Tuesday, May 23, 2023

 அறுபத்து நான்கு வயது கன்னிசாமியின் சபரி அனுபவம்…14

பகவதி அம்மன் ஆகச் சாதாரண கேரளத்தின் ஜரிகை வேய்ந்த வெள்ளைப் பட்டுப் புடவை உடுத்தியிருக்க வேண்டும்…அம்மனைச் சுற்றி அவ்வளவு பிரகாசம்…அதையும் மீறிய அம்மனின் முகத்தின் புன்னகை அ அ யை மெல்ல எழ வைத்தது…இப்போது அம்மன் சைகை செய்கிறாள்…அப்படியே இருக்கும் படி…அ அ பதில் சொல்ல உதடுகளை அசைக்க முயற்சிக்கிறான்…சுற்றி இருப்பவைகளை நகர்பனவற்றை கவனிக்க நினைத்து கண் விழியை சுழற்ற முயற்சிக்கிறான்…பார்வை அப்படியே அம்மன் மேல் அசையாமல் பதிந்து கிடக்கிறது…அம்மனின் புன்னகை மெல்ல உயர்ந்து சிரிப்பாக வெடித்து உச்சம் தொடுகிறது…அம்மன் அப்படிச் சிரிக்கிறாள்…மிகுந்த சிரமப்பட்டு உதடு குவித்து அம்மனிடம் பேச முயற்சிக்கிறான்…
குருசாமி அ அ யை அசைத்து எழுப்ப…திடுக்கென எழுந்து பேந்தப் பேந்த முழிக்க…ஏன் சாமி என்னவோ கத்தினீங்க…என்று அவர் கேட்டவுடன்…அ அ க்கு வெட்கமாகப் போயிற்று…இதை…ஆற்றுக்கால் பகவதி அம்மன் தரிசனம் தந்ததை… சொன்னால் இவர் நம்புவாரா…என சில நொடிகள் யோசித்தவன்…சொல்லிவிடுவோம்…என முடிவெடுத்தான்…
சாமி இந்தக் கோவிலோட பகவதி அம்மன் இப்ப கனவுல வந்தாங்க…பயந்து போயிட்டேன்…அதான் கத்தியிருக்கனும்…ரொம்ப சத்தமா கத்திட்டேனா..
சத்தமாதான் கத்துனீங்க…உங்க கத்தல் வார்த்தை ஒன்னும் புரியல…அப்படியே திரும்பி பாருங்க…எல்லாருமே எழுந்து உட்கார்ந்துட்டாங்க…சொல்லியபடியே ஒரு கொட்டாவி விட்டவர்…மீண்டும் படுத்துக் கொண்டார்…
அ அ யும் மீண்டும் துண்டில் சாய்ந்தான்…குருசாமி…இவன் பக்கம் திரும்பி…சாமி அம்மன் என்னோட கனவுலயும் வந்துச்சு…என்றாரே பார்க்கலாம்…
அ அ க்கு குருசாமி தன்னை கிண்டல் செய்கிறார் என நினைக்கத் தோன்றியது…பகவதி அம்மனின் தரிசனம் என்பது அ அ யின் தனிப்பட்ட தெய்வீகச் செல்வம்…அதை இறுதி மூச்சுவரை மனதளவில் பாதுகாத்திருக்க வேண்டும்…அதைவிடுத்து குருசாமியிடம் மட்டும் இல்லை…வேறு யாரிடம் சொல்லியிருந்தாலும் எவரும் நம்பப்போவதில்லை…மாறாக ஆன்மீக விளம்பரமாக அவனின் சுய தம்பட்டம் அமைந்து விட்டதில் மனதளவில் சோர்ந்து போனான்…அம்மா என்னை மன்னித்துவிடு என ஆழ்மனதில் வேண்டிக்கொண்டவனுக்குத் தூக்கம் வெகுதூரம் போய் விட்டிருந்தது…
கையில் பற்பசை பீய்ச்சிய டூத் ப்ரஷுடன் சோப் பாக்ஸும் எடுத்துக் கொண்டு கட்டன குளியலறை நோக்கி நடந்தான்… குருசாமியும் சட் டென எழுந்து இவனுடன் குளிப்பதற்காக வந்தார்…ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலை ஒட்டிய கட்டன குளியலறை மிகவும் அருமையாக சுத்தமாக…தண்ணீர் குளிர்ந்து கொட்டும் அருவியென ஷவர்களில் கொட்டிக் கொண்டிருந்தது…நிறைய சாமிகள் குளித்துக் கொண்டிருக்க…அ அ ஆனந்தமாய் ஒரு ஷவரின் கீழ் நின்று கொண்டான்…தூக்கமற்ற கண்கள் புத்துணர்வு பெற்றதை உணர்ந்தான்…
அ அயும் குருசாமியும் இப்போது கோவில் வாசலுக்கு வந்தார்கள்…கோவில் திறந்திருக்க கர்ப்பக் கிரஹம் மூடியிருந்தது…உள்ளூர் வாசிகள் ஒரு சிலரும் பக்தியை வெளிப்படுத்தும் தோற்றத்தில் வரிசையாய் நின்றிருந்தார்கள்…சற்று நேரத்தில் தலைமை தந்திரி உள்ளே வந்தார்…
அமைதியாக இருந்த அவ்விடத்தில் சட் டென முரசின் ஒலி ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது….கோவிலிசை முன் செல்ல கோவிலின் பணியாள் ஒருவர் கையில் விளக்குடன் முன் செல்ல…தந்திரி ஒவ்வொரு சந்நிதியையும் திறந்து நைவேத்யம் செய்து தீபம் காட்டுகிறார்…அனைவரும் இப்போது கர்பக் கிரஹ வாசலுக்கு வர….முரசை தொடர்ந்து முழக்குகிறார் முரசறைபவர்…தலைமைத் தந்திரி கர்பக் கிரஹத்தின் முன் விழுந்து வணங்குகிறார்…சில அபிநயங்கள் செய்கிறார்…ஆற்றுக் கால் பகவதி அம்மனிடம் கதவை திறப்பதற்கான அனுமதி கோருவதாக அ அ உணர்ந்தான்…
அம்மன் கோவிலின் கர்பக்கிரஹத்திற்கான நுழைவு வாயிலின் கதவுகள் அமைக்கப்பட்டிருக்கும் இரு பக்கமும் கங்கையும் யமுனையும் கைகூப்பி நின்று கொண்டிருப்பார்கள் என ஆகமம் சொல்வது நினைவிற்கு வந்தது…
எதையும் புனிதப் படுத்தும் சக்தி ஆறுகளுக்கு உண்டு…நதி புனிதமானது…கதவுகள் திறந்து வாசல் வழி கர்பக்கிரஹத்திற்குள் நுழைகையில் அதற்கான தகுதி பெற்றவர் இன்னொரு முறை தன்னைப் புனிதப்படுத்திக் கொள்கிறார்…இங்கே அகக் கண்களால் கங்கையையும் யமுனையையும் காணும் சக்தி பெற்றவர் சாதாரண பொய் மானுடத்திலிருந்து நிஜமான தெய்வீக சக்தி பெற்ற நிஜ மானுடராகிறார்…தெய்வத்தின் மேல் மட்டும் அகம் குவிந்திருந்தால் கதவின் பக்கம் பரிவாரங்களோடு அம்மனை வணங்கி நிற்கும் ஆறுகளைக் கண்களால் காண முடியும்..இதைத்தான் வள்ளுவர் அகத்தூய்மை வாய்மையால் காணப்படும் என்று சொல்லியிருக்க வேண்டும்…தெய்வம் உண்மை என அகத்தில் நம்பும் ஒருவர் தான் கர்பக் கிரஹத்திற்குள் நுழையும் சக்தியும் உரிமையும் பெற்றவராகிறார்…
தெய்வீக இருத்தலை கர்பக்கிரஹத்தில் அவரால் மட்டுமே அருகிருந்து காணமுடியும்…தலைமைத் தந்திரி அவர் கையால் கதவை மெல்ல திறக்கிறார்…மூல விக்ரஹத்தை திரை மூடியிருக்கிறது…இரண்டு பக்க கதவுகளிலும் மஞ்சள் தடவுகிறார்…முரசு ஒலித்துக் கொண்டே இருக்கிறது…நைவேத்யங்களுடன் இன்னொரு தந்திரி உள்வர…முரசொலி நின்று கொள்கிறது…தந்திரியின் கையிலிருக்கும் வெண்கல மணியோசை தெய்வீகத்தை கோவிலெங்கும் நிரப்புகிறது…சட் டென திரை விலக ஆற்றுக்கால் பகவதி அம்மனின் முன் அலங்கார வரிசையில் ஏற்றப்பட்ட தீபங்கள் வலமிருந்து இடமாக சுற்றப் படுகிறது…ஒரு நொடிதான் இரவில் அ அ கண்ட அம்மனின் முகப் புன்னகை மூல விக்ரஹத்திலும் தெரிய ஓங்கிக் குரலெடுத்து அம்மா என்று கத்துகிறான்…
அவனைச் சுற்றி நின்று கொண்டிருந்த உள்ளூர் பெண்கள் அம்மே அம்மே என அரற்றியபடி அ அ யை வித்தியாசமாகப் பார்த்தபடி கர்பக்கிரஹம் நோக்கி வரிசையில் செல்லத் தொடங்குகிறார்கள்…எல்லோருக்கும் வாழையிலைத் துண்டில் கொஞ்சம் சந்தணம் வைத்து தந்திரி தருகிறார்…அ அ யின் முறை வரை அம்மனை நன்றாகப் பார்க்கிறான்…ஓங்கிக் குரலெடுத்து அம்மன் அப்படிச் சிரிக்கிறாள்…மெய் மறந்தவன் கைகூப்பி நிற்க…அவனின் கூப்பிய கையை பிரித்து இழுத்து வாழையிலை சந்தணத்தை கையில் திணித்து…ம் அக்கணு போய்க்கோ…எனத் தள்ளப்பட கோவிலை சுற்றி வருகிறான்…குருசாமி ஒவ்வொரு சந்நிதியாக நின்று மெதுவாக வரும் வரை கோவில் வாசலில் நின்று சுயமி எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறான் அ அ…ஆனால் கோவில் கொடிமரம் தாண்டி உள்ளிருக்கும் அம்மனின் முகம் நிழற்படத்தில் பிடிக்க முடியாதது அ அ க்கு தொழில் நுட்ப சவாலாகவோ அவனின் திறன் இன்மையாகவோ புரிந்து கொள்ள முடியவில்லை…அவனுள்…அம்மன் என்ன அவ்வளவு சுளுவாக படம்பிடிக்கப்பட முடிந்தவளா என்ன எனும் ஆச்சரிய எண்ணம் ஓடத்துவங்கியது…
இருவரும் வெளியில் வந்து தங்களின் வாகனங்கள் இருக்குமிடம் நோக்கி நடந்தார்கள்…அதற்குள் எல்லா சாமிகளும் குளித்து தயாராய் வாகனங்களில் அமர்ந்திருக்க…ஆர்கனைசர் கீழே ஓட்டுனர்களுடன் பேசிக்கொண்டே இவர்கள் இருவரையும் என்ன லேட் என்பது போல் பார்த்தார்…அ அ அவரிடம் சென்று சார் பத்மநாப சாமி கோவிலையும் பார்த்துட்டு வரலாமா எனக் கேட்க…அங்கதாங்க இப்ப போகப் போறோம்…என்றார்…
பத்மநாப சாமி கோவிலின் அருகில் வாகனங்களை நிறுத்துவது இப்போதெல்லாம் ஆகப்பெரிய சவாலாகிவிட்டது…சாமிகள் அனைவரையும் இறக்கிவிட்டுவிட்டு…பஸ் நிறுத்தமருகில் இருக்கும் வாகன நிறுத்ததிற்கு வந்துவிடுங்கள் எனச் சொல்லியபடியே ஓட்டுனர்கள் வாகனங்களை எடுத்துச் சென்றுவிட்டார்கள்…ஒரு சில சாமிகள் வாகனங்களை விட்டு இறங்கவில்லை…பத்மநாப அரங்கனைப் பார்க்கும் அரிய சந்தர்ப்பத்தைத் தவற விட மனம் வரவில்லை அ அ க்கு…குருசாமியுடன் ஓட்டமும் நடையுமாய் கோவிலை நோக்கி ஓடினார்கள்…அதற்குள் செல்போன் பாதுகாப்பிடத்தில் பக்தர்கள் தங்கள் செல்போன்களை ஒப்படைப்பதைப் பார்த்தவர்கள்…இவர்களின் செல்போன் களையும் ஒப்படைத்தார்கள்…வேகமாகச் செல்லுங்கள்…கதவடைக்கப்போகிறார்கள்..என்று செல்போன் பாதுகாவலர் சொல்ல அ அ யாரும் எதிர்பார்க்காத வேகத்தில் ஓடத் துவங்கினான்…குருசாமியும் அ அ யின் பின்னால் ஓடி வர கடுமையான சோதனைகளுக்குப் பிறகு கோவில் உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள்…
கோவிலில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்க அ அ யும் குருசாமியும் அதனுடன் சேர்ந்து கொண்டார்கள்…உள்ளே ஏதேதோ பூஜைகள் நடைபெறுவதான சப்தங்கள் கேட்டுக் கொண்டிருக்க அ அ அருகிருந்த பழமைவாய்ந்த அனந்த பத்மநாபனின் கோவில் தூணையும் அதிலிருந்த சிற்பத்தையும் பார்க்கத் தொடங்கினான்….எதோ ஒரு முனிவரின் சிற்பம் நுணுக்கமாய் செதுக்கப்பட்டிருக்க…அந்த முனிவரின் நீண்ட உடற்பாகத்தில் சந்தனப் பொட்டுக்கள் வைக்கப்பட்டிருந்தது அ அ க்கு பேராச்சர்யமாயும் பேரதிசயமாயும் இருந்தது…
வரிசை துளித்துளியாய் நகர நிறைய அய்யப்ப சாமிகள் பொறுமையிழந்து பத்மநாபரை தரிசிக்காமலேயே வெளியேறிக் கொண்டிருந்தார்கள்…அ அ மெளனமாய் அவனுக்குத் தெரிந்த திவ்ய பிரபந்தப் பாடல்களை மனதிற்குள் சொல்லிக் கொண்டிருந்தான்…கோவில் சிப்பந்திகள் இருவர் எங்கிருந்தோ முளைத்து வரிசையில் சரியாக நிற்கும் படி எல்லோரையும் எல்லா மொழிகளிலும் விரட்டத் தொடங்கினார்கள்…ஒரு சில கேரள போலீஸ் காவலர்களும் அவர்களுடன் வர…அங்கும் இங்குமாய் இருந்தவர்கள் வரிசையில் நின்று கொண்டார்கள்…மீண்டும் கோவிலோசையின் முரசமிடும் இசைக் கருவியை அடித்தபடி ஒருவர் முன் செல்ல…கையில் இருக்கும் கமண்டலத்திலிருந்து சொட்டுச் சொட்டாய் புனித நீர் தெளித்தபடி அடுத்த தந்திரி ஒருவர் தொடர…கையில் ராஜ அலங்காரத்தில் அனந்த பத்ம நாபனின் உற்சவ மூர்த்தியை சுமந்து சிலர் வர…ரெங்கா ரெங்கா என ஓங்கிக் குரலெடுத்து சப்தமிடத் தொடங்கினான் அ அ…
தொடரும்…

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...