Wednesday, May 8, 2019

ழுலியேன் வேன்சோன் [julien vinson] ப்ரெஞ்ச் உச்சரிப்பில் அவரை அப்படித்தான் அழைத்திருக்கிறார்கள்..வேன்சோன் பாண்டிச்சேரியில் பிறந்த ப்ரெஞ்ச் மொழியியலாளர்...கம்பராமாயணம் போன்ற தமிழ் இதிகாசங்களை ப்ரெஞ்ச் மொழியில் மொழியாக்கம் செய்தவர்..பாரிஸ் பல்கலைக் கழகத்தில் தமிழுக்கான இருக்கையொன்றை நிரந்தரமாக உருவாக்கிய முன்னோடி...தமிழிலக்கியங்களின் மீதான அவரது ஆய்வுகள் நம்பமுடியாதவைகளாகவும் பிரமிக்கும் படியாகவும் இருக்கின்றன..ஒரு ஆகச் சிறந்த மிகச் சிறிய செய்தி..வேன்சோன் சொன்னது..விருத்தப் பாக்களில் என்பத்தியேழு வகைகளை கம்பர் கையாண்டிருக்கிறார் என்பது...சிறிது நேரம் உங்களால் மூச்சு விட சிரமமாயிருக்கும்...அவ்வளவும் உண்மை...நம் முன்னோடி தமிழறிஞர்கள் ஆமோதித்த செய்திதான் அது...கம்ப ராமாயணத்தை இன்றைய காலகட்டத்தில் பொறுமையாய் படிப்பதென்பது அவ்வளவு சுலபமல்ல என்பது என் தனிப்பட்ட கருத்து..
மரபுக் கவிதைகளை அதுவும் காலத்தால் அழிக்க முடியாத காவியங்களை படித்து பொருள் உணர்ந்து ஆய்வு மேற்கொள்வதென்பது...அதுவும் வேற்று தாய்மொழியுடைய ஒருவர் செய்வதென்பது...கற்பனைக்கும் எட்டாமல் என் எண்ணங்களைப் புரட்டிப் போடுகிறது..அப்படி கம்பரின் ஒரு சில பாடல்களை தொடர்ந்து படிக்க முடியாமல் தவித்த போது விவேக சிந்தாமணி பாடலொன்று திடுமென என் முன்னே துண்டு விரித்து அமர்ந்து கொள்கிறது...
தூம்பினிற் புதைத்த கல்லும் துகளின்றிச் சுடர்கொடாது
பாம்புக்குப் பால்வார்த்தென்றும் பழகினும் நன்மைதாரா
வேம்புக்குத் தேன் வார்த்தலும் வேப்பிலைக் கசப்பு மாறா
தாம்பல நூல் கற்றாலுந் துர்ச்சனர் தக்கோராகார்...
அதிக விளக்கம் தேவையில்லை..எவ்வளவு உயர்வான எழுத்தென்றாலும் முக நூலில் எழுதினால் அதன் மறைமுக நிர்வாகிகளுக்கும் எழுத்துலக தாதாக்களுக்கும் அடிபணிந்து புகழ்ந்து போற்றி அவர்களின் குழு அடையாள அட்டையை அணிந்திருந்தால் தான் லைக் எண்ணிக்கை எகிறிரும்..இல்லாவிட்டால் எல்லோரும் மெளனமாக கடந்து விடுவார்கள்...வேன் சோன் காலத்தில் முக நூல் இல்லாததால் அவரின் தமிழ்ப்பணி இன்னமும் காலத்தை வென்று நிற்கிறது...ஆதலால் தேவையில்லாததைப் படித்து இருக்கும் இருபது முடிகளையும் இழந்துவிடாதே என்று எச்சரித்து ஒரு முறை துண்டை உதறி தூசி கிளப்பிவிட்டு நகர்ந்தது அப்பாடல்...
நானோ தமிழிலக்கிய எழுத்துலகில் முடிசூடா மன்னவனாக இருக்க வேண்டும் என்பதற்காகவே முக நூலில் எழுதிக்கொண்டிருப்பதால் என் சாதகத்தில் அதற்கான யோகம் இருக்கிறதா என்று ஆராய்ச்சியைத் தொடங்கினேன்...கம்பராமாயணத்தில் பாடல்களை தேவையில்லாமல் எதற்கு படிக்கவேண்டும்...மன்னனாகும் வாய்ப்பிருந்தால் படித்துத் தொலைக்கலாம் என்ற சூழலியலின் கட்டாயத்தின் முகவரியைக் கண்டுபிடிக்க...
பரத்வாஜ சம்மிதையைத் தழுவி எழுதிய பாடலொன்று...
மாதேகேடன்ம யோக வகைகன் மன்னனோடு
தாதையும் கூடியெந்தத் தலத்தினிலிருந்தபோதும்
ஓதிய ஒருவர் வீட்டிலொருவர் மாறாயிருந்த
போதுமாறாத செல்வம் பொருந்திடும் ராஜயோகம்...
இதன் பொருள்..கர்ம யோகத்தின் விபரம் ...ஜென்ம ராசியின் பத்தாம் வீட்டில் அதிபதி தந்தை லக்னாதிபதி போன்றவர்கள் எந்த வீட்டில் இருந்தாலும்...வாடகை வீட்டில் இருந்தாலும் கூட..எக்காலத்தும் இகழ்ச்சியின்றி அறிவுடனும் தனத்துடனும் [செல்வம்] ...நீங்களாக வேறு பொருள் கொண்டால் நான் பொறுப்பல்ல...எழுத்துலகில் ராஜ யோகத்துடன் இருப்பான்..
இது போன்ற பாடல்கள் கம்பராமயணத்திற்கும் முந்தையதென்பதால்..வேன் சோன் படித்திருக்கக் கூடலாம்..அவர் படித்திருந்தாலும் படித்திருக்காவிட்டாலும்...தற்போதைய தமிழிலக்கிய வெற்றிடத்தை நிரப்பி முடிசூடிக்கொண்டு ஜப்பான் மன்னரைப்போல செவ்வியபின்னவீன கால தமிழிலக்கியத்திற்கான என் தொண்டினைத் தொடரலாம் என முடிவு செய்து வேன் சோன் ப்ரெஞ்ச் கவிதைகள் எழுதியிருக்கிறாரா எனத் தேட..அவரின் ஒரு ஆங்கில மொழியாக்கம் பெற்ற கவிதையை என்னளவில் தமிழில் தருகிறேன்...
இது மொழியாக்கமோ மொழிமாற்றமோ இல்லை....
பாரீசின்
பண்டைய பொழுதொன்றில்
சிதைந்திருந்த
என் முகத்தை
நிமிர்ந்து பார்த்தவளின்
பார்வைகள் உயரத்திற்கு
ஒரு கோபுரம்
நாளை
உருவாகலாம்..
என் மோதிரமொன்றை
அணிந்து சென்றவள்..
தன் விரலுடன்
வெட்டி வீசிய இடத்தில்
குளமொன்று
உருவானது...
அதன்
அலைகளற்ற நீர்ப்பரப்பில்தான்
சிதைவற்ற
என் முகத்தை
அவள் தேடிக்கொண்டிருக்கிறாள்...
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...