பின் நவீன பிற்போக்கு சிறப்புச் சிறுகதைகள்…
2.மாப்பிள்ளை ட்ரெஸ்
-------------------------------
அப்பாவினுடைய லயன் பாக்ஸில் ஒரு ஜோடி ப்ரெவுன் நிற ஷூ க்கள் இருப்பதை அவரைப் பார்க்க அவரின் அலுவலக ஓய்வறைக்கு செல்லும் போதெல்லாம் பார்த்திருக்கிறான் ராம்பாபு… ஒரு முறை அந்த ஷூக்களை அவன் வெளியில் எடுத்து துடைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்த அவனின் அப்பா பளார் என்று அறைந்துவிட்டு அவைகளை மீண்டும் லயன் பாக்ஸூக்குள் திணித்துக்கொண்டார்…அதில் ஒரு ஷூவைத் துடைக்கும் போது தான் பார்த்தான் அதன் அடிப்பாகத்தில் 11 நம்பர் இருந்ததை..
ராம்பாபுவிற்கு ஷூ வாங்கி அணிய வேண்டுமென்பது சிறுவயதிலிருந்தே ஆசை…அப்பாவின் யூனிபார்ம் பேண்ட்டை டைலரிடம் கொடுத்து அவனின் அண்ணனுக்கும் அவனுக்கும் டிராயர் தைப்பது போல் அப்பாவின் ஷூக்களை ஆல்டர் பண்ணி தனக்கு ஷூ தைத்துக் கொடுக்கும் படி அம்மாவிடம் ஒரு முறை அடம் பிடித்திருக்கிறான்…ராம்பாபு எட்டாவது படிக்கும் போது உடன்படித்த சக்தி என்ற மாணவன் முழங்கால் வரை ஸ்டாக்கிங்ஸ் அணிந்து ஷூ போட்டுக் கொண்டு வருவதைப் பார்த்ததும்..பொறாமை பீறிட்டு இதயத்தை அடைத்தது…அன்றே என் சி சி நேவல் விங்கில் சேர்ந்து கொண்டான்…அங்கே அவனுக்கு காக்கி மற்றும் வெள்ளை நிற யூனிபார்முடன் இரண்டு நேவி ப்ளூ ஸ்டாகிங்ஸூம் கருப்பு ஷூக்கள் இரண்டு ஜோடியும் கொடுத்தார்கள்…ராம்பாபு ஷூவின் பின்பக்கம் பார்க்க அதில் 9 நம்பர் இருந்தது…11 நம்பர் வேண்டும் என என் சி சி வாத்தியாரிடம் கேட்க…அவர் கடகடவென சிரிக்கத் தொடங்கினார்…ஒன்னோட செப்பல் நம்பர் என்னடா எனக் கேட்டார்…இது வரை அவன் செப்பலோ ஷூ வோ வாங்கியதும் இல்லை…அணிந்ததும் இல்லை…வேறு ஒரு மாணவனை விட்டு அவனின் கால் அளவிற்கு ஓரளவு பொருந்திய ஷூ ஒன்றை கொண்டு வரச் செய்தார்…ராம்பாபுவால் தனக்குக் கொடுக்கப்பட்ட ஷூக்களின் பின்புறம் 6 ம் நம்பர் இருந்ததை ஒப்புக் கொள்ளவே முடியவில்லை…
ஸ்ரீரங்கம் வடக்கு வாசலில் இருந்து தெற்கு வாசலுக்கு கோவிலுக்குள் புகுந்து அன்றாடம் செல்லும் சிலர் தாங்கள் அணிந்திருக்கும் செருப்புகளை கையிலோ பையிலோ மறைத்து எடுத்துச் செல்வதைப் பார்க்கும் போதெல்லாம் அந்த செருப்பின் பின் பக்கம் என்ன நம்பர் இருக்கும் என ஊகிப்பான்…மலைவாசல் மாணிக்க பிள்ளையார் கோவிலில் செருப்பை கழற்றி கையில் வைத்துக் கொண்டு கோவிலைச் சுற்றி வந்து மலைப்படிக்கட்டில் மீண்டும் செருப்பணிந்து ஏறுவார்கள்..அப்போது ஒருவரின் செப்பல் எண்ணை கீழே அமர்ந்து அவருக்குத் தெரியாமல் பார்த்திருக்கிறான்…அதில் நம்பர் எட்டு இருந்தது…ஒரு முறை அண்ணன் மட்டும் வெளிமானிலத்தில் இருக்கும் உறவுக் காரர் வீட்டிற்குச் சென்று விட்டு வரும் போது புத்தம் புதிய ஷூ அணிந்து வந்திருந்தான்…வீட்டு வாசலில் அப்பாவின் பிய்ந்த பழைய செருப்புகளுடன் அந்த ஷூ ஒரு ராஜா சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பது போல் கம்பீரமாய் அமர்த்தி வைக்கப்பட்டிருந்தது…அண்ணன் சில நாட்கள் அதை யாரையும் தொட்டுக் கூட பார்க்க அனுமதிக்கவில்லை…ஒரு நாள் இரவு இரண்டு மணியளவில் எல்லோரும் தூங்கி விட்டதை உறுதி செய்து கொண்டவன் அந்த ஷூக்களில் ஒன்றை எடுத்து வாசற்கதவின் இடுக்கின் வழியாக வந்த தெருவிளக்கு வெளிச்சத்தில் பின்பக்க நம்பரைப் பார்த்தான்…அதில் 10 என்று இருக்க…அதெப்படி தனக்கு ஆறாம் எண் என்றால் அண்ணனுக்கு ஏழு அல்லது எட்டு இருக்கலாம்…பத்தாம் எண் ஷூ எப்படி என்ற நினைவில் அவனால் அதற்கு பிறகு தூங்கவே முடியவில்லை…பிறகான கல்லூரி வருடங்களில் ஷூ… இல்லை செப்பல் கூட வாங்க வறுமை விடவில்லை..
அண்ணனின் கல்யாணத்திற்கான மாப்பிள்ளை அழைப்பு ட்ரெஸ் வாங்க ராம்பாபுவும் சென்றிருந்தான்…ஒருவழியாக அவர்கள் அண்ணனுக்கு கோட் ஷூட்டிற்கான துணி வாங்கிய பின் ஷூவும் வாங்கினார்கள்…வரப் போகும் அண்ணி பெரிய இடம் பணக்கார இடம்…அரசாங்க உத்தியோகம் வேறு…பேட்டா கடையில் சாய்வாக இருந்த கால் வைக்கும் ஸ்கேலில் அண்ணன் காலை வைக்க நம்பர் 10 உங்களுடைய அளவு என்று சொல்லி ஒரு ஜோடி ப்ரெவுன் ஷூ க்களை அட்டைப் பெட்டியில் மெல்லிய பேப்பர் சுற்றி எடுத்து வந்து கொடுத்தார் கடைக்காரர்…உனக்கு ஒன்னு வாங்கிகறயாடா என்ற அண்ணனிடம்…வேண்டாம் என மறுத்துவிட்டான் ராம்பாபு…
இப்போது ராம்பாபுவின் கல்யாணத்திற்கான மாப்பிள்ளை அழைப்பு ட்ரெஸ் வாங்க அண்ணனும் வந்திருக்கிறான்…ராம்பாபு திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண் ஏழை மட்டுமல்ல…உத்தியோகமும் இல்லை அவளக்கு…என்பதால் கோட் ஷூட்டோ ஷூவோ தேவையில்லை என்று அண்ணன் சொல்ல சரி புது செப்பலாவது வாங்கிக் கொள்ளலாமா என ராம்பாபு கேட்டான்…
அண்ணன் சரி என்று சொன்னதால் இருவரும் பேட்டா கடைக்குள் சென்றார்கள்…கடைக்காரர்…யாருக்கு வாங்கப் போறீங்க…ஷூ வா செப்பலா என்று கேட்க…அண்ணன்... தம்பிக்குத் தான்…செப்பல் மட்டும் தான்…என்று சொன்னான்…கடைக்காரர் சாய்ந்து கால் வைத்துப் பார்க்கும் ஸ்கேலை அவன் பக்கம் எடுத்து வராமலேயே…பையா ஆறாம் நம்பர் ஸ்லிப்பர் ரெண்டு ஜோடி கொண்டா…என்று சொல்லியபடியே கல்லாவில் சென்று அமர்ந்தார்…
ராம்பாபு கடையின் கண்ணாடி ஷோகேஸில் வைக்கப்பட்டிருந்த ஷூக்களையே பார்த்துக் கொண்டிருந்தான்…
ராகவபிரியன்

No comments:
Post a Comment