மண்டியிடும் மாகளிறு
------------------------------
மண்டியிடச் சொல்லும்
பொழுதுகளில்
யானைவலிகள்
அதன் மத்தகமெங்கும்
ஞாபகங்களாய்
செருகிக் கிடக்கும்...
மண்டியிட்ட கால்களின் வழி
மிதித்தும் சாகாத
வறுமை ஆமைகள்
மெல்ல ஊர்ந்து
இலக்கு நோக்கி
ஓய்வின்றி
மேலேறிக் கொண்டிருக்கும்...
வளமையின் கானகத்தில்
வேர் பலாவை
எத்தி உதைத்துண்ட
சுதந்திர பசியாறல்
காதோரத்தில்
நெருப்பெறும்புகளென
ஊறிக்கொண்டிருக்கையில்...
சோளப் பொறியென
வீசப் பட்ட மட்டையை
நுகர மறுத்து
தும்பிக்கையால்
தன்னையே தாக்கிக் கொண்டிருக்கும்...
எந்நேரமும்
மானுடத்தை நசுக்கும் சக்தி
வறுமை யானையின்
முட்டிகளில் இருப்பதறியாமல்
மிதித்தேறும்
ஆணவத்தின் ஆயுள்
அன்றிலிருந்துதான்
குறையத் தொடங்கும்...
கடவுளுக்கான
புனித நீர் தாங்கி வரத்தான்
அந்த
வறுமை வேழம்
எப்போதாவது மண்டியிடும்..
முதுகிலேறிய பின்
தோகைவிரித்தாட நினைத்தால்
பீலிகளை பிய்தெறிய
ஒருபோதும் தயங்குவதில்லை அது...
பாலைப் புயலெனினும்
மண்டியிட்டு
முகம் புதைத்துக் கொள்ளும்
கோழை ஒட்டகமல்ல...
இது வலிய வேழம்...
வறுமையை திணித்து
மண்டியிட வைத்த
ஏமாற்று அரசியலை
மிதித்து நசுக்கும்
நாளுக்காகத் தான்.
எல்லோரையும் எல்லாவற்றையும்
மறுப்பின்றி
ஆசீர்வதித்துக் கொண்டேயிருக்கிறது..
இவ்வேழம்...
ராகவபிரியன்

No comments:
Post a Comment