Saturday, August 18, 2018

Reader Doctor

வாசக மருத்துவனின்
அனுமதிச் சீட்டுடன் அமர்ந்திருக்கிறேன்..
நீ வருகிறாய்...
உன் நீண்ட கழுத்தின் நீளநீலம் வளைத்து
எதையோ கொத்துகிறாய்..
மேலெழும்பி இடதில் பார்க்கிறாய்..
பிறகு வலது பக்கம்..
கழுத்து வளைத்து மேல் நோக்க
உன் கர்வக் கொண்டை சற்று தாழ்கிறது..
இடதில் ஒரு பலகையில்
வரிசையில் வரவும் என்றிருக்கிறது...
வலதிலோ ஒரு குழந்தைப்படம்
வாய்பொத்தி பேசாதே என்றெழுதிய எழுத்தின் மேல்
நிர்வாணமாய் அமர்ந்திருக்கிறது..
உன் மேல் நோக்கிய பார்வையில்
நான் தெரிந்திருக்கலாம்...
கடைசீயில் சென்றமர உனக்கு மனதில்லை..
நீ உந்தியேறக்கூடிய உயரமான
எழுபத்தைந்தடியை
சிலிர்ப்பிய சிறகடித்து அடைகிறாய்..
உயரமான நிறையவர்கள்
ஏற்கனவே வரிசையில் இருக்கிறார்கள்.
அமைதியின்மையால் உன் தோகையில்
உன் காலே சிக்க..
ஒரு காலால் சிறகு கோதுகிறாய்..
அதை மயிலாட்டம் என்று
மருத்துவப் பதிவேட்டில் எதற்கு
பதிவிடச் சொல்கிறாய்..
உன் பறக்கும் தூரமான முன்னூறு அடிகளை
தத்தித் தத்தி
முன்னூறு தடவை எடுத்து வைக்கிறாய்..
கோபங்களுக்கு ஒருபோதும் முன்னுரிமையில்லை..
அனுமதிச் சீட்டு
தீர்ந்து போனதால்
வாய்விட்டு அகவுகிறாய்...
எனக்கு முன்னான நோயாளியை
நன்கறிந்த மருத்துவன்
முழுவதும் வாசித்துவிட்டே
என்னைத் தொடுவான்...
நேரம் காலம் கடந்தாலும்
முற்றும் வாசித்து முடித்தே கதவு திறப்பான்..
மருத்துவன் என்னையும்
நன்கறிந்தவன்...
இன்றுனக்கு வாய்ப்பில்லை..
அகவலை நிறுத்து..
மருத்துவன் கோபமுற்றால்
உன் கொண்டைகளையும்
தோகைகளையும்
அறுவைச் சிகிச்சையால்
அகற்றிவிடுவான்..
கவச குண்டலங்களை இழந்த
கர்ண மயில்
கர்னக்கொடூரமாயிருக்கும்...
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...