Tuesday, December 29, 2020

 பனவனும் அரங்கனும் மார்கழியும் அரையர்சேவையும்...6

அரங்கனைக் காண்பது எனும் தத்துவம் பக்தியின் ஆழ் நிலை மனதின் பார்வைகளைப் பொறுத்தது...அது உலக மனிதர்கள் காணும் சராசரி பார்வைகளின் புரிதல் எனும் உளவியல் கூறுகளையும் கடந்த புரிதலுக்கு அப்பாற்பட்ட நிலை...ஆழ்வார்களும் ஆச்சாரியர்களும் மனித மனங்களுக்கு எட்டாத அரங்கனின் உருவ நிஜத்தை அவனின் இருப்பை எங்கும் எல்லாமுமாய் பாவித்திருப்பவனை பக்தி வரலாற்றில் பதித்தே சென்றிருக்கிறார்கள்...ஆச்சாரியர் நிகம்மாந்த மஹாதேசிகர் இந்த அரங்கனை தரிசிக்கும் ஆகச் சாதாரண பக்தன் திருக்கோவிலூர் மண்ணை மிதிக்கும் போதெல்லாம் புரிதலுக்கும் பார்வைக்கும் அப்பாற்பட்ட அரங்கனைத் தான் கண்டதை இந்த நாயினும் கடையேனுக்குக் காட்டிக் கொடுக்கிறார்...அரங்கனை நுகர்தலும் அவனை வியத்தலும் சுலபமல்ல என்பது புரியும் போது ஆழ்ந்த அரங்க பக்தியின் வானமும் அதன் பரிணாமங்களும் வியப்பின் எல்லைகளை நீட்டித்துக் கொண்டிருப்பதையும் அங்கே அரங்கனையும் காணமுடியுமென்பதையும் மொழியின் சில சொற்களுக்குள் அடக்கிவிட முடிவதில்லை...
திருவயிந்தரபுரத்தில் செங்கமல வல்லித்தாயார் ரங்க நாயகியாய் திருவரங்கனைக் காணவேண்டுமெனில்... தேவ நாயகனைப் பார்க்கும் நொடிகள் மனிதக் கண்களுக்கான ஆற்றலைத் தரவேண்டுமெனில்....ஆச்சாரியரை பெண் உடை உடுக்கச் சொல்கிறாள்...சில நூற்றாண்டுகளுக்கு முன் நாடக மேடைகளில் பெண் வேடமிட்டக் கலைஞர்கள் ப்ராகிருத மொழியும் ஆண்வேடமிட்ட கலைஞர்கள் சம்ஸ்கிருதமும் பேசி ஆன்மீக நாடகங்களில் தேவர்கள் அரங்கனிடம் உரையாடியதை...துல்லிய காட்சியின் மூலம்...நிஜமாகவே நமது ஆன்மீக மண்ணின் முன்னோர்களின் மனதில் பதியவைத்துச் சென்றது இன்றும் எவராலும் அழிக்க முடியாத வரலாறு...
ஆச்சாரியரும் பெண்வேடமிட்டு தேவ நாயகனை செங்கமல வல்லித் தாயார் தரிசிப்பது போல நிறைய பாடல்களை ப்ராகிருத மொழியில் செதுக்கிச் சென்றிருக்கிறார்...நேற்று இந்த அடியவனின் அன்னை எனது பெயர்த்தியாய் தனது ஆயுஷ் ஹோம நிகழ்வை இன்னொரு ஆகச் சிறந்த வாழ்வைத் துவக்கிய புனித திரு நாள் தினம்...குடும்ப உளவியல் பார்வைகளும் வாழ்வின் திசைகளைப் புரட்டிச் சென்ற புயலின் நிவாரணமற்ற கணங்களும் உடன் பிறப்புகளையும் உற்றார் உறவினர்களையும் புறக்கணிப்பெனும் பூடக மன நிறைவை அவர்களுக்குத் தருகிறதென்பதால்... பெரும்பாலோர் புறக்கணிக்கப்போகிறார்கள் என்பதை இந்த அடியவனுக்கு அரங்கன் உணர்த்தினார்...புறக்கணிப்புகள் புடம் போடுவதற்கான அணல் கக்கும் தீ...அதில் அரங்கன் காட்சியாய் புலன் களின் புரியாத வானில் புன்னகையுடன் வலம் வருவான்....அரங்கா நீ இந்த அடியவனுக்காக அவ்விடம் வந்து...அங்கே இருக்கையில் உன்னைக் காணும் நொடிகளை மட்டும் தா எனக் கேட்டுக்கொண்டே...அரங்கனின் ரெங்க நாமாவை உச்சரித்துக் கொண்டே... கண்டிப்பாக அரங்கன் நேற்று காட்சி தருவான் என எதிர்பார்த்தே... திருக்கோவிலூர் மண்ணில் பாதம் பதித்தேன்...
இந்த அடியவனின் மகளின் வீடருகில் இருந்த அரங்கன் கோவிலுக்கு காலை எட்டு மணியளவில் ஒருவித ஆன்மீக உந்துதலால் செல்கிறேன்...பூஜையாளர் மிருஷ்ட்டா பூஜைகளை ஆத்மார்த்தமாய்ச் செய்து கொண்டிருக்கிறார்...பாதம் தொடங்கி அரங்கனின் நெற்றியில் வைத்திருந்த திருமண் உலோகப் பதிவு வரை அத்தனையையும் புதுப்பிக்கிறார்...பக்தர்கள் எவருமே இல்லை...உணர்வு பொங்கிப் பிரவகிக்கிறது...ஓங்கிக் குரலெடுத்து ப்ரபந்தங்களை உரத்தக் குரலில் சொல்கிறேன்...அருகிருந்த அரங்க பக்தர்கள் ஒவ்வொருவராக கோவில் வருகிறார்கள்...பூஜையாளர் இந்த அடியவனுக்கு தீர்த்தமும் சடாரியும் சாதிக்கிறார்...
அரங்கனின் உருவம் காட்சியாய் பதியப்பட்டிருக்கும் ஓவியச் சட்டகங்களில் அரங்கனைத் தேடுகிறேன்...எனது மூன்றாவது தங்கையின் குடும்பத்தைச் சேர்ந்த எனது அத்திம்பேர் ஒருவரைத் தவிர...எனது உடன் பிறப்புகளோ வேறு இந்த அடியவன் குடும்பத்தைச் சார்ந்த உறவுகளோ பெயர்த்தியின் ஆயுஷ் ஹோம மற்றும் காதணி விழாவிற்கு வர இயலவில்லை...கண்டிப்பாக அரங்கன் வருவான் என என் பெயர்த்தியை கைகளில் சுமந்து...இதயமெலாம் அரங்கனைச் சுமந்து... என் மகளின் கிராமமெங்கும் தேடுகிறேன்...ஆச்சாரியர் வருகிறார்...அன்று பார்த்த அதே மரக்கிளையில் கிளி ஒன்று பறந்து சிறகடிக்கிறது...வானில் பார்க்கிறேன்...என் ஒருவயது நிறைவடைந்த பெயர்த்தியும் வானைப் பார்க்கிறாள்....கருட பட்சி வட்டமிடுகிறது....ஆச்சாரியரின் பாடல் ஒலிக்கிறது....
ஹியயேஸூ தேவியாணம்
ஜண்ஹயி லஹரீஸூ புண்ண சந்தோவ்வ புடோ
கலூஸ ஜலேஸூவ ஹம்ஸோ
கஸாய கபுரேஸூ டாஸி அச்சுயண கணம்..
ஹ்ருதயே ஷூ தேசிகா நாம்
ஜாஹ் நவீ லஹரீஷூ பூர்ண சந்தர இவ ஸ்ப்புட:
கலுஷ ஜலேஷ்விவ ஹம்ஸ:
கஷாய கர்ப்பபுரேஷூ திஷ்ட்டஸ்யச்சுத ந க்ஷணம்...
[அரங்கனின் கலியுக அவதாரமான ஆச்சாரியர் நிகம்மாந்த மஹா தேசிகர்]
ஆரங்கனடியார்களைக் கைவிடாத தெய்வ நாயகனே...காவிரியின் தெளிந்த நீரில் ஒளிரும் முழு நிலவைப் போன்ற பிரகாசத்தை...உன் உருவத்தின் ஒளி ரூபத்தை ....களங்கமற்ற அடியவர்களின் உள்ளத்தில் காட்சிப் படுத்துகிறாய்...கலங்கிய நீர் நிலைகளில் புனிதனெனும் அன்னப் பறவை நின்றுகொண்டிருப்பது சாத்தியமல்ல...அது உடனே பறந்து விடும்..அன்னப்பறவையென குற்றமுள்ள இதயங்களில்... அரங்கனுக்கு தீங்கு நினைக்கும் இதயங்களில் இருந்தும்... இடங்களில் இருந்தும்... நீ உடனே மறைந்துவிடுகிறாய்...பறந்தும் போய் விடுகிறாய்...களங்க மற்ற தூய பக்தி உள்ளத்தில் நீ காட்சி தருகிறாய்... நிரந்தரக் காட்சியாகவும் மாறிவிடுகிறாய்....
உள்ளம் மிகவும் எடை குறைந்து மிதக்கத் தொடங்கியது...ஆச்சாரியரின் பாடல் வரிகள் புரிந்த கணம்...புனிதத்தின் உண்மை கணம்... விழாவின் நெரிசல் புகையூடே...ஹோமப் படலத்தின் அடர்வில் இந்த அடியவனின் பார்வையாய்த் திருப்ப...கண்கள் அரங்கனைத் தேடத்தொடங்கியது....எங்களின் பருப்புத் தேங்காய் எனும் சீர் வரிசை வைக்கப்பட்டிருந்த அந்தக் கூட்டில் ஒரு கணம் அரங்கன் ஆரோகணித்தான்...அரங்க நாயகியும் சேர்த்திச் சேவையில் வலதுபுறம் காட்சிதர...ஒரு நொடியில் படமெடுத்தேன்...அரங்கனின் தெய்வீகக் காட்சி நிழற்பட சட்டகங்களில் சிக்குவதில்லை....அரங்கனைச் சிக்க வைப்பதென்பது அவ்வளவு எளிதும் அல்ல....பார்க்கத் தெரிந்த ஆன்மீக நம்பிக்கையுள்ள பார்வைகளுக்காக அந்த நிழற்படத்தை இங்கே பதிவேற்றுகிறேன்...இது வரலாறென்பதால் புறக்கணிக்க முடியவில்லை....புறக்கணிப்பின் கணங்கள் இந்த அடியவனை அரங்கனிடம் இன்னும் நெருங்கிச் செல்ல
பூச்செடிகள் பூத்துக் குலுங்கும் பாதையொன்றில் நீர்தெளித்து வண்ணக்கோலங்கள் போடுகின்றன....உண்மைகளின் இன்னொரு பெயர் தான் அரங்கன்...
திருவரங்கன் திருவடிகளே சரணம்...
ஆச்சாரியன் திருவடிகளே சரணம்...
ராகவபிரியன்

Saturday, December 26, 2020

 பனவனும் அரங்கனும் மார்கழியும் அரையர்சேவையும் 5

பக்தியின் இரு நிலைகள் கடினத்தன்மை கொண்டவை...உயிரைப் பணயம் வைத்து அரங்கன் மேல் ஆழ்ந்த பக்தி கொள்வது...இதில் சுயலாபத்திற்கோ தன்னலத்திற்கோ இடமிருப்பதில்லை...இன்னொரு நிலை... பக்தி செய்து பார்பதால் கிடைக்கும் பலனை நினைத்துச் செயலாற்றும் நிலை...இரண்டாவது நிலையில் வேடங்கள் தேவைப்படும்...முதல் நிலையில் வாழ்வின் அடுத்த நொடிகூட நிச்சயமற்றிருக்கும்...இருப்பினும் மனமெங்கும் அரங்கன் நிறைந்து நிற்பான்...கிடப்பான்...இருப்பான்....அப்படியான ஆழ் நிலை பக்திக்கு ஆட்பட்ட பராசரபட்டர்...தன் அன்னையிடத்தில் வருகிறார்...அம்மா...அரங்கனின் அத்யயனோத்சவம் நடந்து கொண்டிருக்கிறது...ஏகாதசி வேறு...முதலாம் குலோத்துங்க சோழனின் ஆணைப்படி நிறைய பெரிய அவசரம் பெருமாளுக்குத் தயாராகி வருகிறது....
கல்வெட்டின் வாசகங்களை காப்பி பேஸ்ட் செய்திருக்கிறேன்...
[ஸ்வஸ்தி ஸ்ரீ புகழ் சூழந்த புணரி அகழ் சூழந்த புவியில் என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியுடன் கூடிய கல்வெட்டில்
திருவெ...திருவாய்மொழி கெட்டருளும் பொது திருநாள் தொறும் அமுது செய்தருளும் அட்டமுது நூறுக்கு வெண்டும் அரிசிக்கும் பருப்பு நெய்....]
வைகுண்ட ஏகாதசி...என்பதால் இன்று பக்தர்களுக்கும் அரங்கனுக்கும் மட்டுமே அமுது படைக்கப்படும்...உனக்கோ வயதாகிவிட்டது...இன்று உபவாசம் தவிர்த்து நீயும் அமுது கொள்...அரங்கனின் மூன்றாம் பிரகார குலோத்துங்கந் கல்வெட்டில் கேட்டருளுதல் என்பதை கெட்டருளுதல் என்று பொறிக்கப்பட்டிருக்கிறது...வயோதிகத்தால் அரங்க பக்தரோ பக்தையோ வைகுண்ட ஏகாதசி உபவாசம் கடுமையாக கடைபிடித்தால் அரங்கன் திருவாய்மொழிகளை கேட்டருளுவதற்குபதில் அதைச் சாதிக்கும் எங்களுக்குக் கெட்டருள நேரிடும்...என்று நகைச் சுவையாகக் குறிப்பிட்டார்...
முதல் நிலை பக்தியின் கடுமையான மனச்சூழலில் இருந்த ஆண்டாள் அம்மங்கார் அம்மையார்...அரங்க நாயகியிடம் வந்து தன் மகன் ஆச்சாரியராய் இருந்தாலும் அவனின் உடல் நிலை கவலை தருவதாகச் சொல்ல...அரங்க நாயகி...நான் பார்த்துக்கொள்கிறேன்...என்பது போல் குறிப்புணர்த்துகிறாள்...அரங்கத்தம்மாவாயிற்றே....ஆழ் நிலை பக்தியின் கடுமைத் தன்மையைச் சோதிக்க அரங்கன் முடிவு செய்தான்...மறு நாள் பட்டரிடம் அவரின் தாயார் துவாதசி பாரணை செய்யும் படிச் சொல்கிறார்...பராசரர்...அத்யயனோத்சவம் நடைபெறும் தெய்வீக நிகழ் களம் தன்னலங்களை தன்னுடன் சேர்த்துக் கொள்வதில்லை...இன்றைய நம்மாழ்வார் பாசுரங்கள் முடிந்தவுடன் அமுது செய்யலாம் எனச் சொல்லி வேகமாக வர திருவரங்கக் கோவிலின் வடக்கு வாசற் கதவு தாளிடப்பட்டிருக்கிறது...
அரங்கனின் கட்டளையால் தொடர்ந்து திவ்ய பிரபந்தங்கள் வாசிக்கும் இந்த அடியவன் இன்றும் துவாதசி ஆராதனைகள் முடிந்து பதினொன்றரை மணியளவில் எங்களூர் கோவில் வருகிறேன்...உளவியல் கோளாறுகளால் பக்தியின் இரண்டாம் நிலை மாந்தர்கள் கோவிலைப் பூட்டியிருக்கிறார்கள்...எப்போதும் வெளிவாசல் திறந்திருக்கும்...குலசேகரப்படியின் அருகில் அமர்ந்தே அடியவன் பிரபந்தம் படிப்பது வழக்கம்...இன்று வெளிவாசற்கதவும் பூட்டப்பட்டிருக்கிறது...நேற்றிரவே அரங்கன் இன்று முதல் திருவாய்மொழிப் பாசுரங்களைப் படிக்கும் படி கட்டளையிட்டிருக்கிறான்...
பராசர பட்டர் அரங்க நாயகியின் மேல் ஒரு அதிசயமான பாடலைச் சொல்ல...வடக்கு வாசற் திருக்கதவம் திறக்கிறது...
யத் ப்ரு பங்கா: ப்ரமாணம்
ஸ்திர சர ரசநா தாரதம்யே முராரே:
வேதாந்தா: தத்வ சிந்தாம்
முரபித் உரசி யத் பாத சிஹ்நை: தரந்தி
போக உபோத்காத கேளீ சுளுகித
பகவத் வைஸ்வ ரூப்ய அநுபவா
ஸா நா: ஸ்ரீ: ஆஸ்தறு ணீதாம்
அமருதல ஹரிதீ லங்கநீயை: அபாங்கை:
அரங்க நாயகியே அன்னையே...நேற்றைய குங்கும அர்சனையால் உன் அர்ச்சை சிவந்திருக்கிறது...ஏனிந்த கோபம்...[தத்வ சிந்தாம்
முரபித் உரசி யத் பாத சிஹ்நை] ...உன் சிவந்த உருவம் மனக்கண்ணில் கண்டபின்பு வேறு தெய்வங்களைக் காணவேண்டிய அவசியமில்லையே...என்று மனமுருகிப் பாடுவது போல்...
நடு வீதியில் அமர்ந்து திருவாய்மொழிப் பாசுரங்களைப் பாட நேருமென அப்போது இந்த அடியவன் அறியவில்லை...
துவாதசி பாரணை முடிந்து கடைசீ உணவும் பரிமாறப்பட்டு எல்லோரும் கோவிலை விட்டு வெளிவருகிறார்கள்...அரங்க நாயகி என்பது அப்போது முதல் நிலை பக்திக்கும் இரண்டாம் நிலை பக்திக்கும் தெரியவில்லை...தெய்வீக நிகழ்வின் நொடி கண்ணின் பார்வையை மறைக்கும் சக்தியுள்ளது...ஒரு நடுத்தர வயது ஏழைப் பெண்மணி கோவிலில் இருந்து வெளிவந்தவர்களிடம் தனக்குப் பசிக்கிறது என்று சொல்வதைக் காண என் உள்ளம் பதைபதைக்கிறது...வாசலில் இருந்து கவனித்துக் கொண்டிருந்தேன்..முதலில் உணவு தீர்ந்துவிட்டது என்று சொன்னவர்கள்...உணவுக்கூடத்திலிருந்து வெளிவந்த ஒருவரிடம்...இந்த அம்மாவுக்கு சாதமும் கொஞ்சம் சாம்பாரும் கொடுங்கோ ...என்று சொல்ல...கடும் வெயிலடிக்கும் வெளிவாசலின் ஒற்றைத் திண்ணையில் அந்தப் பெண்மணி அமர்ந்து கொள்கிறாள்...நான் சென்று நிழலில் அமர்ந்து கொள்ளுங்கள் என்று சொல்வதற்குள்...ஒரு கிழிந்த வாழையிலையில் நிறைய சாதம் பரிமாறப்படுகிறது...வேறு வழியின்றி அந்த அம்மையார் கடுமையான பசியின் தாக்கத்தால் அள்ளி அள்ளி வாயில் போட்டுக் கொள்கிறார்...[அம்மா அரங்க நாயகியே இது என்ன விளையாட்டு...]என்று ஒரு பொருளற்ற நெருடல் உள் மனதில்...உடனே படம் எடுத்துக் கொள்கிறேன்...
திவ்ய பிரபந்தம் வாசித்து வீட்டின் வாசலில் நிற்கிறேன்...ஓரிண்டு நாட்களுக்கு முன் அரங்கனின் பாததரிசனம் காணும் வாய்பளித்த அதே இடத்தில் இன்று ஒரு பெண்குழந்தை தடுமாறி கீழே விழுகிறாள்...அவளின் கையிலிருந்த குங்குமம்...இன்னும் எங்கள் வீட்டு வாசலில் கொட்டிக் கிடக்கிறது...
வடக்குத் திருவாசல் திறந்து அரங்க நாயகியின் காட்சியை கருணையை அனுபவித்த பராசரர் ஸ்ரீகுணரத்ன கோசம் எழுதினார்...இன்னும் கொடிய பகை நிறைந்து கிடக்கும் உளம் நிறை இரண்டாம் பக்தி நிலை பக்தர்களுக்கான கோவில் மனக்கதவம் திறக்காதோ என்று உளமெலாம் அரங்க நாயகியின் குங்குமம் கொட்டிக்கிடக்கும் வாசலென சிவந்த கண்களுடன் பூட்டிக்கிடக்கும் அரங்கனின் திருக்கோவில் கதவுகளையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்...
அன்னை என் செய்யில் என்..ஊர் என் சொல்லின் என்...
என்னை உமக்கு இனி ஆசையில்லை...அகப்பட்டேன்...
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி
மன்னன் வசுதேவன் வலையுளே...
நம்மாழ்வார்....
திருவரங்கன் திருவடிகளே சரணம்....
திருவரங்க நாயகி திருவடிகளே சரணம்...
சடகோபன் திருவடிகளே சரணம்....
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்...
ராகவபிரியன்

Friday, December 25, 2020

 பனவனும் மார்கழியும் அரங்கனும் அரையர் சேவையும்...4

ஆன்மீக முதலீடு செய்திருப்பவன் அரங்கன் மட்டுமே...இவ்வுலகில் ஆன்மீகம் மூலம் பிழைப்பு நடத்துபவர்கள் அரங்கனின் முதலீட்டிலிருந்து வரும் வருமானத்தை அனுபவிப்பவர்கள் மட்டுமே...அது போன்றவர்கள் உயர்ந்த குணங்களையும் உயர்ந்த சிந்தனையையும் அரங்கன் சேவையே வாழ்வின் உயர்விற்கு வழி என்ற உண்மையின் நிலையையும் மனதில் கொண்டவர்களாக இருத்தல் வேண்டும்...சம்பாதிப்பதற்கு எத்தனையோ சுலபமான வழிகள் உள்ளன...நிறைய சம்பாதித்தவர்கள் நிஜமாகவே அரங்கனின் சேவையில் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் இருப்பவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கி வழிவிடவேண்டும்..இல்லையேல் அரங்கனின் அளவிலா திருவிளையாட்டுகளில் தோற்று வாழ்விழக்கவேண்டிவரும்...அரங்கனின் பூஜைகளை பற்றியும் அரங்க சேவையைப் பற்றியும் அறியாத ஆகம ஆன்மீக அடைப்படையறிவற்றர்கள் வெறும் பிறப்பால் கோவில் பூஜைகளில் ஈடுபடுவது பேராபத்தானது என்பதை உணரவேண்டும்... வன்முறைகளால் அரங்கனின் அடியவனையும் அரங்க பக்தர்களையும் இப்போது மட்டுமல்ல எப்போதுமே வீழ்த்திவிடமுடியாது...
1371 பரிதாபி வருடம் கோபணார்யர் சத்யமங்கலத்தில் 102 வயதான ஆச்சாரியர் நிகம்மாந்த மஹாதேசிகரைச் சந்திக்கிறார்...நாற்பத்தெட்டு ஆண்டுகளாய் உலகெலாம் சுற்றி வந்த அரங்கன் திருவரங்கம் திரும்பும் வேளை வந்துவிட்டதென கூறுகிறார்...இஸ்லாமிய படைகள்... விஜய நகரப் படையுடன் கூட்டுச் சேர்ந்த திருவரங்கனின் தொண்டர்படைகளின் ஆக்ரோஷமான தாக்குதலில் நிலைகுலைந்து இன்றைய சமயபுரம் அன்றைய கண்ணனூரிலிருந்து தோற்றோடுகின்றன...இஸ்லாமியர்களால் மசூதியாக மாற்றப்பட்ட ஒய்சலேச்வரர் கோவிலை மீண்டும் புதுப்பித்துக் கட்டினார் கோபணார்யர்...இன்றும் சமயபுரத்தில் பொய்ச்சலேச்வரர் கோவில் என்ற அதே புதிய பெயரில்...கம்பிரம் குறையாமல்... கோபணார்யரின் அரங்க பக்தியையும் ஆற்றலையும் ஆன்மீக வரலாற்று நிஜத்தையும் உலகிற்கு உரத்துச் சொல்லிக்கொண்டிருக்கிறது...
ஆரவாரமுடன் அரங்கனின் கடுமையான சோதனைகளையும் தாக்குதல்களையும் தாங்கி மீண்ட நம்பெருமாள் விக்ரஹம் திருவரங்கத்தில் நுழைகிறது...ஏற்கனவே நம்பெருமாள் விக்ரஹம் ஒன்று அங்கே பூஜிக்கப்படுகிறது...வடதிருக்காவேரியின் மறுகரையில் அப்போதிருந்த அரங்க பக்தர்கள் காய்ந்து கிடந்த சுடுமணலிலும்...கடுமையாள வெள்ள நீரிலும் திருவரங்கம் வந்து...தினமும் அரங்கனின் சேவையை முடித்த பிறகே அன்றாடம் உணவு உண்பார்கள்...அதுவரை தலைமுறைகளாய் பின்பற்றப்பட்ட தொன்ம நிகழ்வு...இன்றும் கூட ஒரு சில குடும்பங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது....நாற்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்...அதாவது...1328ல் நிகழ்ந்த இஸ்லாமிய படையெடுப்பால் திருவரங்கனை கல்சுவர் எழுப்பி ஆச்சாரியர் நிகம்மாந்த மஹாதேசிகர் மூடிவிடுகிறார்... மூல அரங்கன் தன்னை மூடிக்கொண்டுவிட்டார்...நம்பெருமாள் விக்ரஹம் சுமந்து அரங்கனின் ஆத்மார்த்த வரலாற்றில் தன் பெயர் பொறித்துச் சென்ற குலசேகரனும்...மஹான் பிள்ளை லோகாச்சாரியரும்...சுமந்து தோள்கள் வலியெடுக்க அரங்கனை தென்திசை கூட்டிச் சென்றுவிட்டார்கள்...வடதிருக்காவிரியின் அக்கரையைச் சேர்ந்த அரங்க பக்தர்கள் அரங்கனின் பூஜைகளைக் காணாமல்...உண்ண மாட்டார்கள் என்பதால்...தொடர் பட்டினியாய் இறக்கத் தொடங்கினார்கள்...பக்தர்களின் மரணம் பெருமாளை அசைத்துப் பார்த்தது...அரங்கன் ஒரு வயதானவர் வேடம் எடுத்து... நம்பெருமாள் விக்ரஹம் இங்கே தான் ஓளித்து வைத்திருக்கப்பட்டிருந்தது...இனி பூஜைகள் நடைபெறட்டும் என்று சொல்லி அங்கிருந்த பட்டர்களிடம் கொடுத்து உடனே தன் உடலெடுத்த அவதார காரியத்தை நிறைவு செய்கிறார்...வேறெந்த தகவல்களும் கிடைக்காமல்...கடந்த இருபதாண்டுகளுக்கும் மேல் மீண்டும் நம்பெருமாளுக்கான நித்ய ஆராதனங்கள் நிகழ த்தொடங்கின...இதைப்பற்றிய கவலையெதுவுமின்றி... வடதிருக்காவிரியின் ஆத்மார்த்த அரங்க பக்தர்களின் சந்ததிகள் அரங்க பூஜையை மீண்டும் கண்டு தங்களின் வாழ்வை தொடர்ந்து கொண்டிருந்தார்கள்...
நம்பெருமாள் நாற்பத்தெட்டு ஆண்டுகளுக்குப் பின் உள்ளே வருகிறார்...ஆச்சாரியர் நிகம்மாந்த மஹாதேசிகரும்...கோபணார்யரும் வருகிறார்கள்...ஏற்கனவே பூஜைகளை ஏற்றுக் கொண்டிருந்த அரங்கனே வடிவமைத்த நம்பெருமாள் அட்டகாசமான புன்னகையுடன் உலகம் சுற்றி பக்தர்களையெல்லாம் பார்த்துவிட்டு நாற்பதெட்டு ஆண்டுகளுக்குப் பின் வரும் நம்பெருமாளின் அசல் பிரதியை வரவேற்கிறார்...பூஜிக்கும் பாத்யதைப் பட்ட பட்டர்களுக்குச் சந்தேகம்...எது நிஜம் எது போலி...?வைகானசம் நிஜமா...பாஞ்சராத்ரம் போலியா...?பாஞ்சராத்ர ராமானுச தென்கலை அய்யங்கார்கள் அய்யங்கார் என்று சொல்லிக்கொண்டால் இன்னமும் கோபம் கொள்ளும் சில போலி வைகானசர்கள் இன்றிருப்பது போல் அன்றும் இருந்தார்கள்...அவர்களின் கபட நாடகமறிந்த ஆச்சாரியர்...தொன்னூறு வயதான... அரங்கனின் வஸ்திரங்களைத் துவைத்துத் தரும் முதிய வண்ணார் எனும் அரங்க பக்தரை வரச்சொல்கிறார்...அவர் கண்பார்வை பறிபோனாலும்...இரண்டு நம்பெருமாளுக்கும் திருமஞ்சனம் செய்த ஆடைகளைக் களைந்து அதன் தீர்த்தச் சுவையில் நிஜ நம்பெருமாளைக் காட்டிக் கொடுக்கிறார்...ரங்கா ரங்கா என்ற கோஷம் வானைப் பிளக்கிறது...மூடப்பட்ட செங்கற்களை தன் 102 வயதான நடுங்கும் தன் புனிதக்கரங்களால் ஆச்சாரியர் ஒவ்வொன்றாய் அகற்றுகிறார்...உயர்வற உயர் நலம் உடைய மூல அரங்கனின் அர்ச்சை வடிவில் அப்படியே புத்தம் புதிதாக செந்நிற பட்டு வஸ்திரம் அணிந்து காட்சிதருகிறான்...அங்கிருந்த பூஜைப் பொருட்கள் கடைசீயாக சூட்டப்பட்டிருந்த மாலைகள் மற்ற அனைத்தும் புழுதிகூட படியாமல் இருக்க...ஆச்சாரியரின் கண்களில் இருந்து கண்ணீரும் அவரின் மனதில் பொங்கியெழுந்த அரங்கனின் பாடல்களும் நிற்கவே இல்லை...கோபணார்யரைக் கட்டித் தழுவி ஆச்சார்ய ஆசுகவி ஒரு பாடல் சொல்கிறார்...இன்றும் திருவரங்கனின் கோவில் கல்வெட்டில் காலத்தால் அழிக்க முடியாதபடி செதுக்கப்பட்டிருக்கிறது இந்த வரலாறு....
ஆநீயா நீலஸ்ருங்கத் யுதிரசித ஜகத்ரஞ் ஜனதஞ்ச நாதஞ்ஜானாத்ரேஜ்
செஞ்சியாமாராத்யகஞ்சித ஸமயமத நிகன்யோத்த நுஷ்கான்ஸ துலாஷ்காத்
லக்ஷ்மீ கஷ்மாப்யா மூபாப்யாம் ஶநிஜ நிலயஸ்தாபயந் ரங்கனாதம்
ஸம்யக்வர்யாம் ஸ்பரியாம் குருத நிஜயஸோதர்ப்புணோ கோபணார்ய..
எங்கெங்கோ சுற்றி....திருப்பதி வந்து...அங்கிருந்த கலியுக வரதன் எம்பெருமானுடன் அளவாளாவி மகிழ்ந்து பின் செஞ்சி வந்து அரங்க பூஜைக்காகவே தன்னை அர்பணித்துக் கொண்ட அரங்க பக்தர்களால் பூஜிக்கப்பட்ட ஆச்சர்யமான எங்கள் அரங்கனை...மீண்டும் திருவரங்கம் எழுந்தருளப்பண்ணிய கோபணார்யர்..கொடிய துலுக்கர்களை மட்டும் வெல்லவில்லை...அரங்கனுக்கும் அரங்க பக்தர்களுக்கும் தீங்கு செய்த அத்தனை அராஜக பக்தியற்ற கீழ்தரமான மானுடர்களையும் வென்று வந்திருக்கிறார்...
மேற்கண்ட ஆச்சாரியனின் வரலாற்றுப் பதிவு இன்றும் தர்மவர்மாவின் திருச்சுற்று கற்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது....
கடந்த சில வருடங்களாக அரங்கனையும் ஆழ்வார்களையும் அரங்க பக்தர்களையும் ஒலிபெருக்கியில் மார்கழி மாதம் முழுவதும் ஒரு பிராமண துவேஷ போலி பூஜையாளர் சொற்தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தான்...தற்போது இன்னும் மிகவும் தரம் தாழ்ந்து அய்யர் என்றாலும் அய்யங்கார் என்றாலும் தனக்குக் கோபம் வருகிறது என்று இருமாப்புடன் சப்த வெறும் கூச்சலுடன் முழங்குகிறான்...அது மட்டுமல்ல...தன்னை....தனது ஆன்மீகப் போதாமையை...ஆகம அறிவின் பற்றாக்குறையை சுட்டிக் காட்டி கேள்வி கேட்பவர்களை தனிமைப் படுத்தி...கோவிலில் நுழையாமல் செய்வது மட்டுமல்ல... அவ்வூர் வாழும் அறம் சார் மனிதர்களைக்கூட வாழ் நாள் பகைவர்களாக மாற்றி எளிதாக அழித்துவிடமுடியுமென்றும் ஆணவ சூளுரைக்கிறான்...என்ன செய்வதரங்கா...என்று இந்த அடியவன் அரங்கன் முன் சாஷ்ட்டாங்கமாய் விழுந்து....திருவரங்கனின் பாதகமலங்களைப் பற்றியபடி....சக்தியற்று மன்றாடிக்கொண்டிருக்கிறான்...
நேற்று ஒரு குட்டிப் பையனாய் தளர் நடையுடன் இந்த அடியவனின் எதிரே தடுமாறி விழுகிறான்...நான் ஓடிச் சென்று குழந்தையைத்தூக்காமல் உன் அம்மா எங்கே என்று கேட்கிறேன்...உடன் வந்த இன்னொரு சின்னஞ்சிறிய பெண்குழந்தை அருமையாக எப்படி அந்தப் பையன் விழுந்தான் என மழலையில் அற்புதமான நாடக பாவங்களுடன் விளக்குகிறாள்... மெய் மறந்து போகிறேன்...அந்த தீய எண்ணம் கொண்ட கயவனின் செயல்கள் கேள்விகள் என் வாழ்வின் அமைதியை கெடுக்கும் சதிவேலைகள்...சிலவருடங்களாகவே பதில்கள் அற்று இருக்கும் கொடிய சூழலின் பாலைத் திண்ணையில் அமர்ந்து வேதனையுடன் கைபேசியைத் திறந்தால் சுபாஷ் கோப்லாவின் ஆச்சர்யமான அட்டகாசமானபதிவு...அப்படியே அந்தக் கயவனின் கேள்விகளுக்கு சம்மடியடியாய் பதில்கள்...தடுமாறி விழுந்த குழந்தையின் அரங்க பாதம் கண்முன்னே சட்டென்று வர...மெய்மறந்த நொடிமுன்னான சிந்தனை மெய்சிலிர்ப்பில் சூழல் பாலைத் திண்ணையெங்கும் பூமாறிப் பொழிகிறது... மனமெங்கும் அப்படியொரு ஆன்மீக நிம்மதி...இதற்கு முந்தைய பதிவில் சுபாஷ் கோப்ளாவின் பதிவை அப்படியே பகிர்ந்திருக்கிறேன்.....
கீழே குழந்தையாய் விழுந்த என்னை நீ வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தாய்...நீ விழும்போதெல்லாம் நான் கை தூக்கிவிட்டேனே...என்று அரங்கன் குழந்தைச் சிரிப்புடன் மழலைத் தமிழின் அமிழ்தினும் இனிய வார்த்தைகளில் சொல்வது....பொட்டில் தொடர் சுத்தியல் கைகொண்டு பளார் என அறைந்தது...வந்தது அரங்கனென்று அறியாமல் போனேனே...அரங்கன் தளிர் நடையுடன் தடுமாறி பாத தரினம் தந்த அந்த அரிய காட்சியை மீண்டும் காண மனம் ஏங்குகிறது...பதில்களாய் என் கைபேசியெங்கும் அரங்கனின்...ஆச்சாரியனின்...நம்மாழ்வாரின் சொற்கள் பட்டாடையுடுத்தி பவனி வருகின்றன...கண்களில் ஒற்றிக் கொள்கிறேன்...இனி அந்தக் கயவனாலோ இல்லை அவனின் அடியாட்களாலோ என் உயிர் பிரிந்தாலும் மகிழ்வேன்...அரங்கனின் பாத வரிகளில் இந்த அடியவனும் நிரந்தரமாய் நெளிந்து கிடப்பேன்....
திருவரங்கன் திருவடிகளே சரணம்...
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்...
ராகவபிரியன்

Thursday, December 17, 2020

 படைப்பொன்றின் இடைச்செருகல்களாய் புகழ்தொன்மச் சிறுபுனைவுகளை இணைத்து புரியாத மொழியின் புதிர்வரிகளால் ஆக்கப்படும் ஆக்கங்கள் எண்பதுகளில் மேலை இலக்கியங்களில் பின் நவீனமாகக் கருதப்பட்டது நிஜம்...இடைச்செருகும் தொன்மங்களின் தேர்வின் அளவு கோள்கள் படைப்பாளனின் வாசிப்பின் ஆழத்தைக் காட்டுவதாக வாசகர்கள் உணர்ந்து கொள்வார்கள் அல்லது பிரமித்துப் போவார்கள் என்பதை ஊகத்தால் தனதாக்கி வெளிவந்து தோல்விகளைத் தழுவி...பின் நவீனமென்பது அதுவல்ல என்பதை உரத்து இலக்கிய உலகிற்குச் சொல்லிச் சென்றது யாருக்கும் கட்டுப்படாத காலம்...எண்பதுகளின் இறுதி இலக்கியப் படைப்புகள்...காலத்தின் அசுரப் பிடியில் சிக்கி நெளிந்து கொண்டிருக்கின்றன...தொன்மங்கள் என்பது எழுத்துருவமற்ற சொற்சேர்க்கைகளின் நீட்சி...தொடர்ந்து...சில ஆயிரவருடங்களுக்குப் பின் எழுத்துருவம் பெற்று...சமுதாயக் கூட்டத்தின் சில பிரிவுகளால் இன்னமும் வாழ்வின் சில கணங்களில் உச்சரிக்கப்படுபவை...தொன்மங்கள் படைப்பாளியின் வாசிப்பின் ஆழத்தை ஒருபோதும் வெளிப்படுத்துவதில்லை...செம்புலப்பெயல் நீர் போல என்ற ஒரு தொன்மத்தை இடைச்செருகலாய் கொண்ட படைப்பின் படைப்பாசிரியர் சங்க இலக்கியங்கள் அத்தனையையும் ஒரு முறையாவது வாசித்திருப்பார் என்பதற்கான உத்தரவாதமாய் கொள்வது பூனை பிடிப்பவர் புலியை பிடிக்கும் சக்தியுடையவர் என்பது போன்றது...சரி பின் நவீன படைப்பில் தொன்மங்கள் கையாள்வது சொல்லாட்சி சாதனங்களில் ஒன்றென அறுதியிட்டுக் கூறமுடியாதா என்ற கேள்வியை தன்னிடம் கேட்டு விடாதீர்கள் என்று கெஞ்சுகிறார்...ப்ரெஞ்சு மொழியியல் அறிஞர்...ஹெரால்ட் ஆரம் வீஸா...நேரியல் எழுத்தும் நேரியல் சாரா எழுத்தும் பின் நவீன மொழியில் இல்லையா என்ற ஒரு கேள்வியை அவர் இன்றைய இலக்கியப் படைப்பாளிகளைப் பார்த்துக் கேட்கிறார்...ஒரு காலத்தின் மறக்கமுடியா நிகழ்வொன்றை தாங்கி நிற்கும் கதைகளின் வடிவம் பெரிதாகவோ சிறிதாகவோ இருக்கலாம்...அது சிதைந்து விடாமல் இருக்கவேண்டும்...நேரியல் எழுத்தின் அடிப்படை வாதம் இதுவென உரத்துச் சொல்லவும் முடிவதில்லை என்பதே நிஜம்...தஞ்சைக் கோபுரத்தின் நிழல் தரையில் விழுவதில்லை என்பது ராஜராஜ சோழனுக்குக் கண்டிப்பாய்த் தெரியும் என்றெழுதுவது நேரியல் சாரா எழுத்தென வாதிட முடியுமா...? நவீனமோ...அல்லது அதன் பின் நின்றுகொண்டிருக்கும் பின் நவீனமோ....எதுவாக இருப்பினும் வாசகனுக்கும் காலத்திற்கும் சுமையாகிவிடக்கூடாதெனச் சொல்கிறார்கள் மொழியியல் ஆய்வர்கள்...மார்க் எஸ் புல்லரும்...ப்ரெஞ்சீ எப் அப்ளேயும்...சுமைதரக்கூடிய எதுவும் இறக்கி வைக்கப்பட்டுவிடும்...தோளில் இருந்து மட்டுமல்ல...காலத்தின் தூணொன்றிலிருந்தும்...இனி உங்களுக்காக ஒரு பின் நவீன தொன்ம இடைச்செருகல்கள் உள்ளடக்கிய ஒரு கவிதை....???

பழைய காலம் ஒன்றை
என் முன்னே
நீல பத்மனாபனின்
கழுதை புரண்ட களமாய்
விரித்துப் போடுகிறாள்...
அங்கே கட்டிக் கிடந்தது
குதிரையெனவும்
அவ்வப்போது சாதிக்கிறாள்...
குளம்பின் லாடத்திலிருந்து
நழுவிக் கிடக்கும்
ஆணியொன்றின்
துரு கோர்த்த வார்த்தைகளைக்
கட்டும்
நுகத்தடியின் வளையம்
பிடுங்கியெறியப்பட்டிருக்கிறது...
சேனம் தைக்கும் ஊசியால்
அவளின் பார்வைகள்
வடிவமைக்கப்பட்ட
குதிரையின் முதுகில்
காலம் ஏறி அமர்ந்து கொள்கிறது...
கழுதைச் சாணங்களுக்கும்
குதிரை விட்டைகளுக்குமான
வாசத்தின் இடைவெளிகளில்
எனது கடந்த காலத்தின்
கிளியொன்றை
கூண்டில் அடைக்கிறேன்...
கழுதை சுமந்த
சுமைகள்
களமெங்கும்
புழுதிகளாய்
கிடக்கையில்
என் கால்களுக்கான
லாடங்களை
கையில் எடுத்து வருகிறது
அவளுடன் காலமும்...
குதிரையின் வேகம் கூட்டிய
எனது நிகழ்வின்
முகத்தில்
இப்போதும் கூட
தேடிக்கண்டடைவதற்கான
யாயும் யாயும் யாராகியரோ
என்ற கடிவாளம்
பொருந்திப் போவதில்லை...
களத்தில் விரித்துக் கிடக்கும்
கோணியில்
நான் மூடிக்கிடக்கும்
அடைகளுக்குள்
படங்களாய்க் கிடக்கிறேன்...
கூண்டு திறந்த
காலக்கிளி
என் அவலத்தின் கணங்களை
தன் அலகால்
ஒவ்வொன்றாய்
எடுத்தெறிந்து
புறக்கணிக்கிறது...
கழுதை புரண்ட களமெங்கும்
காலக்கிளியின்
பாதத் தடங்கள்...
என் லாடத்தின் ஆணியொன்றின்
துருவாய் அப்பிக் கிடக்கின்றன...
ராகவபிரியன்

Wednesday, December 16, 2020

 RAGAVAPRIYAN THEJESWI HAS SO FAR PUBLISHED


14BOOKS IN ENGLISH AND TAMIL ON LITERATURE AND RELIGION...

 பனவனும் அரங்கனும் மார்கழியும் அரையர்சேவையும்...1

பனவனின் வாழ்வியல் பக்தியுடன் துவங்கி பக்தியினாலேயே கட்டமைக்கப்பட்டு பக்தியாய் முடிவு பெறும்...இது கோட்பாடல்ல...சித்தாந்தமும் அல்ல...பனவனின் வாழ்வியல் உண்மை...திருவரங்கத்தில் பிறந்த பனவன் அரங்கனின் பக்தியெனும் கண்ணினுன் சிறுதாம்பினால் கட்டப்படுகிறான்...பிறகான அவனின் விடுதலையென்பது அரங்கனிடமே காணிக்கையாகிக்கிடக்கும்...திருவரங்க பனவன் அரையராகவே அரங்கன் மேல் அனுதினமும் எல்லா இடங்களிலும் நீக்கமற தாள நயத்துடன் ஆழ்வாரின் பாடல்களை உரத்துப் பாடித்திரிகிறான்....ஒரு சில நேரம் உரத்தும்...ஒருசில நேரங்களில் மெளனமாயும்...அப்படியான அரங்க பனவனின் அபரிமிதமான பக்தியை மையப்படுத்தி நிறைய கதைகளை சுற்று மாந்தர்கள் வாழ்வின் சுற்றுக்களில் சுழலவிட்டிருப்பார்கள்...அதைப்பற்றிய கவலைகளையெல்லாம் அரங்கனிடம் சமர்பித்துவிட்ட இந்த சின்னஞ்சிறிய பனவனை நேற்று மதியம் மூன்று மணியளவில் ஆப்த நண்பரின் கைபேசி அழைப்பின் மூலம் திருவரங்கம் வரச் சொல்லுகிறான்...திருவரங்கன்...
இன்றிலிருந்து பகல்பத்து தொடங்குகிறது...நேற்று மாலை திருநெடுந்தாண்டகம்...பக்தியியலின் தொன்மம் ஆடல்பாடல் வடிவிலேயே எத்தனையோ நூற்றாண்டுகள் தொடங்கி பல்கிப்பரவியிருக்கிறது...திருவரங்க அரையர் சேவையெனும் கலைவடிவிலான அரங்க வழிபாடும் அதன் அந்த ஆதிமுதல் நாளும் பதிவு செய்யப்பட்டிருக்கும் வரலாறு எட்டாம் நூற்றாண்டின்
தொடக்கம் என்பதாகவே ஒப்பப்பட்டிருக்கிறது...தொடக்கம் எது என்பதை விட அதன் தொடர் நீட்சியே முக்கியத்துவம் பெறுகிறது...திருமங்கையாழ்வார் ஒரு கார்த்திகை மாதத் திருவிழாவில் அரங்கனின் முன் தனது திரு நெடுந்தாண்டக பாசுரங்களை அபிநயத்துடன் பாடியதாக கோவிலொழுகு கூறுகிறது...பெரியாழ்வார் தனது கவிதையொன்றில் கந்த அரையா...என்ற ஒரு வார்த்தையைக் கையாண்டிருப்பதும் நினைவில் வந்தது...நேற்று திரு நெடுந்தாண்டகத் தொடக்க நாள் வேறு....புறப்பட்டுவிட்டேன்...அரங்கனின் அழைப்பின் சுமை... சுமந்தவர்களே அறிவார்கள்...அந்த தெய்வீகச் சுமையின் அழுத்தம் என்னை மீண்டுமொருதரம் குளிக்கச் செய்தது...குளிப்பதானால் புனிதம் தெய்வீக உளம் தருகிறது...குளித்து திரு நீற்றுப் பட்டையுடன் அருமை நண்பர் பெரியவர் ஸ்ரீரங்கம் செளரிராஜன் உடன் வர கோவில் நுழைந்து... கருட மண்டபம் வந்து சற்றே அமர்கிறோம்...
எதிரே அரங்க முத்து பட்டர் ...இந்த அடியவனை அடையாளம் கண்டு கொள்கிறார்...பக்தியின் உயர்வுகள் உருவமற்றவை...அற்புதமான அருவ உருவமெனக் கூறுவதும் பொருந்துமென தோன்றாத அந்தப் பொழுதின் கணம் இந்த அரங்கனடிமையை அவரிடம் தானாகவே கொண்டு செல்கிறது...சில சம்பிரதாய உரையாடல்கள்....இந்த அடியவனின் எண்ணமெல்லாம் அரங்கன் இன்று வரச்சொன்னதின் பொருளறியும் திசை நோக்கியே பயணித்துக் கொண்டிருந்தது...எதிரே மதுரகவியாழ்வாரின் சந்நிதி...சென்று சேவித்து வாருங்கள் என்று சொல்லி விடைதர...சந்நிதியின் வாசல் வருகிறேன்...அங்கிருந்த பட்டர் உள்ளே வாருங்கள்....இன்னும் சற்று நேரத்தில் அரையர்கள் வரப்போகிறார்கள்...என்று சொல்லியபடியே திருமங்கையாழ்வாரும் நம்மாழ்வாரும் மதுரகவியாழ்வாரும் சேவை சாதிக்கும் சந்நிதியின் மேற்புறத்தில் நம்மாழ்வாரின் அர்ச்சையையும் அதன் வரலாற்று வேர்களின் ஊடுருவல் களத்தின் பக்தியாழத்தையும் விளக்குகிறார்...பதின் மூன்றாம் நூற்றாண்டு வரை....அதாவது மூன்று நூற்றாண்டுகள் ஆழ்வார் திருநகரியிலிருந்து பல்லக்கில் நம்மாழ்வார் விக்கிரஹம்...திருவரங்கம் வந்த இந்தச் சந்நிதியில் தான் அரையர் சேவை தொடங்கும் என்று கூறுகிறார்...மெய்யெல்லாம் சிலிர்க்கிறது இந்த அடியவனுக்கு...
எதிரே சந்நிதியின் அர்ச்சைகள் ஒளிரூபம் பெறுகின்றன...ஆழ்வார் திருநகரியும் பல்லக்கில் நம்மாழ்வாரும் இந்த அடியவனின் பக்திப் பதற்றத்தை அதிர்வுகளாய் கற்சுவர் திரையெங்கும் தெளிக்கதொடங்குகிறார்கள்...கண்கள் சந்நிதியின் சுவர்களில் சிக்கிக் கொள்கின்றன...கோழிக்கோடு மா நகரமும் உப்பளக் கால்வாய்களும் தோற்ற மாயைகளை கண நேரம் கண்முன்னே விரித்துப் போடுகின்றன... நம்பெருமான் விக்ரஹத்தையும் நம்மாழ்வார் விக்ரஹத்தையும் இரு ஓடங்களில் ஏற்றி வடதிசை எடுத்துச் செல்கிறார்கள்...சுல்தாணிய வீரர்கள் சோழ பாண்டிய சேர நாடுகளைக் கைப்பற்றி வழிபாட்டிற்கான அர்ச்சா மூர்த்திகளை அதன் உலோக மதிப்பிற்காக களவாட துரத்திக்கொண்டிருக்கிறார்கள்...கண நேரம் நம்மாழ்வாரையும் நம்பெருமாளையும் சுமந்து ஓடும் ஸ்ரீபாதம் தாங்கிகளின் பின்னால் தண்ணீர்குளையுடன் இந்த அடியவனும் ஓடுவது போல் நிழ்றபடம் வந்து போகிறது...நெற்றியிலிருந்த வியர்வையைத் துடைக்க கைக்குட்டையை எடுக்கிறேன்...ஒரு துளி இந்தக் கட்டுரைக்குள்ளும் விழுந்திருக்கலாம்...
நம்மாழ்வார் சென்று கொண்டிருந்த ஓடம் சுழலில் சிக்கி விக்ரஹம் அதியாழத்தில் அமிழ்ந்து விடுகிறது...அரங்கனுடன் கரை சேர்ந்த குலசேகரன் என்ற பெயருடைய வீரன் நெஞ்சமெல்லாம் நடுக்கத்துடன் அரங்கன் முன் நின்று கொண்டிருக்கிறான்...நம்பெருமான் நம்மாழ்வார் இல்லாமல் இனி என் அர்ச்சையை ஒரு சாண் கூட நகர்த்தமுடியாதென்று கூறுகிறார்...இந்த அரங்கனடிமையின் முகமெங்கும் உப்பளம் துளிகளாய்க் கூடி வியாபித்துக் கிடக்கிறது...
சேவித்தாகிவிட்டதா...அரையர்கள் வந்துவிடுவார்கள்...என்று பட்டர் கூறுகிறார்...மெல்ல கருட மண்டபத்தைப் பார்க்கிறேன்...உப்பளக் கால்வாயில் குலசேகரன் நீந்தி நம்மாழ்வாரைத் தேடுகிறான்...கிடைக்காமல் திரும்புகிறான்...கண்ணீர் கடல் உப்பையெல்லாம் அந்த பக்தி வீரனின் கன்னத்தில் குவித்திருக்கிறது...அரங்கன் தனது அர்ச்சையை சற்றே அசைத்துக் காட்டுகிறான்...வானில் சுற்றிக் கொண்டிருந்த கருட பட்சி சட்டென கீழிறங்கி உப்பளக் கால்வாயின் மேற்புறம் தனது இறகால் தட்டிச் செல்கிறது....கால்வாயில் பாய்ந்து குதித்து நீந்துகிறான் குலசேகரன்...கருடன் தட்டிச் சென்ற இடத்தில் நம்மாழ்வாருக்குச் சாற்றிய மாலை மிதக்கிறது...ஆழ்ந்து அடி ஆழம் செல்ல...நம்மாழ்வார் மீண்டு வருகிறார்....இதோ...கண்முன்னே நின்று கொண்டிருக்கிறார்....
ஓங்கிக் குரலெடுத்து....
கைம்மான மழகளிற்றை கடல்கிடந்த கண்மணியை மைம்மான மரகத்ததை மறையுரைத்த திருமாலை...எம்ம்மானை எனக்கென்றும் இனியானை பணி காத்த அம்மானை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே...என்று கூச்சலிடுகிறேன்...
வாசலில் அரையர்கள் ஒவ்வொருவராய் கையில் கூம்பு வடிவ தொப்பியுடன் வீழ்ந்து வணங்கிக் கொண்டிருக்கிறார்கள்...வேகமாய் வெளியேறி...ஆகச் சாதரணமான எனது கைபேசியில் இந்த ஆண்டின் வைகுண்ட ஏகாதசி அரங்க அரையர் சேவைக்கான தொடக்க நொடிகளை படமாக்கினேன்...திரு நெடுந்தாண்டக பாசுரங்களை அரங்கன் முன் பாட அரையர்கள் நாழி கேட்டான் வாசல் வழி உட்சென்றார்கள்...பக்தர்களுக்கு அனுமதி யில்லையென்பதால் அடியேனுடன் இத்தனையையும் சாட்சியாய் இருந்து கவனித்த அருமை நண்பர் இலக்கிய விமரிசகர் ஸ்ரீரங்கன் செளரிராஜன் உடன்வர ப்ரசாத கடைகளில் மைசூர் பா வில்லைகளை வாங்கிக் கொண்டு மெளனமாய் வெளிவருகிறோம்....மெளனத்தின் ருசியைப் பற்றிய எங்களின் இலக்கிய உரையாடலை அரங்கனும் கேட்டிருக்கக்கூடும்...
திருவரங்கன் திருவடிகளே சரணம்....
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்...
ராகவபிரியன்

Saturday, November 14, 2020

 உலகளாவிய இலக்கிய நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் சக இலக்கிய கர்த்தாக்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்...ராகவபிரியன்

பின் நவீனவிய கவிதையியல் அதன் கூறுகளை இறுகக்கட்டிக் கொள்வதாகத் தெரிகிறது...தளர்வுகள் அறிவிக்கப்படப்போவதான எதிர்பார்ப்பை பின் நவீனவிய கவிதை வாசகனுக்கு ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது...கவிதைக்கான குறிப்புகளை அவ்வப்போது பதிவுசெய்துகொண்ட மரபுக் கவிஞன் எதுகை மோனையில் புதிய வார்த்தைகளை களமிறக்கினான்...குறிப்புகளற்ற நிகழ்வுத் தளங்களை உத்தியின் மூலம்... உவமைகளை மாறுபடுத்திக் காட்டிய யுக்தியின் மூலம்... புதுக்கவிதை வாசகனை பிரமிக்க வைத்தது...பாஸிடிவிஸம் அல்லது நேர்மறை வாதம் சமுதாய நிகழ்தேவைகளை உள்ளடக்கி சற்று கோபமான வார்த்தைகளால் கட்டமைக்கப்பட்டால் நவீனவியம் என வாசகனை நம்பிக்கை கொள்ள வைத்தது...ஆனால்..ஜீலியா கிறிஸ்டோவா என்ற மொழியியல் ஆராய்ச்சி மாணவி ஒத்திசைவான பிரதிகளின் நகலெடுப்பை சற்று காலமாற்றத்திற்குட்பட்ட மொழிமாற்றம் செய்தால் பின் நவீனவியம் கிடைத்துவிட்டுப் போகிறதென்று ஒரு அதிர்ச்சியை மொழியின் மீது... கவிதையியலின் மீது அனாயாசமாய் வீசிப்போகிறார்...பண்டைய கவிதையியலின் வேதியல் மாற்றங்களே பின் நவீனவியம் என்று டெரிடா ஓரிடத்தில் கோடிட்டுக் காட்டுவது குறிப்புகளின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது...கவிதை இயங்க வேண்டும் ...அதன் இயக்கம் வெற்று விருப்ப எண்ணிக்கைகளாலோ அல்லது ஆழமற்ற கருத்துப் பதிவுகளின் விளம்பர தன்மைகளாலோ நின்றுவிடுதல் கூடாது...உதாரணத்திற்கு பாரதியின் பாஞ்சாலி சபதம் ஆகச் சிறந்த இலக்கியம்....என்று ஆரம்பப் பள்ளி மாணவனிடம் மனப்பாடம் செய்யச் சொல்லி குறிப்புகளைத் தரும் ஆசிரியர் இன்றைய சூழலில் மாபெரும் பின் நவீன கவிஞராகக் கருதப்படுகிறார் என்று சொல்கிறார்...ஆல்சம் லியாவேன் என்ற மொழியியலாளர்...இங்கிலாந்து ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு பாரடைஸ் லாஸ்ட்டை மனப்பாடம் செய்தாக வேண்டும்...இது போன்ற கவிதையின் செயல்பாடுகள் பின் நவீன கவிதைக்கான தேடலை முடக்கிப்போட்டுவிடுகிறது....இப்படியான ஒரு நிஜம் முகத்தில் பட்டாசாய் கொளுத்திப் போடப்பட்ட இந்த தீபாவளி மாலையில் உங்களுக்காக ஒரு பின் நவீன கவிதை...
எனது வாயிலிருந்து
வெளியேகும் ஊழித் தீயில்
அனைத்து முகங்களும்
கருகிப் போகின்றன...
உவமைகளையும் பழமொழிகளையும்
நெருப்பில் வாட்டிய சங்கமென
ஊதிக்காட்டுவதால்
சன்னல் சீலைகளால்
இதயங்களை மூடிக்கொள்கிறார்கள்...
தீயின் கங்குகளில்
என் வார்த்தைகளின் கடுமைக்கான
தளர்வுகள் தள்ளாடியபடி
அறிவிக்கப்படுகின்றன...
இனிமையை பேச்சில்
நிரப்பும் வாளி
ஆழ்கிணற்றுக்கள்
இற்று விழுந்துகிடக்கிறது...
கிணற்று நீரில்
வயிறு நிரப்பும்
எரிவாயு கப்பல்
கவிழ்ந்ததால்
என் வாயின் வானமெங்கும்
பற்றி எரிகிறது...
எட்டிப் பாருங்கள்...
ஊழித் தீயின் ஊடே
இனிமையான சுவை மிக்க
கிணற்று நீரும்
ஒரு வாளியும்
ஆழத்தில் கிடப்பதை....
சன்னல் சீலைகளை
வெள்ளாவிக்கு போட்டுவிடுங்கள்...
ஊழித்தீயின் கங்குகள்
ஆட்டம் முடிந்து சதங்கைகளை
அவிழ்த்துவிடும் முன்...
ராகவபிரியன்

Monday, May 4, 2020

ஒரு பனவனின் ஆன்மீக அனுபவங்கள்...2+8
தோற்ற மயக்கம் என்ற பதம் நமக்கு பாரதி தந்தது..ஒரு தோற்றத்தை வைத்து எதையும் மனிதனால் புரிந்து கொள்ளவோ அல்லது முடிவெடுக்கவோ முடியாதென்பது தான் நிஜம்..கடந்த சில நாட்களுக்கு முன் திவ்ய பிரபந்தங்கள் உரத்து வாசிப்பதை நிறுத்தச் சொல்லிய அரங்கனின் கட்டளையை பதிவு செய்திருந்தேன்..அறிவீர்கள்..அந்தப் பொழுதுகள்...அல்லது அந்த நாட்கள் ஒரு ஆன்மீக நெருக்கடியான நாட்கள்..உரத்து வாசிப்பதை நிறுத்திய போதும் அரங்கன் வேறு விதமாக தன் வடிவங்களை எனக்குக் காட்டியபடியே இருந்தான்..ஒரு ஆன்மீக வாழ்வியலின் தோற்ற மயக்கமென அதை நான் ஒதுக்கித் தள்ளிவிட முடியவில்லை..ஓர் இரவின் முடிவுத் தளத்தில் எனது ஆழ்ந்த உறக்கத்தின் மேடையில் அரங்கனின் கோவில் கதவுகளை ஒருவர் தாளிடுகிறார்..அவரை நான் பிடித்துத் தள்ளுகிறேன்..அவர் என்னை மேடையிலிருந்து தள்ளிவிட என் கால்கள் தரையை உதைக்கின்றன..கடுமையான வலி இன்னமும் எனது இடது காலில் தங்கியிருப்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா என அறியேன்...அர்ஜூனன் அரங்கனின் ஈஸ்வர ஸ்வரூபத்தை அரங்கனே வர்ணித்ததை கேட்டு ஆச்சர்யம் அடைகிறான்..அரங்கனின் வார்த்தைகளை அரங்க பக்தன் நம்புகிறானா இல்லையா என்பதை அரங்கனால் உணரமுடியாதா என்ன..இருந்தாலும் பக்தன் அதை ஒரு வேண்டுதலாக தன்னிடம் விண்ணப்பிக்கட்டும் என நினைத்த நொடியில்...அர்ஜுனன்...
மந்யஸே யதி தச்சக்யம் மயா த்ரஷ்டுமிதி ப்ரபோ
யோகேஸ்வரததோமே த்வம்தர்ஸயாத்மாநமவ்யயம்
அரங்கா..உன் ஈஸ்வர உருவத்தை அதிதீவிர பக்தனான என்னால் பார்க்க முடியுமெனில்...எனக்கு அந்த தரிசன பாக்யத்தைத் தாருங்கள்....எனக் கெஞ்சுகிறான்...
இந்த அரங்கனடிமை குலசேகர படியில் கால் வைக்காமல் அரங்கனின் அர்ச்சையை கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறான்..அரங்கன் என்னை சற்றே எதிர் திசையில் நில் எனச் சொல்கிறான்... நின்று தெருவை நோக்க..உலகில் என்னைக் காணும் சக்தி உள்ளவர்களில் உன்னையும் சேர்த்துக் கொள்கிறேன்..ஆனால் என் மேனியில் அதாவது அர்ச்சையின் எண்ணற்ற மாற்றங்கள் தெய்வீகமானவை..மேலே பார்..ஒரு மேகத்திரட்டிற்குள் என் உருவத்தை ஒரு நொடியில் நீ கண்டுவிடலாம்..என்று சொல்வது போன்ற பிரமை பூசிய எழுத்துக்கள் மனதில் ஓட...
பகவானின்...
பஸ்ய மே பார்த ரூபாணி ஸதஸோத ஸஹஸ்ரஸ்:
நாநாவிதாநி திவ்யாநி நாநாவர்ணாக்ருதீ நி..
என்ற பதில் ஒரு சாட்டையென முதுகில் விழுகிறது...ஓடிச்சென்று என் வீட்டிலிருந்து கைபேசியை எடுத்து வந்து கோவில் வாசலில் குலசேகரப்படியின் அருகிருந்து அந்த மேகவர்ணனின் வடிவை நிழற்படமாய் எடுக்கிறேன்..பெரிது செய்து பார்க்க விழித்திரை தடுமாறுகிறது...பக்தனே என் நூற்றுக்கணக்கான ...ஏன்..ஆயிரக்க்கணக்கான..பலவித வடிவங்களான தெய்வீகமான... யாருமே காண முடியாத உருவத்தைப் பார்.. என்று பார்த்தனுக்குச் சொன்னதை...தனது கிரீடத்தைக் கழட்டிக் கையில் வைத்துக் கொண்டு...ஆணவத்தை..தலையிலிருந்து அகற்றிப் பார்...என இந்த அரங்கனடிமைக்குச் சொன்னதாக நினைத்துச் சிலிர்த்துப் போகிறேன்..மயக்கமே வந்து விட்டதை அரங்கன் அறிவான்...இது தான் தோற்ற மயக்கங்களோ...?
திருவரங்கன் திருவடிகளே சரணம்...
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்...
ராகவபிரியன்

Saturday, March 21, 2020



ஒரு பின் நவீன கவிதை உங்களுக்காக..3
என்
பள்ளிக்கூடம் மூடப்பட்டுவிட்டது..
முன்னறிவிப்புகளின்றி..
என் வகுப்பின்
வெளியேயான தோட்டத்தில்
என் இதய அடுக்குகள்
அறிந்த வற்றையே
பூச்செடிகளாக
பயிரிட்டு வளர்த்திருக்கிறேன்..
நேற்று மாலை
கள ஆராய்சிக்கான
என் தண்ணீர் குழாயின்
மூடியைத் திறந்தேன்..
இந்நேரம்
ஆராய்சி நீர்
தோட்டமெல்லாம்
ஆக்கிரமித்திருக்கலாம்..
மனப் பயிர்கள் அழுகிவிடக்கூடும்..
என்
முட்களில்லாத ரோஜாக்களின்
வேர்கள்
தங்களின் மறைவிடத்திலிருந்து
வெளிவந்து
அலறிக் கொண்டிருக்கலாம்..
ஒரு பழம் தேடி
மரமிறங்கிய எண்ண அணில்
நீரில் நீந்திக் கொண்டிருக்கும்
சப்தம்
கேட்டுக் கொண்டே இருக்கிறது..
உங்களுக்கும் கூட..
அபூர்வமாய்
பழுத்துதிர்ந்த செர்ரிப் பழங்களை
காயவைத்திருக்கும்
என் வெற்று மனத்திடல் வரை
இந்நேரம்
தண்ணீர் கைகளை
நீட்டிக் கொண்டிருக்கும்..
ஒரு வெப்ப அளவு மாணியுடன்..
விளிம்பு வரை
சரிந்து கிடக்கும்
சாய்ந்த நீர் தொட்டி
என் மனத்தோட்டமெங்கும்
விசனித்துக் கிடக்கையில்..
குழாயைத் திறந்தது தவறுதான்..
இனி
என் பள்ளிக் கூடம்
திறக்கப்பட்டு
நீர் கசிவுகள் நிறுத்தப் படும் வரை
பொய்ப் பூக்களும்
பூச்சு முகங்களும்
ஆர்பரித்தபடி
ஆனந்தமாய்
தோட்டமெங்கும்
ஆடிக் கொண்டிருக்கும்..
எதற்காக
என் பள்ளிக் கூடம்
முன்னறிவிப்பின்றி
மூடப்பட்டது...?
ஏதேச்சயாய்
உள் நுழையும் எவரேனும்
என்
தோட்டத்து தண்ணீர் குழாயை
மூடிவிட நேர்ந்தால்..
என்
கள ஆராச்சித் தோட்டத்தில்
வானவில்லொன்றை
நீங்களும் பார்க்கலாம்..
ராகவபிரியன்

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...