Wednesday, December 16, 2020

 பனவனும் அரங்கனும் மார்கழியும் அரையர்சேவையும்...1

பனவனின் வாழ்வியல் பக்தியுடன் துவங்கி பக்தியினாலேயே கட்டமைக்கப்பட்டு பக்தியாய் முடிவு பெறும்...இது கோட்பாடல்ல...சித்தாந்தமும் அல்ல...பனவனின் வாழ்வியல் உண்மை...திருவரங்கத்தில் பிறந்த பனவன் அரங்கனின் பக்தியெனும் கண்ணினுன் சிறுதாம்பினால் கட்டப்படுகிறான்...பிறகான அவனின் விடுதலையென்பது அரங்கனிடமே காணிக்கையாகிக்கிடக்கும்...திருவரங்க பனவன் அரையராகவே அரங்கன் மேல் அனுதினமும் எல்லா இடங்களிலும் நீக்கமற தாள நயத்துடன் ஆழ்வாரின் பாடல்களை உரத்துப் பாடித்திரிகிறான்....ஒரு சில நேரம் உரத்தும்...ஒருசில நேரங்களில் மெளனமாயும்...அப்படியான அரங்க பனவனின் அபரிமிதமான பக்தியை மையப்படுத்தி நிறைய கதைகளை சுற்று மாந்தர்கள் வாழ்வின் சுற்றுக்களில் சுழலவிட்டிருப்பார்கள்...அதைப்பற்றிய கவலைகளையெல்லாம் அரங்கனிடம் சமர்பித்துவிட்ட இந்த சின்னஞ்சிறிய பனவனை நேற்று மதியம் மூன்று மணியளவில் ஆப்த நண்பரின் கைபேசி அழைப்பின் மூலம் திருவரங்கம் வரச் சொல்லுகிறான்...திருவரங்கன்...
இன்றிலிருந்து பகல்பத்து தொடங்குகிறது...நேற்று மாலை திருநெடுந்தாண்டகம்...பக்தியியலின் தொன்மம் ஆடல்பாடல் வடிவிலேயே எத்தனையோ நூற்றாண்டுகள் தொடங்கி பல்கிப்பரவியிருக்கிறது...திருவரங்க அரையர் சேவையெனும் கலைவடிவிலான அரங்க வழிபாடும் அதன் அந்த ஆதிமுதல் நாளும் பதிவு செய்யப்பட்டிருக்கும் வரலாறு எட்டாம் நூற்றாண்டின்
தொடக்கம் என்பதாகவே ஒப்பப்பட்டிருக்கிறது...தொடக்கம் எது என்பதை விட அதன் தொடர் நீட்சியே முக்கியத்துவம் பெறுகிறது...திருமங்கையாழ்வார் ஒரு கார்த்திகை மாதத் திருவிழாவில் அரங்கனின் முன் தனது திரு நெடுந்தாண்டக பாசுரங்களை அபிநயத்துடன் பாடியதாக கோவிலொழுகு கூறுகிறது...பெரியாழ்வார் தனது கவிதையொன்றில் கந்த அரையா...என்ற ஒரு வார்த்தையைக் கையாண்டிருப்பதும் நினைவில் வந்தது...நேற்று திரு நெடுந்தாண்டகத் தொடக்க நாள் வேறு....புறப்பட்டுவிட்டேன்...அரங்கனின் அழைப்பின் சுமை... சுமந்தவர்களே அறிவார்கள்...அந்த தெய்வீகச் சுமையின் அழுத்தம் என்னை மீண்டுமொருதரம் குளிக்கச் செய்தது...குளிப்பதானால் புனிதம் தெய்வீக உளம் தருகிறது...குளித்து திரு நீற்றுப் பட்டையுடன் அருமை நண்பர் பெரியவர் ஸ்ரீரங்கம் செளரிராஜன் உடன் வர கோவில் நுழைந்து... கருட மண்டபம் வந்து சற்றே அமர்கிறோம்...
எதிரே அரங்க முத்து பட்டர் ...இந்த அடியவனை அடையாளம் கண்டு கொள்கிறார்...பக்தியின் உயர்வுகள் உருவமற்றவை...அற்புதமான அருவ உருவமெனக் கூறுவதும் பொருந்துமென தோன்றாத அந்தப் பொழுதின் கணம் இந்த அரங்கனடிமையை அவரிடம் தானாகவே கொண்டு செல்கிறது...சில சம்பிரதாய உரையாடல்கள்....இந்த அடியவனின் எண்ணமெல்லாம் அரங்கன் இன்று வரச்சொன்னதின் பொருளறியும் திசை நோக்கியே பயணித்துக் கொண்டிருந்தது...எதிரே மதுரகவியாழ்வாரின் சந்நிதி...சென்று சேவித்து வாருங்கள் என்று சொல்லி விடைதர...சந்நிதியின் வாசல் வருகிறேன்...அங்கிருந்த பட்டர் உள்ளே வாருங்கள்....இன்னும் சற்று நேரத்தில் அரையர்கள் வரப்போகிறார்கள்...என்று சொல்லியபடியே திருமங்கையாழ்வாரும் நம்மாழ்வாரும் மதுரகவியாழ்வாரும் சேவை சாதிக்கும் சந்நிதியின் மேற்புறத்தில் நம்மாழ்வாரின் அர்ச்சையையும் அதன் வரலாற்று வேர்களின் ஊடுருவல் களத்தின் பக்தியாழத்தையும் விளக்குகிறார்...பதின் மூன்றாம் நூற்றாண்டு வரை....அதாவது மூன்று நூற்றாண்டுகள் ஆழ்வார் திருநகரியிலிருந்து பல்லக்கில் நம்மாழ்வார் விக்கிரஹம்...திருவரங்கம் வந்த இந்தச் சந்நிதியில் தான் அரையர் சேவை தொடங்கும் என்று கூறுகிறார்...மெய்யெல்லாம் சிலிர்க்கிறது இந்த அடியவனுக்கு...
எதிரே சந்நிதியின் அர்ச்சைகள் ஒளிரூபம் பெறுகின்றன...ஆழ்வார் திருநகரியும் பல்லக்கில் நம்மாழ்வாரும் இந்த அடியவனின் பக்திப் பதற்றத்தை அதிர்வுகளாய் கற்சுவர் திரையெங்கும் தெளிக்கதொடங்குகிறார்கள்...கண்கள் சந்நிதியின் சுவர்களில் சிக்கிக் கொள்கின்றன...கோழிக்கோடு மா நகரமும் உப்பளக் கால்வாய்களும் தோற்ற மாயைகளை கண நேரம் கண்முன்னே விரித்துப் போடுகின்றன... நம்பெருமான் விக்ரஹத்தையும் நம்மாழ்வார் விக்ரஹத்தையும் இரு ஓடங்களில் ஏற்றி வடதிசை எடுத்துச் செல்கிறார்கள்...சுல்தாணிய வீரர்கள் சோழ பாண்டிய சேர நாடுகளைக் கைப்பற்றி வழிபாட்டிற்கான அர்ச்சா மூர்த்திகளை அதன் உலோக மதிப்பிற்காக களவாட துரத்திக்கொண்டிருக்கிறார்கள்...கண நேரம் நம்மாழ்வாரையும் நம்பெருமாளையும் சுமந்து ஓடும் ஸ்ரீபாதம் தாங்கிகளின் பின்னால் தண்ணீர்குளையுடன் இந்த அடியவனும் ஓடுவது போல் நிழ்றபடம் வந்து போகிறது...நெற்றியிலிருந்த வியர்வையைத் துடைக்க கைக்குட்டையை எடுக்கிறேன்...ஒரு துளி இந்தக் கட்டுரைக்குள்ளும் விழுந்திருக்கலாம்...
நம்மாழ்வார் சென்று கொண்டிருந்த ஓடம் சுழலில் சிக்கி விக்ரஹம் அதியாழத்தில் அமிழ்ந்து விடுகிறது...அரங்கனுடன் கரை சேர்ந்த குலசேகரன் என்ற பெயருடைய வீரன் நெஞ்சமெல்லாம் நடுக்கத்துடன் அரங்கன் முன் நின்று கொண்டிருக்கிறான்...நம்பெருமான் நம்மாழ்வார் இல்லாமல் இனி என் அர்ச்சையை ஒரு சாண் கூட நகர்த்தமுடியாதென்று கூறுகிறார்...இந்த அரங்கனடிமையின் முகமெங்கும் உப்பளம் துளிகளாய்க் கூடி வியாபித்துக் கிடக்கிறது...
சேவித்தாகிவிட்டதா...அரையர்கள் வந்துவிடுவார்கள்...என்று பட்டர் கூறுகிறார்...மெல்ல கருட மண்டபத்தைப் பார்க்கிறேன்...உப்பளக் கால்வாயில் குலசேகரன் நீந்தி நம்மாழ்வாரைத் தேடுகிறான்...கிடைக்காமல் திரும்புகிறான்...கண்ணீர் கடல் உப்பையெல்லாம் அந்த பக்தி வீரனின் கன்னத்தில் குவித்திருக்கிறது...அரங்கன் தனது அர்ச்சையை சற்றே அசைத்துக் காட்டுகிறான்...வானில் சுற்றிக் கொண்டிருந்த கருட பட்சி சட்டென கீழிறங்கி உப்பளக் கால்வாயின் மேற்புறம் தனது இறகால் தட்டிச் செல்கிறது....கால்வாயில் பாய்ந்து குதித்து நீந்துகிறான் குலசேகரன்...கருடன் தட்டிச் சென்ற இடத்தில் நம்மாழ்வாருக்குச் சாற்றிய மாலை மிதக்கிறது...ஆழ்ந்து அடி ஆழம் செல்ல...நம்மாழ்வார் மீண்டு வருகிறார்....இதோ...கண்முன்னே நின்று கொண்டிருக்கிறார்....
ஓங்கிக் குரலெடுத்து....
கைம்மான மழகளிற்றை கடல்கிடந்த கண்மணியை மைம்மான மரகத்ததை மறையுரைத்த திருமாலை...எம்ம்மானை எனக்கென்றும் இனியானை பணி காத்த அம்மானை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே...என்று கூச்சலிடுகிறேன்...
வாசலில் அரையர்கள் ஒவ்வொருவராய் கையில் கூம்பு வடிவ தொப்பியுடன் வீழ்ந்து வணங்கிக் கொண்டிருக்கிறார்கள்...வேகமாய் வெளியேறி...ஆகச் சாதரணமான எனது கைபேசியில் இந்த ஆண்டின் வைகுண்ட ஏகாதசி அரங்க அரையர் சேவைக்கான தொடக்க நொடிகளை படமாக்கினேன்...திரு நெடுந்தாண்டக பாசுரங்களை அரங்கன் முன் பாட அரையர்கள் நாழி கேட்டான் வாசல் வழி உட்சென்றார்கள்...பக்தர்களுக்கு அனுமதி யில்லையென்பதால் அடியேனுடன் இத்தனையையும் சாட்சியாய் இருந்து கவனித்த அருமை நண்பர் இலக்கிய விமரிசகர் ஸ்ரீரங்கன் செளரிராஜன் உடன்வர ப்ரசாத கடைகளில் மைசூர் பா வில்லைகளை வாங்கிக் கொண்டு மெளனமாய் வெளிவருகிறோம்....மெளனத்தின் ருசியைப் பற்றிய எங்களின் இலக்கிய உரையாடலை அரங்கனும் கேட்டிருக்கக்கூடும்...
திருவரங்கன் திருவடிகளே சரணம்....
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்...
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...