Saturday, August 20, 2022

 அம்பாஸிடாரும் அளவற்ற புகையும்...

--------------------------------------------------
கிருஷ்ணயருக்கு சென்னை செல்ல வேண்டும்...அதுவும் அவருடைய அம்பாஸடார் காரில்...அவர் தான் ஓட்டுவாராம்...
மாமி பங்கஜம் தோள் பட்டையில் மோவாயை இடித்து இதுடித்துச் சொன்ன தகவல் மாமிக்கு சென்னை செல்ல பிடிக்க வில்லை என்றே எல்லோரும் எடுத்துக் கொண்டார்கள்...
விஷயம் அதுவல்ல....மாமா வண்டி ஓட்டும் போது மாமி ஜிபிஎஸ் ல் ரூட் பார்த்துச் சொல்ல வேண்டும்...ரைட்ல திரும்புங்கோ...என்று சட் டென சொன்னால் ஒரு சடர்ன் ப்ரேக் போட்டு நிறுத்துவார்...சீட் பெல்ட் போட ஸங்கோஜப்படும் மாமி டேஸ் போர்டில் தலை மோதி நெற்றி வீங்கி விடும்...சொல்லாமல் விட்டாலோ மண்டு மண்டு ஒரு புண்ணாக்கு லேடிய என்னோட தலையில் கட்டிப்புட்டான் ஒங்க அப்பன் னு கத்துவார்....அதான்...
மாமி அப்பவே பியுசி பெயில்...இருந்தாலும் பொண்ணு கத்துக் குடுத்த மொபைல் ஒர்க்கிங் வைச்சுண்டு அப்பப்போ புத்தூர் அக்ரஹாரத்து வாசல்ல ஜெர்க் குடுத்துண்டிருப்பாள்...
வேற வழியில்ல...மாமா வண்டிய கிளப்பி ஹார்ன் அடிச்சுண்டே இருக்கார்...ரெங்கநாதா காப்பாத்துடா என்று சொல்லியவாரே ஒரு பயம் கலந்த புன்னகை தேக்கி வண்டியில் ஏறி அமர்ந்தாள் மாமி...ஐஸ்வர்யா ராய் கார் கதவை இழுத்து சாத்துவது போல் ஒருவித மடிசார் ஸ்டைல் கலந்து அசத்த...கிருஷ்ணய்யருக்கு கோபம் டபக் என்று வந்தது...என்னதிது...மெதுவா சாத்தப்படாதோ....கதவு கையோட வந்துடுத்துன்னா மெட்ராஸ் வரைக்கும் ஒன்ன எப்புடி பக்கத்துல வச்சுண்டு ஓட்டறது...என்று கத்த...
இவர்களை அக்ரஹாரமே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு மாமிக்கு அவமானமாகப் போய்விட்டது...
ஒங்க ஐஸ்வர்யாராய கூட்டிண்டு ஜிபிஎஸ் பாத்து வண்டி ஓட்டுங்கோ...என்ன ஆண்டார் வீதில எங்க அப்பாவாத்துல எறக்கி விட்டுங்கோ...என்று விசும்ப ஆரம்பித்தாள்...
சரி சரி அழுதுண்டே வராதே...திண்டிவனத்துல நோக்கு ஐஸ்கீரீம் வாங்கித் தரேன்...மெட்ராஸ் வர்றப்பயாச்சும் லெக்கின்னும் டீ சர்ட்டும் போட்டுக்கப்படாதோ... எப்பப்பார் மடிசார சுத்திண்டு...என்று மெல்ல சொன்னாலும் மாமியின் பாம்பு செவியில் பக்காவாய் விழுந்தது....
கியரில் இருந்த கிருஷ்ணய்யரின் கையில் சுளீர் என ஹேர்பின்னால் ஒரு குத்து வைக்க...வண்டி திருவானைக்காவல் மேம்பால இறக்கத்தில் சடாரென ஸ்ரீரங்கம் நோக்கித் திரும்பியது...
அடித்த அவசர ப்ரேக்கில் மாமி டேஸ் போர்டில் செல்லை சடார் என வீச...பின்னால் நிறைய வண்டிகள் தொடர் ஹார்ன் அடிக்க...கிருஷ்ணய்யர் ஒரு வழியாய் வண்டியை சென்னை நோக்கித் திருப்பினார்...
மாமி எப்போது தூங்கினாள்...சென்னை எப்படி வந்ததென்றே தெரியாமல் அசோக் பில்லர் தாண்டி ஒரு ரைட் எடுத்து பூ விற்கும் பெண்மணி எதிரே ஓரமாய் வண்டியை நிறுத்தினார்...அய்யர்...
பங்கஜம், மெட்ராஸ் வந்தாச்சு ரங்கபாஷ்யம் தெரு எங்க இருக்குன்னு மொபைல்ல பார்த்துச் சொல்லு என்று சொல்லியபடியே ஜன்னல் கதவுகளை இறக்கிவிட்டு ஏசியை நிறுத்தினார்...
பேணட்டிலிருந்து மெல்லிய புகையொன்று வருவதாக தோன்ற கீழே இறங்கி பேணட்டை திறந்து வைத்து அப்பாடா ஈவினிங் சீ பிரீஸ்...மெட்ராஸ்ல மட்டும் தான் கிடைக்கும்...பங்கஜம் இறங்கி வா...இந்த பூக்கார அம்மாவண்ட அட்ரஸ் கேட்டா சொல்லிடப் போறா..செல்லுல என்னத்த நோண்டிண்டிருக்கே...என்று சொல்ல...
மாமி கீழே இறங்கி அந்த பூக்கார பெண்மணியை ஏற இறங்கப் பார்த்தாள்...
ஏண்டிம்மா...ரங்கபாஷ்யம் தெருவுக்கு எப்படி போணும்...என்று கேட்ட அந்த நொடியில்
பூக்கார பெண்மணியின் முகத்தில் கோபம் நெற்றிக் குங்குமத்திலிருந்து மூக்குவரை வியர்வையுடன் மெல்ல இறங்கத் தொடங்கியது...
தோ பார்டா...எடுத்தவொடனயே டி போட்டு பேசறத...வாடி என் சக்களத்தி...ஏண்டின்னா கேட்ட...டங்கு வார அறுக்கல்ல...நான் பொம்பள இல்லடி ஆமாம்...என்று கத்த மெல்ல ஒரு கூட்டம் கூடிவிட்டது...
சாரி சாரி லேடி.. னோ நோ....சிஸ்டர்...ஐ யாம் ப்ரம் டிருச்சி...பாருங்கோ எங்காத்துக் காரருக்கு மெட்ராஸ்ல ரூட் தெரியாதோன்னோ...அதான் ஒங்களண்ட என்கொயர் பண்ண....என்று சொல்லி முடிப்பதற்குள்....
என் கவுண்டர் பண்ணுவயா...அய்யர் வூட்டு பொம்பளன்னு பாத்தா அடாவடியான்னா பேசுது இது...ய்யோவ் அய்யரே வண்டிய நிப்பாட்டி யாவாரத்த கெடுக்காத... கிளம்பு என்று கத்தத் தொடங்கினாள்...
சுற்றி நின்றிருந்தவர்கள் ஒவ்வொருவராக கிளம்பி விட கிருஷ்ணய்யருக்கு வெஸ்ட் மாம்பலம் ரங்க பாஷ்யம் தெருவுக்கு எப்படி போவதென்ற குழப்பம் வர மாமி கையிலிருந்து செல்போனை பிடுங்கி ஜிபிஎஸ் இல் ரூட் பார்க்க ஆரம்பித்தார்...
ஆனந்த ரூபே ஸ்ருதி மூர்த்தி ரூபே ஸஸாங்க ரூபே ஸ்ரீரங்க ரூபே ரமதாம் மனோமே ...என்று முணுமுணுத்தபடி தேடத் தொடங்க அந்த மொபைலில் ஈராக் மேப் விரியத் தொடங்கியது...அசோக் பில்லர் அரைமணி நேரமாக செல்லுக்குள் வரவேயில்லை...மாமி பொறுமையிழக்க ஆரம்பிக்க...இவர்களின் நிலையை பார்த்து இரக்கப்பட்ட பூக்கார பெண்மணி...அருகில் வந்து...
ஐயரே என்னா வோணும் உனக்கு...ஒரு நூறு ரூபாக்கு பூ வாங்னா அட்ரஸ் சொல்லித் தாரப் போறேன்...உன்னோட பொண்டாட்டிக்காவ இல்ல...உன்னோட மொவத்துக்காவத் தான்...ஆமா சாமி நீ கமலஹாசனாட்டமே கீறயே பூ வாங்கப்படாதா...
என்று கவிழ்க்க...அய்யரும் ஐனூறு ரூபாய் நோட்டை அவளிடம் குடுக்க...மாமி மெல்ல பத்ரகாளி வடிவம் எடுக்கும் முஸ்தீபுகளில் இறங்கினாள்...
இன்னா அய்யரே நீ...இப்புடியே போய் பீச்சாங்கையாண்ட லெப்ட் எடுத்தேன்னா அதான் உங்கபாஷ்யம் தெருவு...போவியா...என்று சொல்லியபடியே இரண்டு முழம் பூவை வாழைக் கீற்றில் கட்டி மாமியிடம் நீட்டவும் அய்யர் வண்டியைக் கிளப்பவும் சரியாக இருந்தது...
ஏன்ணா ....பாக்கி வாங்க வேண்டாமா அந்த ராட்சசி கிட்டேருந்து... நிறுத்துங்கோ என்று ஓலமிடத் தொடங்க...
விடுறி...அட்ரஸ் சொன்னாளோன்னோ அவளே வச்சுக்கட்டும்...என்று சொல்லியபடியே ரங்கபாஷ்யம் தெரு பெயர் பலகையைப் பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டார்...
ஏன்ணா அவ லெக்கின்னும் டீ சர்ட்டும் போட்டுண்டிருக்கான்னு தானே பாக்கி வாங்காம வந்தேள் என்று கேட்ட அந்த நொடியில் தான் கார் அவர் வரவேண்டிய வீட்டின் வாசலில் வந்து நின்றது...
குபு குபு என புகை அம்பாசிடார் பேணட்டிலிருந்து வரத் தொடங்கியது....
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...