அன்பு நண்பர்களுக்கு வணக்கம்...தற்போதைய நவீன அக்ரஹாரங்களில் பழமையின் சிறப்புகளை அதன் மிச்சங்களை அடுத்த தலைமுறைக்காக அழியாமல் பாதுகாத்து தளும்பிச் சிந்திவிடாமல் அவர்களிடம் கொண்டு சேர்க்கும் அரிய பணியை நடாத்திக்காட்டும் ஒரு சில அக்ரஹாரங்களில் அல்லூர் அக்ரஹாரமும் ஒன்று...எந்தத் தொழில் செய்தாலும் எந்த ஊரில் நாட்டில் இருந்தாலும் பெருமாள் மற்றும் சிவன் கோவில் உத்சவங்கள்..எல்லைக் கோவில் உத்சவங்கள் அனைத்திற்கும் அல்லூர் பெரியவர்கள் தங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளை மறந்து உத்சவங்கள் சிறப்பாக பழமை மாறாமல் புனிதம் பாதிக்கப்படாமல் அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டியாக ஒற்றுமையாய்ச் செயல்படும் பொறுப்புணர்வின் அதிசயம் நமது கலாச்சாரம் இன்னும் சில நூற்றாண்டுகளுக்குப் பாதுக்காக்கப்படுமென்ற நம்பகத்தன்மையின் ஈரத்தைக் காய்ந்துவிடாமல் உயிர்த்திருக்க வைத்திருக்கிறது...நிஜம்...கட்டுரையல்ல...
அக்ரஹாரப் பெரியவர்கள் ஒரு சில இடங்களில் நடப்பது போல் தங்கள் சுயத்தை வெளிப்படுத்தி தெய்வீகத்தைச் சிதைக்காமல் விழாக்களை நடத்தும் வித்தையறிந்தவர்கள்...இதுபோன்ற அரிய பண்பாட்டின் அடையாளத்தை இன்னமும் சிதையாமல் தன்னலமற்று பொலிவுடன் வைத்திருக்கும் எங்கள் அல்லூரின் பஞ்சநதீஸ்வரர் திருக்கோவிலின் நிறைவு நாள் உத்சவத்தில் சிவபெருமானும் பார்வதி தேவியும் ரிஷபாரூடராய் வீதி உலா வரும் நிகழ்வு நேற்று பொலிவுடன் நிறைவடைந்தது...
அத்யாத்ம ராமாயணத்தில் ராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்ய நிச்சயத்தவுடன்...கோவில் உத்சவங்களில் இசைக்கப்படும் திருச்சின்னம் என்ற ஒரு இசைக் கருவியால் ஒருவர் சப்தமெழுப்பி முன் செல்ல கட்டியக் காரன் அயோத்தி முழுவதும் அந்த நற்செய்தியை அறிவித்ததாக ஒரு செய்தி இருக்கிறது...அந்த இசைக் கருவியை பன்னீர் செல்வம் என்ற இசைக் கலைஞர் இசைக்க அதற்கான தாள நயத்திற்காக உடல் என்னும் பெயருடைய மேளமொன்றை இன்னொருவர் முழக்கிக்கொண்டு முன் வந்தது...எப்படி நமது பாரம்பரியத்தின் வலிமையான எச்சங்கள் தங்களின் அழிக்க முடியாத விழுமியங்களோடு இன்னமும் நம் மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்ற அதிசயக் கேள்வியின் சின்னஞ்சிறிய செடியொன்று என்னுள் துளிர்விட்டது...திடீரென ஒரு அதிசய மரம் தன் கிளைகளுடன் அந்த இரவில் பூத்துக்குலுங்கத்தொடங்கியது...
பன்னீர் செல்வம் என்ற அந்தக் கலைஞர் திருச்சிக்கு அருகில் உள்ள லால்குடியை ஒட்டிய ஒரு சிறிய கிராமத்தில் பரம்பரையாக இந்த இசைக்கருவியை கோவில் திருவிழாக்களில் இசைத்து தன் வாழ் நாட்களை அர்த்தமுள்ளதாக ஆக்கிக்கொண்டிருக்கிறார் என்று சொன்னபோது என் தலை வெட்கத்தில் கவிழ்ந்தது...வாழ்வின் அர்த்தங்கள் ஒரு புதிய கோணத்தை ஒரு வானவில்லாக என் வானில் வரைந்துவிட்டுப் போனது...
எங்கள் இல்லத்தின் அருகில் பஞ்சநதீஸ்வரரும் பார்வதி தேவியும் நாகஸ்வரக் கலைஞர்களின் இசை ஆராதனையைக் கேட்டபடியிருந்தனர்...சாந்தமுலேகா என்ற சாமா ராகக் கீர்த்தனையை கொஞ்சம் சினிமாப்பாடல்களின் மெட்டுகளைக் கலந்து கீரவானி புன்னாகவராளி போன்ற ராகத் தூறல்களைத் தெளித்து உச்சஸ்தாயி மேல்ஸ்தாயி நிரவல்களை அழகாக அனைவருமே ரசிக்கும் படி வாசித்து...ஸ்வரங்களில் புதுமைகளைப் புகுத்தி இசைக்கான ஈர்ப்பை அந்த ஈசனுக்கே ஏற்படுத்தியபடி இருந்தனர்...இசையை ரசித்தாடிய அணிச்சைத் தலைகளையும் தாளமிட்ட கைகளையும் கவனித்தப்படியே ஒரு சில நிழற்படங்களை எடுத்துக்கொண்டு கைபேசியில் மணியைப் பார்த்தால் இரவு 12.30..பிறகு எங்கள் வீட்டு தீபாரதனைகளை ஏற்றுக்கொண்டு வீதி வலம் நிறைபெற்றதற்கான வேட்டுச் சத்தம் கேட்கையில் இரவு ஒருமணியைத் தாண்டிவிட்டது...
பித்தளையில் செய்யப்படும் திருச்சின்னம் மற்றும் உடல் வாத்தியங்களை வடித்துக் கொடுக்கக் கூடிய நுண்ணறிவும் வல்லமையும் உள்ளவர்களை இப்போது பார்க்க முடியாதென்றும் இந்தக் கருவியை வடித்துக் கொடுத்தவர் நாகூரைச் சேர்ந்த ஒரு இஸ்லாமிய இசை ஞானி யென்றும் பன்னீர் செல்வம் சொன்ன வார்த்தைகள் இரவு உறக்கத்தைப் பறித்துக் கொண்டு என் உறக்கத்திற்கான தலையணையடியில் ஒளிந்து கொண்டு வெளிவர மறுத்துவிட்டது...இன்று இரவாவது உறக்கத்தை மீட்டெடுக்க முடியுமா எனத் தெரியவில்லை...
ராகவபிரியன்
ராகவபிரியன்

No comments:
Post a Comment