Friday, May 31, 2019

ஒரு மகத்தான மனித செயல் எதுவெனில் அரங்கனுக்கான பூஜைகளை நியமமாகச் செய்வதுதான் என்று பார்த்தனின் சாரதியாய் கீழிறங்கி வந்து உபதேசிக்கிறான் கண்ணன்.ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொரு யுகத்திலும் ஒரு தனிப்பட்ட காரணங்களுக்காகப் படைக்கப்பட்டவையென அறுதியிட்டுக் கூறும் எம்பெருமான் கலியுகத்தில் மனித வாழ்வின் அவசியங்களுக்காகவும் அவனின் அவதைகளைக் களைவதற்காகவுமே பூஜைமுறைகளை வகுத்தளிக்கிறான்..அதற்காக ஒரு கணப்பொழுதில் வைகானஸரை தன் இமையிலிருந்து படைத்துவிடுகிறான்..குழுமியிருந்த முனிசிரேஷ்டர்கள் திகைத்துப்போகிறார்கள்..பகவான் அவர்கள் யாரும் பூஜைமுறைகளை சரியாக வகுத்தளிக்கத் தயங்கியதால் தான் வைகானஸர் படைக்கப்பட்டதாகக் கூறுகிறான்...பதறிப்போன முனிவர்கள்...அரங்கனிடம் அவர்கள் அரங்கனுக்கான பூஜையில் தவறிழைத்துவிட்டால் ..அதனால் உருவாகும் அரங்கக்கோபாக்னி ஈரேழு பதினாங்கு உலகங்களையும் பொசுக்கிவிடும் என்பதால் தான் தயங்கியதாகக் கூறுகிறார்கள்..
கலியுகமல்லவா...தற்போது அரங்கனுக்கான பூஜைகளைச் செய்வோர் பகுதி நேரத் தொழிலாக அதைச் செய்துகொண்டிருக்கிறார்கள்..அரங்க பூஜைக்கான அடிப்படை வேத அறிவோ பயிற்சியோ இன்றி...அரங்க பூஜைக்கான நியமங்களைக் கடைபிடிக்காமல் துச்சமென மனிதர்களையும் அரங்க பக்தர்களையும் மனதில் நினைத்துக்கொண்டு எதோ கடமையாய் செய்ய வேண்டியிருக்கிறதேயென அரங்க பூஜைகளைக் கேவலப்படுத்துகிறார்கள்...
அரங்கன் காடு வடிவில் கிடக்கும் நைமிஸாரன்யம் வருகிறார் வைகானஸர்..அவருடன் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு சிஷ்யர்கள் வருகிறார்கள்..அத்ரி பிருகு காஸ்யபர் வசிஷ்டர்...அவர்களுடன் வைகானஸர்...சுமார் நான்கு லட்சம் கிரந்தங்களை..[ஒரு ஒன்றரை கோடி ப்ராம்ணங்களை கிரந்தங்களாகச் சுருக்கியவை] அரங்கனின் பூஜைக்கான விதிமுறைகளாய்...ஆன்மீக பொக்கிஷங்களாய் கலியுகத்தில் மனித குலம் உய்வதற்கான ஒரே ஒரு உபாயமாய் அரங்கனின் ஆணையாய் வகுத்துத் தருகிறார்கள்...
அரங்க பூஜையொன்றே கலியுகத்தின் ஒரே செயலாக இருக்கவேண்டும்..அதை நோக்கியே மற்ற உயிரினங்கள் தங்கள் வாழ்வை நகர்த்தும்...அதை உணர்வு பூர்வமாக மனிதன் உணர்ந்தால்...அவன் உணர்வுகளில் நான் என் பைநாகப் பாய்விரித்துப் படுத்துக்கொள்வேன்...என்கிறு தொடர்கிறான் பார்த்தனின் ரதக் குதிரைகளின் லகானை இழுத்து வேகத்தைக் கட்டுப்படுத்தியபடியே...
பார்த்தசாரதியின் இந்த உபதேசத்தைக் கேட்டு அதிர்ந்த பார்த்தன்...அரங்கனிடம் கேட்கிறான்...
இஷ்டாந்த்போகாந்திஹிவோ தேவா தாஸ்யந்த்தே யஜ்ஞபாவிதா..:
தைர்தத்தா நப்ரதாயைப்யோ யோபுங்க்தேஸ்தே ந ஏவஸ:
பார்த்தனின் சம்ஸ்கிருத கேள்விக்கான என்னளவிலான பொருள்...பூஜைகளாலும் வேள்விகளாலும் தங்கள் விருப்பமான போகங்களை அனுபவிக்கவே தேவதைகளை அழைக்கிறார்கள் மானுடர்கள்...அரங்கனை மறந்து விடுகிறார்கள்..அதுபோன்ற பூஜைகளிலும் வேள்விகளிலும் அரங்கனுக்கான அவிர்பாகம் கொடுக்கப்படாமல் பெறப்படுகின்ற...அதாவது தேவதைகளால் தரப்படுகின்ற இன்பம் அல்லது சுகம் அல்லது நன்மைகள் திருடப்படதற்குச் சமமாகாதா....
அற்புதமான கேள்வியொன்றைக் கேட்டதாக பார்த்தன் இறுமாந்து போகிறான்..
அரங்கன் மெல்ல தனக்குள் சிரித்துக் கொள்கிறான்...அரங்கனின் கண்முன்னே ஒரு சிறிய பெருமாள் கோவிலின் பூஜைமணி ஒலிக்கிறது..பூஜைமணியோசை கேட்டு பக்தர்கள் திரண்டு வருகிறார்கள்...அரங்கனுக்கான பூஜை செய்யும் வைகானஸருக்கு வேறு ஒரு முக்கிய வேலையிருக்கிறது...நான்கு லட்சம் கிரந்தங்களை மறந்து அரங்கனின் நாமாவையும் மறந்து பக்தர்கள் வரிசையில் வராமல் முண்டியடித்து தீர்த்தம் வாங்க கை நீட்டுவதால் வந்தக் கோபத்தால் அவர்களின் கைகளில் தீர்த்தப் பாத்திரத்தைக் கவிழ்த்துவிடுகிறார்...அந்தக் காட்சியை அதன் சாரத்தை ஒரு ஸ்லோகமாக பார்த்தனுக்குச் சொல்கிறான் அரங்கன்....பால் உள்ளிட்ட திரவியங்களை அரங்க விக்ரஹத்தின் மேல் அபிஷேகம் செய்வதற்கும் அப்படியே கவிழ்பதற்குமான வித்தியாசங்களை...ஆன்மீக வாழ்விற்கும் அலட்சிய வாழ்விற்குமான முரண்களை வெகு அழகாச் சொல்லும் இந்த ஸ்லோகம்...
யஜ்ஞசிஷ்டாஸி ந: ஸந்தோ முஸ்யந்தே ஸர்வகில்பிஷை:
புஞ்ஜதே தேதவகம் பாபாயே பசந்த்யாத்மகாரணாத்..
பூஜைகளிலும் வேள்வியிலும் நியமங்களைக் கடைப்பிடிக்காமலும் நைவேத்யத்திற்குப்பின்னான...ஆகுதியின் மிச்சமான.... உணவை அலட்சியப்படுதுபவன்...அதைத் தவிர்ப்பவன் தன் நாவின் ருசிக்காவும் தனக்கான ஆகச்சிறந்த பண்டங்களைச் சமைத்து வைத்து உண்பவன்..எனக்கான பூஜைகளையோ வேள்விகளையோ செய்யத் தகுதியற்றவன்..அவன் பாவங்களைத்தான் உண்கிறான்..அப்படிப்பட்டவன் வைகானஸ பூஜைமுறைகளை கற்றிருந்தும் அறிவிழந்தவனாகிறான்...அவனின் பூஜைகளை நான் ஏற்பதில்லை...[என்று என்னளவில் பொருள் கொள்ளத்தக்கதாகும்...]
எந்த ஒரு பூஜைமுறையையும் எளிதில் குறைகொண்ட கண்ணால் பார்த்துவிடமுடியும்..ஆனால் வைகானஸ பூஜைமுறைகள் ஒரு சிறிய குறைகூட யாராலும்...பகவானாலும் கூட கண்டுபிடிக்க முடியாத வண்ணம் வகுத்தளிக்கப்பட்டிருப்பது நிஜம்...அப்படியான பூஜை முறைகளைச் செய்யும் வாய்ப்பு கிடைத்தவர்கள்...அதைப் பகுதி நேரத் தொழிலாகவோ...லாபமீட்டும் செயலாகவோ..தன்னலம் காக்கச் செய்யும் ஒரு தவிர்க்க முடியாத கடமையாகவோ செய்தால் அவர்களை அரங்கன் மன்னிக்க மாட்டான்...நியமமாகச் செய்யமுடியாவிட்டல்...தனது பொறுப்புகளை நியமமாகச் செய்பவரிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக்கொண்டால் அரங்கனின் கோபத்திலிருந்து தப்பமுடியும்...அரங்கனே சொன்ன அதற்கான சான்றுகள் நிறைய திருமங்கயாழ்வாரின் பாசுரங்களில் காணக்கிடைக்கின்றன...அவரின் ஒரு வரி...தொண்டே செய்து என்றும் தொழுது வாழி...ஒழுகா..பண்டே பரமன் பணித்த பணி...
திருமங்கையாழ்வார் ஒரு வரியில் ஒரு பிரம்மாண்டத்தைப் படைத்து விடுகிறார்...
அரங்கன் திருவடிகளே சரணம்...
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்...
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்...
ராகவபிரியன்

Saturday, May 18, 2019

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்...தற்போதைய நவீன அக்ரஹாரங்களில் பழமையின் சிறப்புகளை அதன் மிச்சங்களை அடுத்த தலைமுறைக்காக அழியாமல் பாதுகாத்து தளும்பிச் சிந்திவிடாமல் அவர்களிடம் கொண்டு சேர்க்கும் அரிய பணியை நடாத்திக்காட்டும் ஒரு சில அக்ரஹாரங்களில் அல்லூர் அக்ரஹாரமும் ஒன்று...எந்தத் தொழில் செய்தாலும் எந்த ஊரில் நாட்டில் இருந்தாலும் பெருமாள் மற்றும் சிவன் கோவில் உத்சவங்கள்..எல்லைக் கோவில் உத்சவங்கள் அனைத்திற்கும் அல்லூர் பெரியவர்கள் தங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளை மறந்து உத்சவங்கள் சிறப்பாக பழமை மாறாமல் புனிதம் பாதிக்கப்படாமல் அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டியாக ஒற்றுமையாய்ச் செயல்படும் பொறுப்புணர்வின் அதிசயம் நமது கலாச்சாரம் இன்னும் சில நூற்றாண்டுகளுக்குப் பாதுக்காக்கப்படுமென்ற நம்பகத்தன்மையின் ஈரத்தைக் காய்ந்துவிடாமல் உயிர்த்திருக்க வைத்திருக்கிறது...நிஜம்...கட்டுரையல்ல...
அக்ரஹாரப் பெரியவர்கள் ஒரு சில இடங்களில் நடப்பது போல் தங்கள் சுயத்தை வெளிப்படுத்தி தெய்வீகத்தைச் சிதைக்காமல் விழாக்களை நடத்தும் வித்தையறிந்தவர்கள்...இதுபோன்ற அரிய பண்பாட்டின் அடையாளத்தை இன்னமும் சிதையாமல் தன்னலமற்று பொலிவுடன் வைத்திருக்கும் எங்கள் அல்லூரின் பஞ்சநதீஸ்வரர் திருக்கோவிலின் நிறைவு நாள் உத்சவத்தில் சிவபெருமானும் பார்வதி தேவியும் ரிஷபாரூடராய் வீதி உலா வரும் நிகழ்வு நேற்று பொலிவுடன் நிறைவடைந்தது...
அத்யாத்ம ராமாயணத்தில் ராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்ய நிச்சயத்தவுடன்...கோவில் உத்சவங்களில் இசைக்கப்படும் திருச்சின்னம் என்ற ஒரு இசைக் கருவியால் ஒருவர் சப்தமெழுப்பி முன் செல்ல கட்டியக் காரன் அயோத்தி முழுவதும் அந்த நற்செய்தியை அறிவித்ததாக ஒரு செய்தி இருக்கிறது...அந்த இசைக் கருவியை பன்னீர் செல்வம் என்ற இசைக் கலைஞர் இசைக்க அதற்கான தாள நயத்திற்காக உடல் என்னும் பெயருடைய மேளமொன்றை இன்னொருவர் முழக்கிக்கொண்டு முன் வந்தது...எப்படி நமது பாரம்பரியத்தின் வலிமையான எச்சங்கள் தங்களின் அழிக்க முடியாத விழுமியங்களோடு இன்னமும் நம் மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்ற அதிசயக் கேள்வியின் சின்னஞ்சிறிய செடியொன்று என்னுள் துளிர்விட்டது...திடீரென ஒரு அதிசய மரம் தன் கிளைகளுடன் அந்த இரவில் பூத்துக்குலுங்கத்தொடங்கியது...
பன்னீர் செல்வம் என்ற அந்தக் கலைஞர் திருச்சிக்கு அருகில் உள்ள லால்குடியை ஒட்டிய ஒரு சிறிய கிராமத்தில் பரம்பரையாக இந்த இசைக்கருவியை கோவில் திருவிழாக்களில் இசைத்து தன் வாழ் நாட்களை அர்த்தமுள்ளதாக ஆக்கிக்கொண்டிருக்கிறார் என்று சொன்னபோது என் தலை வெட்கத்தில் கவிழ்ந்தது...வாழ்வின் அர்த்தங்கள் ஒரு புதிய கோணத்தை ஒரு வானவில்லாக என் வானில் வரைந்துவிட்டுப் போனது...
எங்கள் இல்லத்தின் அருகில் பஞ்சநதீஸ்வரரும் பார்வதி தேவியும் நாகஸ்வரக் கலைஞர்களின் இசை ஆராதனையைக் கேட்டபடியிருந்தனர்...சாந்தமுலேகா என்ற சாமா ராகக் கீர்த்தனையை கொஞ்சம் சினிமாப்பாடல்களின் மெட்டுகளைக் கலந்து கீரவானி புன்னாகவராளி போன்ற ராகத் தூறல்களைத் தெளித்து உச்சஸ்தாயி மேல்ஸ்தாயி நிரவல்களை அழகாக அனைவருமே ரசிக்கும் படி வாசித்து...ஸ்வரங்களில் புதுமைகளைப் புகுத்தி இசைக்கான ஈர்ப்பை அந்த ஈசனுக்கே ஏற்படுத்தியபடி இருந்தனர்...இசையை ரசித்தாடிய அணிச்சைத் தலைகளையும் தாளமிட்ட கைகளையும் கவனித்தப்படியே ஒரு சில நிழற்படங்களை எடுத்துக்கொண்டு கைபேசியில் மணியைப் பார்த்தால் இரவு 12.30..பிறகு எங்கள் வீட்டு தீபாரதனைகளை ஏற்றுக்கொண்டு வீதி வலம் நிறைபெற்றதற்கான வேட்டுச் சத்தம் கேட்கையில் இரவு ஒருமணியைத் தாண்டிவிட்டது...
பித்தளையில் செய்யப்படும் திருச்சின்னம் மற்றும் உடல் வாத்தியங்களை வடித்துக் கொடுக்கக் கூடிய நுண்ணறிவும் வல்லமையும் உள்ளவர்களை இப்போது பார்க்க முடியாதென்றும் இந்தக் கருவியை வடித்துக் கொடுத்தவர் நாகூரைச் சேர்ந்த ஒரு இஸ்லாமிய இசை ஞானி யென்றும் பன்னீர் செல்வம் சொன்ன வார்த்தைகள் இரவு உறக்கத்தைப் பறித்துக் கொண்டு என் உறக்கத்திற்கான தலையணையடியில் ஒளிந்து கொண்டு வெளிவர மறுத்துவிட்டது...இன்று இரவாவது உறக்கத்தை மீட்டெடுக்க முடியுமா எனத் தெரியவில்லை...
ராகவபிரியன்

Tuesday, May 14, 2019

ஆன்மீக நிகழ்வொன்றால் உலகையே மாற்றிவிட முடியுமெனும் நம்பிக்கை பொ ஆ மு சுமார் பத்தாயிரவருடங்களுக்கு முன்னால் பிறந்ததாக சைவ சமயம நூல்கள் சொல்கின்றன..சைவதாஸ உப நிஷத்தில் சிவனுக்கும் ருத்ரனுக்கும் உள்ள வேறுபாடுகள் பொ ஆ மு இருபதாயிர வருடங்கள் முந்தைய இலக்கிய அதிசய வரையறைகள்...இத்தனைப் பழமையான ஆன்மீக வரலாற்றில் இந்தியக் கோவில்களும் அதன் வழிபாட்டு முறைமைகளும் உத்சவங்களும் வாழ்வியலின் புரியமுடியா தத்துவ விளக்கங்களின் நிதர்சனங்கள் எனில் உங்களால் மறுக்க முடியாதென்பது நிஜம்..

சித்திரை வைகாசி மாதங்களின் பிரம்மோத்சவங்களின் ஆதிமுதல் பிரம்மோத்சவ நாளை அதன் நிகழ்விடத்தைத் தேடிக் கண்டடைய முயன்ற என் பிரயத்தனங்களை நீங்கள் கேலிக்கும் கேள்விக்கும் உள்ளாக்குவீர்கள் என அறிவேன்..இருந்தும் எனது ஆன்மீகத் தேடலின் நீள் பயணத்தில் சற்று இளைப்பாறுகையில் திருப்பறாய்த்துறையின் என் மூன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை படித்த விவேகானந்தா ஆரம்ப மற்றும் உயர் நிலைப் பள்ளி நாட்கள் நினைவில் வந்தன...வரலாற்றுச் சிறப்பு மிக்க தொன்மையான அந்தச் சிவன் கோவில் வளாகத்தில் இருந்த இந்தச் சிறுவனின் பள்ளிக்கூட நேரங்கள் ..அவன் சுவாசித்த ஆன்மீகப் பாடங்கள்..சித்பவானந்தரின் ஆன்மீக உரைகள் இன்றும் மனதிலிருந்து அகலாதது வரம் தானே...

ஐந்தாம் வகுப்பின் கடைசீ பரீட்சையின் தர அட்டையில்...அதுவரை நடந்த அத்துனை பரீட்சைகளிலும் முதல் இடம் பிடித்தும்..கடைசீ தேர்விலும் முதலிடமெனினும் ஒரு மதிப்பெண் குறைந்ததால் அவனின் தந்தை கையெழுத்திட மறுத்ததும் அன்றி பிறந்து பத்து நாட்களே ஆன தன் ஆறாவது குழந்தைக்கான அவனின் மூன்றாவது தங்கைக்கான ஆழாக்குப் பால் கடனாக அடுத்த வீட்டில் வாங்கி வரும்படி ஆணையிட அந்தச் சிறுவன் தயங்க அவன் வாங்கிய அடியால் கன்னத்தில் அதனால் பதிந்த தகப்பனின் விரல் கோடுகள் இன்னமும் அவன் முகத்தில் அழியாமல் இருப்பதை அவன் தடவிப் பார்த்துக்கொண்டிருக்கும் அணிச்சை நிகழ்வும் மேனரிஸமென நீங்கள் நினைத்தால் அவன் என்ன செய்வான்...?

அன்று அச்சிறுவனின் அண்ணன் ஏழாம் வகுப்புப் படிக்கும் சிவபக்தன் அவனையும் அழைத்துக்கொண்டு பறாய்த்துறைக் கோவிலை நாற்பத்தெட்டுச் சுற்றுகள் சுற்றுகிறான்...ஒவ்வொரு சுற்றிலும் வேதங்களும் ஆகமங்களும் அவர்களுடன் சுற்றி வந்திருக்க வேண்டும்..வேதம் பசுவென்றால் ஆகமம் அது தரும் பசும்பால் என்றெல்லாம் ஒருமுறை சித்பவானந்தர் சொன்னது அவனுக்குப் புரிந்திருக்க அன்று எந்த நியாயமும் இல்லை...

அந்தப் பராய்த்துறை பெருமானுக்கு நடந்த பிரம்மோத்சவம் அவனுக்கு இன்றும் நினைவில் இருக்கிறது..தன் கன்னத்தைத் தடவிக்கொண்டிருக்கும் அவன் கண் முன்னே அந்தக் காட்சிகள் மெல்ல உருக்கொள்கின்றன...இதோ இந்த வருடமும் சென்ற வருடமும் அல்லூர் பஞ்ச நதீஸ்வரருக்கு நடக்கும் பிரம்மோத்சவம் சிவனுக்கும் ருத்ரனுக்குமான வேற்றுமைகளைக் கடந்து பக்தியை இன்றுவரை உயர்த்திப் பிடிக்கிறது...பிரம்மோத்சவ காலங்களில் கோவிலுக்கு வரமுடியாத நோயாளிகளையும் வயது மூப்பினால் நடமாட்டமற்ற முதியோர்களையும் இன்னபிற பக்தர்களையும் நாடி அந்த ஆதிசிவன் அவர்கள் இல்லத்திற்கே வருவதற்காக நடத்தப்படும் பொருள் நிறை தத்துவார்த்த நிகழ்வுகள்..அதன் ஆன்மீக மற்றும் ஆகம விதிகளை நியமமாகக் கடைபிடித்து உத்சவத்தை நடத்திக்கொண்டிருக்கும் ஆன்மீக அல்லூர் பெரியவர்களுக்கு அந்தச் சிறுவன் தன் நன்றிகளையும் நமஸ்காரங்களையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளும் அதே வேளையில் சிலர் சில சந்தேகங்களையும் அவனிடம் எழுப்புகிறார்கள்...

விச்சைக் கேடுபொய்க்கு ஆகாது என்றிங்கு எனைவைத்தாய்
இச்சைக்கு ஆனார் எல்லாரும் வந்துன் தாள் சேர்ந்தார்..
அச்சத்தாலே ஆழ்ந்திடு கின்றேன் ஆரூர் எம்
பிச்சைத் தேவா என் நான் செய்கேன் பேசாயே...
[திரு வாசகம்]

அனைவரின் சந்தேகத்திற்கும் மாணிக்க வாசகரின் இந்தப் பாடல் தான் பதிலாக இருக்கும்...

அருகிலிருக்கும் பஞ்ச நதீஸ்வரருக்கு முதல் நாள் கொடியேற்றமும் சிறப்பாக நடைபெற்றபோது ..பராய்த்துறை நாதருக்கு ஒவ்வொரு நாளும் நடைபெற்ற பிரம்மோத்சவம் அவன் கண் முன்னே மீண்டும் நிகழ்வது பிரமையல்ல என்று அவனால் ஆணித்தரமாகச் சொல்லமுடியும்...

கொடியேறிய அதே நாள் மாலை சிம்மவாகனம்...இரண்டாம் நாள் சூரிய பிரபை..சந்திர பிரபை...மூன்றாம் நாள் பூத வாகனம் புருஷாமிருக வாகனம்..நான்காம் நாள் நாக வாகனம் ரிஷப வாகனம்..ஐந்தாம் நாள் அதிகார நந்தி மற்றும் கைலாச நாதர் வாகனம்..ஆறாம் நாள் சூர்ணோத்சவ பல்லக்கு மற்றும் யானை வாகனம்...ஏழாம் நாள் ரதம் மற்றும் இரவு தொட்டியுத்சவம். எட்டாம் நாள் இறைவிமானம் இரவு அறுபத்து மூவர் உத்சவம்..ஒன்பதாம் நாள் நூதன பல்லக்கும் இரவு முத்துச் சிவிகையில் பிக்ஷாடணர் புறப்பாடும்...பத்தாம் நாளில் மாவடிச் சேவையும்...[தலமகிமை] மற்றும்..நடராஜரின் நர்த்தன ருத்ர தாண்டவக் காட்சியும் கண்முன்னே நிகழ்வது கண்டிப்பாக பிரமையல்ல என்பதில் உறுதியாக நிற்கும் அச்சிறுவனை தொடர் வேட்டுக்கள் நினைவுலகிற்கு அழைத்து வருகின்றன..

ரிஷபம் என்பது நிர்மலமான பக்தி நிலையின் பிரதிமையென்றும் சைவ சித்தாந்தங்கள் சொல்கின்றன..மனம் சஞ்சலமற்று இறைவனைக் காண விழைகையில் தடையெனும் நந்தி தலைசாய்த்து இறைகாட்சியின் நிஜம் காட்டும் ஆன்மீக அதிசயம்.....தடை நந்தி திரிந்து கொண்டிருக்கும் மனச் சாலைகளின் ஆரவாரம் முடிந்து நடுச்சாலையில் நந்தியமர்ந்து அசைபோட்டபடி தலை சாய்க்கும் தெய்வீகக் காட்சியைக் காணும் ஒவ்வொரு இதயமும் சிவனையும் நிச்சயமாய்க் காணமுடியும்..அவ்வாறான அமைதியான இதயத்தை சிவனைக் காண இதோ வாசல் நோக்கி நகர்கிறான் அச்சிறுவன்..அவனுக்கு இப்போது அறுபது வயதுதான் முடிந்திருக்கிறது.
ராகவபிரியன்

Wednesday, May 8, 2019

ழுலியேன் வேன்சோன் [julien vinson] ப்ரெஞ்ச் உச்சரிப்பில் அவரை அப்படித்தான் அழைத்திருக்கிறார்கள்..வேன்சோன் பாண்டிச்சேரியில் பிறந்த ப்ரெஞ்ச் மொழியியலாளர்...கம்பராமாயணம் போன்ற தமிழ் இதிகாசங்களை ப்ரெஞ்ச் மொழியில் மொழியாக்கம் செய்தவர்..பாரிஸ் பல்கலைக் கழகத்தில் தமிழுக்கான இருக்கையொன்றை நிரந்தரமாக உருவாக்கிய முன்னோடி...தமிழிலக்கியங்களின் மீதான அவரது ஆய்வுகள் நம்பமுடியாதவைகளாகவும் பிரமிக்கும் படியாகவும் இருக்கின்றன..ஒரு ஆகச் சிறந்த மிகச் சிறிய செய்தி..வேன்சோன் சொன்னது..விருத்தப் பாக்களில் என்பத்தியேழு வகைகளை கம்பர் கையாண்டிருக்கிறார் என்பது...சிறிது நேரம் உங்களால் மூச்சு விட சிரமமாயிருக்கும்...அவ்வளவும் உண்மை...நம் முன்னோடி தமிழறிஞர்கள் ஆமோதித்த செய்திதான் அது...கம்ப ராமாயணத்தை இன்றைய காலகட்டத்தில் பொறுமையாய் படிப்பதென்பது அவ்வளவு சுலபமல்ல என்பது என் தனிப்பட்ட கருத்து..
மரபுக் கவிதைகளை அதுவும் காலத்தால் அழிக்க முடியாத காவியங்களை படித்து பொருள் உணர்ந்து ஆய்வு மேற்கொள்வதென்பது...அதுவும் வேற்று தாய்மொழியுடைய ஒருவர் செய்வதென்பது...கற்பனைக்கும் எட்டாமல் என் எண்ணங்களைப் புரட்டிப் போடுகிறது..அப்படி கம்பரின் ஒரு சில பாடல்களை தொடர்ந்து படிக்க முடியாமல் தவித்த போது விவேக சிந்தாமணி பாடலொன்று திடுமென என் முன்னே துண்டு விரித்து அமர்ந்து கொள்கிறது...
தூம்பினிற் புதைத்த கல்லும் துகளின்றிச் சுடர்கொடாது
பாம்புக்குப் பால்வார்த்தென்றும் பழகினும் நன்மைதாரா
வேம்புக்குத் தேன் வார்த்தலும் வேப்பிலைக் கசப்பு மாறா
தாம்பல நூல் கற்றாலுந் துர்ச்சனர் தக்கோராகார்...
அதிக விளக்கம் தேவையில்லை..எவ்வளவு உயர்வான எழுத்தென்றாலும் முக நூலில் எழுதினால் அதன் மறைமுக நிர்வாகிகளுக்கும் எழுத்துலக தாதாக்களுக்கும் அடிபணிந்து புகழ்ந்து போற்றி அவர்களின் குழு அடையாள அட்டையை அணிந்திருந்தால் தான் லைக் எண்ணிக்கை எகிறிரும்..இல்லாவிட்டால் எல்லோரும் மெளனமாக கடந்து விடுவார்கள்...வேன் சோன் காலத்தில் முக நூல் இல்லாததால் அவரின் தமிழ்ப்பணி இன்னமும் காலத்தை வென்று நிற்கிறது...ஆதலால் தேவையில்லாததைப் படித்து இருக்கும் இருபது முடிகளையும் இழந்துவிடாதே என்று எச்சரித்து ஒரு முறை துண்டை உதறி தூசி கிளப்பிவிட்டு நகர்ந்தது அப்பாடல்...
நானோ தமிழிலக்கிய எழுத்துலகில் முடிசூடா மன்னவனாக இருக்க வேண்டும் என்பதற்காகவே முக நூலில் எழுதிக்கொண்டிருப்பதால் என் சாதகத்தில் அதற்கான யோகம் இருக்கிறதா என்று ஆராய்ச்சியைத் தொடங்கினேன்...கம்பராமாயணத்தில் பாடல்களை தேவையில்லாமல் எதற்கு படிக்கவேண்டும்...மன்னனாகும் வாய்ப்பிருந்தால் படித்துத் தொலைக்கலாம் என்ற சூழலியலின் கட்டாயத்தின் முகவரியைக் கண்டுபிடிக்க...
பரத்வாஜ சம்மிதையைத் தழுவி எழுதிய பாடலொன்று...
மாதேகேடன்ம யோக வகைகன் மன்னனோடு
தாதையும் கூடியெந்தத் தலத்தினிலிருந்தபோதும்
ஓதிய ஒருவர் வீட்டிலொருவர் மாறாயிருந்த
போதுமாறாத செல்வம் பொருந்திடும் ராஜயோகம்...
இதன் பொருள்..கர்ம யோகத்தின் விபரம் ...ஜென்ம ராசியின் பத்தாம் வீட்டில் அதிபதி தந்தை லக்னாதிபதி போன்றவர்கள் எந்த வீட்டில் இருந்தாலும்...வாடகை வீட்டில் இருந்தாலும் கூட..எக்காலத்தும் இகழ்ச்சியின்றி அறிவுடனும் தனத்துடனும் [செல்வம்] ...நீங்களாக வேறு பொருள் கொண்டால் நான் பொறுப்பல்ல...எழுத்துலகில் ராஜ யோகத்துடன் இருப்பான்..
இது போன்ற பாடல்கள் கம்பராமயணத்திற்கும் முந்தையதென்பதால்..வேன் சோன் படித்திருக்கக் கூடலாம்..அவர் படித்திருந்தாலும் படித்திருக்காவிட்டாலும்...தற்போதைய தமிழிலக்கிய வெற்றிடத்தை நிரப்பி முடிசூடிக்கொண்டு ஜப்பான் மன்னரைப்போல செவ்வியபின்னவீன கால தமிழிலக்கியத்திற்கான என் தொண்டினைத் தொடரலாம் என முடிவு செய்து வேன் சோன் ப்ரெஞ்ச் கவிதைகள் எழுதியிருக்கிறாரா எனத் தேட..அவரின் ஒரு ஆங்கில மொழியாக்கம் பெற்ற கவிதையை என்னளவில் தமிழில் தருகிறேன்...
இது மொழியாக்கமோ மொழிமாற்றமோ இல்லை....
பாரீசின்
பண்டைய பொழுதொன்றில்
சிதைந்திருந்த
என் முகத்தை
நிமிர்ந்து பார்த்தவளின்
பார்வைகள் உயரத்திற்கு
ஒரு கோபுரம்
நாளை
உருவாகலாம்..
என் மோதிரமொன்றை
அணிந்து சென்றவள்..
தன் விரலுடன்
வெட்டி வீசிய இடத்தில்
குளமொன்று
உருவானது...
அதன்
அலைகளற்ற நீர்ப்பரப்பில்தான்
சிதைவற்ற
என் முகத்தை
அவள் தேடிக்கொண்டிருக்கிறாள்...
ராகவபிரியன்

Monday, May 6, 2019

ஒரு பனவனின் ஆன்மீக நினைவுகள்....
குணசீலம் நடந்து செல்வதாக நிச்சயத்திருந்தேன்..ஆனால் அரங்கன் என்னை போர்ட் ஐக்கானில் சென்று வரப் பனித்ததால் சரியாக பத்து மணிக்கு குணசீலத்தில் நானும் மனைவியும் போர்ட் ஐக்கானும் இருந்தோம்...முடி காணிக்கைச் செலுத்திவிட்டு ஐயன் வாய்க்காலில் பதினோரு மணியளவில் தேங்கிக் கிடந்த குட்டைத் தண்ணீரில் குளிக்கும் போது.... சிறுவர்களாய் நாங்கள் வாராவாரம் திருப்பறாய்த்துறையிலிருந்து குணசீலம் வந்து பெரும்பாலும் கோடை விடுமுறை நாட்களில் ஐயன் வாய்க்காலில் [அப்போதெல்லாம் வருடம் முழுவதும் ஐயன் வாய்க்கால் கரை புரண்டு ஓடிக்கொண்டிருக்கும்] நீந்திக்குளித்துவிட்டு பிரசன்ன வெங்கடேசரை கண்குளிர தரிசிப்போம்...அவரும் எங்களுக்குத் திருவிய தேங்காயில் வெல்லம் சேர்த்த பிரசாதங்களையும் ஆசிகளையும் அள்ளி அள்ளித் தருவார்...இப்போதெல்லாம் தேங்காய்த் துருவல் குணசீலத்தில் தருவதில்லை என்பது ஒரு உருத்தலாய் மனதில் தோன்ற மீன் ஒன்று என் உள்ளங்காலை முத்தமிட்டு நகர..மேலே கொளுத்தும் வெயிலில் திருமஞ்சனப் படிக்கட்டில் ஏகாந்தமாய் அமர்ந்திருந்த மனைவி...கத்தத் தொடங்கினாள்...சீக்கிரம் வாங்கோ...குட்டைக்குள்ள என்ன குதூகலம் வேண்டிக்கிடக்கு...என்று முக வாயைத் தோள்பட்டையில் இடித்துக் காட்டினாள்..
கோவிந்த சாஸ்திரிகள் கோதாவரிக்கரையில் குளிக்கப்போய் அவர் மகன் வெள்ளத்தில் சிக்கிவிட தன் பூணூலை கழற்றி வீச வெள்ளம் வடிந்த கதை நினைவில் வந்தது...கோவிந்த சாஸ்திரிகளை நாராயணதீர்த்தராக அரங்கன் மாற்றச் செய்த அதிசயம் என் கண்முன்னே ஒரு நொடி வந்து போக..அவர் குணசீலம் வர வேண்டுமென்ற அரங்கனின் கட்டளையை..குணசீலத்தில் வெள்ளை வராகங்களாய் தோன்றி நாராயணதீர்த்தரைப் பின் தொடரச் செய்து.... பிறகு அருகிலிருக்கும் வரகூரில் காட்சி கொடுத்த பிரசன்ன வெங்கடேசனின் அற்புதங்கள் மனக்கண்ணில் தோன்றி சூழலைக் குளிரச் செய்தது...கடுமையான சூரிய கிரணங்கள் உரைக்கவே இல்லை...பிரமை பிடித்தவன் போல கோவில் வாசல் வரை வந்துவிட்டேன்..உடன் வந்த மனையாள்...போய் அர்சனைத் தட்டு வாங்கிங்டு வாங்கோ..கூட்டமே இல்லை...இன்னிக்கு நன்னா தரிசனம் பன்னலாம்...என்றபடி ஏற்கனவே கையில் எடுத்து வந்திருந்த சகஸ்ர நாம புத்தகத்தை..ஒரு முறை விசிறிக்கொண்டு... விரித்து.. கோவில் நடையில் அமர்ந்து படிக்கத்தொடங்கிவிட்டாள்...
என் அசைவுகளை ..என் நொடிகளை ...என் செயல்களை செதுக்குபவன் குணசீலன் என்பது என் அனுபவம்...எனது பணியில் ஒரு முறை கவனக் குறைவாக ஒரு ரசீதை சமர்ப்பித்துவிட்டேன்..என் தவறுதான்..அரங்கன் என்னை தவறு செய்ய விடுவதில்லை...அப்படியிருந்தும் ஒரு நொடி கண் மறைக்க அந்தத் தவறு நிகழ்ந்துவிட்டது...அதற்கான தண்டனையும் பின் விளைவுகளும் பயமுறுத்த அரங்கனை நடந்து சென்று சேவித்த போது...குலசேகராழ்வாரின் தாலாட்டுப் பாடல்களை அரையர்கள் பாடிக்கொண்டிருந்தார்கள்....உடனே அரங்கன் மீதான தாலாட்டுப் பாடலொன்றை எழுத அரங்கன் ஆணையிட்டதாய் உணர்ந்தேன்..அடுத்த நாளே குணசீலம் வந்துவிட்டேன்..குணசீலத்தில் நின்ற திருக்கோலத்து எம்பெருமான் என்னை கதவை தாண்டி உள் நுழைய விடவில்லை...எதுவோ தடுக்கிறது....எல்லா பக்தர்களும் சென்று கொண்டும் வந்து கொண்டும் இருக்கிறார்கள்...ஆனால் என்னால் அந்தக் கதவைத் தாண்டிச் செல்ல இயலவில்லை...அப்படியே நின்று விட்டேன்....கண்ணிலிருந்து தாரைதாரையாய்க் கண்ணீர் பெருக்கெடுக்க....குணசீல எம்பெருமான் மீதான திவ்ய பிரபந்த பாடல் ஒன்றும் நினைவில் வரவில்லை...சம்ஸ்கிருத பாடல் இருக்கிறது...நாராயண தீர்த்தரின் ஸ்லோகம் இருக்கிறது...
"ஹிமகிரி தனயா பத்யம்
ஹேமாசல சாப சமுதிதம் தேஜ:
கிமபிமஹத்தம் மாத்யம்
ஸ்மர்த்தவ்யம் விக்னதிமி ஹரனாய.'
கதாகாலட்சேபம் செய் பவர்கள் மேற்கண்ட சுலோகத்தைப் பாடியே தொடங்குவார்கள்.
கீழ் கண்ட ஸ்லோகம் வரகூர் எம்பெருமானைப் பற்றியது..
"ஸர்வஞான க்ரியா சக்திம்
ஸர்வ யோகீஸ்வர ப்ரபும்
ஸர்வ வேதமயம் விஷ்ணும்
ப்ரப விஷ்ணும் உபாஸ்மஹே'
திருமங்கையாழ்வார் ஒரு பாடல் பாடியிருப்பதாக அறிகிறேன்...ஆனால் எதுவும் நினைவில் வரவில்லை...
அரங்கா...
நின்ற திருக்கோலச் சேவை சாதிக்கும் எம்பெருமானே...
கண்ணால் உனைக் காண
கதவருகே நிற்கின்றேன்
என் நாளும் பிழை செய்த
பாவி நான் என்பதனால்
பின்னால் நிற்கச் சொன்னாய்
பிழை பொறுத்தாய் உணர்ந்திட்டேன்..
எ ந் நாளும் எனைக் காக்கும்
தென் அரங்கா குணசீலா...
என்று ஒரு விருத்தத்தை மனதில் எழுதி முடித்தேன்..அரங்கன் மனம் இளகியது போலும்...கோவில் சிப்பந்தி சார் ரொம்ப நேரமா நிக்கறீங்களே...உள்ள வாங்க சார்...என்ற வுடன்...வேக வேகமாய் கொடி மரம் தாண்டி குணசீலரின் முன் நின்றேன்...பாடல்கள் என் மனமெங்கும் வந்து கொட்ட ஆரம்பித்தன...
தவமிருக்கத் தெரியாது
தமிழ் எழுதத் தெரியாது
அவமிருத்து கண்டங்கள்
அது வந்தால் புரியாது
உவப்பான உயர்பக்தி
உன் மீது இருப்பதனால்
என் பிழையும் பொறுத்தருள்வாய்
தென் அரங்கா...குணசீலா...
உன் மீது பாட்டெழுதும்
உயர் தகுதி தந்துவிட்டாய்..
மண் மீது வாழ்வதனால்
மரியாதை தந்துவிட்டாய்
வின்னகரில் உருண்டதனால்
விடிவெனக்குத் தந்துவிட்டாய்
என் பிழையும் பொறுத்துவிட்டாய்
தென் அரங்கா குணசீலா...
நவமணிகள் நாணயங்கள்
நாற்றமிகு நறுமலர்கள்
இவையணைத்தும் மனதாலே
இன்றுனக்குத் தருகின்றேன்..
சபை முன்னே தலை நிமிர்ந்து
சிறப்புறவே வாழ்த்திட்டாய்....உன்
அவை வந்து தமிழ்சொன்னேன்..
அவ மானம் நீக்கிட்டாய்...தமிழ்
தவப் பாடல் ஏற்றுவிட்டாய்....
[ராகவபிரியன்]
என்று சொல்லி ..இன்றும் கூட தினமும் சொல்லிக்கொண்டிருக்கிறேன்....சில நாட்களிலேயே...என் தவறுக்கான தண்டனையாக ஒரு வருட ஊதிய உயர்வு பிடிக்கப்பட்டது...மேலதிக தண்டனையென்றாலும்...அரங்கன் தந்ததால் மனமுவந்து ஏற்றுக்கொண்டேன்...பிறகு நிறைய ஊதிய உயர்வுகளும் இன்னபிற சலுகைகளும் அரங்கன் தந்துவிட்டான்...திருவரங்க நாயகியின் மகனுக்குக் குறைவேது...
இதையெல்லாம் நினைவில் கொணர்ந்த படியே அரங்கன் முன் ...நின்ற திருக்கோலத்தின் முன்...தலைகவிழ்ந்து மொட்டைத் தலையுடன் ஆணவம் அழித்த இறுமாப்பில்.... நின்று இருக்க..பட்டர்..சட்டென்று சடாரியை தலையில்வைத்தார்..அரங்கன் என்னை ஏற்றுக்கொண்டு விட்டான்...பிரசாத தட்டைச் சுமந்த படியே வெளியில் வர மனைவி உங்க குடுமியக் கொஞ்சம் குறைச்சிருக்கலாமே என்றாள்..கையால் குடுமியைத் தடவியபடியே வெளியில் வந்தால் எதிரில் ஒரு பசு என்னை நோக்கி வர ஒரு வாழைப்பழத்தை அழகாக என்னிடமிருந்து வாங்கிக்கொண்டது....திட்டத் தெரிந்த என் மனையாளுக்கு கைபேசியில் படமெடுக்கத் தெரியாதென்பது அரங்கனுக்கும் தெரியும்...இப்போது அனைவருக்கும் தெரியும்...
திருவங்கன் திருவடிகளே சரணம்...
பிரசன்ன வெங்கடேச எம்பெருமான் திருவடிகளே சரணம்..
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்..
வாசகர்களின் அன்பிற்கும் அடியேனின் சரணம்...
அன்பன்...ராகவபிரியன்

Saturday, May 4, 2019

After a long lapse of time ..i had an opportunity to explore about Thirumular..the greatest philosopher poet of saivaism by simply taking only one poem of him..In that poem he was heaping his concentrated thoughts on a particular object called Mind..Mind even now is a rare phenomenon which will be the toughest thing to get controlked..If the mind simply attached to a bond to Lord SHIVA then the mind itself would become SHIVA in all its spheres...Let me give the Tamil verse of four simple lines in English in my level...This is not a translation or transcription..
There is no hypocrisy or madness
if mind and Shiva are looking fatness
Inside mind you could see Shiva. and
Inside Shiva one could see his mind
But inside clumsy mind and heart
Shiva simply dance and act...
Ragavapriyan Thejeswi

Friday, May 3, 2019



அரங்கனின் சித்திரைத் தேர் இன்று..எங்கள் ஊரின் கிராம தேவதையின் குதிரை வாகனம் வேறு இன்று நடக்க இருக்கிறது...வெயில் வேறு கொளுத்துகிறது...இன்று காலையில் எழுந்தவுடன் மனம் கனமாகிப்போயிருந்தது...எதோ ஒரு உள்ளுணர்வு இன்று என்னை இயக்கத் தொடங்கியது..அதன் உருவத்தை உற்று நோக்கிப் பார்த்தேன் புலப்படவில்லை....ஆனாலும் அந்த உருவம் உணர்வாய் என்னை குளிக்கச்சொன்னது..குளித்து நித்ய கர்மாக்களைச் செய்து விட்டு வழமைபோல் திவ்ய பிரபந்தங்களை உரத்துப் படிக்கத் தொடங்கினேன்..எதிரே இருக்கும் அரங்கன் மெல்ல என் எதிரே இருக்கும் காலித் திண்ணையில் அமர்ந்து கொண்டான்...
அரங்கா உன் கோவிலில் நடக்கும் பூஜைகளில் குறையிருந்தால் பூஜை செய்பவர்களிடம் நேரடியாகச் சொல்லிவிடு..அவர்கள் என் செய்கைகளை விரோதமாக மட்டுமல்ல வி நோதமாகவும் பார்க்கிறார்கள்..பகை கொண்ட பார்வையால் என்னை எரித்துவிடுகிறார்கள்...எதையும் திருத்திச் செய்யச் சொல்ல எனக்கு எந்த அதிகாரமும் இல்லையென்பதை நீ அறிவாய் அரங்கா என்றேன்...
அரங்கன் சிறு குழந்தையாக கையில் சின்ன வில்லுடன் திண்ணையெங்கும் தவழத் தொடங்குகிறன்...ஒரு காகம் வந்தமர..நான் அதை விரட்டத் தொடங்கினேன்..காகம் ..காகபுகண்டி முனிவாராய் சிறகுகளை விரித்துக்காட்டி அரங்கக் குழந்தைக்கு விளையாட்டுக் காட்டிக்கொண்டிருந்த அரிய காட்சியைக் கண்டேன்..நான் பத்மாசனத்தில் இருந்ததால் உடனே கால்களை விடுவித்துக்கொண்டு காகத்தை விரட்ட முடியவில்லை...
ஸீய ராமாய ஸப் ஜக ஜானீ
கரௌம் ப்ர நாம் ஜோரி ஜூக பானீ..
அரங்கன் ராமனாகவும் கிருஷ்ணனாகவும் இன்ன பிற அவதாரங்களாகவும் காட்சி தருகையில் முனிவர்கள் தங்கள் உருக்களில் அவரை பூஜிக்க வந்துவிடுவார்கள் என்பதை கீதையில் அரங்கன் சொன்னது நினைவிற்கு வர திடுக்கிட்டு எதிரே பார்த்தால் கோவில் பட்டாச்சாரியார் வேட்டியை மடித்துக் கட்ட தன் வலது காலை பின் பக்கம் உயர்த்தி வேட்டியின் முனையைப் பிடிக்கிறார்...காலை பின் பக்கம் உயர்த்தும் போது அனுமன் முகம் சுளிப்பதைப் பார்த்தேன்..என் கண்களுக்கு மட்டும்தானா இக் காட்சி என்று கண்களைக் கசக்கினால்..காகபுகண்டி முனிவர்...ராமர் குழந்தையாய் தன்னைக் காகமென நினைத்துப் பிடிக்க முற்பட தான் ஈரேழு பதினாங்கு உலகங்களில் பறந்து திரிந்தாலும் ராமரின் அந்தக் கை தன்னைத் தொடர்ந்ததை உத்தர காண்டத்தில் பதிவு செய்திருப்பதாகச் சொல்லி பறந்து செல்ல...அனுமனின் உக்ர உருவம் எனக்கு நாமக்கல்லில் ஒரு பட்டாச்சாரியார் பீடத்திலிருந்து விழுந்து உயிர் துறந்த காட்சியைக் காட்ட....இதயத்தில்.... சுரீர் எனத் தைத்தது....
என்ன செய்வது....அரங்கனுக்கு கைங்கர்யம் செய்யும் பாக்கியம் அனைவருக்கும் கிட்டாது...அதில் ஆணவத்தால் அனுமன் இருப்பதை மறந்து அபிழேக தீர்த்தம் வேட்டியை நனைத்துவிடும் என்பதற்காக அனுமன் முன்பே கையை அல்ல காலை உயர்த்தும் அடாத செயலை எப்படிச் சொல்வது எனப் புரியாமல் ...இந்தப் பதிவை எழுதினால்...அதனால் வரும் கொடிய பகைவேறு என்னை பயமுறுத்த அரங்கன் முன் கண்மூடி அமர்ந்தேன்....
அவ்யக்தம் வ்யக்திமாபந் நம்மந் யந்தே மாமபுத்தய:
பரம் பாவ ஜாநந்தோ மமாவ்யயம நுத்தமம்...
என்ற ஸ்லோகம் மனக் கண் முன் பேருந்துகளில் ஊர் பெயர்கள் மின் எழுத்துக்களில் ஓடுவது போல் ஓடுகிறது...
அரங்கன் சொல்கிறார்...எனக்குப் புரிவது போல...மனிதர்கள்...அப்புத்ய என்றால் அறிவற்ற மனிதர்கள்..பரமாத்மாவான என்னையும் சாதாரண மனிதர்கள் போல் பிறப்பிற்கு முன் எதுவுமில்லாதவன் என நினைக்கிறார்கள்..எனக்கு ஒரு உருவம் கொடுத்து நானும் அவர்களைப்போல என எண்ணுகிறார்கள்..நான் எங்கும் எதிலும் நிறைந்திருப்பதை அறியாமல் அவர்களின் அறியாமையால் எனக்குச் செய்யும் நித்ய ஆராதனைகளை அலட்சியமாய் செய்கிறார்கள்..காரணம் நானும் சத் சித் குணங்கள் கொண்டவன் என எண்ணுவதே யாகும்...என் பக்தன் என்னை தான் விரும்பும் வடிவில் காணமுடியும்..ஆனால் எனக்கான பூஜைகள் செய்பவர்கள் என் விக்ரஹத்தையும் படங்களையும் பார்த்து ஒரு உருவத்தைக் கற்பனை செய்து அதை தங்கள் உருவத்துடன் ஒப்பிட்டுக் கொள்கிறார்கள்...அந்த உரிமையில் அவர்கள் ஆணவம் கொள்கிறார்கள்..அதனால் அவர்கள் தாங்கள் கடை பிடிக்கும் நியமங்களில் தவறுகிறார்கள்...அவர்களுக்கு நான் இருவகையான பிருகிருதிகளுக்கும் அப்பாற்பட்டவன் என்பது புரியாமல் காம க்ரோத மத மாச்சர்யங்களுக்கு ஆட்பட்டு தாங்கள் செய்வது தவறு என்பதைக்கூட உணராமல் என்னை நிந்தித்து விடுகிறார்கள்...
அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது...என்னை உணர்வதென்பது அவ்வளவு எளிதல்ல...அதனால் தெரிந்து செய்யும் தவறுகளிலிருந்து தப்பிப்பதும் எளிதல்ல...தொடர் முயற்சிகளினால் ...நியமமான பூஜா பலத்தினால்..நல்ல எண்ணங்களினால்...தவறெனத் தெரிந்தால் அதை விடுத்து கவனமுடனிருந்தால்...என் பிருகிருதிகளுக்கு அப்பாற்பட்ட என்னை உள் உணர்வால் பார்க்கமுடியும் என்பதாக உணர்த்தினார்..
ஒரு நிமிடம் வைகுண்டம் வரை சென்று வந்த அயர்வு ஏற்பட ஒரு இனம் புரியாத நிம்மதி என்னுள் மெல்ல உருக்கொள்ளத் தொடங்கியது...நான் இனி மீண்டு இயல்பிற்கு வர சில மணி நேரங்கள் ஆகலாம்....
அரங்கன் திருவடிகளே சரணம்...
அன்பன்...ராகவபிரியன்

Wednesday, May 1, 2019

ஒரு நகர்வின் அதிர்வுகளை கவிதையாய் அதுவும் அழிக்கமுடியாத கவிதையாய் யாராவது புனைந்திருக்கிறார்களா என்ற சிந்தனை ஒரு சில நாட்களாய் என் மனதில் நகரமறுக்கிறது...இந்தச் செய்தி ஒரு பகடிக்கான காரணியாய் கூட உங்களுக்குத் தோன்றலாம்..நகர்தலில் நேர் நகர்தல் பக்க வாட்டுகளில் பின் பக்கம் மேல் கீழ் நகர்தல்கள் உண்டென்பது நிஜம்..பூமியின் நகர்தலை முரணெனக் காட்டும் நிஜ நகர்வுகள்...இவைகள் நகை முரண் அல்ல..நகர் முரண்..ஒரு சில சொற் சட்டகங்களுக்குள் வலிந்து ஆச்சர்யமூட்டவேண்டிய வாசிப்பனுவத்தைத் திணித்து எழுதப்பட்ட கவிதைகள் வாசகனை நோக்கி நகரமுடியாமல் தவிப்பதைக் காணலாம்...ஒரு நகர்விற்கு விசை மட்டுமல்ல கனமும் கணமும் கூட காரணங்கள் என்பதை ஒரு மானுஷ்ய அமானுஷ்ய கவிஞனால் உணர்த்தமுடியும்..அப்படியான ஒரு கவிஞன் தான் ஜான் ரைலி...
ஆங்கில பின் நவீனத்தின் ஆகச்சிறந்த படைப்புகளை.. தேர்ந்தெடுத்துத் தரப்பட்டவைகளைத்தான்... படித்துக்கொண்டிருந்தேன்..காலையிலிருந்து ஒரு கோப்பை இரண்டாவது காப்பிக்குக்கூட என்னால் நகர முடியவில்லையென்பதை கூர்ந்து நோக்கினால் உங்களுக்குள் விரியும் ஒரு கலிடியாஸ்கோப்...மிகையல்ல...நிஜம்...என் ஆழ்ந்த வாசிப்பின் கணங்களை சட் டென்று நிறுத்தியது ஒரு கவிதை..
அதை எழுதியவர் யார் என்று பார்வைகளில் படிந்திருந்த ஒட்டடைகளை நீக்கிவிட்டுப் பார்த்தேன்..எதிரே தங்க நாற்கரச் சாலையில்லை..கோபுரங்கள் தெரியவில்லை...நதியோ கடலோ கண்ணெதிரே இல்லை...காவிரியின் கரைகள் மேல் காய்ந்து கிடக்கும் மலங்கள் தெரியவில்லை...அவ்வளவு ஏன்...மே 23 வரை எதுவுமே நகராமல் பார்த்துக்கொள்ளுபவர்களைப் பற்றிய கோபம் கூட இல்லை...
அந்தக் கவிதையை எழுதியவர் தான்..ஜான் ரெய்லி...உடனே நகர்ந்து இணையம் தொட்டேன்..எத்தனை ஜான் ரெய்லிகள்..ஒரு ராணுவ வீரர்...அமெரிக்க ஏகாதிபத்தியத்தையே கலங்கடித்திருக்கிறார்...தன் முகத்தின் காயங்களை மறைக்க முடிவளர்த்திருக்கிறார்...ஒரு ஜான் ரெய்லி என்ற ஓவியர்..என் பார்வையின் பக்கவாட்டு மேல் கீழ் நகர்வுகள் சோர்வடையும் போதில் தான் நாற்பத்தோரு வயதேயான நம் ஆதர்ச கவிஞனை...ஜான் ரெய்லியை இணையத்தில் கண்டடைய முடிந்தது...பறவைக்கூட்டமொன்று கூடடைவதற்கான பொழுதுகளை நோக்கி நகரத்தொடங்குகையில்..இக் கணத்தின் அதிர்வில்... அந்தக் கவிதையை உங்களுக்கு என்னளவில் தமிழில் தருகிறேன்..இது மொழியாக்கமோ மொழிமாற்றமோ இல்லை...
சூரியனும் சந்திரனும்
நகர்ந்து வருவதாகச் சொல்லும்
சோதிடனால்
நம் இயலாமைகளை
நகர்த்த முடியாது..
கண்ணை மூடிப்பார்...
உன் வீடு
அடமானம் நோக்கி
நகர்வதையுணர்வாய்..
உன் தோட்டத்தின்
மலர்கள்
சந்தையை நோக்கி
நகரமுடியாமல்
தவிப்பதையுணர்வாய்..
உன் இதயத் துடிப்பு
நகராமல்
அதேயிடத்தில் இருப்பதால்
உன் பூமி
காலடியிலிருந்து
நகர்ந்துகொண்டேயிருக்கிறது..
இப்போது சொல்
சூரியனும் சந்திரனும்
நகர்கிறதா...
இல்லை இயலாமையை நகர்த்த
நீ நகரவேண்டுமா...?
உன் சோதிடன்
தன் அலுவலகத்தை
நகர்த்திப்போய்
நாட்களாகிவிட்டன...
நகரு...இடத்தைக் காலிசெய்..
ராகவபிரியன்

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...