கஸ்தூரி ரெங்கன் வீசும் கல்யாண வ்யஜ்னம்...1
அதிகாரம் நோக்கிய நகர்வில் காலில் தட்டுப்படும் எதையும் உதைக்க அல்லது அப்புறப்படுத்த எவரும் தவறுவதில்லை...அறம் உட்பட...தர்மம் நியாயங்கள், நீதி, நேர்மை என அனைத்தையும் அப்புறப்படுத்திவிட்டுத்தான் அதிகாரத்தை அனுபவிக்க முடிகிறது...
அதிகாரத்தை அடைந்தவன் தனக்கான உலகம் ஒன்றை உருவாக்கிக் கொள்கிறான்...அவனின் ஆழ்மனம் அதிகாரத் துய்ப்பினால் கிடைத்தை அல்லது கிடைக்கப்போகும் இன்பத்தை நோக்கியே அவனை நகர்த்துகிறது...அவ்வாறான நகர்வில் அவன் அதை தனது உள ஆற்றலாக நம்பத்தொடங்குகிறான்...இங்கே நம்பிக்கை என்பதும் நிஜம் என்பதும் வேறுபடுவதை அதிகார போதை ஆட்டத்தில் இருப்பவனால் உணர்ந்து கொள்ள இயலாமல் போகிறது...
குடும்ப அதிகாரத்தைக் கைப்பற்றும் இலக்கு நோக்கிய ஒருவனின் நகர்வு அவனின் ஆழ்மனதில் மூன்று எண்ணங்களை உருவாக்குகிறது...அவனின் தீய எண்ணங்களுடன் செயலும் இயைந்து போவதென்பது காலத்தின் மாபெரும் துயரம்...முதலாவதாக அவன் தான் மூத்தவன் என்பதால் அதிகாரம் அவனிடம் கொடுக்கப்படவேண்டுமென்பது கட்டாயமாகிறதென நம்புகிறான்...அப்படியான அவனின் எண்ணம் அவனுள் அகங்காரத்தை விதைக்கிறது...அகங்காரம் வளர்ந்து தன் கிளைகளாலும் இலைகளாலும் பார்வையை மறைத்துவிடும் என்பது வாழ்வியலில் நாம் காணும் அவலம்...மூன்றாவதாக அகங்காரம் தவறான செயல்களை கட்டுப்படுத்தும் ஆழ்மன கட்டளைகளை மீறச் செய்யும் இதய இயல்பை உருவாக்கும் கீழ்ப்படியாமையை தனது உரிமையென நம்பத் தொடங்கும்...
அதிகாரம் நோக்கி நகரும் மூத்தவன் முதலில் பெற்றோர்களிடம் மற்ற பிள்ளைகளுக்கு இருக்கும் உரிமையை கைப்பற்றுகிறான்... மற்ற உடன் பிறப்புகள் பெற்றோர்களிடமிருந்து பெறும் எதுவாயினும் அது தன் மூலமே அவர்களைச் சென்றடைய வேண்டுமெனும் குடும்ப அமைப்பியலை உருவாக்குகிறான்...அது அன்பாகவோ பாசமாகவோ இருந்தாலும் கூட...
இவ்வாறான சிறையமைப்பியலில் சிக்குண்டு செயலற்றுப் போகிறார்கள் பெற்றவ்ர்களும்...இன்ன பிறரும்...தகப்பன் தனது பெண்பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டிய கடமையை மூத்தவனிடம் விட்டுவிடுவதைத் தவிர வேறு வழியற்றுப் போவது தான் சுடும் கொடுமை... இங்கே திருமணம் செய்து வைக்கப்படப்போகும் உடன்பிறந்த பெண்பிள்ளைகள் அண்ணனால் திணிக்கப்பட்ட மீள வழியற்ற திருமண வாழ்வியல் அழுத்தங்களில் இருந்து விடுபட முடியாமல் வளைய வருவார்கள்.. அவர்களின் காலில் கட்டப்பட்ட கொலுசொலிகளில் இருந்து ஒருவித சோக நாதத்தின் தொடர் ஓசைகள் குடும்பக் காற்றில் கண்ணீரைக் கலந்து சுற்றிக் கொண்டே இருக்கும்...
மற்றவர்களின் சொந்த தனிப்பட்ட வாழ்வில் தனக்கு எந்தவித உரிமையும் இல்லையெனும் உண்மையை தூர வீசிவிட்டு உடன்பிறந்தவர்களின் எதிர்காலத்தை மூத்தவன் முடிவு செய்கிறான்... மூத்தவன் தனது சொந்த வாழ்வின் வாசலெங்கும் வண்ணக் கோலங்களை வரைந்து கொள்வான்...ஆனால் உடன் பிறப்புகளின் வாசல்களில் குப்பைகளை வலிந்து கொட்டுவது நியாயமென எண்ணத் தொடங்குவான்...அது தனது கடமையும் கூட எனும் நினைவில் அவன் அடையும் ஒருவித நிம்மதி தான் அதிகாரத்தின் கோர நகங்களை அவனின் இரும்புக் கரத்தின் விரல்களில் வளரச் செய்கிறது...
அவன் தான் தன் உடன் பிறந்தவர்களுக்கு திருமணம் எனும் ஒன்றின் மூலம் செய்யும் தீங்கை உணரமுடியாத உளத் தூக்கத்தில் ஆழ்ந்துவிடுகிறான்...தெரிந்து செய்யப்படும் செயல்கள் ஞானத்தின் விளைவாகக் கொள்ளப்படும்..அவர்களை சாங்க்ய யோகிகளாக கருதலாம்... அவ்வாறானவர்களின் அரிதான தூக்கம் ஞானயோகிகளின் தூக்கம்...தீய செயல்களை அதிகார அபகரிப்பினால் தான் செய்தே ஆக வேண்டும் என நினைப்பவனின் செயல் கர்மாவின் விளைவுகளாகக் காணப்படும்... அவர்கள் கர்மயோகிகளாகவும் தன்னை காட்டிக் கொள்வார்கள்...இவர்கள் முக்கியமான முடிவுகளில் வேண்டுமென்றே தூக்கத்தில் ஆழ்ந்துவிடுவார்கள்...இது போன்ற தூக்கம் கர்ம யோகிகளின் பொய் தூக்கமென அறியத் தரலாம்...இந்த கர்ம யோகி தனது தூக்கத்திலிருந்து விழித்துப் பார்க்கையில் ஒரு உடன்பிறப்பாவது திருமணத்தால் விளைந்த துக்கத்தில் இருந்தால் அவ்வளவு மகிழ்வை அடைவான்...
லோகேஸ்மிந்த் விவிதா நிஷ்டா ப்ரா ப்ரோக்தா மயா நக
ஜ்ஞாநயோகேந ஸாங்க்யா நாம் கர்ம யோகேந யோகி நாம்...
என்பது கஸ்தூரி ரெங்கனின் வார்த்தைகள்...திருமணம் என்பது ஒருவரின் மீது திணிக்கப்பட்டால் அரங்கன் திணித்தவனின் மேல் தனது வ்யஜ்னத்தால் விசிறுவான்...அவனின் வாழ்வில் அப்போது பலத்த சூறைக் காற்று வீசத் தொடங்குகிறது...
ராகவபிரியன்
தொடரும்...

No comments:
Post a Comment