நிமிரமுடியாத வில்லெழுத்து
எனக்கென எழுதமுடியவில்லை..
எனது எழுத்துக்களுக்கு
மொழிகட்டுப்படுவதில்லை..
மொழியின் நாக்குகள்
என் எழுத்துக்களை
பல்லிடுக்கில் அதக்கிக்கொள்கின்றன..
எதை எழுதுவது
எதை விடுவது
எதை அணிவது
எதை நிர்வாணமாக்குவது
எனும் வானவில்
என் வானில் திடீரென
முளைக்கிறது..
வண்ணங்களைப் பிரித்தெடுக்கும்முன்
கண நேரம் நிமிர்ந்துவிட்டு
சட்டென
மறைந்து போய்விடுகிறது..
வண்ணங்களை
நான் உருவமுடியாதவனாகி
எழுதமுடியாமலாகிறேன்..
நிமிர்தல் எழுத்திலும்
வில்லிலும்
நாணில் பிணைக்கப்பட்டிருக்கலாம்...
அதனால்தான்
குனிந்தபடி
எனக்கென எழுதமுடியவில்லை...
ராகவபிரியன்
எண் திசை அரணாகி
இரு புஷ்கரனி நடுவாகி
நன்மாடக் கூடங்கள்
நாங்கேழு உருவாகி
தென் கிழக்கில் ராமானுசர்
திருச் சங்காய் ..சுதர்சனமோ
தென் மேற்கில் அமைவாகி
தேவமயனமைத்த திருவரங்கம்..
திருவரங்கன் தந்த திருவிருத்தங்கள்..புத்தகத்திலிருந்து...