Monday, June 5, 2023

     கஸ்தூரி ரெங்கன் வீசும் கல்யாண வ்யஜ்னம்…2

இன்னொரு மனிதன் மேலான ஆழ்மன ஈர்ப்பும் அதே மனிதன் மீதான விவரிக்க முடியாத பயமும் ஒருவரிடம் கனவுகளை உருவாக்குகிறது…கனவில் அந்த ஒருவன் செயலாற்றும் விதமும் நனவில் அவனது செயல்களும் ஒருபோதும் பொருந்திப்போவதில்லை…மூத்தவன் தனது சக சகோதரங்களிடம் ஆழ்மன ஈர்பின் விளைவாக முகிழ்க்கும் அன்பின் துரத்தல்களால் ஒருசில நற்செயல்களைத்தான் செய்கிறான்…அவை பெரும்பாலும் கனவிலேயே நிகழ்ந்துவிடுகின்றன…மூத்தவன் தனக்கடுத்த மூத்த சகோதரத்திடமோ இல்லை வேறு தன்னைவிட மேம்பட்டதாக தான் கருதும் இன்னொரு சகோதரத்திடமோ ஒருவித தருக்க பயமும் கொள்ள நேர்கிறது…இது தந்தைக்கு அடுத்த இடம் தனக்கில்லாமல் போய்விடுமோ எனும் செருக்கு பயமாகவும் இருக்கக்கூடலாம்…இந்த பயம் ஆழ்மனதில் கனவு நிலையிலிருக்கும் மூத்தவனின் நனவுச் செயல்பாடுகளில் தனக்கடுத்தவனுக்கோ இல்லை தன்னை விட மேம்பட்ட சகோதரத்திற்கோ சில தீமைகளைச் செய்யத் தூண்டுகிறது…
மூத்தவனின் நனவியற் தீய செயலொன்று போதும் அந்த பாதிப்பிற்குள்ளாகும் சகோதரம் நிரந்தர அதிர்வில் வீழ்வதற்கு…மூத்த சகோதர தீச் செயல்கள் பெரும்பாலும் பெற்றவர்களால் புறம்தள்ளப்பட்டுவிடுவது அதிர்வின் கனத் தராசில் பாதிப்பிற்குள்ளான சகோதரம் தனக்கீடான சமன்பட்டுவிடாதிருக்கச் செய்யும் எடை கூட்டிய கற்களை இன்னும் இன்னும் அடுக்கி வைப்பதாகிவிடும்…சகோதரம் துயரின் உச்ச பாகத்தில் ஏற்றப்பட்டு செய்வதறியாது கீழிறங்க முடியாமல் விழிப்பதை அந்த மூத்த சகோதரம் தனது ஆழ்மனதில் ரசிப்பதுதான் கொடூரத்தின் உச்சம்…இந்த சகோதரத்துவ திணிக்கப்பட்ட இழி நிலையைத் தான் ப்ராய்டின் சைக்கோஜினிக் ட்ராமா புரிபடாத வாழ்வியல் மொழியில் பேசுகிறது…இது போன்ற மூத்த சகோதரத்துவ தீய நனவுச் செயல்களை மற்றெந்த சகோதரங்களாலுமோ இல்லை பெற்றவர்களாலுமோ தகர்ப்பதென்பது இயலாத ஒன்றென உரத்துப் பேசுவார் ப்ராய்ட்…
மூத்த சகோதரம் சம்பாதிக்கத் தொடங்குகிறான்…தான் சகோதரங்களின் உணவிற்காக தன்னை வருத்திக் கொள்வதாக ஆழ்மனதில் நம்பத்தொடங்குகிறான்…ஆதலால் தனக்கே குடும்ப அதிகாரச் செங்கோல் வழங்கப்படவேண்டுமெனும் கனவில் அரச அலங்காரங்களுடன் சிம்மாசனத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறான்…இங்கே அவனது கனவுச் சுற்றில் அவனின் இளைய சகோதரிகளுக்கான திருமணத்திற்கான பணத் தேவை தடைகளை உருவாக்குகிறது…சிம்மாசனம் நோக்கிய தனது கனவிலிருந்து நிஜத்திற்கு வருகிறான்…மூத்த சகோதரியின் திருமணத்தை பொருட் செல்வு குறைவாக நடத்தி முடிக்கத் திட்ட மிடுகிறான்…பெற்றவர்களோ மற்றவர்களோ இங்கே மூத்தவனின் நனவியல் தீய செயலை தருக்கப் பார்வையுடன் பார்ப்பதுதான் வாழ்வியல் அவல உழற்சியெனில் அதுதான் நிஜம்…சகோதரியின் திருமணம் நற்செயல் தான்…ஆனாலும் அந்தத் திருமணத்தை மற்ற உடன் பிறப்புகளின் ஒப்புதலோடும் பெற்றவர்களிடம் பெறும் அனுமதியோடும்…அந்தச் சகோதரியின் தன் இசைவுடனும் நடத்தப் பெறின் நற்செயல்…மேற் சொன்ன மூன்றில் ஏதாவது ஒன்றோ இல்லை மூன்றுமோ இல்லையெனின் அந்தச் செயலின் பெயர் தீச் செயல்தான் என வள்ளுவம் பேசும்…
நன்றறிவாரிற் கயவர் திருவுடையார் நெஞ்சத்து அவலம் இலர்…
இங்கே சகோதரியின் எதிர்கால வாழ்வு மூத்தவனின் அதிகார சிம்மாசனத்திற்கான சுற்றலின் தடையை தகர்ப்பதற்காக அவசர கதியில் நிகழ்த்தப்பட்டுவிடும்…தனக்கடுத்த சகோதரன் தனக்கீடாக சகோதரியின் திருமணத்தில் எவ்விதத்திலும் பங்கெடுத்துக் கொள்ள அவனின் ஆழ்மனம் அனுமதிப்பதில்லை…நன்றறிந்தவன் தனக்கடுத்தவனை இங்கே கடமை தவறிய கயவனாக குடும்பத்தில் காட்டித் தருவான்…ஆனால் எந்த சிம்மாசனத்திற்கும் ஆசைப் படாத நெஞ்சத்தவலம் இல்லாத சகோதரம் கயவராக சித்தரிக்கப்படினும் திருவுடையவனாக வலம் வருகிறான்…சிம்மாசனம் நோக்கிய சுற்றல்கள் நற்செயல்களால் வாழ்வில் எவ்வித ஆசைகளுமற்று வலம் வருதலினின்று முற்றிலும் மாறுபட்டதாகுமென அரங்கன் பேசுகிறான்…
ஏவம் ப்ரவர்திதம் சக்ரம் நா நு வர்தயதீ ஹ ய:
அகாயுரிந்த் ரியாராமோ மோகம் பார்த ஸ ஜீவதி:
அரங்கன் வாழ்வின் சுழற்சியை அதாவது சுற்றலை இல்லையெனின் வலம் வருதலை சக்ரமாக தனது வலக்கையில் வைத்திருக்கிறான்…வேள்வியில் தொடங்கும் நற்செயலால் மழை பொழிகிறது…மழையால் செழுமை விளைகிறது..செழுமை மகிழ்வைத் தருகிறது…மகிழ்வு நற்செயல்களுக்கான வேள்வியின் தொடக்கமென மீண்டும் துவக்கம் கொள்கிறது…இது போன்ற சக்கர சுழற்சியின் அனுகூலமான வலச் சுழலுடன் சுற்றாதவன் அகாயு எனும் பெயரால் அழைக்கப்படட்டும் என் கிறான் பகவான்…தன்னலமும் அதிகாரமும் சிம்மாசனமும் நோக்கிய சுற்றல்கள் இடப்பக்கமாக அமைந்துவிடும்…இடச் சுற்றலில் இருப்பவனால் செல்வம் சேர்க்கும் அடாத செயலன்றி வேறொன்றையும் அவனின் ஆழ்மனம் கனவில் கூட நினைத்துப் பார்ப்பதில்லை…அவனே பாவங்களின் இருப்பிடமான அகாயு எனும் பெயருடன் இல்லாத சிம்மாசனத்தை இருப்பதாக நினைத்துச் சுற்றத் தொடங்குவான்…
அவனின் சுற்றலில் ஆற்றல் வியர்வையென வெளியேறி வீணாகிக் கொண்டிருக்கும்…இயல்பான விசிறிக் காற்றுக்கான அவனின் ஆசை தகர்ந்து சிம்மாசனத்தில் அமர்ந்தால் பணிப் பெண்களால் வீசப்படப்போகும் சாமரங்களின் காற்றுக்காக சதா ஏங்கத் தொடங்கும்…அரங்கனின் சக்ர வ்யஜ்னத்திலிருந்து அப்போதெழும் புயலில் மூத்தவனின் வாழ்வு சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பதறியாமல் வலுவிழந்த கால்களில் சிம்மாசனம் பற்றிய கனவில் சுற்றிக் கொண்டேயிருப்பான்…அவனுடன் பிறந்த தருக்க பயமும் கூடவே சுற்றிக் கொண்டிருப்பதை அவனால் இறுதி மூச்சு வரை அறிந்து கொள்ளவே முடியாத தூரத்தில் அரங்கனின் வ்யஜ்னத்தின் வீச்சு இருப்பது தான் எவராலும் புரிந்து கொள்ள முடியாத வாழ்வியல் ரகசியம்…
ராகவபிரியன்
1 நபர் இன் படமாக இருக்கக்கூடும்








No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...