Saturday, December 26, 2020

 பனவனும் அரங்கனும் மார்கழியும் அரையர்சேவையும் 5

பக்தியின் இரு நிலைகள் கடினத்தன்மை கொண்டவை...உயிரைப் பணயம் வைத்து அரங்கன் மேல் ஆழ்ந்த பக்தி கொள்வது...இதில் சுயலாபத்திற்கோ தன்னலத்திற்கோ இடமிருப்பதில்லை...இன்னொரு நிலை... பக்தி செய்து பார்பதால் கிடைக்கும் பலனை நினைத்துச் செயலாற்றும் நிலை...இரண்டாவது நிலையில் வேடங்கள் தேவைப்படும்...முதல் நிலையில் வாழ்வின் அடுத்த நொடிகூட நிச்சயமற்றிருக்கும்...இருப்பினும் மனமெங்கும் அரங்கன் நிறைந்து நிற்பான்...கிடப்பான்...இருப்பான்....அப்படியான ஆழ் நிலை பக்திக்கு ஆட்பட்ட பராசரபட்டர்...தன் அன்னையிடத்தில் வருகிறார்...அம்மா...அரங்கனின் அத்யயனோத்சவம் நடந்து கொண்டிருக்கிறது...ஏகாதசி வேறு...முதலாம் குலோத்துங்க சோழனின் ஆணைப்படி நிறைய பெரிய அவசரம் பெருமாளுக்குத் தயாராகி வருகிறது....
கல்வெட்டின் வாசகங்களை காப்பி பேஸ்ட் செய்திருக்கிறேன்...
[ஸ்வஸ்தி ஸ்ரீ புகழ் சூழந்த புணரி அகழ் சூழந்த புவியில் என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியுடன் கூடிய கல்வெட்டில்
திருவெ...திருவாய்மொழி கெட்டருளும் பொது திருநாள் தொறும் அமுது செய்தருளும் அட்டமுது நூறுக்கு வெண்டும் அரிசிக்கும் பருப்பு நெய்....]
வைகுண்ட ஏகாதசி...என்பதால் இன்று பக்தர்களுக்கும் அரங்கனுக்கும் மட்டுமே அமுது படைக்கப்படும்...உனக்கோ வயதாகிவிட்டது...இன்று உபவாசம் தவிர்த்து நீயும் அமுது கொள்...அரங்கனின் மூன்றாம் பிரகார குலோத்துங்கந் கல்வெட்டில் கேட்டருளுதல் என்பதை கெட்டருளுதல் என்று பொறிக்கப்பட்டிருக்கிறது...வயோதிகத்தால் அரங்க பக்தரோ பக்தையோ வைகுண்ட ஏகாதசி உபவாசம் கடுமையாக கடைபிடித்தால் அரங்கன் திருவாய்மொழிகளை கேட்டருளுவதற்குபதில் அதைச் சாதிக்கும் எங்களுக்குக் கெட்டருள நேரிடும்...என்று நகைச் சுவையாகக் குறிப்பிட்டார்...
முதல் நிலை பக்தியின் கடுமையான மனச்சூழலில் இருந்த ஆண்டாள் அம்மங்கார் அம்மையார்...அரங்க நாயகியிடம் வந்து தன் மகன் ஆச்சாரியராய் இருந்தாலும் அவனின் உடல் நிலை கவலை தருவதாகச் சொல்ல...அரங்க நாயகி...நான் பார்த்துக்கொள்கிறேன்...என்பது போல் குறிப்புணர்த்துகிறாள்...அரங்கத்தம்மாவாயிற்றே....ஆழ் நிலை பக்தியின் கடுமைத் தன்மையைச் சோதிக்க அரங்கன் முடிவு செய்தான்...மறு நாள் பட்டரிடம் அவரின் தாயார் துவாதசி பாரணை செய்யும் படிச் சொல்கிறார்...பராசரர்...அத்யயனோத்சவம் நடைபெறும் தெய்வீக நிகழ் களம் தன்னலங்களை தன்னுடன் சேர்த்துக் கொள்வதில்லை...இன்றைய நம்மாழ்வார் பாசுரங்கள் முடிந்தவுடன் அமுது செய்யலாம் எனச் சொல்லி வேகமாக வர திருவரங்கக் கோவிலின் வடக்கு வாசற் கதவு தாளிடப்பட்டிருக்கிறது...
அரங்கனின் கட்டளையால் தொடர்ந்து திவ்ய பிரபந்தங்கள் வாசிக்கும் இந்த அடியவன் இன்றும் துவாதசி ஆராதனைகள் முடிந்து பதினொன்றரை மணியளவில் எங்களூர் கோவில் வருகிறேன்...உளவியல் கோளாறுகளால் பக்தியின் இரண்டாம் நிலை மாந்தர்கள் கோவிலைப் பூட்டியிருக்கிறார்கள்...எப்போதும் வெளிவாசல் திறந்திருக்கும்...குலசேகரப்படியின் அருகில் அமர்ந்தே அடியவன் பிரபந்தம் படிப்பது வழக்கம்...இன்று வெளிவாசற்கதவும் பூட்டப்பட்டிருக்கிறது...நேற்றிரவே அரங்கன் இன்று முதல் திருவாய்மொழிப் பாசுரங்களைப் படிக்கும் படி கட்டளையிட்டிருக்கிறான்...
பராசர பட்டர் அரங்க நாயகியின் மேல் ஒரு அதிசயமான பாடலைச் சொல்ல...வடக்கு வாசற் திருக்கதவம் திறக்கிறது...
யத் ப்ரு பங்கா: ப்ரமாணம்
ஸ்திர சர ரசநா தாரதம்யே முராரே:
வேதாந்தா: தத்வ சிந்தாம்
முரபித் உரசி யத் பாத சிஹ்நை: தரந்தி
போக உபோத்காத கேளீ சுளுகித
பகவத் வைஸ்வ ரூப்ய அநுபவா
ஸா நா: ஸ்ரீ: ஆஸ்தறு ணீதாம்
அமருதல ஹரிதீ லங்கநீயை: அபாங்கை:
அரங்க நாயகியே அன்னையே...நேற்றைய குங்கும அர்சனையால் உன் அர்ச்சை சிவந்திருக்கிறது...ஏனிந்த கோபம்...[தத்வ சிந்தாம்
முரபித் உரசி யத் பாத சிஹ்நை] ...உன் சிவந்த உருவம் மனக்கண்ணில் கண்டபின்பு வேறு தெய்வங்களைக் காணவேண்டிய அவசியமில்லையே...என்று மனமுருகிப் பாடுவது போல்...
நடு வீதியில் அமர்ந்து திருவாய்மொழிப் பாசுரங்களைப் பாட நேருமென அப்போது இந்த அடியவன் அறியவில்லை...
துவாதசி பாரணை முடிந்து கடைசீ உணவும் பரிமாறப்பட்டு எல்லோரும் கோவிலை விட்டு வெளிவருகிறார்கள்...அரங்க நாயகி என்பது அப்போது முதல் நிலை பக்திக்கும் இரண்டாம் நிலை பக்திக்கும் தெரியவில்லை...தெய்வீக நிகழ்வின் நொடி கண்ணின் பார்வையை மறைக்கும் சக்தியுள்ளது...ஒரு நடுத்தர வயது ஏழைப் பெண்மணி கோவிலில் இருந்து வெளிவந்தவர்களிடம் தனக்குப் பசிக்கிறது என்று சொல்வதைக் காண என் உள்ளம் பதைபதைக்கிறது...வாசலில் இருந்து கவனித்துக் கொண்டிருந்தேன்..முதலில் உணவு தீர்ந்துவிட்டது என்று சொன்னவர்கள்...உணவுக்கூடத்திலிருந்து வெளிவந்த ஒருவரிடம்...இந்த அம்மாவுக்கு சாதமும் கொஞ்சம் சாம்பாரும் கொடுங்கோ ...என்று சொல்ல...கடும் வெயிலடிக்கும் வெளிவாசலின் ஒற்றைத் திண்ணையில் அந்தப் பெண்மணி அமர்ந்து கொள்கிறாள்...நான் சென்று நிழலில் அமர்ந்து கொள்ளுங்கள் என்று சொல்வதற்குள்...ஒரு கிழிந்த வாழையிலையில் நிறைய சாதம் பரிமாறப்படுகிறது...வேறு வழியின்றி அந்த அம்மையார் கடுமையான பசியின் தாக்கத்தால் அள்ளி அள்ளி வாயில் போட்டுக் கொள்கிறார்...[அம்மா அரங்க நாயகியே இது என்ன விளையாட்டு...]என்று ஒரு பொருளற்ற நெருடல் உள் மனதில்...உடனே படம் எடுத்துக் கொள்கிறேன்...
திவ்ய பிரபந்தம் வாசித்து வீட்டின் வாசலில் நிற்கிறேன்...ஓரிண்டு நாட்களுக்கு முன் அரங்கனின் பாததரிசனம் காணும் வாய்பளித்த அதே இடத்தில் இன்று ஒரு பெண்குழந்தை தடுமாறி கீழே விழுகிறாள்...அவளின் கையிலிருந்த குங்குமம்...இன்னும் எங்கள் வீட்டு வாசலில் கொட்டிக் கிடக்கிறது...
வடக்குத் திருவாசல் திறந்து அரங்க நாயகியின் காட்சியை கருணையை அனுபவித்த பராசரர் ஸ்ரீகுணரத்ன கோசம் எழுதினார்...இன்னும் கொடிய பகை நிறைந்து கிடக்கும் உளம் நிறை இரண்டாம் பக்தி நிலை பக்தர்களுக்கான கோவில் மனக்கதவம் திறக்காதோ என்று உளமெலாம் அரங்க நாயகியின் குங்குமம் கொட்டிக்கிடக்கும் வாசலென சிவந்த கண்களுடன் பூட்டிக்கிடக்கும் அரங்கனின் திருக்கோவில் கதவுகளையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்...
அன்னை என் செய்யில் என்..ஊர் என் சொல்லின் என்...
என்னை உமக்கு இனி ஆசையில்லை...அகப்பட்டேன்...
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி
மன்னன் வசுதேவன் வலையுளே...
நம்மாழ்வார்....
திருவரங்கன் திருவடிகளே சரணம்....
திருவரங்க நாயகி திருவடிகளே சரணம்...
சடகோபன் திருவடிகளே சரணம்....
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்...
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...