யானை வண்டி
--------------------
வாழ்வின் வண்டிப் பயணத்திற்கான
பாதைகள் தூர்ந்து கிடக்கின்றன...
வறுமையானையுடனான
என் நடையின்
ஓசை நிறுத்தமொன்றில்
பிச்சைக் காரனொருவன்
உறங்கிக் கொண்டிருக்கிறான்...
குறுக்கிட்ட
வண்டிகளிலெல்லாம் கூட்டம் வழிய
விளிம்பில் தொங்கிய
மனிதக் காலின் உதைபட்டு
யானை உருண்டு கிடக்கிறது...
ஆதியின் குளிர்ந்த
வளமைமிகு பனிமலையில்
எஸ்கிமோ
வண்டிகளை இழுத்த
பனி நாய்கள்
சுற்றி நின்று குரைக்க
என் யானை ஓடத்துவங்குகிறது...
கைவிடப்பட்ட
மாட்டு வண்டிகளின்
நுகத்தடியும்
சக்கரங்களும்
யானை வண்டிக்குப்
பொருந்திப் போவதில்லை...
ஏழு குதிரை பூட்டிய
சூரிய வண்டி
என் யானையைக் கண்டு
பண மலையின்
பின் பக்கம் ஒளியத் துவங்குகிறது...
என் வறுமையானையுடனான
தேசிய நெடுஞ்சாலைப் பயணத்தில்
சாலையோர
உணவகங்கள் மூடிக் கிடக்கின்றன...
சாலையின்
மையத்தடுப்பில்
அபூர்வமாய் பூத்திருந்த
ஒற்றை ரோஜாவையும்
யாரோ பறித்துச் சென்றுவிட்டார்கள்...
வறுமை யானையைப் பூட்டி
காலத்தை வெல்லும் வேகத்தில்
என்னை ஏற்றிச் செல்லும்
வண்டியைச் செய்ய முடிந்த
தச்சனைத் தெரிந்தவர்கள்
முகவரி தாருங்கள்...
பயப்படாதீர்கள்
யானை ஒன்றும் செய்யாது...
ராகவபிரியன்
No comments:
Post a Comment