யானைப் பார்வை
-----------------------
தொலைக் காட்சிகளில்
காட்டப்படும்
சத்து உணவின்
பிரும்மாண்ட உருண்டைகளுக்கான
அதன் நிஜ தும்பிக்கைத் துழாவல்
வாழ்வு வானத்தில் சுற்றும்
ஒவ்வொரு கோள்களையும்
தொட்டுத் திரும்பும்....
தங்கச் சங்கிலியில்
தான் கட்டப்பட்டிருப்பதான
பிரமை போதையில்
நான்கு கால்களும்
தரையில் பாவாமல்
அப்படிக் குதித்துப் பார்க்கும்...
செழிப்புக் கரும்பைச்
சுமந்து செல்லும்
வாகனங்களை
மறிக்கும் போராட்டங்களுக்கான
அதன் மன ஒத்திகையின்
மத நீர் காய்ந்துவிட்டதாவென
தும்பிக்கைத் தூக்கி
ஒருமுறை
தடவிப் பார்க்கும்...
யானை கைவீசி
நீர் அடித்து
உருண்டும் புரண்டும்
குளிப்பதற்கான
ஆர்பரித்தோடும் நதியொன்றையும்
அது இது நாள் வரை
பார்த்ததேயில்லை...
அது கட்டிக் கிடக்கும்
கொட்டாரம் வரை
வந்து செல்லும்
பணச் சிங்கங்களின்
வளம் கொழிக்கும்
காடு காட்டுவதான
பொய்கள்
அதன் இமைகளில் விழுந்து
பார்வையை மறைப்பதுதான்
இந்த யுகத்தின்
மாபெரும் யானைச்சோக அவலம்...
வளமை தேடியலையும்
என் யானைக்கு
கிட்டப் பார்வைதான்...
அதன் பார்வை கிடக்கட்டும்..
வறுமை யானையைப் பார்ப்பது
மனிதனின்
பணக் கண்களுக்கு
எப்போதும்
அலுப்பதேயில்லை...
வாருங்கள்
பயப்படாமல் பாருங்கள்...
உங்களை நோக்கி நீளும்
அதன் கையில்
பணம் வைத்தால் ஆசீர்வதிக்கும்...
இல்லையேல்...
யானை ஒன்றும் செய்யாது...
ராகவபிரியன்

No comments:
Post a Comment