்டரும் கிடைத்தது…
அண்ணனுக்கும் சில தங்கைகளுக்கும் திருமணம் ஆகிவிட…சிலிண்டர் இருபது நாட்கள் வரை தாக்குப் பிடிக்கத் தொடங்கியது…ஆனால் அண்ணனால் தம்பியிடமிருந்து கிடைக்கும் வருமாணம் போதாமல் இருப்பதால் குடும்ப ஒற்றுமை நீண்ட நாட்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் திணறியது…பர்ணர்களில் ஏற்றப்படும் தீ குடும்பத்தின் எல்லோர் இதயங்களிலும் நிரந்தரமாக எரியத் தொடங்கியது…
அணைக்கவே முடியாத ஒரு சுபயோக சுப தினத்தில் ராம்பாபு கையில் அவனுடைய மற்றும் மனைவியினுடைய துணிமணிகளை மட்டும் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான்…அப்போது அம்மாவின் கண்களின் கோபம் எல்லா அடுப்புகளில் இருந்தும் எழுந்த ஊழித் தீயென எழுவதை ராம்பாபு பார்த்தான்…
தனிக் குடித்தனத்தின் முதல் நாள் காலையில் தான் உறைத்தது சமைப்பதற்காக அடுப்பெதுவும் இல்லையென்பது…ஓடிச் சென்று ஸ்டவ் வாங்கி வந்தான்…வெளி மார்க்கெட்டில் இருந்து மண்ணெண்னெய் வாங்கித் தாளவில்லை…வாடகை வீட்டின் சொந்தக்காரர் புகை சுவற்றில் படியுமென்பதால் விறகடுப்பு உபயோகப்படுத்தக் கூடாதென்று கண்டித்துவிட்டார்…
கேஸ் கனெக்ஷனுக்காக ஏனென்ஸியை அணுகிய போது ரேஷன் கார்டு கேட்டார்கள்… தனி ரேஷன் கார்டு வாங்க ஏறக்குறைய இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது ராம்பாபுவிற்கு…அதற்குள் ஒரு நாள் சுவிதா ஜே எனும் வணிக பயன்பாட்டு கேஸ் கனெக்ஷன் அதிக விலை கொடுத்து வாங்கி ஆகச் சிறிய சிலிண்டர் ஒன்றையும் தூக்கி வந்தான் ராம்பாபு…அப்போது அவர்கள் கொடுத்த அந்த முதல் கேஸ் ஸ்டவ்வைத்தான் வரலாற்றுச் சின்னமாய் இன்று மாற்றிவிடத் துடிக்கிறாள் அவனின் மனைவி…
அதை பரணில் போடவோ மாற்றி வேறொன்றை வாங்கவோ மனமில்லை அவனுக்கு…திக்கற்று சமைக்க வழியற்ற நாளொன்றில் வாரது வந்த மாமணியான அந்த கேஸ் ஸ்டவ்வை தோற்க தயாரில்லை அவன்…
மனைவி ஷோ ரூமில் மின்னிக் கொண்டிருக்கும் ஸ்டவ்களை ஆர்வமாய் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் சுவற்றில் மாட்டிய சிசிடிவி யின் பிம்பங்களை பார்த்துக் கொண்டிருந்தான் பாபு…தரைத் தளத்தில் இருக்கும் எஸ்கலேட்டரில் அண்ணனும் அண்ணியும் மேலேறி வந்து கொண்டிருப்பதைப் பார்த்தவன்…மனைவியிடம்…வா…நேரமாயிடுச்சு…நாளைக்கு வந்து வாங்கிக்கலாம் என்று சொல்லியபடியே அவளை இழுத்துக் கொண்டு படி வழியாக இறங்கி ஏறக் குறைய ஓடத்துவங்கினான்…
கொஞ்சம் நில்லுங்க…என்று மனைவி சொல்ல…அவளின் கண்களைப் பார்த்தான்…சிலிண்டர் கனெக்ஷன் எதுவும் இல்லாமல் ஆயிரம் பர்ணர்களில் இருந்து தீப் பிழம்புகள் சிவப்பு கலந்த நீல நிறத்தில் வளையம் வளையமாய் பற்றி எரிவதைப் பார்க்க முடிந்தது…நீங்களும் கூட தீயின் நிறத்தை இப்போது பார்க்கலாம்…
ராகவபிரியன்
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...