Tuesday, January 29, 2019

யாருமற்ற சுவரதில்
நாட்காட்டித் தாள்களென
கிழிபட்டுக்கொண்டிருக்கிறேன்..
புதிய ஆண்டொன்றில்
கிருதஞ்ஞதையென
என்மீதான பரீட்சைகளுக்காக
குழந்தைக் கைகளில்..
எறியப்படுகிறேன்..
அதன் குழகாக சுமந்து செல்லப்படுகையில்..
என் ஆகப்பெரிய வானம்
பிஞ்சுக் கைகளால் வருடப்படும்
சின்ன பரப்பென சுருங்கும்..
என் நாட்கள் சுமந்த
ஆணித் தடங்களின் துவாரத் துரு
பிஞ்சு விரல்களின்
வருடல் பாதைகளில்
வேகத் தடைகளென கிடக்கிறது..
வானத்தின் வேகத் தடைகள்
குழந்தை வேகத்தை கட்டுப் படுத்துமோ....?
ராகவபிரியன்

Saturday, January 26, 2019

ஒரு பனவனின் பால்ய நினைவுகள்...1
ஒரு ஆணின் வாழ்வென்பது நினைவு தெரியும் பாலபருவத்திலேயே தொடங்கிவிடுவது பெரும் துயரம்..மேலும் வறுமையின் பிடியில் சிக்கி வெளிவரமுடியாத விரல்களை விடுவித்துக்கொள்ள முயன்று கொண்டிருக்கும் கொடுமையான கால கட்டத்தில் பிறந்த ஒரு ஆண் குழந்தை ஐந்து வயதிற்குள்ளாகவும் கூட சம்பாதித்துக் கொண்டுவரவேண்டிய நிலையில் தள்ளப்பட்ட அறுபதுகளின் மத்தியில் தனக்குப் பின் எட்டுக் குழந்தைகள் பிறக்கப்போவதையறியாமல் தனது பதின்மூன்றாவது வயதில் திருவரங்கம் ஐந்தாவது பிரகாரத்திலிருக்கும் பூந்தோட்டத்தில் அந்தச் சிறுவன் ஒரு நாளைக்கு 0.50 பை விற்கு எடுபிடியாக வேலைக்குச் சேர்த்துக்கொள்ளப்படுகிறான்..
விடுமுறை நாட்களில் அவனின் காலம் அரங்கனின் பிரசாதங்களிலும் தோட்டத்திலும் அதன் வழியாக தாய் தந்தையுடன் கைபிடித்துக்கொண்டு கையில் தின்பண்டங்களும் விளையாட்டுப்பொம்மைகளும் பிடிவாதங்களுமாய் வரும் பக்தர்களின் பணக்காரக்குழந்தைகளின் துள்ளல் நடையை கவனிப்பதிலும் கழியும்...பிள்ளை சோர்ந்து உறங்கும் பொழுதுகள் அந்தப் பிள்ளைக்கு வாய்க்கவில்லை..அவன் கொண்டு தரும் ஐம்பது பைசாவிலும் பிரசாத மிச்சத்திலும் பசியாறும் அவனின் பெற்றோர்களைக் கண்டு அவமானமாயிருக்கும் அக்குழந்தைக்கு..அவனின் பிரசாதக் கையில் மீந்திருக்கும் நெய்யின் வாடையை முகர்ந்து பார்க்கும் எட்டாவதாயும் ஐந்தாவதாவது பெண்குழந்தையாயும் பிறந்த ஒரு வயது தங்கையின் மேல் ஒரு தகப்பனின் பாசத்தையும் உடன் பிறந்தவர்கள் உதாசீனப்படுத்தினாலும் அவர்க்ளுக்கான கடமைகள் மீந்திருப்பதாயும் ...அதைச் செய்ய முடியாத குற்ற உணர்வை இன்னமும் கொண்டிருக்கும் அந்தச் சின்ன அண்ணனுக்கு இன்று இருபத்தியெட்டாவது திருமண நாள்...எந்தக் குடும்பத்தில் தன் தகப்பனின் இயலாமையை எதிர்த்து போராட்டத்தைத் துவங்கி ஒரு பத்தாண்டுகளில் மூன்று வேளைச் சாப்பாட்டிற்கும் பெரும்பாலான உடன்பிறப்புகள் பட்டதாரியும் முதுகலைப் பட்டதாரியும் ஆவதற்காக உழைப்பை மட்டுமே சுவாசித்த அவனுக்கு அந்தக் குடும்பத்தில் மேலும் இன்னொரு சுமையாய் ஒரு தாய்தந்தையற்ற ஏழைப்பெண்ணைத் திருமணம் செய்து வைத்து பழிதீர்த்துக்கொள்கிறான் தகப்பன்..
திருமணம் வரமாக அமைந்தாலும் சாபமாக இருந்தாலும் அந்த நாள் திருமண நாள்தான்...அந்த நாளின் சப்தங்கள் தம்பதிகளின் காதுகளில் நிரந்தரமாய்த் தங்கிவிடும்..
உழைத்து நெய்வாடையில் காய்த்த கைகளைப் பற்றியவளை சுமையெனக் கருதாமல் வாழ்வின் அத்தனைப்போராட்டங்களையும் அதன் சுழல்களையும் எதிர்த்து மீண்டும் போராட்ட களத்தில் படைவீடெடுத்துத் தங்கி இன்னமும் வாழ்வின் விழுப்புண்களை சுமந்துகொண்டு தன் இருபத்தெட்டாவது திருமண நாளுக்கான மனைவிக்கான புத்தம் புது புடவை வாங்கித்தரமுடியாமல் காலையிலிருந்து நல்ல தமிழில் அர்ச்சித்துக்கொண்டிருக்கும் மனைவியின் மேலான பிரிக்கமுடியா பந்தத்தின் உட்கூறுகளை எழுத்தில் கொணரமுடியுமாவெனும் சிந்தனைச் சுவறொன்றை தன் இரு காதுகளிலும்தொங்க விட்டுக்கொண்டு கணிப்பொறியில் தட்டச்சிக்கொண்டிருக்கும் சப்தத்தில் தன் திருமண நாளில் வாசிக்கப்பட்ட ரூபக தாளத்தின் மேளச் சத்ததில் எழுந்த எதிர்காலத்தின் எச்சத்தை அந்த வெற்றிடத்தை புரிந்துகொள்ளமுடியாத அன்றைய சபிக்கப்பட்ட 27.01.1991 நாளையும் அந்த மங்களச் சப்தங்களையும்மீண்டும் கோவிலுக்குக்கொண்டு சென்று அரங்கனிடம் அதை வரமாக மாற்றித்தர வேண்டிய கோரிக்கையை வைக்கவேண்டிய ஒரு பெரும் பணியை திட்டமிட்டுக்கொண்டிருக்கும் வேளையில்....முகமெல்லாம் கோபமாக ஒரு நகையையும் நட்டையும் கண்ணால் காணமுடியாத பிரபஞ்ச இருட்டை கரு[டு[ங்கோபத்தை எப்படி கோவிலுக்கு உடன் கூட்டிச் சென்று... நாளின் பொழுதுகளை ஒளிரவைப்பதென தடுமாறிக்கொண்டிருக்கும் இவ்வேளையில்... இந்த எட்டு மணியளவில்தான் ஒரு கரிய திரவத்தை டபரா டம்ளரில் நங்கென வைக்கிறாள் அவனின் தர்ம பத்தினி...அந்த தளும்பும் கரிய திரவத்தின்பெயர் காப்பியாம்...ஒவ்வொரு திருமணமும் புது நாளொன்றும் காப்பியில் தொடங்குவது கொடிதிலும் கொடிது....ஒரு நல்ல கோப்பை காப்பி அருந்தியபின்னாவது....அவனின் திருமண நாளை வாழ்த்துவீர்களா நண்பர்களே....?
ராகவபிரியன்
[கீழே இருக்கும் படத்தை எடுத்து எங்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் அமிழ்த்தியவர் எனது மூத்த மகள் திருமதி ராகவிலெக்ஷ்மிகாந்தன்]

Friday, January 25, 2019

எனது புத்தக அவதாரம்
அவதை நிறைந்தது..
ஊற்று தேடி
அள்ளப்பட்டுவிட்ட
காவிரி கொதிமணலில்
நடப்பதானது..
யுகங்களாய் ஓடிக் களைத்த
நதி மீண்டும்
புத்தக வடிவையெடுப்பதற்காக
சுவைத்த
உதட்டு பாண மிடறின்
மீந்த அமிர்தத் துளியது...
எனது மொழி பிரவாக சப்தமெனில்
புத்தகம் அலறுவதாகும்..
எனது வார்த்தைகள் வரிகள் கவிதையெனில்
புத்தகம் தேங்கிப்போகும்..
எனது பக்கங்கள் நகர்த்தமுடியா பொழுதின்
ஆழ்மன சிம்ம உறக்கம்..
எனது புத்தக அட்டை
உங்கள் மனக்கொக்கியில்
தொங்கப்போகும் வண்ணச் சட்டை..
கடைகளில்
நான் புத்தகங்களின் நடுவில்
பாதிமுகம் காட்டப்போவதில்லை..
நூலகங்களில்
எனை நீங்கள் தேடவேண்டியதில்லை..
மற்றவர்கள் எனைக் கடன் கேட்டால்
புதிதாக அவர்களுக்கு
எனைப் பரிசாக்குங்கள்..
அவர்கள் விரல்கள் எனைப் பிரிக்கையில்
மகிழ்வின் மடல் திறக்கும்
வாச சப்தம் நாசித் துவாரங்களில்
நறுமணமாய் எதிரொலிக்கும்..
என்னிலும் உன்னிலும் அவர்களிலும்..
வாசத்தின் விலை சுவாசமெனில்
உயிரதன் உயிர்பிற்கு
அவசிய..மது..
புத்தகமோ கவிதையோ
நானென நினைத்தால்
அவதார நோக்கம் சிதையலாம்..
என்னையதில் தேடாதீர்கள்..
இது ரசவாதமல்ல..
என் புத்தகம் வாங்க
உங்கள் நிழலென
ஒட்டியும் வெட்டியும் ஓடியும் நடந்தும்
உங்களுக்குள் மறைந்தும்
உங்களுடனேயே இருப்பேன்...
யுகங்களாய்...
நன்றிகளுடன்...அன்பன்..ராகவபிரியன்

Thursday, January 24, 2019

ஒரு கோவிலின் புனிதமென்பது தொடர்ந்து காப்பாற்றப் படவேண்டிய ஒன்று..தொன்று தொட்டு ஆயிரமாயிர வருடங்களாய் பின் பற்றப்படும் நடைமுறைகள் ஆகமவிதிகள் நிரூபிக்கப்பட்ட நன்மைகளை மக்களுக்கும் பக்தர்களுக்கும் வழங்கிவந்திருக்கின்றன..அது போன்ற புனிதமிகு ஆகம விதிகளை பின் பற்றி பூஜைகள் செய்யப்படும் கோவில்களில் பூஜாவிதிகளில் சமரசம் என்ற பேச்சிற்கே இடமில்லை..
கோவில் பூஜைகளைச் செய்யும் உரிமை அந்த குலத்தில் அல்லது குடும்பத்தில் பிறந்திருந்தால் மட்டும் தரப்படுவதில்லை...ஆகமங்களை கசடறக் கற்றிருக்க வேண்டும்..தீட்சை பெற்றிருக்க வேண்டும்..நியமங்களையும் நித்ய கர்மாக்களையும் தவறாது கடை பிடிக்கவேண்டும்...நமது மதத்தின் தத்துவங்களில் தர்மம் சார்ந்த நெறிகளில் போதிய ஞானம் பெற்றிருக்க வேண்டும்...சம்ஸ்கிருத அறிவு கண்டிப்பாக இருக்க வேண்டும்..பூஜைகளின் கால நேர நிர்ணயங்களை தவறாது கடைபிடிக்க வேண்டும்..அது தான் சரியான தகுதியென்று வைகானஸத்தில் சொல்லப்பட்டிருக்கிறது...அப்படியின்றி தன்னலத்திற்காக கோவில் பூஜையை பகுதி நேரத் தொழிலாக வைத்துக்கொள்ளுதல் மேற்கண்ட தகுதிகள் இருந்தாலும் மஹா பாவம்..என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளன...
தனக்கு பூஜைக்கான கிரமங்கள் சாத்தியப்படவில்லையெனில் அதற்கான தக்க மாற்று ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்..அப்போது தான் கோவிலின் புனிதமும் அதன் சக்தியும் காப்பாற்றப் படும்..இல்லையேல் அரங்கனின் கடும் கோபத்திற்கு ஆளாக நேரிடும்...
சுக்ரீவன் ராமனாக அவதரித்த அரங்கனிடம் சந்தேகம் கொள்கிறான்...தன் அண்ணன் வாலியை விட வலிமை இந்த மானுட ராமனுக்கு இருக்குமா எனச் சந்தேகிக்கிறான்..இதையுணர்ந்த எம்பெருமான்...கடும் கோபம் கொள்கிறார்...அரங்க பக்தர்களைச் சந்தேகிப்பவர்கள் மேல் அரங்கன் கொள்ளும் கோபத்தைவிடக் கடுமையாக அது இருந்திருக்க வேண்டும்...உடனே ஒரு செயலை ராமபிரான் யாரும் எதிர்பார்க்காமலேயே செய்கிறார்...துந்துபி என்ற அரக்கன்...நிறைய மலைகளை ஒன்று சேர்த்தார்ப்போன்ற மிகப்பெரிய உடலையுடையவன்..அவனை வாலி கொன்றுவிட அவ்வரக்கனின் ஆகப்பெரிய எலும்புக் குவியல் இமயம் அளவிற்கு அப்போது அங்கே கிடந்தது...அதை ராகவன் தன் இடதுகால் கட்டைவிரலால் மெல்ல தட்ட...அது ஏழு கடல் தாண்டி சென்றுவிழ...சுக்ரீவன் வெடவெடத்துப்போனான்..ராமபிரானின் வலிமையைச் சந்தேகிப்பவர்களுக்கு அரங்கன் தன் வலிமையைக் காட்டினால் அண்டசராசரங்கள் நடு நடுங்கிப்போகும் என்பதாக நம் ஆச்சாரியன் ஸ்ரீ நிகம்மாந்த மஹாதேசிகாச்சாரியார் சுவாமிகள்...தான் எழுதிய அபூர்வமான ஸம்ஸ்கிருத உரை நடைக் காவியமான ஸ்ரீ மஹாவீர் வைபவத்தில் இப்படிச் சொல்கிறார்..
த்ருத கடித கைலாஸ கோடி விகட துந்துபி கங்கானகூட தூர விஷேப தக்ஷ தக்ஷிணேதா பாதாங்குஷ்ட்ட தர சல ந விஸ்வஸ்த ஸூஹ்ருதாசய:
[ஸ்ரீ நிகம்மாந்த மஹாதேசிகாச்சாரியார்}
அரங்கன் திருவடிகளே சரணம்...
ஆச்சாரியன் திருவடிகளே சரணம்...
திருவஹிந்தபுர திவ்ய ரெங்கன் திருவடிகளே சரணம்...
அன்பன்...ராகவபிரியன்

Saturday, January 19, 2019

FOR RAGAVAPRIYAN'S "ZEST WITH LITERATURE"Rs 100 AND"RASAVATHA KAVITHIGAL"Rs,100 INTAMILcontact ragavapriyansrajagopalan@gmail.com.

Tuesday, January 15, 2019

பொங்கல் அரங்கன்

நக்கீரரே புகழ்ந்து போற்றிய[ இடஒதுக்கீட்டை சிறிதும் எதிர்பாராமல்] தன் கவித்திறமையால் சங்க இலக்கியங்களில் இடம்பிடித்த ப்ராமண கவியான கபிலர்..குறிஞ்சித்திணையைப் பாடுவதில் வல்லவர்...புற நானூற்றுப்பாடலொன்றில் பொங்கல் விழாவை அருமையாகக் குறிப்பிடுகிறார்....
"கபில நெடு நகர்க் கமழும் நாற்றமொடு
மனைச் செறிந்தவளே...வாணுதல் இனியே...
காய் நெல் கவளம் தீற்றிக் காவு தொறும்
கடுங்கண் யானை காப்பனர் அன்றி வருதலானார் வேந்தர்..."[ கபிலர்]
இப்படியெல்லாம் போற்றதலுக்குரிய பொங்கல் திரு நாள் தமிழகமெங்கும் கொண்டாடப்பட்டுக்கொண்டிருந்த பதின்மூன்றாம் நூற்றாண்டில் திருவரங்கத்தை முகம்மதிய படையெடுப்பு புரட்டிப்போட்டுக்கொண்டிருந்த காலம்..கொடிய வரலாற்று நிகழ்வின் காயங்கள் இன்னும் ஆறாத...நமது கலாச்சாரத்திற்கு விடப்பட்ட ஒரு துயர சவாலால் நமது பண்டிகைகள் களவாடப்பட்ட காலகட்டத்தில் அரங்கனின் தரிசனம் சுவரெழுப்பி மூடப்பட்டிருந்தது..உற்சவ மூர்த்திகள் தமிழக எல்லைகளைக் கடந்து காடேகிவிட..நமது ஆச்சாரியர் ஸ்ரீமான் நிகம்மாந்த மஹாதேசிகன் மனம் வெதும்பி கொள்ளிடம் கடந்து ஆசிரம் அமைத்து தங்குகிறார்...பக்தியின் மிகையென எதுவுமில்லை எனும் உண்மையை எப்படிப் பகைவர்களுக்கு விளங்க வைப்பதென அறியாது துடித்துப்போகிறார்..அமைதியயை, அரங்கனுக்கான ஆராதனைகளை, துண்டாடப்பட்ட விவசாயத்தை, பண்டிகைகளை எப்படி மீட்டெடுப்பதெனும் வகைமைகளை எப்போதும் சிந்தித்தப்படியே இருக்கிறார்...பயம் எனும் பேயின் ஆனந்த நடனம் திருவரங்க மக்களின் மனமேடைகளில் நட்டுவாங்கமில்லாமல் இடைவெளியில்லாமல் நடைபெற்றதால் மக்கள் நடைப்பிணமாக வாழ்வின் அடுத்த நொடி நிச்சயமின்றி யிருப்பதைக் கண்ணுற்ற ஆச்சாரியார் ...பண்டிகைகளைக் கொண்டாடும் போதில் மனம் அச்சம் நீங்கி மகிழ்வு பிறக்கும்..பண்டிகைகள் எதிரிகளையும் நண்பனாக்கும் என்ற நமது பாரம்பரிய கலாச்சாரத்தின் சக்தியை உணர்கிறார்...அது அறுவடைக் காலம்...மார்கழி தொடங்கியும் அரங்கனுக்கான அத்யயன உத்சவம் தொடங்கப்படவில்லை...மக்களின் மனமெல்லாம் அச்சம்...பயம்..பரிதவிப்பு...அரங்கனை நோக்கி 29 பாடல்களை இயற்றுகிறார்....அதில் ஒரு பாடல்...
"மருத் தரணி பாவக த்ரிதச நாத காலாதய:
ஸ்வக்ருத்ய மதிருர்வதே த்வதபராததோ பிப்யத:
மஹத் கிமபி வஜ்ரம் உத்யதமிவேதியத் ஸ்ருவதே
தரத்ய நக தத் பயம் ய இஹ தாவக: ஸ்தாவக:"
[ஸ்ரீ நிகம்மாந்த மஹாதேசிகாச்சாரியார்}
இதன் பொருள் என் சிற்றறிவிற்கு எட்டிய வரையில்...
குற்றமற்ற அரங்கா...நாங்கள் என்ன குற்றம் செய்தோம்..வஜ்ராயுதம் போன்ற உன் கட்டளையை மீறுபவர்கள் எவ்விதமான தண்டனையை அனுபவிப்பார்கள் என்பதைக் கண்டுவிட்டோம்...உனக்கான ஆராதனைகளில் சமரசம் செய்வது எவ்வித தீங்கை விளைவிக்கும் எனப் புரிந்தோம்..வாயு, அக்னி, இந்த்ரன், யமன் போன்ற தேவர்களே உன் கட்டளையை மீறத் தயங்குகையில் நாங்கள் சுய நலத்திற்காக உன்னை மீறீயதைப் பொருத்தருள்வாய்...உப நிஷத்தில் கூறியதையும் நாங்கள் மறந்து ..எங்கள் இஷ்ட்டத்திற்கு உனக்கான பூஜைகளில் குறைவைத்துவிட்டோம்...இப்போது பயம் எங்களைச் சூழ்ந்துகொண்டுள்ளது..இந்த பயம் போக்க உன்னால் தான் முடியும்.. ஹே ரங்க நாதா...பரம தயாபரனே...எங்களை மன்னித்து நற்கதியருள்வாய்...
இந்த ஸ்லோகம் அபிதிஸ்தவத்தில் உள்ளது...ஆச்சாரியரின் பாடல்களுக்குச் செவிசாய்த்த அரங்கன் அடுத்த ஆண்டிலேயே உற்சவ மூர்த்திகளை எழுந்தருளச் செய்து தன் முன்னான சுவர் சாய்க்கப்பட்டு பொங்கல் பண்டிகை வெகு வியமரிசையாக நடைபெற்றதை திருவரங்கக் கோவில் கல்வெட்டில் பதிக்கச் செய்திருக்கிறான்..
திருவரங்கன் திருவடிகளே சரணம்...
ராகவபிரியன்

Sunday, January 13, 2019

யானையின் காடு

யானைகளின் காட்டுக்குள் தான்
கும்கிகளும் பிறக்கின்றன..
எதோ ஒரு யானையது என்ற
காதம்பகம் கொடியது..
யானைத் தடங்களின் நடுவே
வெள்ளையும் இடைக்கோடுகளும் இடல்
வேகப் பதாகைகள் நடல்
இடை மறித்து தண்டவாளங்கள் செலல்
யானை தின்னிகளின்
கும்கி வியூகங்கள்..
கும்கிகளுக்கும்
மத்தகங்களும்
தந்தங்களும்
பதித்த பிரம்ம பட்டரைகளை
மூடமுடியாத
வலியின் போர்ப்பிளிறல்கள்
காடுகளெங்கும் எதிரொலிக்க..
வலிந்து திணிக்கப்பட்டு
தடதடத்து வரும்
ஒரு தண்டவாள யமனை
யானைத் தன்காலால் உதைக்கும்
அப்பொழுதில்
துண்டாடப்படுவது துயரம்..
கும்கிகளுக்குத் தரப்படும்
பச்சையங்களும் கவளங்களும்
காடுகளெங்கும் நிறைந்திருக்கையில்
வீடுகளிலும் வீதிகளிலும்
துதிக்கையால் ஒரு புத்தகத்தின்
அச்சிட்டப் பக்கத்தைச் சுருட்டி
மத்தகத்திற்குக் கடத்துவதென்பது
நம் காலத்தின்
இலக்கியக் கொடுமை..
கும்கிகளுக்கெதிரான
ஒரு ஈ.புத்தகம்
பிறக்கப்போகும் பிரசவ பூமியை
சுற்றிச் சுற்றி குலவையிடும்
யானைக் கூட்டம்...
{திருச்சியில் ...18.02.2018ல்
வாருங்கள் ...
கோடுகளற்ற காடுகள் படைப்போம்..}
ராகவபிரியன்

Thursday, January 3, 2019

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்..ஊக்கமளிப்பதாக நினைத்துக்கொண்டு பெரியவர்களின் வயதானவர்களின் அதிதீவிர பக்தர்களின் மனம் புண்படும் படி நடந்து கொண்டும் பேசிக்கொண்டும் ..ஒரு சில அதிமேதாவிகள் பிரச்சாரம் செய்துகொண்டும் இருப்பது அரங்கனுக்கான அத்யாவசியப் பணிகளை நடக்கவிடாமல் செய்வதற்குச் சமம் எனப் புரிந்துகொள்ளமறுப்பதை கவனப்படுத்தவேண்டிய கட்டாயத்திற்காகவும் அவசியத்திற்காகவுமே சில விழிப்புணர்வுச் செயல்கள் தேவைப்படுகின்றன..தேவைப்பட்டன...அப்படியான ஒரு காலகட்டத்தில்தான் தேவாரமும் திருவாசகமும் பிரபந்தங்களும் கவிதாயுதமாக மன அம்புறாதூளியில் அடைக்கப்பட்டிருக்கலாம்..
பக்தியென்பதும் அதை கடைபிடிப்பதும் அதற்கான வழிமுறைகளும் ஆலய வழிபாட்டு முறைகளும் எத்தனையோ பெரியவர்களால் மஹான் களால் வகுத்தளிக்கப்பட்டவை...அவைகளை இன்றைய வாழ்வியல் தேவைகளுக்காக புரிதலின்றி சமரசம் செய்துகொண்டு [உதாரணத்திற்கு மிருஷ்டா பூஜைகளே நானறிந்த வரை பெரும்பாலான கோவில்களில் செய்யப்படுவதில்லை...]அதைச் சரியானதென்றும் பூஜை முறைகளை தவறாக செய்துகொண்டிருந்தாலும் அதை யாரும் சுட்டிக் காட்டக் கூடாதென்ற அதிமேதாவி ஆணவ மனப்பாண்மையும் சுய நலச் சிந்தனைகளுக்கு பொருளாசைகளுக்கு பெண்ணாசைகளுக்காக பக்தியைய் பயன் படுத்துதலும் அரங்கன் சிவவடிவமெடுத்து தன் மூன்றாவது கண்ணைத் திறக்கச்செய்துவிடும் என்பதை உணர்த்துகிறது தேவாரப் பாடலொன்று...
மலைபல வளர்தரு புவியிடை மறைதரு வழிமலி மனிதர்கள்..
நிலைமலி கரர்முதல் உலகுகள்..நிலைபெறு வகை நினைவொருமிகும்
அலைகடல் நடு அறிதுயில் அமர் அரியுரு இயல் பரன்..உறைபதி சிலைமலி மதில் சிவபுர நினைபவர்...
இறைவனின் உறைவிடமான கோவில்களை தனிச் சொத்தாக நினைத்த..தன் சொத்தாக நினைத்த எத்தனையோ சாம்ராஜ்ஜியங்கள் இப்போது இருந்த இடம் தெரியாமல் மறைந்து போன நிஜம் தந்த படிப்பினையை ..வரலாறை அறியாமல் சிலர் இன்னும் கூட இந்தக் கோவிலில் நான் இதைச் செய்தேன் அதைச்செய்தேன்..அதனால் எனக்கு அதிக உரிமையிருக்கிறது என்பதுபோல் நடந்து கொள்வது நமது கலாச்சாரத்தை தொன்மையை பக்திமேன்மையை அரங்கனின் அரங்க நிஜத்தை கொச்சைப்படுத்துவதாக மட்டுமன்றி அல்லாது மீண்டும் ஒரு பேரழிவைச் சந்திக்கவேண்டிய சூழலை நமது சந்ததிகளின் மேல் நாம் வலிந்து திணிப்பதாகவும் ஆகலாம்...
இதுபோன்ற ஒரு காலகட்டம் வருமென்றுதான் அரங்கன் அர்சுனனைப் பார்த்து இவ்வாறு கூறுகிறார்..
ஸமோ தமஸ்தப: ஸெளசம் ஷாந்திரார்ஜவமேவ ச
ஜ்ஞ்சா நம் விஜ்ஞ்சா நமாஸ்திக்யம் ப்ரஹ்மகர்ம ஸ்வபாவஜம்...
இதன் பொருள் நானறிந்த வரையில்...
மனவடக்கம் புலனடக்கம் ஆணவமற்ற வகையில் தன் கடமையைச் செய்தல் பிறர்மீதான அபாண்ட குற்றச்சாட்டுகளைக் கூறாதிருத்தல் அகத் தூய்மை புறத் தூய்மை மற்றும் ஆலய வழிபாடுகளில் நேர்மையைக் கடைபிடித்தல் சாஸ்திரங்களையும் வழிபாட்டு முறைமைகளையும் கசடறக் கற்றுத் தேர்ந்து அதைத் தவறாமல் கடைபிடித்தல் இவைகளே பக்தி வெளியில் உலாவும் ஜீவன்களின் கடமைகள் என பரமாத்மா கூறுகிறார்...
விஜ்ஞ்சா நம் ஏவ...என்று கூறும் பரமாத்மா...பக்தியெனும் தத்துவசாரத்தை ஒரே வார்த்தையில் அர்சுனனுக்கு உபதேசித்துவிடுகிறார்...இப்போது விஞ்சான ரீதியில் பக்தியை கூறுபோட்டு கோவில்களை வியாபார ஸ்தலமாக்கிய நமது குற்றங்களை எப்படி போக்கிக் கொள்வது..நமது பாவங்களுக்கான பாவமன்னிப்பை எப்படித் தேடுவது என்பதை விரைவில் உங்களுக்காக பதிவிடுகிறேன்..
நன்றிகளுடன்..உங்கள்..அன்பன்...ராகவபிரியன்

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...