Thursday, December 17, 2020

 படைப்பொன்றின் இடைச்செருகல்களாய் புகழ்தொன்மச் சிறுபுனைவுகளை இணைத்து புரியாத மொழியின் புதிர்வரிகளால் ஆக்கப்படும் ஆக்கங்கள் எண்பதுகளில் மேலை இலக்கியங்களில் பின் நவீனமாகக் கருதப்பட்டது நிஜம்...இடைச்செருகும் தொன்மங்களின் தேர்வின் அளவு கோள்கள் படைப்பாளனின் வாசிப்பின் ஆழத்தைக் காட்டுவதாக வாசகர்கள் உணர்ந்து கொள்வார்கள் அல்லது பிரமித்துப் போவார்கள் என்பதை ஊகத்தால் தனதாக்கி வெளிவந்து தோல்விகளைத் தழுவி...பின் நவீனமென்பது அதுவல்ல என்பதை உரத்து இலக்கிய உலகிற்குச் சொல்லிச் சென்றது யாருக்கும் கட்டுப்படாத காலம்...எண்பதுகளின் இறுதி இலக்கியப் படைப்புகள்...காலத்தின் அசுரப் பிடியில் சிக்கி நெளிந்து கொண்டிருக்கின்றன...தொன்மங்கள் என்பது எழுத்துருவமற்ற சொற்சேர்க்கைகளின் நீட்சி...தொடர்ந்து...சில ஆயிரவருடங்களுக்குப் பின் எழுத்துருவம் பெற்று...சமுதாயக் கூட்டத்தின் சில பிரிவுகளால் இன்னமும் வாழ்வின் சில கணங்களில் உச்சரிக்கப்படுபவை...தொன்மங்கள் படைப்பாளியின் வாசிப்பின் ஆழத்தை ஒருபோதும் வெளிப்படுத்துவதில்லை...செம்புலப்பெயல் நீர் போல என்ற ஒரு தொன்மத்தை இடைச்செருகலாய் கொண்ட படைப்பின் படைப்பாசிரியர் சங்க இலக்கியங்கள் அத்தனையையும் ஒரு முறையாவது வாசித்திருப்பார் என்பதற்கான உத்தரவாதமாய் கொள்வது பூனை பிடிப்பவர் புலியை பிடிக்கும் சக்தியுடையவர் என்பது போன்றது...சரி பின் நவீன படைப்பில் தொன்மங்கள் கையாள்வது சொல்லாட்சி சாதனங்களில் ஒன்றென அறுதியிட்டுக் கூறமுடியாதா என்ற கேள்வியை தன்னிடம் கேட்டு விடாதீர்கள் என்று கெஞ்சுகிறார்...ப்ரெஞ்சு மொழியியல் அறிஞர்...ஹெரால்ட் ஆரம் வீஸா...நேரியல் எழுத்தும் நேரியல் சாரா எழுத்தும் பின் நவீன மொழியில் இல்லையா என்ற ஒரு கேள்வியை அவர் இன்றைய இலக்கியப் படைப்பாளிகளைப் பார்த்துக் கேட்கிறார்...ஒரு காலத்தின் மறக்கமுடியா நிகழ்வொன்றை தாங்கி நிற்கும் கதைகளின் வடிவம் பெரிதாகவோ சிறிதாகவோ இருக்கலாம்...அது சிதைந்து விடாமல் இருக்கவேண்டும்...நேரியல் எழுத்தின் அடிப்படை வாதம் இதுவென உரத்துச் சொல்லவும் முடிவதில்லை என்பதே நிஜம்...தஞ்சைக் கோபுரத்தின் நிழல் தரையில் விழுவதில்லை என்பது ராஜராஜ சோழனுக்குக் கண்டிப்பாய்த் தெரியும் என்றெழுதுவது நேரியல் சாரா எழுத்தென வாதிட முடியுமா...? நவீனமோ...அல்லது அதன் பின் நின்றுகொண்டிருக்கும் பின் நவீனமோ....எதுவாக இருப்பினும் வாசகனுக்கும் காலத்திற்கும் சுமையாகிவிடக்கூடாதெனச் சொல்கிறார்கள் மொழியியல் ஆய்வர்கள்...மார்க் எஸ் புல்லரும்...ப்ரெஞ்சீ எப் அப்ளேயும்...சுமைதரக்கூடிய எதுவும் இறக்கி வைக்கப்பட்டுவிடும்...தோளில் இருந்து மட்டுமல்ல...காலத்தின் தூணொன்றிலிருந்தும்...இனி உங்களுக்காக ஒரு பின் நவீன தொன்ம இடைச்செருகல்கள் உள்ளடக்கிய ஒரு கவிதை....???

பழைய காலம் ஒன்றை
என் முன்னே
நீல பத்மனாபனின்
கழுதை புரண்ட களமாய்
விரித்துப் போடுகிறாள்...
அங்கே கட்டிக் கிடந்தது
குதிரையெனவும்
அவ்வப்போது சாதிக்கிறாள்...
குளம்பின் லாடத்திலிருந்து
நழுவிக் கிடக்கும்
ஆணியொன்றின்
துரு கோர்த்த வார்த்தைகளைக்
கட்டும்
நுகத்தடியின் வளையம்
பிடுங்கியெறியப்பட்டிருக்கிறது...
சேனம் தைக்கும் ஊசியால்
அவளின் பார்வைகள்
வடிவமைக்கப்பட்ட
குதிரையின் முதுகில்
காலம் ஏறி அமர்ந்து கொள்கிறது...
கழுதைச் சாணங்களுக்கும்
குதிரை விட்டைகளுக்குமான
வாசத்தின் இடைவெளிகளில்
எனது கடந்த காலத்தின்
கிளியொன்றை
கூண்டில் அடைக்கிறேன்...
கழுதை சுமந்த
சுமைகள்
களமெங்கும்
புழுதிகளாய்
கிடக்கையில்
என் கால்களுக்கான
லாடங்களை
கையில் எடுத்து வருகிறது
அவளுடன் காலமும்...
குதிரையின் வேகம் கூட்டிய
எனது நிகழ்வின்
முகத்தில்
இப்போதும் கூட
தேடிக்கண்டடைவதற்கான
யாயும் யாயும் யாராகியரோ
என்ற கடிவாளம்
பொருந்திப் போவதில்லை...
களத்தில் விரித்துக் கிடக்கும்
கோணியில்
நான் மூடிக்கிடக்கும்
அடைகளுக்குள்
படங்களாய்க் கிடக்கிறேன்...
கூண்டு திறந்த
காலக்கிளி
என் அவலத்தின் கணங்களை
தன் அலகால்
ஒவ்வொன்றாய்
எடுத்தெறிந்து
புறக்கணிக்கிறது...
கழுதை புரண்ட களமெங்கும்
காலக்கிளியின்
பாதத் தடங்கள்...
என் லாடத்தின் ஆணியொன்றின்
துருவாய் அப்பிக் கிடக்கின்றன...
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...