Saturday, November 14, 2020

 உலகளாவிய இலக்கிய நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் சக இலக்கிய கர்த்தாக்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்...ராகவபிரியன்

பின் நவீனவிய கவிதையியல் அதன் கூறுகளை இறுகக்கட்டிக் கொள்வதாகத் தெரிகிறது...தளர்வுகள் அறிவிக்கப்படப்போவதான எதிர்பார்ப்பை பின் நவீனவிய கவிதை வாசகனுக்கு ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது...கவிதைக்கான குறிப்புகளை அவ்வப்போது பதிவுசெய்துகொண்ட மரபுக் கவிஞன் எதுகை மோனையில் புதிய வார்த்தைகளை களமிறக்கினான்...குறிப்புகளற்ற நிகழ்வுத் தளங்களை உத்தியின் மூலம்... உவமைகளை மாறுபடுத்திக் காட்டிய யுக்தியின் மூலம்... புதுக்கவிதை வாசகனை பிரமிக்க வைத்தது...பாஸிடிவிஸம் அல்லது நேர்மறை வாதம் சமுதாய நிகழ்தேவைகளை உள்ளடக்கி சற்று கோபமான வார்த்தைகளால் கட்டமைக்கப்பட்டால் நவீனவியம் என வாசகனை நம்பிக்கை கொள்ள வைத்தது...ஆனால்..ஜீலியா கிறிஸ்டோவா என்ற மொழியியல் ஆராய்ச்சி மாணவி ஒத்திசைவான பிரதிகளின் நகலெடுப்பை சற்று காலமாற்றத்திற்குட்பட்ட மொழிமாற்றம் செய்தால் பின் நவீனவியம் கிடைத்துவிட்டுப் போகிறதென்று ஒரு அதிர்ச்சியை மொழியின் மீது... கவிதையியலின் மீது அனாயாசமாய் வீசிப்போகிறார்...பண்டைய கவிதையியலின் வேதியல் மாற்றங்களே பின் நவீனவியம் என்று டெரிடா ஓரிடத்தில் கோடிட்டுக் காட்டுவது குறிப்புகளின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது...கவிதை இயங்க வேண்டும் ...அதன் இயக்கம் வெற்று விருப்ப எண்ணிக்கைகளாலோ அல்லது ஆழமற்ற கருத்துப் பதிவுகளின் விளம்பர தன்மைகளாலோ நின்றுவிடுதல் கூடாது...உதாரணத்திற்கு பாரதியின் பாஞ்சாலி சபதம் ஆகச் சிறந்த இலக்கியம்....என்று ஆரம்பப் பள்ளி மாணவனிடம் மனப்பாடம் செய்யச் சொல்லி குறிப்புகளைத் தரும் ஆசிரியர் இன்றைய சூழலில் மாபெரும் பின் நவீன கவிஞராகக் கருதப்படுகிறார் என்று சொல்கிறார்...ஆல்சம் லியாவேன் என்ற மொழியியலாளர்...இங்கிலாந்து ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு பாரடைஸ் லாஸ்ட்டை மனப்பாடம் செய்தாக வேண்டும்...இது போன்ற கவிதையின் செயல்பாடுகள் பின் நவீன கவிதைக்கான தேடலை முடக்கிப்போட்டுவிடுகிறது....இப்படியான ஒரு நிஜம் முகத்தில் பட்டாசாய் கொளுத்திப் போடப்பட்ட இந்த தீபாவளி மாலையில் உங்களுக்காக ஒரு பின் நவீன கவிதை...
எனது வாயிலிருந்து
வெளியேகும் ஊழித் தீயில்
அனைத்து முகங்களும்
கருகிப் போகின்றன...
உவமைகளையும் பழமொழிகளையும்
நெருப்பில் வாட்டிய சங்கமென
ஊதிக்காட்டுவதால்
சன்னல் சீலைகளால்
இதயங்களை மூடிக்கொள்கிறார்கள்...
தீயின் கங்குகளில்
என் வார்த்தைகளின் கடுமைக்கான
தளர்வுகள் தள்ளாடியபடி
அறிவிக்கப்படுகின்றன...
இனிமையை பேச்சில்
நிரப்பும் வாளி
ஆழ்கிணற்றுக்கள்
இற்று விழுந்துகிடக்கிறது...
கிணற்று நீரில்
வயிறு நிரப்பும்
எரிவாயு கப்பல்
கவிழ்ந்ததால்
என் வாயின் வானமெங்கும்
பற்றி எரிகிறது...
எட்டிப் பாருங்கள்...
ஊழித் தீயின் ஊடே
இனிமையான சுவை மிக்க
கிணற்று நீரும்
ஒரு வாளியும்
ஆழத்தில் கிடப்பதை....
சன்னல் சீலைகளை
வெள்ளாவிக்கு போட்டுவிடுங்கள்...
ஊழித்தீயின் கங்குகள்
ஆட்டம் முடிந்து சதங்கைகளை
அவிழ்த்துவிடும் முன்...
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...