Tuesday, December 29, 2020

 பனவனும் அரங்கனும் மார்கழியும் அரையர்சேவையும்...6

அரங்கனைக் காண்பது எனும் தத்துவம் பக்தியின் ஆழ் நிலை மனதின் பார்வைகளைப் பொறுத்தது...அது உலக மனிதர்கள் காணும் சராசரி பார்வைகளின் புரிதல் எனும் உளவியல் கூறுகளையும் கடந்த புரிதலுக்கு அப்பாற்பட்ட நிலை...ஆழ்வார்களும் ஆச்சாரியர்களும் மனித மனங்களுக்கு எட்டாத அரங்கனின் உருவ நிஜத்தை அவனின் இருப்பை எங்கும் எல்லாமுமாய் பாவித்திருப்பவனை பக்தி வரலாற்றில் பதித்தே சென்றிருக்கிறார்கள்...ஆச்சாரியர் நிகம்மாந்த மஹாதேசிகர் இந்த அரங்கனை தரிசிக்கும் ஆகச் சாதாரண பக்தன் திருக்கோவிலூர் மண்ணை மிதிக்கும் போதெல்லாம் புரிதலுக்கும் பார்வைக்கும் அப்பாற்பட்ட அரங்கனைத் தான் கண்டதை இந்த நாயினும் கடையேனுக்குக் காட்டிக் கொடுக்கிறார்...அரங்கனை நுகர்தலும் அவனை வியத்தலும் சுலபமல்ல என்பது புரியும் போது ஆழ்ந்த அரங்க பக்தியின் வானமும் அதன் பரிணாமங்களும் வியப்பின் எல்லைகளை நீட்டித்துக் கொண்டிருப்பதையும் அங்கே அரங்கனையும் காணமுடியுமென்பதையும் மொழியின் சில சொற்களுக்குள் அடக்கிவிட முடிவதில்லை...
திருவயிந்தரபுரத்தில் செங்கமல வல்லித்தாயார் ரங்க நாயகியாய் திருவரங்கனைக் காணவேண்டுமெனில்... தேவ நாயகனைப் பார்க்கும் நொடிகள் மனிதக் கண்களுக்கான ஆற்றலைத் தரவேண்டுமெனில்....ஆச்சாரியரை பெண் உடை உடுக்கச் சொல்கிறாள்...சில நூற்றாண்டுகளுக்கு முன் நாடக மேடைகளில் பெண் வேடமிட்டக் கலைஞர்கள் ப்ராகிருத மொழியும் ஆண்வேடமிட்ட கலைஞர்கள் சம்ஸ்கிருதமும் பேசி ஆன்மீக நாடகங்களில் தேவர்கள் அரங்கனிடம் உரையாடியதை...துல்லிய காட்சியின் மூலம்...நிஜமாகவே நமது ஆன்மீக மண்ணின் முன்னோர்களின் மனதில் பதியவைத்துச் சென்றது இன்றும் எவராலும் அழிக்க முடியாத வரலாறு...
ஆச்சாரியரும் பெண்வேடமிட்டு தேவ நாயகனை செங்கமல வல்லித் தாயார் தரிசிப்பது போல நிறைய பாடல்களை ப்ராகிருத மொழியில் செதுக்கிச் சென்றிருக்கிறார்...நேற்று இந்த அடியவனின் அன்னை எனது பெயர்த்தியாய் தனது ஆயுஷ் ஹோம நிகழ்வை இன்னொரு ஆகச் சிறந்த வாழ்வைத் துவக்கிய புனித திரு நாள் தினம்...குடும்ப உளவியல் பார்வைகளும் வாழ்வின் திசைகளைப் புரட்டிச் சென்ற புயலின் நிவாரணமற்ற கணங்களும் உடன் பிறப்புகளையும் உற்றார் உறவினர்களையும் புறக்கணிப்பெனும் பூடக மன நிறைவை அவர்களுக்குத் தருகிறதென்பதால்... பெரும்பாலோர் புறக்கணிக்கப்போகிறார்கள் என்பதை இந்த அடியவனுக்கு அரங்கன் உணர்த்தினார்...புறக்கணிப்புகள் புடம் போடுவதற்கான அணல் கக்கும் தீ...அதில் அரங்கன் காட்சியாய் புலன் களின் புரியாத வானில் புன்னகையுடன் வலம் வருவான்....அரங்கா நீ இந்த அடியவனுக்காக அவ்விடம் வந்து...அங்கே இருக்கையில் உன்னைக் காணும் நொடிகளை மட்டும் தா எனக் கேட்டுக்கொண்டே...அரங்கனின் ரெங்க நாமாவை உச்சரித்துக் கொண்டே... கண்டிப்பாக அரங்கன் நேற்று காட்சி தருவான் என எதிர்பார்த்தே... திருக்கோவிலூர் மண்ணில் பாதம் பதித்தேன்...
இந்த அடியவனின் மகளின் வீடருகில் இருந்த அரங்கன் கோவிலுக்கு காலை எட்டு மணியளவில் ஒருவித ஆன்மீக உந்துதலால் செல்கிறேன்...பூஜையாளர் மிருஷ்ட்டா பூஜைகளை ஆத்மார்த்தமாய்ச் செய்து கொண்டிருக்கிறார்...பாதம் தொடங்கி அரங்கனின் நெற்றியில் வைத்திருந்த திருமண் உலோகப் பதிவு வரை அத்தனையையும் புதுப்பிக்கிறார்...பக்தர்கள் எவருமே இல்லை...உணர்வு பொங்கிப் பிரவகிக்கிறது...ஓங்கிக் குரலெடுத்து ப்ரபந்தங்களை உரத்தக் குரலில் சொல்கிறேன்...அருகிருந்த அரங்க பக்தர்கள் ஒவ்வொருவராக கோவில் வருகிறார்கள்...பூஜையாளர் இந்த அடியவனுக்கு தீர்த்தமும் சடாரியும் சாதிக்கிறார்...
அரங்கனின் உருவம் காட்சியாய் பதியப்பட்டிருக்கும் ஓவியச் சட்டகங்களில் அரங்கனைத் தேடுகிறேன்...எனது மூன்றாவது தங்கையின் குடும்பத்தைச் சேர்ந்த எனது அத்திம்பேர் ஒருவரைத் தவிர...எனது உடன் பிறப்புகளோ வேறு இந்த அடியவன் குடும்பத்தைச் சார்ந்த உறவுகளோ பெயர்த்தியின் ஆயுஷ் ஹோம மற்றும் காதணி விழாவிற்கு வர இயலவில்லை...கண்டிப்பாக அரங்கன் வருவான் என என் பெயர்த்தியை கைகளில் சுமந்து...இதயமெலாம் அரங்கனைச் சுமந்து... என் மகளின் கிராமமெங்கும் தேடுகிறேன்...ஆச்சாரியர் வருகிறார்...அன்று பார்த்த அதே மரக்கிளையில் கிளி ஒன்று பறந்து சிறகடிக்கிறது...வானில் பார்க்கிறேன்...என் ஒருவயது நிறைவடைந்த பெயர்த்தியும் வானைப் பார்க்கிறாள்....கருட பட்சி வட்டமிடுகிறது....ஆச்சாரியரின் பாடல் ஒலிக்கிறது....
ஹியயேஸூ தேவியாணம்
ஜண்ஹயி லஹரீஸூ புண்ண சந்தோவ்வ புடோ
கலூஸ ஜலேஸூவ ஹம்ஸோ
கஸாய கபுரேஸூ டாஸி அச்சுயண கணம்..
ஹ்ருதயே ஷூ தேசிகா நாம்
ஜாஹ் நவீ லஹரீஷூ பூர்ண சந்தர இவ ஸ்ப்புட:
கலுஷ ஜலேஷ்விவ ஹம்ஸ:
கஷாய கர்ப்பபுரேஷூ திஷ்ட்டஸ்யச்சுத ந க்ஷணம்...
[அரங்கனின் கலியுக அவதாரமான ஆச்சாரியர் நிகம்மாந்த மஹா தேசிகர்]
ஆரங்கனடியார்களைக் கைவிடாத தெய்வ நாயகனே...காவிரியின் தெளிந்த நீரில் ஒளிரும் முழு நிலவைப் போன்ற பிரகாசத்தை...உன் உருவத்தின் ஒளி ரூபத்தை ....களங்கமற்ற அடியவர்களின் உள்ளத்தில் காட்சிப் படுத்துகிறாய்...கலங்கிய நீர் நிலைகளில் புனிதனெனும் அன்னப் பறவை நின்றுகொண்டிருப்பது சாத்தியமல்ல...அது உடனே பறந்து விடும்..அன்னப்பறவையென குற்றமுள்ள இதயங்களில்... அரங்கனுக்கு தீங்கு நினைக்கும் இதயங்களில் இருந்தும்... இடங்களில் இருந்தும்... நீ உடனே மறைந்துவிடுகிறாய்...பறந்தும் போய் விடுகிறாய்...களங்க மற்ற தூய பக்தி உள்ளத்தில் நீ காட்சி தருகிறாய்... நிரந்தரக் காட்சியாகவும் மாறிவிடுகிறாய்....
உள்ளம் மிகவும் எடை குறைந்து மிதக்கத் தொடங்கியது...ஆச்சாரியரின் பாடல் வரிகள் புரிந்த கணம்...புனிதத்தின் உண்மை கணம்... விழாவின் நெரிசல் புகையூடே...ஹோமப் படலத்தின் அடர்வில் இந்த அடியவனின் பார்வையாய்த் திருப்ப...கண்கள் அரங்கனைத் தேடத்தொடங்கியது....எங்களின் பருப்புத் தேங்காய் எனும் சீர் வரிசை வைக்கப்பட்டிருந்த அந்தக் கூட்டில் ஒரு கணம் அரங்கன் ஆரோகணித்தான்...அரங்க நாயகியும் சேர்த்திச் சேவையில் வலதுபுறம் காட்சிதர...ஒரு நொடியில் படமெடுத்தேன்...அரங்கனின் தெய்வீகக் காட்சி நிழற்பட சட்டகங்களில் சிக்குவதில்லை....அரங்கனைச் சிக்க வைப்பதென்பது அவ்வளவு எளிதும் அல்ல....பார்க்கத் தெரிந்த ஆன்மீக நம்பிக்கையுள்ள பார்வைகளுக்காக அந்த நிழற்படத்தை இங்கே பதிவேற்றுகிறேன்...இது வரலாறென்பதால் புறக்கணிக்க முடியவில்லை....புறக்கணிப்பின் கணங்கள் இந்த அடியவனை அரங்கனிடம் இன்னும் நெருங்கிச் செல்ல
பூச்செடிகள் பூத்துக் குலுங்கும் பாதையொன்றில் நீர்தெளித்து வண்ணக்கோலங்கள் போடுகின்றன....உண்மைகளின் இன்னொரு பெயர் தான் அரங்கன்...
திருவரங்கன் திருவடிகளே சரணம்...
ஆச்சாரியன் திருவடிகளே சரணம்...
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...