கஸ்தூரி ரெங்கன் வீசும் கல்யாண வ்யஜ்னம்…3
குடும்பவியலில் மூத்தவனாதிக்கம் எனும் தன்மை எவ்வாறு துன்பியலை குடும்பத்தவர்க்குத் தருவிக்கிறதென பெற்றவர்கள் உணர்வதில்லை…மாறாக மூத்தவனை ஆதிக்கம் செலுத்த அவர்களறியாமலேயே அனுமதித்துக் கொண்டிருப்பார்கள் அல்லது கொண்டிருக்கிறார்கள்…குடும்பச் சீரழிவுக் கோட்பாட்டின் அடிப்படைகளை ப்ராய்ட் ஆராயத் தொடங்குகிறார்…அது 1884… பெற்றோர்கள் தவிர்த்து பத்திற்கும் மேற்பட்ட உடன் பிறப்புகளுடைய குடும்பத்தில் மூத்த சகோதரன் ஆதிக்க வெறி பிடித்தவனாக பெரும்பாலும் இருப்பதை கண்டறிகிறார்…அவனின் எண்ணங்களிலும் செயல்களிலும் ஆதிக்க மனப்பான்மையை வெளிப்படுத்தும் மெல்லிய கீற்றொன்று அவ்வப்போது மின்னி மறைவதை எவ்வித தயக்கமும் இன்றி பதிவிடுகிறார்…மூன்றாவதாக மூத்தவன் ஹலுசினேடரி கன்ப்யூஷன் எனும் தோற்ற மாயைகளின் குழப்பத்தில் தான் செய்வதெல்லாம் குடும்ப நன்மைக்கானதென நம்பத்தொடங்குகிறான்…எப்போது மூத்தவனின் ஆதிக்க மனப்பான்மையினால் விளையும் வெறிச் செயல்களை எவராலும் தடுக்க முடிவதில்லையோ அப்போது குடும்பச் சீரழிவின் முதலடி எடுத்து வைக்கப்படுகிறது…மூத்தவன் தனது ஆதிக்க வெறியின் விளைவால் எடுத்துக் கொள்ளும் ஆயுதம் குடும்ப உறுப்பினர்களின் திருமணம் பற்றிய இறுதி முடிவெடுக்கும் அதிகாரம்..இங்கே தனக்கடுத்தவனோ அல்லது இதர சகோதர சகோதரிகளோ திருமணத்தின் விளைவாக குடும்பச் செல்வாக்கு பெற்று தனது ஆதிக்கத்திற்கும் அதிகாரத்திற்கும் சவாலாய் அமைந்துவிடாதபடி துல்லியமாக நுண்ணறிவுடன் முடிவுகளை எடுக்கிறான்…மூத்தவனைவிட படிப்பிலோ மனைவி வழி உறவுகளின் செல்வாக்கிலோ அல்லது பணபலத்திலோ ஏதாவதொரு சகோதரம் உயர்வு நிலை எய்திடின் அது தனது ஆதிக்க இடத்தின் ஆக்கிரமிப்பிற்கான போர் பிரகடனமாய் மூத்தவனால் எதிர்கொள்ளப்படுகிறது எனத் துல்லியமாய் உண்மையை உரத்துச் சொல்லிச் சென்றிருக்கிறார்…1884 லேயே ப்ராய்ட் தனது…குடும்பச் சீரழிவுக் கோட்பாட்டு ஆய்வுகளில்…
ப்ராய்டிற்கு முந்தைய எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னால்… ஜாதக சந்திரிகையில்
உன்னுமூன்றா மிடத்ததிபன்குசன்
நன்னர் நாங்கா மதிபனுங்கூடினும்
தன்ன மூவரும் நாங்குறத்தந்துணை
அன்பர் பங்கு மனை வந்து சேருமே…
அற்புதமாய் சொல்லப்பட்டிருக்கிறதெனின் நம்புவீர்களா…
ஜென்ம ராசிக்கு மூன்றாமிடத்தின் அதிபதியும் செவ்வாயும் நான்காம் இடத்தின் அதிபதியும் சேர்ந்திருந்தால் அந்த ஜாதகனுக்கு இளைய சகோதரர்கள் மூவர்…மூவரும் அந்த ஜாதகரின் மேல் மூத்தவன் என்பதால் அளவுகடந்த அன்பு கொண்டிருப்பர்…ஆனால் அந்த மூத்தவன் தனது சகோதரர்களின் பங்குகளை அதாவது சகோதரர்களுக்குச் சேரவேண்டிய மூதாதையர்களின் சொத்துக்களின் மூலம் கிடைக்கும் பங்குகளையும் அவர்களின் பெற்றோர்களால் கிடைக்கவேண்டிய பணப்பலன்களின் பங்குகளையும் அபகரித்துக் கொள்வான்…அப்படியான அபரிப்புச் செயல் பாவமென்று அவன் உணர்வதேயில்லை…மாறாக தான் மூத்தவன் என்பதால் அது தனது உரிமையெனும் மாயத் தோற்றப் பிழையால் செலுத்தப்படுவான்…
மறுக்க முடியாத நிஜத்தை நமது பண்டைய சுவடிகள் பதிவு செய்திருக்கின்றன என்பது ஆச்சரியமான வாழ்வியலில் இன்றளவும் நாம் காணும் அனுபவ நிஜம்.
இங்கே மூத்தவன் தனது முதல் சகோதரியின் திருமண கடன்களை அப்போதுதான் நிரந்தர வருவாய் ஈட்டத் தொடங்கியிருந்த இளைய சகோதரனின் தோளில் சுமையென ஏற்றுகிறான்…வெளியிலிருந்து பார்ப்பவர்களின் பார்வையில் சுமைகளை தான் சுமப்பதாக காட்டும் தோற்ற வரைவுகளை காட்சிப் படுத்துகிறான்… அதற்குள் இரண்டாவது சகோதரியின் திருமணத்திற்கான ஏற்பாடுகளை விரைந்து இயக்குகிறான்…சகோதரியின் விருப்பு வெறுப்புகளோ பெற்றவர்களின் ஆலோசனைகளோ மூத்தவனின் ஆதிக்க வெறியின் ஒளிக் கீற்றுகளில் காணாமல் போய்விடுகின்றன…தனக்கடுத்த சகோதரனிடம் அடுத்த திருமணத்திற்கான முன்னெடுப்புகளை மூத்தவன் சாதாரண தகவலாகக் கூட தெரிவிப்பதில்லை…தனது ஆதிக்க மனப்பான்மையால் தனக்கடுத்தவன் தகவலறியக் கூட தகுதியற்றவனென நம்புகிறான்…தனக்கடுத்தவர்கள் எவரும் தனக்குச் சமமான உரிமை பெற்றவர்களில்லை எனும் தோற்ற மாயையின் பிடியில் சிக்குண்டு தனது சீரழிவுச் செயல்களை தன்னிச்சையாக செயல்படுத்தத் தொடங்குகிறான்…
அப்படியான திருமணத்திற்கான செலவின் பெரும்பான்மை பங்கை சுமக்க முடியாமல் சுமக்கும் தனக்கடுத்தவனை கடனாளியாக கயவனாக பிச்சைக் காரனாக சித்தரிக்கும் பாவச் செயலையும் கூசாமல் செய்கிறான்…அது போன்ற செயல்களைச் செய்யத் தூண்டும் மனம் புத்தி அகங்காரம் எனும் சூட்சும பூதங்களை பிரகிருதியின் குணங்களென பகவான் தெளிவாகச் சொல்கிறார்…இங்கே நிஜம்மான ஞானி மனதிற்கும் புத்திக்கும் உள்ள இடைவெளிகளை அறிந்து செயல்படுகிறான்…ஆனால் அகங்காரம் கொண்டவன் மனம் புத்தி இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகளை அறியாதவன்…அவன் தான் செய்யும் செயல்களுக்குத் தானே கர்த்தா என நினைத்துக் கொள்கிறான்… இதைத்தான் பகவான்…
ப்ரக்ருதே:க்ரியமாணா நி குணை: கர்மாணி ஸர்வஸ:
அஹங்காரவிமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே!!
ஆக ஆச்சர்யமான வார்த்தைகளால் சொல்லுகிறார்…
தனது சகோதரிகளின் வாழ்வியற் இடங்கள் வெடித்துச் சிதறும் எரிமலையின் நடுவே இருப்பதை பார்க்கத் தவறுகிறான்…ஏழ்மையான குடும்பத்தில் பெண்ணாக பிறந்த காரணத்தால் அவர்களை பரம ஏழ்மையான குடும்பத்தில் தள்ளி விடுகிறான்…இங்கே பெற்றவர்கள் பேச்சற்றுப்போவது தான் சீரழிவின் தொடக்க நிலை…சகோதரிகளின் நலவாழ்வை விட தனது அதிகார பீடத்திற்கான கான்க்ரீட் கலவையின் தரம் தாழ்ந்துவிடாதபடி கவனம் கொள்ளும் மூத்தவனை அஹங்காரவிமூடாத்மா எனச் சாடுகிறார் பகவான்…புகுந்த வீடுகளின் புழுக்கப் பொழுதுகளிலும் சுடும் தரைகளிலும் நிம்மதியின் காற்றோட்ட வசதியற்று தூங்காமல் தவிக்கும் சகோதரங்களைப் பற்றிய கவலைகளற்றவனை நோக்கி தனது வ்யஜ்னத்தால் கொஞ்சமாய் விசிறிக் காட்டுகிறான் கஸ்தூரி ரெங்கன்…துன்ப வியர்வையில் புழுங்கித் தவிக்கும் சகோதரங்களின் வாழ்விடையே குளிர்பதன அறையின் அதிகார காற்றில் பச்சை மையில் கையெழுத்திட நினைப்பவனின் அறைக்குள் புயலை சுற்றவிடுகிறான் தன் வ்யஜ்னத்திலிருந்து…அரங்கன்…குளிர்பதன அறையில் நிம்மதியைத் தேடி புயலில் அகப்பட்ட தோனியென சுற்றத் தொடங்குவான் மூத்தவன்…
மெய் காய்ந்து வெளிரிய வ்யஜ்னம் வீசும் வாழ்வியற் அறையில் கையின் பச்சை மை காய்ந்து போவதின் ரகசியம் அரங்கனே அறிவான்…
ராகவபிரியன்

No comments:
Post a Comment